பொத்துவில் முகுது மகா விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில் காணி அளவீட்டுப் பணிகளையோ வேறெந்த நடவடிக்கைகளையோ நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை முன்னெடுக்க வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முகுது மகா விகாரைக்குரித்தான 30 ஏக்கர் காணி தொடர்பிலான நில அளவை அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அப்பிரதேச குடியிருப்பாளர்களின் நிலை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பொத்துவில் பிரதேசத்தின் முகுது மகா விகாரைக்கான காணி தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து, தொல்லியல் ஆய்வுத் திணைக்களத்தினால் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று திங்கட்கிழமை (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிவான் எம்.எச்.முஹம்மட் றாபி இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.
இவ்வழக்கு விசாரணையில் எதிரிகளான குடியிருப்பாளர்கள் சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிஸாம் காரியப்பர், சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் மற்றும் சட்டத்தரணி முஹம்மட் கதீர் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது, குறித்த காணி தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமும் தொல்லியல் ஆய்வுத் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் படியும் 30 ஏக்கர் காணியை மாத்திரமே அளவீடு செய்வதற்கு அத்திணைக்களத்திற்கு அதிகாரம் உள்ளது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், அதனை அளவீடு செய்த பின்னர் அது தொடர்பிலான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் இந்த 30 ஏக்கர் காணிக்குள் கட்டடம் அமைப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 13 குடியிருப்பாளர்களும் இல்லையென்று ஊர்ஜிதமாகும் பட்சத்தில் அவர்கள் தமது இடங்களில் கட்டிட நிர்மாணங்களை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்.
அதேவேளை 30 ஏக்கர் காணிக்குள் குறித்த குடியிருப்பாளர்களுக்கு ஜயபூமி காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டிருப்பதனால், சட்டபூர்வமாகவே அவர்கள் அங்கு குடியிருக்கிறாரக்ள் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கைப் பொறுத்தவரையில், தொல்லியல் ஆய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்களோ பொலிஸாரோ குறித்த இடத்திற்கு சென்று, மக்களுக்கு மத்தியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாட்டை இத்தேர்தல் காலம் முடியும் வரை செய்யக்கூடாது என்றும் அவர் அழுத்தமாக கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, தொல்லியல் ஆய்வுத் திணைக்களத்தின் சார்பில் வருகை தந்திருந்த உத்தியோகத்தர்களிடம் இவ்விவகாரம் தொடர்பில் நீதிவான் விளக்கம் கோரினார்.
எதிரிகள் சார்பான சட்டத்தரணியினால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் சரி என்றும் ஏற்கனவே 30 ஏக்கர் காணி அளவீடு செய்யப்பட்டிருப்பதாகவும் வரைபடங்களை வரைவதற்காக அரசாங்க நில அளவீட்டுத் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் தொல்லியல் ஆய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் விளக்கமளித்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிவான், இது சம்மந்தமான அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு, சர்ச்சைக்குரிய குடியிருப்பிடங்கள் முகுது மகா விகாரைக்கான 30 ஏக்கர் காணிக்குள் இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானித்த பின்னர், குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதா அல்லது அவர்களது கட்டிட நிர்மாணத்திற்கு அனுமதிப்பதா என்பது தொடர்பில் முடிவு செய்யப்பட்டு, இவ்வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவித்ததுடன் அது வரையில், இத்தேர்தல் காலத்தில் அப்பகுதிக்கு சென்று, மக்கள் பதற்றமடையும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறும் என நீதிவான் அறிவித்தபோது, அது தேர்தல் தினமென்று சுட்டிக்காட்டப்பட்டது. இத்திகதி, தேர்தல் ஆணையாளரின் அறிவிப்புக்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டதால், அடுத்த அமர்வு குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிட்டு நீதிவான் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
பொத்துவில் முகுது மகா விகாரைக்கான காணியில் குடியிருப்போர் சட்டவிரோத கட்டிடங்களை அமைக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டி கடந்த 2019 நவம்பர் மாதம் தொல்லியல் ஆய்வுத் திணைக்களத்தினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவிருந்த நிலையில் கடந்த வாரம் அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து, விடுக்கப்பட்ட முன்நகர்த்தல் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டே இவ்விசாரணை இன்று திங்கட்கிழமை (22) இடம்பெற்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலில், பொத்துவில் முகுது மகா விகாரைக்கான காணி சர்ச்சையினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்து, அவர்களது வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்றும் அதில் ஓர் அங்கமாக அது தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் ஆஜராகி, வாதாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- அஸ்லம் எஸ்.மௌலானா
No comments:
Post a Comment