ஜனாஸா அஹிம்சாவழி போராட்டம் தொடர்கிறது! - sonakar.com

Post Top Ad

Tuesday 1 December 2020

ஜனாஸா அஹிம்சாவழி போராட்டம் தொடர்கிறது!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்குவதற்கான அனுமதியைப் பெறும் போராட்டத்தை முஸ்லிம்கள் பல்வேறு வழிகளில் எடுத்துச் செல்வதோடு இன்று இரண்டாவது தினமாக அடிப்படை உரிமைகள் வழக்கும் பரிசீலிக்கப்படுகிறது.


இந்நிலையில், ஜனாஸாக்களை எரிப்பதற்கான பெட்டிக்கும் சாம்பலைத் தருவதற்கும் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட வியாபாரத்தை முறியடிக்கும் நோக்கில் முஸ்லிம்கள் ஆரம்பித்துள்ள அஹிம்சாவழி போராட்டத்தின் விளைவாக கொழும்பு, கண்டி உட்பட்ட இடங்களில் எரியூட்டலுக்கு அனுமதி தரவோ, அதில் பெங்கெடுத்து பெட்டிக்கும் சாம்பலுக்கும் பணம் தரவோ முடியாது என உறவினர்கள் எதிர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இப்பின்னணியில் ஜனாஸாக்கள் வைத்தியசாலைகளிலேயே கைவிடப்பட்டு வருவதால் வைத்தியசாலை நிர்வாகங்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். பெட்டிகளை வழங்குவது உறவினர்களின் கடமையென அண்மையில் சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் 58,000 ரூபா வரை அறவிடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகி, மக்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்திருந்தது. இப்பின்னணியிலேயே ஜனாஸாக்களை எரிக்கக் கொண்டு செல்வதற்கு எந்த வகையிலும் பங்கெடுப்பதில்லையெனும் நூதன போராட்டம் முஸ்லிம் சமூகத்தால் முன்னெடுக்கப்படுகிறது.


நாடளாவிய ரீதியில், இவ்விடயத்தில் சமூக மத்தியில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ள அதேவேளை, ஒற்றுமையுடன் இந்த அஹிம்சாவழி போராட்டத்தை தொடர வேண்டும் என முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, இது குறித்து கருத்து வெளியிடுகையில் தெரிவித்தார். 

இதேவேளை, நேற்றைய வழக்காடலின் போது சட்டமா அதிபர் ஜனாஸா எரிப்பு சுற்றுநிரூபத்தை இரத்துச் செய்ய அனுமதிக்கக் கூடாது என கடுமையான வாதங்களை முன் வைத்திருந்த நிலையில் இன்று விசாரணைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment