அரசியலில் ஒரு வருடம் என்பதே மிகக் கூடிய காலம், ஆனால் முப்பத்தியொரு வருடம் என்பது கேள்விகள் பலதை கிளப்பிவிடும் ஒரு பெரு ந் "தவ" காலம். விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து புத்தளம் தேர்தல் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை பெற்றுக்கொள்ள முடியாது போன காலம். அப்படி தேர்ந்தெடுக்க முடியாத படி எங்கு பிழை இருந்தது என்று தேடிப்பிடித்து சரி செய்து கொள்ள தெரிந்திருக்காத காலம்.
இந்த காலப்பகுதியில் தான் புத்தளத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கால் பதிக்கின்றது. வழமையான ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான் பாடலுடனும், "அல்லாஹு அக்பர்" கோசத்துடனும் உணர்ச்சி அரசியல் கிழக்கில் இருந்து இங்கு வந்திறங்கியது. பல்லின மக்கள் வாழும் புத்தளம் தேர்தல் தொகுதியில் இந்த உணர்ச்சி அரசியல் எடுபடாது என்பது தெரியாமல் களத்தில் இறங்கியவர் மறைந்த அஸ்ரப் அவர்களின் பாசறையில் வளர்ந்தவர் என்று கூறிய போதிலும் தலைவர் செய்த தவறாகிய "முஸ்லீம் கட்சி" கட்டியதை ஒத்த வகையில், அடிப்படை பிரச்சினையை புரிந்து கொள்லாமல் கட்சிகளையும் மாற்றிப் பார்த்தார், முடிவு எப்போதும் தோல்விகளே. இந்த தோவிகளுக்குள் மறைந்திருந்த இன்னுமொரு விடயம் தான் புத்தளத்துக்கு ஒரு பிரதிநிதி என்ற உணர்வு மங்கி, நான் இல்லாமல் புத்தளத்துக்கு ஒருவர் பிரதிநிதியாக தேவையில்லை என்ற நிலையாக வளர்ந்து, நான் தான் அந்த பிரதிநிதி என்ற தனியாத தாகமாக முடிந்த கதை, இதற்கிடையில் மக்களும் கூட ஆளை மாற்றிப் பார்த்தார்கள் வெற்றி கைக்கெட்டினாலும் வாய்க்கெட்டாமலே போனது.
இந்த நீண்ட தவத்தை கலைக்க இடைக்கிடை நியமன பிரதிநிதிகளை புத்தளத்துக்கு கொடுத்தன சில கட்சிகள். அதையும் அரசியலில் சரியாக முதலீடு செய்யத் தெரியாமல் வெறும் கனவுகள் மூலம் இலக்கை அடைய முயற்சித்தது மாத்திரமல்ல அரசியல் தெரியாத அல்லக்கைகளை தமது நாலா பக்கத்திலும் வைத்து அடிபிடி அரசியல், அடாவடித்தன அரசியல், பேச்சு சுதந்திரத்தை அடக்கும் அரசியல், நேர்மையான அரசியல் போட்டியாளர்களையும் மக்களின் எதிரிகளாகவும், செல்வாக்கற்றவர்களாவும் காட்ட முனைந்த அரசியல், சமய குருக்களை தேவைக்கேற்ப உள்ளே இழுத்தும் வெளியே தள்ளியும் செய்த அரசியல், கோட்பாடில்லா கூட்டணி அமைத்த அரசியல் என்று பலவித அரசியல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட காலப் பகுதியே இந்த முப்பத்தியொரு நீண்ட தவ காலம்.
2020 தேர்தலும் அறிவிக்கப்பட்டது, மீண்டும் கூட்டணி அமைக்க பலர் பாடுபட்டு பின்னர் சிலர் ஒதுங்கிக்கொள்ள மீதமிருந்தவர்களை தம் வசப்படுத்தி இலக்கை அடைய துடித்தனர் ஓரிருவர். அந்த அடைப்படையில் மீண்டும் சமய குருக்களை முன்னேவிட்டு "மதத்துவ" கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் சகோதர கட்சி முஸ்லீம் தேசிய கூட்டணியை கண்டியில் இருந்து இறக்கினர். புத்தளம் பிரதேசத்தில் காலாகாலமாக வாழும் தமிழ், சிங்கள மக்கள் புறந்தள்ளி தனியாக முஸ்லீம்களை மாத்திரம் கொண்டு கூட்டணி அமைத்தனர். இருந்தும் இதுவே மக்களின் முடிவாக காட்டி அறியாத மக்களை வெற்றிகொள்ளும் " சமய அடையாள" திட்டத்தை, புத்தளம் தேர்தல் தொகுதியில் உள்ள அனைவருக்குமான திட்டம் என்ற பொய்யும் சொன்னார்கள்.
கூடவே "நான்" தான் புத்தளம் எதிர்பார்க்கும் பிரதிநிதி என்ற நிலைபாடு "கூட்டணி" க்குள்ளேயே மிக தெளிவாக வெளிப்பட்டு முன்னைய கால "அடாவடித்தன" அரசியல் ஆபரம்பமாக அல்லக்கைகள் மீண்டும் களத்தில் இறங்கினர். கூட்டணியின் இன்னும் சிலரோ இந்த தேர்தல் அல்ல "எனது" இலக்கு, மாகாண சபை பிரதிநிதித்துவதுக்கான முன்னெடுப்பே இது என்று கூட்டணியின் பதினொரு வேற்பாளரும் பதினொரு விதமான உள்திட்டங்களுடன் வெறும் பெயரளவு கூட்டணியாகவே செயற்பட்டனர். ஆனாலும் வாக்காளர்கள் வேறுவிதனமான திட்டமொன்றை அரங்கேற்ற அமைதியாக செயற்படுகின்றார்கள் என்பதையும் முதன்மை வேற்பாளராக தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டவரால் கடைசி நிமிடம் வரை அறிய முடியாதபடி மக்கள் அமைதியாகவே காய் நகர்த்தினர்.
இப்படியான நிலையிலேயே அலி சப்ரி ரஹீம் என்ற இளம் தொழிலதிபர் பாராளுமன்ற பிரதிநிதியாக 10,000 வாக்குகள் விதியாசத்தில் தெரிவு செய்யப்பட்டார். புத்தளத்துக்குள் அடாவடித்தன அரசியலை அறிமுகப்படுத்தியவராக கருதப்படும், கூட்டணியில் இரண்டாம் இடத்தை பெற்ற நகரபிதா பாயிஸ் அவர்களின் அல்லக்கைகள் தேர்தலுக்கு முன்னரும், தேர்தல் காலப்பகுதியிலும் எப்படி நடந்து கொண்டார்களோ அதில் மாற்றம்மில்லாத வகையிலேயே தேர்தலுக்குப் பின்னரும் நடந்து கொண்டனர்.
இத்தொடரில் மிக முக்கியமானது இன்றைய பா.ம உறுப்பினர், நடப்பு நகர சபை தேர்தலில் தனது உள்ளூராட்சி வட்டாரத்தை தோற்று, கலப்பு தேர்தல் முறையால் நகரசபைக்கு சென்று அதன் தலைவராக வர முயற்சித்து தோல்விகண்ட போது இந்த குறிப்பிட்ட அல்லக்கைகளில் சிலர் இவரை எவ்வளவு அவமானப்படுத்தினார்களோ அதைவிடவும் கோரமாகவும், கேவலமாகவும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் பின் அவரை அவமனப்படுத்த எல்லாவிதமான தயார் நிலையில் இருந்தாகவும் பேசப்பட்டது.
ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போகவே புதிய சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தவர்கள் பா.ம உறுப்பினரின் கன்னிபேச்சை கையில் எடுத்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட ஐந்து நிமிட சந்தர்பத்தை முழுமையாக பாவிக்காமல் 3.27 வினாடிகளில் முடித்துக் கொண்டதாகவும், இரண்டாம் வாய்ப்பில் சரியாக பார்த்து வாசிக்க தெரியாமல் தடுமாறியதாகவும் பா.ம நடை முறை தெரியாமல் நேரம் தாண்டியும் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருக்க சபாநாயகர் ஒலிவாங்கியை நிறுத்தி விட்டதாகவும், சுதந்திரத்திற்கு பின்னான முதல் பாராளுமன்றத்துக்கு சபாநாயகரை வழங்கிய புத்தளம், எழுபதுகளில் நிதி, நீதி அமைச்சரை வழங்கிய புத்தளம் புதிய பா.ம உறுப்பினரால் தலைகுனிய வைக்கப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் தங்களின் வெப்பிராயத்தை வெளிப்படுத்தினர்.
மக்களின் வரிப் பணத்தில் என்னென்னவோ செய்து அவற்றிக் கெல்லாம் சேவை, அபிவிருத்தி என்ற பெயர்கள் இட்டு, தான் இல்லாவிட்டால் நகரின் பாதுகாப்பைக் கூட எவராலும் உறுதிபடுத்த முடியாது என்று மேடைகள் பலதில் ஆவேசமாக பேசிய போதிலும் மக்கள் முன் அவை எடுபடவில்லை. ஆனால் "மக்கள் மனதில் இடம் பிடித்தல்" என்பது அரசியலில் எவ்வளவு முக்கியமென்பதை சமூக சேவைகள் மூலம் அனுபவ ரீதியில் அறிந்து கொண்டு வெற்றியை தழுவிக் கொண்ட புதிய பாராளுமன்ற பிரதிநிதியை புத்தளத்தின் மாமூல் அரசியலில் மூழ்கடிக்க அவரின் அல்லக்கைகள் தயாராகிவிட்டார்களா என்ற கேள்வி இப்போது எழுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. பாராளுமன்றம் சென்று முழுமையாக ஒரு மாதம் முடிய முன்னே நடந்த சம்பவம் இதனை துள்ளியமாக காட்டுவதையும் அதை புதிய பிரதிநிதி பராமுகமாக விட்டிருப்பதும் விரும்பத்தகாத விடயமே.
எதிர்தரப்பு அல்லக்கைகள் போன்றல்லாமல், தங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிரானவர் புதிய பாராளுமன்ற உறுப்பினர் என்ற பொழுதிலும், கொள்கை ரீதியான போட்டியில் அவரை ஆதரிக்க முடியாதவர்களாகினும், பாராளுமன்ற உறுப்பினர் ஆகிவிடார் ஆகவே தொகுதியின் அனைத்து மக்களுக்கும் அவரே பிரதிநிதி என்ற நிலையில் அந்த பிரதிநிதியை தட்டிக் கொடுப்பதும், தேவை ஏற்படின் காத்திரமான விமர்சனம் மூலம் அவரை சரி செய்வதும் மக்களின் கடமை என்ற வகையில் தேசிய மக்கள் சக்தி(NPP) யின் இரண்டு பெண் செயற்பாட்டாளர்கள் தமது நியாயமான விமர்சனங்களை சமூக ஊடகங்கள் மூலமாக வெளியிட்டனர். ஆண்களை அதிகமாகக் கொண்ட வட்சப் குழுமங்களில் பெண்கள் பேசுவதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்து பின்னர் பாரளுமன்ற பிரதிநிதியை விமர்சிப்பது தெய்வ குற்றம் என பொருள் கொண்ட அல்லக்கைகள் மூவர் இந்த பெண் செயற்பாட்டளர்களின் வீடுகளுக்கு சென்று தமது சண்டித்தன அரசியலுக்கு அத்திவாரம் இட்டுள்ளனர்.
நம் சமூகத்தில் அதிக பெண்கள் சுய விருப்பதில் எதற்கும் வெளிவருவதில்லை. தொழில்சார் கடமை ரீதியாக வெளியே வந்தாலும் கூட ஆண்களால் வரையறுக்கப்பட்ட சில விதிமுறைகளை கைக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் சமூகத்தில் வெளிப்படையாக ஆண் அரசியல்வாதிகளை எப்படி ஒரு சில பெண்கள் விமர்சிக்க முடியும் என்ற கேள்வியுடன் அந்த அல்லக்கைகளினால் நேரடியாக பயமுறுத்தப்பட்டவர்களில் ஒருவர் உளநல ஆலோசகர் ( Counseling Psychologist), சமூக சேவைகள் செயற்பாடாளர் ரிபானா இஸ்மாயில். அவரை தொடர்ந்து இந்த அல்லக்கைகள் பயமுறுத்திய இரண்டாமவர் சமூக சேவைகள் செயற்பாடாளரும், முன்னைநாள் நகரசபை (NFGG கட்சி)உறுப்பினர் சித்தி ஸலீமா என்பவர். மூன்றாமவர் மாயமானவர், இதுவரை இவர் யார் என்று யாருக்கும் தெரியாது.
மன உளைச்சலுக்குள்ளான சித்தி ஸலீமா புதிய பாராளுமன்ற பிரிதிநிதிக்கு தொலைபேசி வாயிலாக செய்தி ஒன்றை வைத்து உங்கள் பணிப்புரையிலா இது நடந்து என்ற கேள்விக்கு இன்னும் அவர் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அறியக் கிடைகின்றது. ஆனால் ரிபானா இஸ்மாயிலோ தனக்கு ஏற்பட்ட அவமானம், தன் மீதான உரிமை மீறல் தொடர்பாக பொதுவான சட்ட விதிகளை தெரிந்து கொண்டு தன் எதிர்கால பாதுகாப்புக்காக பொலீஸில் முறைப்பாட்டொன்றை செய்துள்ளார். முதல் கட்ட விசாரனையில் ரிபான இஸ்மாயிலிடன் கேட்கப்பட்ட பொலீஸின் முக்கிய கேள்விகளில் ஒன்று " உங்கள் சமயத்தில் பெண்கள் பேசக்கூடாது என்ற சட்டம் உள்ளதா" என்பதே.
குற்றமிழைத்தவர்களாக அடையாளம் காணப்பட்ட மூவருக்கெதிரான இந்த முறைப்பட்டடின் முதல் பொலீஸ் விசாரனைக்கு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சமூகமளிக்கத் தவறிவிட்டனர் என்பதும் இங்கு கேள்விக்குட்படுகின்றது.
நிற்க, ஒரு கிழமைக்குப்பின் பொலீஸின் இரண்டாம் அழைப்புக்கு பதிலளிக்கும் முகமாக குற்றம் சுமத்தப்படோர் பொலீஸ் நிலையம் சென்றாலும் அவர்களில் குறிப்பிட்ட ஒருவர் அங்கேயும் தன் முரட்டுதனத்தை காட்ட வெளிக்கிட்டு அந்த பெண்மணியின் காட்டமான எதிர்தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் போனதற்கு பொலீஸ் உத்தியோகத்தரே சாட்சி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிபானா இஸ்மாயில் தனக்கு இந்த முறைப்பாட்டை நீதிமன்ற வழக்காக கொண்டு செல்ல விருப்பமில்லை, ஆனால் இவர்களின் நேரடி, மறைமுக பயமுறுத்தல்கள், அடாவடித்தனங்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தனது சட்டத்தரணியூடாக தயாராவதாக பொலீஸில் கூற பொலீஸ் தரப்பும் தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக வாக்குறுதியும் அளித்துள்ளனர்.
இந்த நேரடி பயமுறுத்தல் பா.ம. உறுப்பினரின் பெயரை பாவித்து செய்யப்பட்டதால் இது தொடர்பாக தகவல் அறிய பொறுப்புள்ள சிலர் முயற்சித்தும் புதிய பா.ம. உறுப்பினரிடம் இருந்து சாதகமான எந்த பதிலும் இதுவரை இல்லை. எல்லா அரசியல்வாதிகள் போலவே சமூக ஊடகங்களை பாவித்து தேர்தல் பிரச்சாரம் செய்த புத்தளம் புதிய பா.ம. உறுப்பினர் தொடர்ந்தும் மெளனம் காப்பது அழகுமல்ல.
தனது பெயரில், தனது ஆதரவாளர்களால் அரங்கேற்றப்பட்ட இந்த அடாவடித்தனம் குறித்து உடனடியாக ஒரு அறிக்கை விட அவர் எதிர்பார்க்கப்படுகின்றார். இத்தகைய அடாவடித்தனங்கள் முளையிலேயே கிள்ளி எறியப்படாவிட்டால் எது தனக்கு ஏற்படக் கூடாது என்று இன்றைய பா.ம. உறுப்பினர் முன்னைய காலங்களில் நினைத்தாரோ அதற்கு இவரே இப்போது ஆசீர்வாதம் வழங்குகின்றார் என்ற செய்தி உறுதியாகிவிடும். இது இவரின் அரசியல் எதிரிகளுக்கு பலம் சேர்க்குமா இல்லையா என்ற கேள்வியை விட அது மக்கள் மனங்களை மீண்டும் நோகடிக்கும், அதனால் அதன் விளைவு எதுவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள அதி பொருத்தமானவர் புதிய பா.ம. உறுப்பினர் அலிசப்ரி அவர்களை விட வேறு யாருமாக இருக்க மாட்டார்கள் என்பது என் கணிப்பு. உடனடி நடவடிக்கை எதிர்காலத்தை செப்பனிடும் என நம்புவோம்.
Mohamed SR. Nisthar
Co-editor, Sonakar.com
2 comments:
இந்த பாராளுமன்றம் கரைலக்கப்படும் தருணத்தில் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்டபினர் அலி சப்ரி அவரகள் மிகச் சிறந்த பாராளுமன்றப் பிரதிநிதியாக இருப்பார் தொடர்ந்தும் இவரே வருவார் என்பதில் எமக்குப் பெருநம்பிக்கை இருக்கின்றது. நம்பிக்கை தும்பிக்கை போன்றது. மிகவும் பலவம் வாய்ந்தது.
தாம் செய்த குற்றத்திற்கு முஸ்லிம் என்ற வகையிலாவது மண்ணிப்புக் கேற்கவில்லை
அவர்களின் குற்றத்தை ஒப்புக்கொள்ளாது நியாயப்படுத்தப்பார்த்தனர் என்றாலும் வீட்டுக்கு சென்றது குற்றம் என்பது பொலிஸாரினால் தெளிவுப்படுத்தப்பட்டது..
இத்தகைய அரசியல் தொடரும் என்றிருந்தால் கடந்த காலத்திற்கும் இக்காலத்திற்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை
Post a Comment