கறை படியும் வரலாறும் கடும் போக்கும்! - sonakar.com

Post Top Ad

Friday 22 January 2021

கறை படியும் வரலாறும் கடும் போக்கும்!


ஒவ்வொரு வாரமும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலையாய பிரச்சினையெது? என்பதை முடிவெடுப்பது மிகக் கடினமான செயல். அது சில நேரங்களில் நாளுக்கு இரண்டு தடவை, நாளாந்தம் அல்லது வாராந்தம் கூட மாறிக் கொண்டிருக்கும்.


எது எவ்வாறாயினும், விடிந்தெழுப்பினால் யாரையாவது ஏசித் தள்ள வேண்டும் அல்லது போற்றிப் புகழ வேண்டும் என்ற தாரக மந்திரத்துடன் இக்கால சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆதலால், அகப்படுபவர் பாடு திண்டாட்டம் தான். ஆனாலும், முஸ்லிம் சமூகம் மிகவும் கெட்டித்தனமானது. யாரை நொந்து கொண்டால் தமக்கு ஆபத்தில்லையென தெரிந்து தான் நொந்து கொள்ளும். யாரைத் திட்டினால் சமூக வலைத்தளங்களில் தமக்கு சில லைக்குகளும், ஷெயார்களும் கிடைக்கும் என்பதையும் தெளிவாகத் தெரிந்து தான் தினசரி இவ்வாறு யாரையாவது வாங்கி – விற்றுக் கொண்டிருக்கிறது.


இன்னும் ஒரு ரகமிருக்கிறது. அதற்கு முதல் ஒரு உதாரணத்தையும் சேர்க்க வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான ஏ.எச்.எம் பௌசியின் பாரியார் காலமாகியிருந்தார். அவரது வீட்டுக்கு பல அரசியல்வாதிகள் துயர் பகிர்ந்து கொள்ள வந்திருந்தனர். அதில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் ஒருவர்.


அங்கு வந்திருந்த அவர், எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் பலரையும் காண நேர்ந்தது. சிலரிடம் அருகில் சென்று அவரே உரையாடி விட்டும் சென்றார். இது பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, எல்லாம் நடந்தாலும் எதுவும் நடக்காதது போலிருப்பதும் தனித் திறமையென ஒரு அரசியல்வாதியிடம் சொன்னேன். அதற்கு அவர், ஆமாம்! மஹிந்த அதில் நிபுணர் என்று பதிலளித்தார். ஆனாலும், மஹிந்தவே பார்த்து ஆச்சரியப்படக்கூடிய அளவுக்கு எமது சமூகத்துக்கு இதில் நிபுணத்துவம் இருக்கிறது.


எது நடந்தாலும், அது தமக்குத் தெரியாதது போலவே வேறு எதையாவது பேசிக் கொண்டு காலம் கழிப்பதும் தனித் திறமையான விடயமே. எமது சமூகத்தின் பெரும்பான்மை இவ்விடயத்தில் மிகவும் தெளிவுடனிருக்கும் நிபுணர்கள். தப்பித் தவறியேனும் தமக்கு நேரடி பாதிப்பைத் தராத வரை ஒரு விடயத்துக்காக நீதி கேட்டுப் பேசவோ இல்லை பேசுபவரை ஆதரிக்கவோ முன் வர மாட்டார்கள். ஆனாலும், சமூகப் போராட்டமோ இயக்கமோ இந்த வரையறை தாண்டியது என்பதால் போராட்ட குணம் கொண்டவர்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டுதான் இருப்பார்கள்.


இரு வருடங்களுக்கு முன் லண்டனில் என் வீட்டருகே இருக்கும் பள்ளிவாசலில் எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் இடம்பெற்றிருந்தது. பொதுவாகவே சுய கௌரவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதற்கேதும் பங்கம் வந்தால் தம் உயிரை மாய்க்கவும் தயங்காத அக்கால இந்திய – பாகிஸ்தான் தலைமுறையிலிருந்த வந்த ஒருவர் தொடர்பு பட்டது.


முற்காலத்தில் தேவாலயமாக இருந்து கைவிடப்பட்டிருந்த பழங்காலக் கட்டிடம். அதனைக் கொள்வனவு செய்து பள்ளிவாசலாக மாற்றியது வெறும் மார்க்கக் கடமை மாத்திரமன்றி, சமூகக் கடமையும் கூட. ஏனெனில் நான் வாழும் நகர்ப்பகுதிக்கு அப்படியொரு பள்ளிவாசலின் தேவை கட்டாயமானது. சிறப்பாக இயங்கிய பள்ளிவாசலின் வளர்ச்சிக்குப் பலரின் பங்களிப்பு இருந்தது. குறிப்பாக, தொழுகை முடிந்து ஸலாம் கொடுத்ததும், ஓடோடி வந்து வாளியைப் பிடித்து, பள்ளிவாசலுக்கு உதவுங்கள், ப்ளீஸ் பிரதர்ஸ் என்று ஒரு சில வயோதிபர்கள் எழுப்பும் அந்தக் கருணைக் குரல் என் ஆழ் மனதை வேகமாகத் தாக்கும்.


ஜும்ஆ தொழுகை முடிந்து வரும் போது அவ்வளவு சன நெரிசலிலும் இக்குரல்கள் கேட்கும் போது, அல்லாஹ் நாடினால், இவர்களின் குரல்களை நான் மறுமையிலும் கேட்க வேண்டும் என்று நான் துஆவும் கேட்டிருக்கிறேன்;. அவ்வளவு உணர்வுபூர்வமாக நன்கொடைகளை வசூலிப்பார்கள். அதில் ஒருவர் திடீரென ரமழான் மாதத்தில், அதுவும் நோன்பு திறக்கும் நேரத்தில் பள்ளிவாசலுக்குள்ளேயே தனது உயிரை மாய்த்துக் கொண்ட அதிர்ச்சியான சம்பவம் இடம்பெற்றது.


தன் மீது ஏனையோர் சுமத்திய பழிச் சொல்லைத் தாங்க முடியாமல் அவர் அவ்வாறு செய்து கொண்டார் என்று பின்னர் விளக்கம் தரப்பட்டது. நானி வசிக்கும் அதே வீதியில் தான் அவர்களது வீடும் உள்ளது. சென்று விசாரித்த போது அவரது மகனும் அவ்வாறே சொன்னார். எந்த அளவு பாதிப்பிருந்தால் அந்த மனிதன் அவ்வாறு செய்திருப்பார். தன் மரணத்தின் மூலமாக ஏதோ சேதியொன்றை சொல்ல விரும்பியிருக்கிறார், அதனைத் தவறான வழியிலும் செய்து விட்டார். இறைவன் அவருக்குக் கருணை காட்டட்டும்!


இவ்வாரம் புதன் கிழமை, புத்தளம் - தில்லையடி, ரத்மல்யாய பகுதியில் 26 வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தையின் தந்தை பிரதேசத்தின் பள்ளிவாசலில் தன்னைத் தானே எரியூட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தகவல் கிடைத்தது. தகவலின் உண்மைத்தன்மையை அறிவதற்காக புத்தளத்தில் உள்ள சமூக ஆர்வலர்களைத் தொடர்பு கொண்ட போதும் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக பிரதேசத்தின் முக்கிய நபர்களுக்குக் கூட தகவல் தெரிந்திருக்கவோ அல்லது இறந்தவரின் குடும்பத்தைப் பற்றித் தெரிந்திருக்கவோ இல்லை.  


ஜனரஞ்சக விவகாரங்களின் மீது இருக்கும் அதீத பற்றும் அக்கறையும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று எண்ணாமலுமில்லை. பின்னிரவு சில தகவல்கள் கிடைத்த போதிலும், ஏன் பள்ளிவாசலுக்குள்? என்ற கேள்விக்கு உடனடி விளக்கம் எதுவும் தரப்படவில்லை. நாள் முடியும் வரை சமூகத்தின் கருத்துப் பீரங்கிகள் கூட மூச்சு விடாத நிலை. இதுவெல்லாம் தமக்கு அவசியமில்லாத விடயமென்று காட்டிக் கொள்ள, தம்மைத் திருப்பித் தாக்காத இலக்கை நோக்கி வழக்கம் போல கருத்து யுத்தம் நடாத்திக் கொண்டிருந்தார்கள் இன்னும் சிலர்.


சிரச தொலைக்காட்சியில் தோன்றி தன் அறிவுத்திறமையை வெளிக்காட்டிய காலி, கடுகொட முனவ்வரின் மகள் ஷுக்ரா தான் எங்கும் பேசு பொருளாக இருந்தார். பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கையில் எம் சமூகத்தின் கருத்துக் கந்தசாமிகள் அதனை விமர்சனமாக மாற்றிக் கொண்டு, பொழுது போகாத காரணத்தினால் சிரச தொலைக்காட்சி அவருக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து தான் வெற்றியாளராக்கியிருக்கிறது என்றும் வியாக்கியானம் சொலலி ஏளனம் செய்து கொண்டிருந்தார்கள். 


இத்தனைக்கும் சிங்கள மக்கள், 17 வயது சிறுமி தம் சமூகம் சார்ந்த இலக்கியங்கள் மற்றும் வரலாற்றை அத்தனை சிறப்பாக ஞாபகம் வைத்திருப்பதையும் அவரது திடமான பேச்சுத் திறமை மற்றும் பின்நாளில் பிரபல நிறுவனம் ஒன்றின் நிறைவேற்று அதிகாரியாக வேண்டும் என்ற இலக்குக்குத் தேவையான அணுகுமுறையையும் இன்னும் வெகுவாகப் பாராட்டிக் கொண்டிருக்கிறது. ஹிரு அல்லது அத தெரண போன்ற தொலைக்காட்சிகள் இவ்வாறு ஒரு ஷுக்ராவைக் கொண்டாடியிருக்குமா? என்கிற கேள்விக்கு அப்பால், சீசன் சமூகக் காவலர்கள் ஒரு இளம் பெண்ணின் திறமையையும் சேர்த்து மழுங்கடிக்க முனைந்து கொண்டிருந்ததை அவதானிக்கக் கிடைத்தது.


அளுத்கம வன்முறையின் போது நமக்காக காடையர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்ட பாலித தெவரப்பெருமவுக்கு ஒரு ஆறுதல் வார்த்தை கூட சொல்லாதவர்கள், தன் மனைவியுடன் சென்று, தந்தை மற்றும் குடும்பத்தார் சகிதம் வீட்டிலிருந்து ஷுக்ராவோடு படம் எடுத்ததும் அதன் போது உணர்வுபூர்வமாக, வழக்கம் போல வெகுளித்தனமாக சிறுமியை அவர் நெருங்கியிருந்ததும் எம் சமூகக் காவலர்களுக்கு படு பாதக செயலாகக் கண்ணில் பட்டு விட்டது.


அப்படியே அது பற்றிப் பேச வேண்டுமானால், அதனை சம்பந்தப்பட்ட குடும்பத்தைத் தொடர்பு கொண்டு பேசுவது அல்லது சரியான தருணத்தில் பாலித தெவரப்பெருமவுக்கு தெளிவுபடுத்துவது தகும். மாறாக வடைக்காகக் காத்திருக்கும் காகங்கள் போன்று அல்லோல கல்லோலப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் பகிரப்பட்டன.


நல்ல வேளை, எம் கருத்தாளர்கள் தமிழிலேயே விதம் விதமாக எழுதிக் கொண்டிருந்தனர். ஷுக்ரா சிங்கள மொழியில் கல்வி கற்றவர் என்பதால் ஆறுதலாக இருந்தது, இருந்தாலும் கூட, இந்த நிகழ்வு பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஒஸ்கார் விருதினைப் பெற்றுக் கொடுத்த ஸ்லம் டோக் மில்லியனயர் என்கிற திரைப்படத்தின் கதையை ஞாபகமூட்டியது. ஏனெனில் அந்த திரைப்படமும் இதே கதையும், தன் பொது அறிவையும் ஞாபக சக்தியையம் கொண்டு இது போலவே - இதே தலைப்பிலான நிகழ்ச்சியை வென்றதால் ஒரு இளைஞன் படும் பாட்டையும் அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருந்தது.


தற்செயல் - தவறான செயல் அது தொடர்பிலான அணுகுமுறை மற்றும் தெளிவுபடுத்தலை விட கடும்போக்கு மீது எம்மவர்க்கிருக்கும் ஆர்வத்தின் விளைவாகவும் இந்நிகழ்வை அவதானிக்கலாம். எமது சமூகத் தலைவர்கள் என்று கூறிக் கொண்டிருப்பவர்கள் கண்டும் காணாமலிருக்க, சிங்கள சமூகத்தின் பேராசிரியர்கள் வீடு தேடிச் சென்று  பாராட்டி, இன்னும் பல நூல்களை பரிசாகவும் வழங்கி வருகிறார்கள்.


இஸ்லாமிய இராச்சியங்கள், குறிப்பாக உதுமானிய பேரரசு மற்றும் அதற்கு முன்னைய சல்ஜுக் பேரரசின் காலத்திலும் கூட சுல்தான்களும், தளபதிகளும் போர் மற்றும் தமக்கெதிரான ராஜதந்திர சதிகளை முறியடிக்கப் போராடிக் கொண்டிருக்கையில் தலைநகரையும், ராஜியத்தின் கட்டுமானத்தையும், அரச குடும்ப விவகாரங்களையும் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பதில் பெண்களின் வகிபாகம் விலைமதிப்பற்றதாக இருந்தது. சவாலான அந்தக் காலங்களை வென்றெடுப்பதற்கு புத்தி சாதுர்யமான பெண்களின் பங்கு அவசியமாக இருந்தது.


கல்வி, போர்க்கலை மற்றும் மார்க்க விவகாரங்களிலும் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குரிய கௌரவத்தை ஆட்சியாளர்களாக இருந்த சுல்தான்களும் வழங்கலானார்கள். அவ்வாறான புத்திசாலி பெண்களாலேயே தொடர்ந்தும் திறமையான ஆட்சியாளர்களை உருவாக்கவும் முடிந்ததை வரலாறு எடுத்தியம்புகிறது. ஆணாதிக்கம் என்ற வரையறைக்கப்பால் வகிபாகத்தினை பிரித்தறிந்து செயற்பட்ட மரபினையே அக்கால வரலாறுகள் பாடமாகப் புகட்டுகின்றன.


ஆயினும், அங்கிருந்து வெகுதூரம் வந்து விட்ட நாம் சமூக வளர்ச்சியில் பெண்களின் வகிபாகத்தினை மழுங்கடிக்கச்; செய்து விட்டோம். உலகக் கல்வி ஹராம் என்ற நிலைப்பாடு வரை பின் நோக்கிச் சென்றிருந்த சமூகம் பின் வந்த காலத்தில் ஆமை வேகத்திலேயே பெண்களின் கல்வி வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தது. 


சுதந்திரத்துக்குப் பின்னரான கடந்த எழுபது வருடங்களை ஒப்பீட்டுக்காக ஆராய்ந்தாலும் நமது சமூகத்தில் ஏதோ ஒரு அளவிலேயே ஆசிரியைகள், பெண் சட்டத்தரணிகள் மற்றும் மருத்துவர்களைக் காணக்கூடியதாக இருக்கிறது. பெண் மருத்துவர்கள் இல்லையே என்று ஒரு புறத்தில் ஏங்கிக் கொண்டிருக்கும் சமூகம் இன்னொரு புறத்தில் அத்தனை காலம் கல்வி கற்று விட்டு வரும் போது மாப்பிள்ளை எங்கே தேடிப் பிடிப்பது? என்றும் கேள்வி கேட்கிறது.


அப்படித்தான் கிடைத்தாலும், பிள்ளையின் படிப்புக்கு ஏற்ற மாப்பிள்ளையை சமூகத்தில் தேட முடியாதுள்ளது என்றும் நொந்து கொள்கிறது. தப்பித் தவறியும் அதற்கு யார் பொறுப்பு? என்கிற கேள்வியைக் கேட்க மறுக்கிறது. 


2018ம் ஆண்டு நாட்டுக்குச் சென்றிருந்த போது எனக்குக் கற்பித்த ஆசிரியையொருவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பமைந்தது. அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த போதிலும், தனியார் பாடசாலையொன்றில் இணைந்து கல்விச் சேவையைத் தொடர்வதாகத் தெரிவித்த அவர், உங்கள் காலம் எவ்வளவோ திறமானது, இப்போது வீடுகளுக்குச் சென்று மாணவர்களை பாடசாலைக்கு வருமாறு அழைக்க வேண்டியுள்ளது என்று ஆதங்கப்பட்டார். நான் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் போதும் இவ்வாறே ஒரு ஆசிரியர் கூறக் கேட்டிருக்கிறேன். சமூகம் எங்கிருந்து எதுவரை முன்னேறியிருக்கிறது என்று அந்தக் கணம் மீண்டும் கவலை கொள்ள நேர்ந்தது.


அதே கவலையோடு யாழ்ப்பாணம் சென்றிருந்த போது க.பொ.த சாதாரண தர வகுப்பில் கல்வி கற்க வேண்டிய சிறார்கள் ஹோட்டல்களில் வேலை செய்து கொண்டிருப்பதை அவதானித்தேன். இது குறித்து விளக்கமளித்த ஒரு தந்தை, பிள்ளைகள் 15 முதல் 20 வயது வரை உழைத்துத் தருவது தான் எங்களுக்கு அதற்கு பிறகு அவன் திருமணம் முடித்து மனைவியைத் தான் பார்ப்பான் என்றும் சொன்னார். இந்த விடயத்தை ஆழமாக சிந்திப்பவர்களுக்கு படிப்பினைகள் பல உண்டு.


இப்பேற்பட்ட சமூகம் தான் தம் குறை மறைக்க அடுத்தவர்களுக்குக் கறை தேய்த்துக்  கொண்டிருக்கிறது என்பதையும் அதீத மனக் கவலையுடன் பதிந்து கொள்கிறேன்.


நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக பிரச்சினைகளைத் தேடிப் பிடித்துத் தம் நேரங்களை வீணடிக்கும் இன்றைய கலாச்சாரத்துக்கு மாற்று வழியென்ன? என்றும் அவ்வப்போது சிந்திக்காமலில்லை. எனினும், சமூகம் ஒரு தனி மனிதனின் வீடில்லையென்பதால் இது உடனடி விடை காண முடியாத சிக்கலாக இருக்கிறது.


இன்ஷா அல்லாஹ், கூடிப் போனால் இன்னும் நூறு வருடங்களுக்குள் மனிதன் வேற்றுக் கிரகமொன்றில் குடியிருப்புகளை அமைத்து வாழப் போவது உறுதி. அதற்கான பாதையில் முன்னேறிச் செல்லும் உலக சமூகத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் எங்கிருக்கிறது என்று சிந்திப்பது அவரவர் கடமையாக இருக்கிறது.


இராச்சியங்களைக் கட்டியெழுப்புவதும் கட்டிக்காப்பதும் வெறுமனே போர் வீரர்களையும் படை பலங்களையும் அதிகரிப்பதால் மாத்திரம் சாத்தியமாகாது என்பதை நன்குணர்ந்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள், அதற்கேற்ப மார்க்க மற்றும் விஞ்ஞான கல்விக் கூடங்களை அமைத்தார்கள். ஒரு புறத்தில் மார்க்க அறிஞர்கள் உருவாகிய அதேவேளை மறு புறத்தில் விஞ்ஞான வித்தகர்களையும் இஸ்லாமிய உலகம் கண்டிருந்தது. 


ரைட் பிரதர்ஸ் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று பாடம் படித்திருக்கும் இன்றைய சமூகத்துக்கு 9ம் நூற்றாண்டிலேயே அப்பாஸ் இப்னு பிர்னாஸ் இறக்கை கட்டிப் பறக்க முயற்சித்த வரலாறு தெரியாமலே போய்க் கொண்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மருத்துவம், கணிதம் மற்றும் வானவியலிலும்; இஸ்லாமியர்களின் சாதனைகள் பற்றிய அறிவே இல்லாமல் போய் விட்டது. 


இன்னும் சொல்லலாம், ஆனால் ஈற்றில் யாரைக் குற்றம் சொல்வதென்று தான் தெரியவில்லை. சமூகம் சிந்திக்கக் கடவதாக!












Irfan Iqbal

Chief Editor, Sonakar.com


No comments:

Post a Comment