சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பல வேகய தேசியப் பட்டியல் விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நேற்று வரை தமக்கும் தேசியப்பட்டியல் கோரி வந்த மனோ கணேசன் - திகாம்பரம் அணி 'இன்று' கட்சி முடிவினை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சமகி ஜன பல வேகயவில் சோனகர்.கொம் மேற்கொண்ட விசாரணைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசே தற்போது தீவிரமாக தமக்கு தேசியப்பட்டியல் வேண்டுமென்று கோரி நிற்பதாக அறியமுடிகிறது. குறிப்பாக, நிசாம் காரியப்பர் விடாப்பிடியாக இருப்பதோடு கருத்து மோதல்களிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அகில இலங்கை மக்கள் காங்கிரசும் ஒரு ஆசனத்தை கோரி வருகின்ற போதிலும், அக்கட்சி விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருப்பதாக கட்சி மட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது. எனினும், தற்சமயம் இரு கட்சிகளதும் நிலைப்பாட்டினால் சமகி ஜன பல வேகய தீர்க்கமான முடிவொன்றை எட்ட முடியாதுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில், அசாத் சாலிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைவாக அவரது தேசியப்பட்டியல் விவகாரத்தை கட்சித் தலைமை நேரடியான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முனைவதாகவும் அறியமுடிகிறது. இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரின் நியமனம் தேசிய ரீதியில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமாக அமையாது என கட்சி முக்கியஸ்தர்கள் 'உணர்ந்துள்ளதாக' எம்மிடம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment