அணைய மறுக்கும் உணர்வுகள்! - sonakar.com

Post Top Ad

Friday 8 May 2020

அணைய மறுக்கும் உணர்வுகள்!


உலகெங்கும் கொரோனா சூழ்நிலையால் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்க, இலங்கை முஸ்லிம்களுக்கு மேலதிக சோதனை. இலங்கையில் மாத்திரம் கொரோனா ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டேயாக வேண்டும் என்ற விதிமுறை அமுலில் இருக்கிறது.

உலக சுகாதார அமைப்பு (W.H.O) வெளியிட்டிருந்தது வெறும் வழி காட்டலேயன்றி, எல்லா நாடுகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சட்டமன்று. எனினும், உலக பொது விதிக்கமைவாக ஏனைய நாடுகள் போன்று மக்கள் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பது மிகச் சாதாரணம். உதாரணமாக, ஐக்கிய இராச்சியத்தில் மார்ச் மாதம் 27ம் திகதி நிறைவேற்றப்பட்ட கொரோனா அவசர சட்ட விதியானது, மிகத்தெளிவாக 'ஒருவர் கொரோனாவால் இறப்பின், அவர் சார்ந்த சமய நம்பிக்கை பற்றி அறிந்திருப்பின் அல்லது தெரிய வருமிடத்து, அவரது இறுதிச்சடங்கினை அதனடிப்படையில் செய்வதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்' என எழுதப்பட்டிருந்தது. ஆதலால் 30,000 மரணங்களை எட்டியும் இங்கு சமூகங்களுக்கிடையிலான பாரபட்சம் எதுவும் இல்லை.

உலகிலேலேயே இலங்கை மாத்திரமே இவ்விடயத்தில் தனித்து நிற்கிறது. அதற்கான புவியியல் சார்ந்த விஞ்ஞான விளக்கம் கூட முன் வைக்கப்படாத நிலையில் இது அரசியல் விளைவு என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.

இங்கு எவ்வகையான அரசியல் விளைவு பேசப்படுகிறது? என்று சிந்திப்பின் அது இரு வகைப்படுகிறது. ஒரு தரப்பு, தற்போதைய ஆட்சியாளருக்கு கடந்த தேர்தலில் முஸ்லிம்கள் போதிய அளவு ஆதரவைத் தரவில்லையென்கிறது. ஆதலால், எதிர்வரும் தேர்தலிலும் ஆதரவளிக்கப்படா விட்டால், எதிர்காலத்தில் இன்னும் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறது. சுருங்கக் கூறின், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கூறிய 'அம்பானைக்கு கிடைக்கும்' என்ற வார்த்தை இங்கு நன்கு பொருந்தும்.

இன்னொரு தரப்பு, இவர்களிடம் பெரும்பான்மையைக் கையளித்தால் முஸ்லிம்கள் இதைவிட மோசமான உரிமையிழப்புகளை சந்திக்க நேரிடும், ஆகவே விழித்துக் கொள்ளுங்கள் என்கிறது. 

இரு பக்கத்திலும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இப்போதைக்கு ஆட்சியாளர்களை ஆதரிப்பவர்கள் என்னவென்றால், திகனயில் வன்முறையினால் எரியூட்டப்பட்ட முஸ்லிம் இளைஞனைக் காப்பாற்ற முடியாமல் போனதற்குப் பகரமாக தற்சமயம் ஜனாசாக்கள் எரிக்கப்படுவது தொடர்பில் தாம் வாய் மூடியிருப்பது நியாயம் என்கிறது. ஆனாலும், முஸ்லிம் பகுதிகளில் ஊரடங்கு நீக்கப்பட்டதும் உடனடியாக தாமே ஜனாதிபதியுடன் பேசி ஊரடங்கை நீ;க்கியதாக சொல்கிறது.

இன்னொரு புறத்தில் பிரதமரின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை, அங்கே முன் வரிசையில் அமரக் கிடைத்தமையெல்லாம் மாபெரும் அங்கீகாரம் என்றும் கூறுகிறது. ஆனாலும், ஜனாஸா எரிப்பு ஒரு சமூகத்தின் உரிமை மீதான அடக்குமுறையென பேச இங்கு யாரிடமும் ஒற்றுமையைக் காணவில்லை.

2018 ஒக்டோபரில், ரணில் விக்கிரமசிங்கவின் பதவி பறிக்கப்பட்ட போது முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்குள் ஒளிந்திருக்கும் கருப்பு அங்கிகள் எல்லாம் அவசரமாக அணியப்பட்டன. நீதிமன்றில் ஜனநாயகம் பேசப்பட்டது, வெல்லப்பட்டது. ஆனால் இப்போதுள்ள பிரச்சினை தனி மனித பிரச்சினையா? அல்லது சமூகப் பிரச்சினையா? என்பதற்கே இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளது.

ஒரு புறத்தில், கொரோனா உடலங்கள் அனைத்தையும் எரித்தேயாக வேண்டும் எனும் அரசின் சுற்றுநிருபத்தை எதிர்த்து அடிப்படை உரிமை வழக்கொன்றைப் பதிவு செய்வதற்கான முயற்சி பல குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயினும், ஒரு சிலர், பாதிக்கப்பட்டவர்கள் முன் வராமல் எப்படி நாங்கள் வாதாடுவது? என்றும் கேட்கிறார்கள்.

பொதுநல வழக்கொன்றைத் தாக்கல் செய்வதற்கு, பாதிக்கப்பட்டவர் அவசியமில்லை, ஆனாலும் அவர்கள் காரணம் சொல்கிறார்கள். இன்னும் சிலர் வழக்குக்கான தயார்படுத்தல்களின் இன்னொரு கட்டத்தையடைந்து திறமையுள்ள சட்டத்தரணிகளின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணத்தை தேடுவதில் மும்முரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பில் முயற்சிக்கும் பல குழுக்களின் கருத்துக்களை அறிந்து கொண்ட மட்டத்தில் அதன் உச்ச கட்ட செலவாக அவர்கள் அடைய முனைவது 15 லட்ச ரூபாய் என அறியமுடிந்தது. 

சமூக உரிமை என்ற பொதுத் தளத்திலிருந்து இவ்விடயத்தை அணுகும் மனப்பாங்கு எல்லோருக்கும் இருக்குமாக இருந்தால் கொரோனா நிதிக்காக 50 மில்லியனை வழங்கும் அக்பர் பிரதர்சுகள், தம் பணியாளர்களுக்கெல்லாம் எதுவித கழிவுமின்றி ஊதியங்களை வழங்குவதாக தெரிவித்துக் கொள்ளும் வர்த்தகப் பெருந்தகைகள் எல்லாம் இருக்கும் இச்சமூகத்தில் 15 லட்ச ரூபா என்பது ஒரு பொருட்டேயில்லை.

ஆனாலும், அது கடினமான விடயமாக இருக்கிறது எனின் அதற்கான அடிப்படைக் காரணம் முதலில் இது குறித்த பொது இணக்கப்பாடு இல்லாமை. அடுத்தது நம் வீட்டில் ஒரு மரணம் நிகழும் வரை இதன் தாக்கத்தினை அறிய மறுக்கும் தன்மையெனவும் கூறலாம். சரி, இது ஒவ்வொன்றும் தனி மனித உரிமைகள். அதாவது, தான் சார்ந்த உரிமை குறித்துப் பேசுவதும் அதற்காகப் போராடுவதும் கூட அவரவர் விருப்பம்.

அல்ஹம்துலில்லாஹ், இதையெல்லாம் மீறி, தற்போது இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, சமூக முக்கியஸ்தர்களின் முயற்சியால் மூன்றாவதாகப் பதியப்படவுள்ள வழக்கில் எதுவித கட்டணமுமின்றி ஆஜராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் இணங்கியுள்ளார்.

நீதிமன்றுக்குள் துருக்கித் தொப்பியோடு வரக்கூடாது என்று கூறப்பட்ட போது அப்துல் காதர் அதனை எதிர்த்து நின்றதனால் தான், சமூகம் அவர் பின்னால் அணி திரண்டது. அது அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையில் சாத்தியமானது. அதன் பின் வந்த காலத்தில் சமூகத்தின் அடிப்படை உரிமைகளை காப்பாற்றப் போவதாகவும், வென்றெடுக்கப் போவதாகவும் கூறியே முஸ்லிம் சமூகம் அரசியல் மயப்படுத்தப்பட்டது. அப்படியானால், அவ்வாறு செய்தவர்கள், அதில் இன்னும் குளிர்காய்ந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் எங்கே? என்றாவது மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.

அதையும் செய்ய விரும்புவதில்லை. ஏனெனில், அவன் நாளை மீண்டும் அமைச்சராக வந்து விட்டால் அவன் தயவும் தேவையென்ற அந்த வட்டத்தை விட்டு வெளியே வர முடிவதில்லை. சரி, மக்கள் தான் அப்படியென்றால், தேர்தல் காலத்தில் தொப்பியும் கையுமாக மேடைகளில் ஏறி முஸ்லிம் உரிமைக்காகத் தம் உயிரையும் கொடுக்கப் போவதாக சொல்லித் திரிந்தவர்கள் எல்லாம் எங்கே? அவர்களில் சிலர், இப்போது நாம் வாய் திறக்க முடியாது என்கிறார்கள், இன்னும் சிலர் உணர்வுகள் அடங்கிய பின்னர் அறிக்கை விடுகிறார்கள்.

இந்த சமூக லட்சணத்தைத்தான் 21ம் நூற்றாண்டின் இலங்கை முஸ்லிம்கள் வரலாறாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா சூழலை உலகமே முதன்முறையாக எதிர் நோக்கியுள்ளது. எல்லா நாடுகளும், அந்நாட்டு மக்களும் புதிய விடயங்களைக் கற்றுக் கொண்டு வருகிறார்கள். சமூக இடைவெளி மாத்திரமன்றி, ஏனைய சமூகங்களுக்கான மரியாதை, அங்கீகாரம் போன்றன உலக சமூகங்களுக்கிடையில் வளர்ந்து வருகிறது.

மீண்டும், ஐக்கிய இராச்சியத்;தை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால், கொரோனா போராட்டத்தில் முன்னிலையில் பணியாற்றி, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த முக்கிய மருத்துவ நிபுணர்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களாக இருக்கிறார்கள். இந்த செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில் இங்கு முஸ்லிம்கள் பற்றிய சமூக அபிப்பிராயம் வெகுவாக மாறியுள்ளது. தேசிய சுகாதார சேவைக்கு குடிவரவாளர்களின் மற்றும் அவர்களின் வாரிசுகளின் பங்கு வெகுவாக அவதானிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதேவேளை, இலங்கையில் இக்கால கட்டத்தில் எம் சமூகம் காட்டிக்கொண்டிருக்கும் எதிர்விளைவுகள் இன்னும் உலக பிரதிபலிப்புக்குச் சம நிலையில் வரவில்லை. சந்தேக எல்லைக் கோட்டிலேயே இலங்கை முஸ்லிம்களின் அன்றாட வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒற்றுமையெனும் கயிறு ஏதோ ஒரு ஆற்றங்கரைப் பக்கம் இருக்கிறது. எனவே, எங்கிருந்து இதை மீள ஆரம்பிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை.

இலங்கைக்குள் கொரோனா பரவல் ஆரம்பித்ததும் சமூகத்தின் கூறுகள் எவ்வாறு நடந்து கொண்டன என்பது பதியப்பட்டிருக்கிறது. விதி முறைகள் என்று வரும் போது அது எவ்வாறெல்லாம் மீறப்படுகிறது? என்பதை அரசு கவனித்துக் கொண்டிருக்கிறது. ஜனாஸா எரிக்கப்படுவதை விட ஊரில் கஞ்சி காய்ச்சி விநியோகம் செய்வது மிகவும் முக்கியம் என்று கருதப்படுகிறது. ஏதோ ஒரு ஊரில் பொலிசார் ஒரு சிலரை கைது செய்தாலும் இன்னும் பல இடங்களில் பொலிசாரின் ஒத்துழைப்புடனேயே அது பாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

இஷா இல்லை, ஆனால் தராவீஹ் தொழ போட்டி எனும் நிலைப்பாட்டை எம் மக்கள் வெளிக்காட்ட ஆரம்பித்த காலத்திலிருந்து எடுத்துரைத்து களைத்துப் போன உலமாக்கள் அமைதியாகி விட்டார்கள். சிவில் சமூக அமைப்புகள், உலமாக்களின் அமைப்புகள் எல்லாம் நிவாரணத்துக்கு நிதி சேர்ப்பதில் மும்முரமாக இருக்கின்றன. ஆனாலும், மக்கள் பல கூறுகளாகப் பிரிந்து கொண்டே செல்கிறார்கள்.

யார் சொல்வதை யார் கேட்பது? என்ற போட்டி நிலவுகிறது. இந்நிiலியல் நோன்புப் பெருநாள் வருகிறது. நோன்புக் கஞ்சி மீதே இத்தனை பற்றென்றால் நோன்புப் பெருநாளுக்கு புத்தாடையணிவது, அதுவும் நமக்கில்லாவிட்டாலும் நம் பிள்ளைகள் அணிய வேண்டும் என்று சிந்தித்து முண்டியடிக்கத் தயாராக இருப்பவர்களை எவ்வாறு கையாள்வது என்பது மிகக் கடினமான விடயம்.

கொரோனா சூழ்நிலையிலிருந்து நாடு முழுமையாக மீளும் வரை நாட்டின் சட்ட விதிகள், கட்டுப்பாடுகளுக்கு அடங்கி நடப்பதும், ஒத்துழைப்பதும் அனைத்து குடிமக்களுக்கும் கடமை. முஸ்லிம்கள் என்பதால் எந்த விதி விலக்கும் இல்லை. அப்படி விதி விலக்கு இருக்கத்தான் வேண்டும் என்று வாதாடுபவர்கள் முதலில் ஜனாஸா எரிப்புக்கு எதிரான போராட்டத்தில் குதித்துத் தம் சமூகப் பற்றை நிரூபித்தாக வேண்டும். எனவே, யாராலும் யாரும் தூண்டப்பட வேண்டாம் என்பதே கோரிக்கை.

கொரோனா சமூகப் பரவல் வெகுவாக இல்லையென்று இலங்கை அரசு கூறிக் கொள்கிறதே தவிர, அது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஜாஎல சுதுவெல்ல பகுதியில் ஒரு சாரதிக்கு கொரோனா வந்தது. அந்த நபரோடு அண்டிப் பழகிய 28 பேரை தனிமையில் இருக்குமாறு கூறியும் அவர்கள் கேட்கவில்லை. அவர்களைத் தேடி கடற்படையினர் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்து, பிடித்து முகாம்களுக்கு அனுப்புகிறார்கள்.

அதில் ஒரு கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது, ஈற்றில் வெலிசர கடற்படை முகாமில் நூற்றுக்கணக்கான படை வீரர்களுக்கு தொற்று. இது எப்போது அறியப்படுகிறது என்றால் அவர்களிடம் பரிசோதனை நடாத்தப்பட்டதனால் மாத்திரமே. இதே அளவில் பொது மக்களிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விட்டதா? என்றால் இல்லை. தற்சமயம் நோயாளர் என ஒருவர் கண்டறியப்பட்ட பின்னர் அவர் சார்ந்த இடங்களை முடக்குவது எனும் அடிப்படையிலேயே கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதுவும் பெரும்பாலானோர், நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலை சென்ற பின்னரே தொற்றிருப்பது கண்டறியப்படுகிறது, அதன் பின்னரே அவர்கள் வாழ்ந்த பிரதேசங்கள் முடக்கப்படுகிறது, அங்கிருந்து மக்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். மறுபுறத்தில், ஒப்பீட்டளவில் இலங்கையில் கொரோனா மரணங்கள் மிகக் குறைவாகவே இருக்கிறது. இது அரசாங்கத்தின் தகவல் அடிப்படையிலான நிலைப்பாடு. செவ்வாயன்று கொரோனா இருப்பதாகக் கூறப்பட்ட மூவருக்கு புதன் கிழமை கொரோனா இல்லையென அறிவிக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது.

ஆயினும், சந்தேகத்தின் பேரில் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள், வீடுகளில் தனிமைப்பட்டவர்கள் பட்ட துன்பத்துக்கு மாற்றீடோ, ஆறுதலோ கிடையாது. ஏதோ ஒரு வகையில் கொரோனா தொற்றில்லையென உறுதி செய்து வீடு திரும்பியதாக வேண்டுமானால் நிம்மதியடையலாம்.

எனவே, தம்மையும் - தாம் சார்ந்த சமூகத்தையும் இழி சொல்லிலிருந்தும், கொரோனா தொற்றிலிருந்தும் பாதுகாப்பதும் ஒவ்வொருக்கும் கட்டாயக் கடமையாகிறது. ஒற்றைத் தலைமைத்துவம் என்ற நிலை மாறி இன்று இலங்கை முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கான அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். அவரவர் சார்ந்த தலைவர்கள் சொல்லும் வரை மற்றவர் அறிவுரையைக் கேட்கும் நிலையில் இல்லை.

அரசியல் தளம், பிணத்தை வைத்துப் பிரச்சாரம் செய்யும் நிலைக்கு தேய்ந்து விட்டது. அதுவும் முஸ்லிம் உரிமை என்ற உணர்வோடு தனித்துவ அரசியலுக்கான கோசம் ஆரம்பித்த கிழக்கு மண்ணிலேயே அது ஆழமாக உருவெடுத்துள்ளது. அங்கிருந்து மத்திய மாகாணத்துக்கும் பின் தென் மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் கூட இந்த நிலை முகவர்களால் ஊட்டி வளர்க்கப்படுகிறது.

அப்பாவி மக்கள் எல்லோரும் சொல்வதைக் கேட்டுக் குழம்பிப் போயிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனாலும், தானாகச் சிந்தித்துத் தெளிவுபெறுவதற்குத் தயங்குகிறார்கள். இந்நிலை மாறி, சுய சிந்தனையுடனும் சமூகப் பொறுப்புடனும் தலைவர்களும், தொண்டர்களம், தாயிகளும், பக்தர்களும் செயற்பட வேண்டும்.

ஒற்றுமையே பலம்!

jTScYcS

- Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment