பால்ய வயது திருமணம் என்ற பேச்சு வந்தாலே முஸ்லிம் சமூகம் தான் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறது. இலங்கையில் மாத்திரமன்றி உலகில் பல நாடுகளில் இவ்விவகாரம் அரசியல் பேசு பொருளாகியுள்ளதுடன் அது குறித்த ஆய்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
இலங்கையில் 12 வீதமான பெண்கள் 18 வயதுக்கு முன்பதாகவே திருமணம் செய்து கொள்வதாகவும் அதில் 2 வீதமானோர் 15 வயதில் திருமணம் செய்து கொள்வதாகவும் அண்மைய யுனிசெப் (UNICEF) ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்த விகிதாசாரத்திற்குள் முஸ்லிம்களும் உள்ளடங்குகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், முஸ்லிம்கள் மாத்திரம் தான் இருக்கிறார்கள் என்பது மறுக்கப்பட வேண்டிய கருத்து. இருந்த போதிலும் முஸ்லிம் சமூகமே இவ்விவகாரத்தில் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறது.
ஆக, பெண்களின் திருமண வயது 18 என தேசிய சட்டம் அறிவிக்கப்படுவதில் முஸ்லிம் சமூகத்துக்கே பிரச்சினையிருப்பதாக பரவலான பேச்சும், குற்றச்சாட்டும் நிலவி வருகிறது, அதற்குக் காரணமும் நாமே என்ற அடிப்படையில் அதனை மறுக்க முடியாதுள்ளது.
முஸ்லிம் சமூகம் திருமண வயதை 18 என அறிவிப்பதில் முரண்பட்டுக் கொள்வதன் அடிப்படை, சமூகத்தின் ஒரு தொகுதியினர் அது ஷரீயா சட்டத்துக்கு முரணானது என கருதுவதாகும். இயல்பிலேயே பால்ய வயதில் பெண்களை திருமணம் முடித்துக் கொடுக்கும் கலாச்சாரம் தற்காலத்தில் வெகுவாக குறைந்துள்ள போதிலும், வயதெல்லை நிர்ணயிப்புக்கு இணங்குவதில் தயக்கம் காட்டப்படுகிறது.
தகவல் தெளிவுக்காக, சில மாவட்டங்களின் புள்ளிவிபரங்களை எடுத்து நோக்கின், 2007ம் ஆண்டு இலங்கையில் மொத்தமாக இடம்பெற்ற முஸ்லிம் விவாகப் பதிவு 19217 ஆகும். அதில் 16292 திருமணங்களில் மணப்பெண் 18 வயதை விட கூடியவராவார். 1780 பேர் 18 வயதானவர்கள். மிகுதியில் 780 பேர் 17 வயதையடைந்திருந்தவர்கள், 284 பேர் 16 வயதினர், 61 பேர் 15 வயதினர், 19 பேர் 14 வயதினர் மற்றும் 13 வயதைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குகிறார்.
இதேவேளை, 2014ம் ஆண்டின் முஸ்லிம் திருமணப் பதிவின் பிரகாரம், 12 வயதான 4 பேரும், 13 வயதான மூவரும், 14 வயதுடைய 18 பேரும், 15 வயதில் 37 பேரும் 16 வயதில் 122 பேரும், 17 வயதில் 309 பேரும் திருமணம் செய்து கொண்டுள்ள அதேவேளை 18 வயதான 788 பேரும், அதற்குக் கூடிய வயதுள்ள 9364 பேரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
மேற்குறிப்பிடப்பட்ட தகவல்கள் அம்பாறை, மட்டக்களப்பு, களுத்துறை, கண்டி, திருகோணமலை, புத்தளம் ஆகிய ஆறு மாவட்டங்களிலிருந்து மாத்திரம் ஒப்பீட்டுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட புள்ளிவிபரமாகும்.
இவற்றின் அடிப்படையில் நீங்கள் எத்தனை வயதில் திருமணம் செய்தீர்கள் உம்மம்மா? என கேட்க அவர் 12 அல்லது 11 என்று கூறக் கேட்டு அதிர்ச்சியடையக் கூடிய தலைமுறையினர் இனி வரும் காலத்தில் வெகு குறைவாகவே காணப்படுவர் என்று சொல்லலாம். அத்துடன் நவீன காலத்திலும் பால்ய வயது திருமணங்களின் பிரதான காரணிகளுள் வறுமை பேராதிக்கம் செலுத்துகிறது எனும் அடிப்படையில் அதன் பொதுத் தன்மையையும் உணர்ந்தே இவ்வாறான விடயங்கள் அலசப்பட வேண்டும்.
இவ்வாறிருக்க, 18 வயது என்கிற அடிப்படைக்கு எதிராக முஸ்லிம் சமூகம் தன்னிச்சையாகப் போர் தொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா? இல்லையா? என்பதிலும் எம் மத்தியில் பாரிய முரண்பாடு இருப்பதனால் இவ்விவகாரத்தில் முஸ்லிம சமூகம் ஒற்றுமையான இணக்கப்பாட்டுக்கு வருவது மிகக் கடினமான செயலாகும்.
2009ல் அப்போதைய சட்ட – ஒழுங்கு அமைச்சர் மிலிந்த மொரகொடவினால் நீதிபதி சலீம் மர்சுப் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் அடங்கிய சமூகத்தின் மிகச் சிறந்த புத்திஜீவிகள் 11 வருடங்களாக முட்டி மோதியும் தீர்வு காண முடியாமல் போன விடயமாதலால் இதற்கு ஒரு மனதான தீர்வைக் காண்பதில் பாரிய சிக்கல்கள் இருக்கின்றன.
பருவ வயது என்ற சொற்பிரயோகத்துடன் நிறுத்திக் கொள்வதே ஷரீயாவைப் பின்பற்றல் என்ற விளக்கமும், யதார்த்த உலகில் தேவையான மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளல் என்ற பிரதிவாதமும் காலாகாலத்துக்கு நிலைத்திருக்கக் கூடிய வாதப் பிரதிவாதம் என்பதை நாம் நிரூபித்திருக்கிறோம்.
ஆயினும், பால்ய வயது திருமணம் என்றாலே முஸ்லிம் சமூகம் மாத்திரமே துள்ளிக் கொண்டு துடிப்பது இச்சமூகத்தின் மீதான பிறர் பார்வையை மாற்றவும் செய்கிறது. தேசிய பேசு பொருளாக இவ்விவகாரம் மாறியிருக்கும் நிலையில், இலங்கையில் முஸ்லிம் சமூகத்தில் மாத்திரம் தான் பால்ய வயது திருமணங்கள் இடம்பெறுவது போன்ற தோற்றப்பாட்டையும் அது உருவாக்கியிருக்கிறது.
இது போகவும் முஸ்லிம் சமூகத்துக்குள் பேசப்படும் விவாக – விவாகரத்து விடயங்களில் 'பெண்களின்' கௌரவம் மற்றும் உரிமையும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. பல இடங்களில் விவாகரத்து விண்ணப்பிக்கச் செல்லும் பெண்களின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் காதி நீதிபதிகள் அதனூடாக முறைகேடாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
மேலும், செல்வந்தர்களின் தேவைக் கேற்ப காதி நீதிபதிகள் , தமது தீர்ப்பை ஒரு பக்க சார்பாக மேற்கொண்டு வங்கிக் கணக்குகளை நிரப்பிக் கொண்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அத்துடன் பெண்கள் தரப்பு நியாயங்களை முன் வைப்பதிலும், அதனை பேசுவதிலும் இருக்கக் கூடிய நடைமுறைச் சிக்கல், பொதுவாக எம் சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க – மேலாதிக்க சிந்தனையினால் உண்மைகள் குழி தோண்டி புதைக்கப்படும் சம்பவங்கள் என பல்வேறு அநீதிகளுக்கு எமது சமூகப் பெண்கள் முகங்கொடுத்து வருகிறார்கள் என்பதும் வருத்தத்துக்குரிய உண்மைகளாகும்.
இவ்வாறு நமக்கு நாமே அநீதியிழைத்துக் கொள்ளும் சட்டம் சமூகத்துக்கான சட்டமாக மாறுவதற்கான திருத்தங்கள் அவசியப்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அத்துடன் இந்நிலை பல காலங்களாக தொடர்ந்து வருகிறது எனும் அடிப்படையில் இதற்கான சரியான தீர்வை காண்பது ஒட்;டு மொத்த சமூகத்தின் பொறுப்பாகவும் இருக்கிறது.
இங்கு நம் நாட்டின் நடைமுறைப் பிரச்சினைகள் முன் வைக்கப்பட்டுள்ள போதிலும் இது இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகம் மாத்திரம் எதிர்நோக்கும் பிரச்சினையன்று. பொதுவாகவே பால்ய வயது திருமணங்கள் சமூகக் கட்டமைப்பை எவ்வாறு பாதிக்கிறது என்பது தொடர்பில் பல முஸ்லிம் நாடுகள் கடந்த காலத்தில் ஆராய்ந்து அதில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. சில நாடுகள் தொடர்ந்தும் ஆராய்ந்தும் வருகின்றன.
அந்த அடிப்படையில், முஸ்லிம் நாடுகளை முன்னுதாரணமாகக் கொள்ள விரும்புபவர்களுக்கு சவுதி அரேபியா உட்பட சில நாடுகள் தமது நாட்டுச் சட்டங்களில் பெண்களின் திருமண வயதினை நிர்ணயித்துக் கொண்டுள்ளதற்கான நடைமுறை சான்றுகள் உள்ளன. அத்துடன், வயதெல்லை பற்றிய பேச்சுக்கப்பால் விவகாரத்துப் பெறும் பெண்ணுக்கு, அவர் பெண்ணென்பதால் 'நீதி' மாறி விடக்கூடாது என்பதும் இங்கு முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய விடயமாகும்.
நான் உன் கணவன், நான் என்ன தவறு செய்தாலும் அதை நீ பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று தன் 23 வயது, மருத்துவக் கற்கையைத் தொடரும் மனைவியை அடித்துத் துன்புறுத்திக் கட்டாயப்படுத்திய, 28 வயது ஆணின் திருமண பந்தம் அண்மையில் பிரிவில் வந்து முடிந்தது. குறித்த பெண் மிகச் சிறு வயதிலேயே பெற்றோருடன் ஐக்கிய இராச்சியத்தில் குடியேறி, கல்வி கற்று வளர்ந்தவர், கணவன் பத்து வருடங்களுக்கு முன்பாகவே இங்கிலாந்தில் குடியேறியுள்ளார்.
குறித்த நபரின் பல இரகசிய முறைகேடான நடவடிக்கைகள் தெரியவந்ததன் பின்னணியிலேயே தகராறு ஆரம்பித்ததாக பெண் தரப்பு சாட்சிகள் சொல்கின்றன. தனிப்பட்ட அந்நபர்களை விடுத்து, இச்சம்பவத்தை ஒரு நவீன உதாரணமாக அலசுவதாயின், இருவருக்கும் பாரிய வயது வித்தியாசமில்லை, இலங்கைப் பெற்றோர்கள் என்ற அடிப்படையில் குறித்த பெண் ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கைக்குள் வாழப் பழக்கப்பட்டிருக்கிறாள். அதேவேளை, 'போதும்' என்று முடிவெடுக்கும் வரை ஆணின் அநீதியான பல செயற்பாடுகளை அவள் தாங்கிக் கொண்டே நான்கு வருடங்களாக ஒரு பக்கம் தன் கல்வியையும் இன்னொரு பக்கம் குடும்ப வாழ்க்கையையும் தொடர்ந்திருக்கிறாள்.
கையும் களவுமாக அகப்பட்ட மாப்பிள்ளையையே மாமனார் வெறுக்க ஆரம்பித்தாரே தவிர, அது வரை அந்தப் பெண் சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாமே பொய்யானவையாகவே பார்க்கப்பட்டுள்ளன. அதற்கும் மேலாக இச்சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது, அதுவும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் ஒரு முஸ்லிம் குடும்பத்தில்.
இங்கு யார் சரி? யார் பிழை? யென்று வாதிடுவதை விட இவ்வாறான சமூக அவலங்கள் மனித உரிமை, பெண்களை துன்புறுத்தலுக்கு எதிரான கடுமையான சட்டங்களைக் கொண்டுள்ள இங்கிலாந்து போன்ற நாட்டுக்குக் குடி பெயர்ந்தும் மாறாத 'கலாச்சாரத்' தாக்கத்தையே உற்று நோக்க வேண்டுகிறேன்.
ஒரு வகையில், தான் பேச நினைப்பதை ஏதோ ஒரு கட்டத்தில் பேச முடிந்ததனால், அதற்குரிய நாட்டுச் சூழல் இருப்பதனால் அப்பெண் சற்றே தன்னை விடுவித்துக் கொள்ளக் கூடியதாக இங்கிலாந்தில் அமைந்துள்ளது. ஆயினும், இதுவே இலங்கையின் ஒரு குக்கிராமத்தில் சாத்தியமாகுமா? என்பதே கேள்வி.
எத்தனை வயதாகினாலும் மாறாத தந்தை – பிள்ளை பாசம் ஒரு புறமிருக்க, 12, 13 வயதானதும் யார் தலையிலாவது கட்டிவிட வேண்டும் என்ற சூழ்நிலைக்கு ஒரு தந்தை தள்ளப்படுவதற்கு ஒரு வகையில் சமூகமும் பதில் சொல்லியாக வேண்டும். இன்றும், இருப்பவர்களுக்கே கொடுத்து, அதனை போட்டோ எடுத்துப் பிரசுரித்து அழகு பார்க்கும் கலாச்சாரமே காணப்படுகிறது. இல்லாதவர்களைத் தேடிச் சென்று உதவி, அவர்கள் வாழ்வு முன்னேறக் கை கொடுப்பவர்கள் இல்லாமலில்லை, ஆனால் இன்னும் தேவையென்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்பும் விடயம்.
எவ்வாறாயினும், இலங்கையில் முஸ்லிம்களுக்கான பிரத்யேக விவாக – விவகாரத்து நடைமுறையை ஒல்லாந்தர் சட்டமாக ஏற்றுக்கொள்ள விளைந்த காலந் தொட்டு தொடர்ச்சியாக அது பல மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது. குறிப்பாக அவை அடையாளங் காணப்பட்ட சமூகச் சிக்கல்களின் பின்னணியிலான வாதப் பிரதிவாதங்களாக மாறியே மாற்றங்களை வேண்டி நின்றது.
ஷரீயாவின் வரையறை என்ற வார்த்தைப் பிரயோகம் மாத்திரம் இஸ்லாமிய வாழ்வியலாகி விடுமா? என்ற கேள்விக்கு ஒவ்வொரு முஸ்லிமும் தமது மனச்சாட்சியைத் தொட்டு பதிலளிக்க கடமைப்படுகிறார்கள். அதற்கு அப்பால் அண்ணல் நபி (ஸல்) காட்டித்தந்த அழகிய வாழ்க்கை முறை, அதில் பெண்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம், கண்ணியம், உரிமைகள் போன்றவற்றையெல்லாம் குழி தோண்டிப் புதைத்து விட்டு ஆணாதிக்கத்துக்குத் தோதான இஸ்லாம் பேசிக் கொண்டிருப்பதில் எதிர்கால சமூகம் நன்மையடையுமா? என்பதையும் சிந்திக்கக் கடமைப்படுகிறோம்.
2009ல் நியமிக்கப்பட்ட முஸ்லிம் விவாக-விவாகரத்துச் சட்டத் திருத்தத்தை ஆராய்வதற்கான குழுவில் பெண்களுடன் சம அளவில் 'உட்கார' முடியாது என்று அடம் பிடித்த புத்திஜீவியொருவரும் இருந்தார். அவரைத் தழுவி, ஆம்! பெண்கள் தலையீட்டில் தீர்மானிக்க முடியாது என்று தலையாட்டி அதனால் நடைமுறையில் பிளவுற்றிருந்த ஆதரவாளர்களும், பொது நிலை மற்றும் பெண்கள் உரிமை சார்பு வாத நிலையென அந்தக் குழுவுக்குள் ஆயிரம் பிரச்சினையிருந்தது. ஈற்றில், பரிந்துரையும் இரண்டானது.
ஒரு கணம் தரித்து நின்று சிந்தித்தால், தன் மகளுக்கோ – சகோதரிக்கோ – தாய்க்கோ நேரக்கூடாது என்று நினைக்கும் அநீதிகளுக்கு எதிரான பொது நிலைப்பாட்டை நோக்கிய நகர்வுக்குக் கூட ஆணாதிக்க சிந்தனை தடையாக இருக்கிறது என்ற உண்மையை சம்பந்தப்பட்ட ஒருவர் பின்நாளில் என்னிடம் ஏற்றுக் கொண்டிருந்தார். ஆயினும், நாம் எதிர்நோக்கும் சிக்கலைப் பிரித்தாய்வதை விட மேலோட்டமாக அத்தனை பிரச்சினைகளையும் ஒன்று குவித்து ஏதோ ஒரு தீர்வைக் காண வேண்டும் என்ற அவசரமே எல்லோரிடமும் நிகழ்கிறது.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் குடும்ப வாழ்க்கையை முன்னெடுக்கும் பக்குவமற்ற வயதில் திணிக்கப்படும் சுமை விரைவில் விவாகரத்தில் முடியும் விகிதாசாரமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பலர் கிடைக்காத நீதிக்காகப் போராட விரும்புவதில்லை, சிலர் அதைத் தவிர்க்க தன்னைத் தூரப்படுத்திக் கொள்வதை வழியாகவும் கொண்டுள்ளனர்.
நமது சமூகத்தின் உண்மையை நிலையை மறைக்க ஜி.எஸ்.பி பிளஸ் முதல் ஆயிரம் காரணிகளை நாம் தேடினாலும் சமூகக் கட்டமைப்பின் அடித்தளம் தொடர்ச்சியாக அரிக்கப்பட்டு வருகிறது என்பதன் உண்மையையும் உணர்ந்தேயாக வேண்டும்.
சிவில் சமூகம் இது தொடர்பிலான ஆக்கபூர்வ கலந்துரையாடல்கள், விழிப்புணர்வூட்டல், பேச்சுவார்த்தைகள், ஆய்வுகள் என பல முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய கடமையுடன் இருக்கிறது. வேறு ஏதோ ஒரு நாடு சார்பு என்.ஜி.ஓ தலையிட்டால் தான் அது சூழ்ச்சி, நாமாகவே முன் வந்து நமது நிலையை அலசித் தீர்வு காண்பதில் தவறில்லை.
எல்லாத் தொப்பியும் அழகானதில்லை!
Irfan Iqbal
Chief editor, Sonakar.com
No comments:
Post a Comment