விடாமுயற்சிக்கு பலன்: வறுமையிலும் சாதனை படைத்த றிஸ்கா! - sonakar.com

Post Top Ad

Sunday, 22 November 2020

விடாமுயற்சிக்கு பலன்: வறுமையிலும் சாதனை படைத்த றிஸ்கா!

 மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கல்விக் கோட்டப் பாடசாலையான கேணிநகர் மதீனா வித்தியாலய மாணவியான ஜே.எப். றிஸ்கா 160 புள்ளிகளைப் பெற்று முப்பது வருட பாடசாலை வரலாற்றில் சாதனையினை நிலைநாட்டியுள்ளார்.


இவ்வாறு சாதனையை நிலைநாட்டிய மாணவி ஜே.எப் றிஸ்கா தான் கல்வி கற்றுக் கொண்ட முறையை இவ்வாறு விபரிக்கின்றார்.


நான் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தது எனக்கு பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் சிறந்த முறையில் கல்வி கற்பதற்கு எனது பாடசாலையின் அதிபர் ஏ.மீராமுகைதீன் அவர்கள் நிறைய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.


அதேபோன்று எனக்கு தரம் ஐந்து புலமைப் பரிசில் பாடங்களை கற்பித்த ஆசிரியர் ஏ.எம்.சித்தீக் அவர்களும் சிறந்த முறையில் கற்றுத் தந்தார். வறுமை நிலையிலுள்ள எனது பெற்றோர்கள் எனது கல்வி விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தினார்கள்.


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் கல்வி வலயம் மற்றும் பாடசாலைகள் ஊடாக வட்ஸ்அப் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தனர். அவ்வாறு கல்வி கற்பதற்கான வசதியைக் கொண்ட கையடக்க தொலைபேசிகள் எங்களிடம் இல்லை.


நான் தனிமையில் இருந்து பழைய பாடங்களை மீட்டுக் கற்றுக் கொள்வேன். நானும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.


அதனால் வீட்டில் இருந்து கொண்டே நான் சுய கற்றலில் ஈடு பட்டு வந்தேன். நான் படிக்கும் போது ஏதேனும் சந்தேகங்கள் வந்தால் உறவினர்களின் போனில் ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு அதற்கான சந்தேகங்களை கேட்டு கற்றுக் கொண்டேன்.


அதேபோன்று பக்கத்து வீடுகளில் உள்ள சகோதரிகளிடமும் சந்தேகங்களை கேட்டு கற்றுக் கொள்வேன் இவ்வாறுதான் நான் எனது கல்வியைத் தொடர்ந்தேன்.


நான் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து விட்டேன் என்றெண்ணி கல்வி கற்பதில் இருந்து பின்வாங்காப் போவதில்லை நான் எனது கல்வியை ஒரு இலட்சியத்தோடு தொடரவுள்ளேன்.


நான் பரீட்சையில் சித்தியடைந்ததை தொடர்ந்து எனக்கு ஏராளமான நபர்கள் வாழ்த்துக்களை சொன்னார்கள் எனக்கு அது பெரிதும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் நான் தொடர்ந்தும் கல்வியில் சாதிக்க ஆசைப்படுகின்றேன்.


எதிர்காலத்தில் நான் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்று நினைத்துத்தான் எனது கல்வியை நான் தொடர்கிறேன். என்று கூறினார் மாணவி ஜே.எப். றிஸ்கா.


அதேபோன்று மாணவியின் தாய் கூறுகையில்,


நாங்கள் கடும் வறுமையில் உள்ள குடும்பம் எனது கணவருக்கும் நிரந்தரத் தொழில் இல்லை. கூலித் தொழிலுக்கு செல்லும் அவரும் தொழில்கள் இன்றி வீட்டில் உள்ளார். பிரதேச மக்கள் வழங்கும் அன்பளிப்புக்கள், உதவிகள் மூலம்தான் எங்கள் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்களது வறுமையைக் காரணம் காட்டி எங்களுடைய பிள்ளையின் கல்விக்கு நாங்கள் அநியாயம் செய்ய விருப்பவில்லை. அதனால்தான் என்ன வறுமை என்றாலும் பிள்ளையின் கல்வி விடயத்தில் நாங்கள் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றோம் என்றார்.


-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment