சுதந்திரப் போராட்டம் 2.0 - sonakar.com

Post Top Ad

Friday 5 February 2021

சுதந்திரப் போராட்டம் 2.0

 


450 வருடங்களுக்கு மேலாக அன்னியரிடம் அடிமைப்பட்டிருந்த இலங்கைத் தீவின் அனைத்தின மக்களுக்கும் சுதந்திரத் தாகம் மேலோங்கியிருந்தது.


மன்னராட்சிக் காலத்திலும் அடக்குமுறையை உணர்ந்த மக்கள் தொகுதியினர் தமது சுதந்திரத்தை நாடிப் போராட விளைந்தனர். இலங்கையின் வரலாற்றில் அவ்வப் போது அதிகாரப் போரும் அதுவும் இனங்களின் பெயரில் இடம்பெற்றுள்ளது.


சிங்கள – தமிழ் மன்னர்களிடையிலான யுத்தங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் போது விதைக்கப்பட்ட மொழி ரீதியிலான பிரிவினைகள் இன்று வரை சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர உறவைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. இடையில் இரு தரப்போடும் அண்டி வாழ்ந்து வந்த முஸ்லிம் சமூகமும் பல முனைப் பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வந்ததே கடந்த கால வரலாறும்.


போர்த்துக்கீயர் நாட்டைப் பிடிக்க வந்த போது, அதை முற்று முழுதாக எதிர்த்து நின்ற சீதாவக்கை இராசதானிக்கும் மன்னன் மாயாதுன்னேவுக்கும் சோனக சமூகம் பெருந்துணையாக இருந்தது. போர்த்துக்கீயருக்கு எதிரான வரலாற்றுப் புகழ்பெற்ற யுத்த வெற்றியைப் பெற்ற போதிலும் பிற்காலத்தில் தனது வீழ்ச்சியை சமாளிக்க, ஏலவே போர்த்துக்கீயருடன் நல்லுறவைப் பேணிய தனது சகோதரன் புவனேகபாகுவுடன் மாயாதுன்னை கை கோர்க்க விளைந்த போது முஸ்லிம் சமூகம் மும்முனைகளில் எதிரிகளை சந்திக்க நேரிட்டது.


அங்கிருந்து வந்த காலத் தொடர்ச்சியில் தேசத்தை நேசித்து, தேச வளர்ச்சிக்காகப் பாடு பட்ட முஸ்லிம் சமூகம் எப்போதுமே பல முனைப் போராட்டங்களுக்க முகங்கொடுத்தே வந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி;க்காலத்தில் மேலெழுந்த சுதந்திர வேட்கை தேசத்தின் அனைத்தின மக்களையும் தேச விடுதலையென்ற நிலைப்பாட்டில் ஒன்றிணைத்திருந்த போதிலும், மறுபுறத்தில் உருவான பேரினவாத எழுச்சி முஸ்லிம் சமூகத்தைப் பிரத்யேகமாகக் குறி வைத்திருந்தது. 


அதன் விளைவிலேயே 1915 வன்முறை அரங்கேற்றப்பட்டது. ஆயினும் கூட, இப்பிரிவினைகள் தேச விடுதலைப் போராட்டத்தை பாதித்து விடக் கூடாது என்பதில் அக்கால முஸ்லிம் தலைவர்கள் கவனமாக இருந்தனர். ஆங்கிலேயரே ஆட்சியாளர்கள் என்பதால் விடுதலைப் போராட்டத்தின் இலக்கு எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தது.


இதன் போது தமது உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதும், அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்து எழுவதும் அனைத்து சமூகங்கள் மீதும் திணிக்கப்பட்ட போராட்டமாகவே இருந்தது. 1915 வன்முறைப் பின்னணியை இங்கு ஆராய்ந்தாலும் கூட, அக்கால கட்டத்தில் பேரினவாத சிந்தனையை விதைக்க முனைந்த அநகாரிக தர்மபால போன்ற தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டமை ஆங்கிலேயரின் முஸ்லிம் சமூக சார்பு நடவடிக்கையாகவும் பார்க்கப்பட்டது.


மறு புறத்தில், தொப்பியணிந்து நீதிமன்றுக்குள் வரக்கூடாது என்று முஸ்லிம் சட்டத்தரணிக்கு ஆங்கிலேய நீதிபதி கட்டளையிட, அதன் பின்னணியிலான பிரபல துருக்கித் தொப்பிப் போராட்டம் என்பது நேரடியாகவே காலனித்துவ ஆட்சியாளர்களுக்கெதிரான முஸ்லிம் சமூகத்தின் தனித்துவப் போராட்டமாக அமைந்தது.


இது போலவே ஆங்கிலேயரின் பிடியிலிருந்து தேசத்தை மீட்டெடுக்கும் களப் போராட்டத்தில் மாத்திரமன்றி அரசியல் தளத்திலும் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியிருந்தன. தேச விடுதலையை சிங்கள தேசத்தின் விடுதலையாக ஏற்றுக்கொள்ள தமிழ் தரப்பில் தயக்கம் இருந்தது. அதேவேளை, இதற்கு மாற்று வழியாக S.W.R.D பண்டாரநாயக்கவின் சிங்கள மகா சபாவை ஏற்றுக் கொள்ளாவிடினும் டி.எஸ் சேனாநாயக்கவின் தேச சுதந்திரத்துக்கான கொள்கைகளை முஸ்லிம் தலைமைகள் ஆதரித்தன.


இன்று தீராத வலியாக இருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தைப் பற்றியும் மாற்றுக் கருத்துள்ளவர்கள், மஹிந்த – கோட்டா அரசுக்கு முஸ்லிம்கள் முழு ஆதரவைத் தராததனால் எதுவும் செய்ய முடியாமல் உள்ளதாக விளக்கமளிக்கின்றனர். கடந்த காலத்தையும் நடைமுறை நிலவரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் சிறுபான்மை சமூகமாக முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் அரசியல் போராட்டத்தினை தெளிவாக அளவிட்டுக் கொள்ளலாம்.


துரதிஷ்டவசமாக இலங்கையில் சிறுபான்மை சமூகங்கள் மொழி ரீதியிலான அடையாளத்துக்குட்படும் சாத்தியம் இல்லாமல் போய் விட்டது. ஆதலால், தமிழ் பேசும் சமூகங்கள் என்ற அளவில் மூன்று கூறுகள் காணப்படுகிறது.


இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர், நாட்டின் ஏனைய பாகங்களில் தம்மைத் தமிழர் என அடையாளப்படுத்திக் கொள்வோர் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய கூறுகளே அவை. இலங்கையில், அண்ணல் நபி (ஸல்) அவர்களினால் பூரணப்படுத்தப்பட்ட இஸ்லாத்தின் அறிமுகத்துக்கு முன்னும், பின்னும் சோனகர்களாக அறியப்பட்ட இன்றைய முஸ்லிம் சமூகம் எப்போதும் கலாச்சாரத் தனித்துவத்தைக் கொண்டிருந்தது.


பண்டைய காலந்தொட்டு, அரேபிய கலாச்சாரப் பண்புகள் இம்மண்ணில் கலந்திருந்தது. பின் இஸ்லாமிய வாழ்க்கை நெறி முறைக்குள் வாழப் பழகிக் கொண்ட சமூகமாகவும் சமய ரீதியிலான தனித்துவத்துடனேயே இச்சமூகம் வாழ்ந்து வந்தது. பின் வந்த காலத்தில், இந்திய தொடர்புகள் ஊடாக திராவிட கலாச்சாரமும் கலந்த போதிலும் கூட அவை இஸ்லாமிய வரையறை என்ற அடிப்படையில் ஏனைய சமூகங்களிலிருந்து வேறுபட்டவையாகவே இருந்தன.


இதனால், ஒரே மொழியைப் பேசிய போதிலும் - கலாச்சார ரீதியிலான சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ள போதிலும் கூட, தனித்துவமான சமூகமாகவே அனைத்து விடயங்களிலும் சிந்தித்துச் செயலாற்றும் நிர்ப்பந்தம் முஸ்லிம் சமூகத்துக்கு இருந்து வந்துள்ளது. 1970களில் ஆகக்குறைந்தது அரசியல் ரீதியிலான ஒற்றுமையூடாக தமிழ் பேசும் சமூகம் ஒன்று பட்டிருக்கக் கூடிய வாய்ப்பு மலர்ந்திருந்த போதிலும் மறு முனையில் தேசிய அரசியலிலும் பங்காளிகளாக இருந்ததனால் மீண்டும் மும்முனைச் சிக்கலுக்குள் சிக்கித் தவிக்க நேர்ந்தது.


தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் - ஆயுத போராட்டமாக மாறிய போதும் நாட்டின் இரு பக்கங்களில் வாழ்ந்த முஸ்லிம் சமூகமும் தமது பிராந்திய சூழ்நிலைகளில் தம்மைப் பங்காளிகளாக்கிக் கொண்டது. விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் ஆயுதமேந்திப் போராடவும் பல முஸ்லிம் இளைஞர்கள் இணைந்திருந்தனர். ஆயினும், பின் வந்த காலம், சிறுபான்மைக்குள் சிறுபான்மையாக அடக்கப்படும் சூழ்நிலையை ஒரு பக்கம் உணர்த்தி நிற்க, தேசியத்திற்கான பங்களிப்பை இன்னொரு பக்கம் வேண்டி நின்ற நிலையில் தமது பாதையை மாற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தத்தை உருவாக்கியது.


சமகால சூழ்நிலைக்கு எல்லா தரப்பும் பங்களித்திரு;ககிறது என்ற அடிப்படையை மறுதலித்த தலைமுறையினரின் இருப்புக்கு மத்தியில் கடந்து போன காலம் போக, எதிர்காலம் எதை வேண்டி நிற்கிறது? என்கிற போராட்டம் தற்போது தலையெடுத்து நிற்கிறது.


முஸ்லிம் சமூகம் பேரினவாதத்தினால் இலக்கு வைக்கப்படுகறிது என்று இன்னுமே நம்பாத ஒரு சிலர் இல்லாமலில்லை. ஒட்டி நின்று சாதிக்கலாம் என்று சொல்பவர்கள் இல்லாமலும் இல்லை. அப்பட்டமாக, கடந்த வருடம் ஓகஸ்டில் உரிமைப் போராட்டம் என்று உசுப்பேற்றி முஸ்லிம்களின் வாக்குகளைக் கொள்ளையடித்த அரபுப் பெயர் கொண்ட கொள்ளைக்காரர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் கட்சி தாவி நம்பிக்கைத் துரோகிகளானார்கள்.


அவர்களோ, இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தமக்கு இன்னும் கிடைக்கப் போகிறது என்று நம்பிக் கொண்டிருக்கும் அதில் சிலர் அவ்வப்போது தமது கூலி எழுத்தாளர்களை வைத்து சமூக வலைத்தளங்களில் மக்களுக்கு ஆசையூட்டிக் காலம் கடத்துகிறார்கள். ஜனாஸா எரிப்பு நிறுத்தப்படப் போகிறது என்கிற படம் எங்குமே ஓடாது என்பதால் இப்போது மீண்டும் பதவிகளே இச்சமூகத்தின் இலக்கு என திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கிறது.


இவ்வாறு வந்த ஒரு கதையைப் பற்றி குறிப்பிட்ட பிரதேசம் சார்ந்த முக்கிய சமூக ஆர்வலரிடம் கேட்ட போது எட்டாம் வகுப்பு படிக்காதவனுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி ஒரு கேடா? என்று சலித்துக் கொண்டார். முன்னரும் குறிப்பிட்டுள்ளேன். தனது பதவிக்காலம் முடிந்து இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற போதிலும் கூட அக்காலப் பகுதியில் முஸ்லிம்களுக்கு அள்ளியள்ளி பதவிகளை வழங்கியதே தான் முஸ்லிம் சமூகத்துக்குச் செய்த மாபெரும் சேவையென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சொல்லிக் கொண்டிருக்கிறார்.


நிறைவேற்றியாக வேண்டிய கடமையைச் செய்த அமைச்சர்களுக்கு சமூகத்தார் மாலைகளை சும்மா போடவும் இல்லை. அதனை ஏற்றுக் கொண்டவர்கள் சும்மா சிரிக்கவும் இல்லை. எல்லா சும்மாக்களுக்குப் பின்னும் அர்த்தம் இருக்கிறது. அப்பேற்பட்ட அரசியல் கலாச்சாரத்திலிருந்து விடுபடத் துணிந்த மக்களையே மீண்டும் இன்றைய கட்சி தாவிய நம்பிக்கைத் துரோகிகள் பழைய நிலைக்கு அழைத்துச் செல்ல முனைந்து கொண்டிருக்கிறார்கள்.


அதற்கிடையில், சிறுபான்மை சமூகங்கள் தமக்கெதிரான அடக்குமுறைக்கு எதிரான ஒற்றுமையைக் காணத் துணிந்திருக்கிறது. பல காலமாக நிலவிய வெற்றிடம், அதாவது யாரை நம்பி முன் செல்வது என்ற கேள்விக்கும் தற்போது விடை கிடைத்திருப்பதாகக் கருதப்படுவதனால் சிறுபான்மை சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையின் அவசியம் மக்களால் உணரப்பட்டிருக்கிறது.


கடந்த காலங்களை அசை போட்டுக் கொண்டிருப்பதனால் சிறுபான்மை சமூகங்கள் எந்தத் தீர்வையும் காணப் போதில்லை. மாறாக, கடந்த காலங்களின் தவறுகளைத் திருத்திக் கொண்டு, விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் முன் செல்ல வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இன்னொரு வகையில் விடுதலை பெற்றதாகக் கருதப்படும் தேசத்தில் சிறுபான்மை சமூகங்களுக்கான புதியதொரு சுதந்திரப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.


2009ல் யுத்தம் நிறைவடைந்த பின்னர், முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்படும் என்ற அச்சம் இருந்து கொண்டே வந்தது. அந்த அச்சத்தினை உண்மையாக்கும் வகையில் 2012ல் அரசியல் தளத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் படலம் ஆரம்பமானது. 1915 வன்முறையின் நூற்றாண்டு நினைவு கூறப்படும் வகையில் பாரியதொரு வன்முறை வெடிக்கும் என்ற நச்சுக் கருத்து விதைக்கப்பட்டது. ஆட்சியாளர்களின் ஆதரவுடனேயே ஆங்காங்கு இனவாதிகள் உருவெடுக்கலானார்கள்.


போர்த்துக்கீயர் காலத்தில் மன்னர்களுக்கிடையில் சிக்கித் தவித்தது போன்றே வர்த்தக ஆளுமையை வளர்த்துக் கொண்டுள்ள சோனக சமூகம் எல்லா புறங்களிலும் இலக்கானது. ஆதலால், என்னவெல்லாம் நடந்தது என்கிற வரலாறினை, குறிப்பாக 2012 – 2019 வரையில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற தொடர் வன்முறை மற்றும் அடக்குமுறைகளை அறியாதவர்கள் இலங்கையில் வாழ்வதிலேயே பிரயோசனமில்லை.


திடீரென எழுந்து வந்து, மகாத்மா காந்தியைக் கொன்று விட்டார்களா? என்று கேள்வி கேட்பது போன்று இன்றும் சிலர் புதிதாகக் கேள்வி கேட்கத்தான் செய்கின்றனர். அது போலவே, அரசியல் இலாபமடைவதற்காக கட்சி சார்ந்தவர்கள் கூடத் தமது பக்கத்தை நியாயப்படுத்த மறு பக்கத்தைக் கொச்சைப் படுத்திக் கொண்டும் வாழ்க்கையைக் கடத்துகிறார்கள். 


எது எப்படியாயினும், தனிச்சிங்கள தேசம், சிங்கள தலைமை, பேரினவாதம், சிங்கள தேசத்தின் மீட்பு போன்ற மாயைக்குள் சிக்கிக் கொண்டுள்ள சிங்கள சமூகம் அதிலிருந்து விடுபடுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அது வரையிலும் தமது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும், அதன் பின் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கும் திரும்பத் திரும்ப பேரினவாதத்தைக் கையில் எடுப்பதொன்றைத் தெரிவாகக் கொண்டவர்களாகவே நடைமுறை ஆட்சியாளர்கள் காணப்படுகிறார்கள்.


நாட்டை முன்னேற்றுவதற்கும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை, நல்லிணக்கம், மக்கள் அபிவிருத்தி, கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தியென எத்தனையோ விடயங்கள் இருப்பினும் கூட, தாமும் தமக்குப் பின் தமயனும் அவருக்குப் பின் பேரனும் ஆட்சியதிகாரத்தில் அமர்வதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதிலேயே அவர்களும் குறியாக இருக்கிறார்கள். ஆதலால், மக்களை எதுவரை சிந்திக்க அனுமதிப்பது? என்கிற வரையறை வகுக்கப்பட்டிருக்கிறது.


ஒரு புறத்தில் தேசம் இராணுவ மயமாகிறது என்கிற குற்றச்சாட்டு நிலவுகிறது. இராணுவ மயமாகிறதோ இல்லையோ, இனி வரும் எல்லா பாதுகாப்பு செயலாளர்களுக்கும் தாமும் ஜனாதிபதியாக வேண்டும் எனும் ஆசை வராமலிருக்கப் போவதில்லை. அவ்வாறு ஆசைப்படுபவர்கள் ஈற்றில் என்ன செய்வார்கள் என்பதற்கு இந்த வாரம் மியன்மார் ஆட்சிப் பறிப்பும் மிகச் சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.


இவ்வாறான சூழ்நிலையில் சிறுபான்மை சமூகங்களின் ஒற்றுமை மாத்திரமன்றி தெளிவான அரசியல் பாதையொன்றின் தேர்வும் கட்டாயமாகிறது. அதற்கான கூட்டுத் தலைமையும் தெளிந்த சிந்தனையும் மக்கள் மத்தியில் விதைக்கப்படுவதும் காலத்தின் கட்டாயமாகிறது. ஆம்! பிரச்சினைகள் உண்டு. ஒரே மொழியைப் பேசினாலும் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களுக்கான தனியான பிரத்யேக பிரச்சினைகள் உண்டு.


அவை சில சந்தர்ப்பங்களில் இந்த சமூகங்கள் சார்ந்தனவாகவும், பொதுவாக அரசு சார்ந்ததாகவும் கூட இருக்கிறது. இவற்றைப் பிரித்தறிந்து, தெளிவான கலந்துரையாடல்கள் ஊடான தீர்வுகள் எட்டப்படுவது காலத்தின் தேவையாக இருக்கிறது.


கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நில ஆக்கிரமிப்புகளை வெறுமனே அம்பிட்டியே சுமனரத்னவின் வெற்றுக் கோசமாக எண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறி விட்டது. வடக்கை பௌத்த மயமாக்கும் செயற் திட்டமும் புறந்தள்ளப்பட முடியாத நிலையை எட்டி விட்டது. ஆயினும், ஒன்றிணைந்து முகங்கொடுக்க வேண்டிய சமூகங்களிடையே இன்னும் போதிய, திறந்த மனதுடனான கலந்துரையாடல்கள் இடம்பெற ஆரம்பிகாதமை கவலையுடன் அவதானிக்கப்படுகிறது.


நாடு மீண்டது கடந்த கால வரலாறு, நாட்டு மக்கள் தம்மை மீட்டுக் கொள்ளத் துணிவது நிகழ்கால தேவையெனும் அடிப்படையில் சுதந்திரப் போராட்டத்தின் அடுத்த கட்டம் வலிந்து வந்தடைந்துள்ளது.












Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment