உடுப்பு வேணாம் வாப்பா... (சிறுகதை) - sonakar.com

Post Top Ad

Friday 22 May 2020

உடுப்பு வேணாம் வாப்பா... (சிறுகதை)

                                    
சரீப் நானாவுக்கு அன்று வியாபாரத்தில் நல்ல இலாபம். அறக்கப் பறக்க வீட்டுக்கு ஓடி வந்து வாசலில் நின்றவாறே சத்தமிட்டார். ' எல்லாரும் அவசரமா ரெடியாகுங்கோ....டவுனுக்குப் போய் பெருநாளைக்கு உடுப்பெடுத்திட்டு வந்திடுவம்....'

  மைமூனாவுக்கு சந்தோசம் தலைக்கு மேல் ஏற, பிள்ளைகளை உஷhர் படுத்திய வண்ணமே ஓடியாடி ஆயத்தமாகத் தொடங்கினார். அவர்தான் வீட்டுத் தலைவி. 50 வயதைத் தாண்டியவர்.

  ஏறத்தாழ 30 நிமிடங்கள் கழிந்த நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். ஆனால் யாரும் முழுமையாக ஆயத்தமானதாகத் தெரியவில்லை.

  மூத்த மகள் மும்தாஜ். வயது 22. 'பெயார் என்ட் லவ்லி' கிரீம் பூசி அது முகத்துக்கு ஒத்து வரவில்லையென அதை அழித்து விட்டு இரண்டாந் தடவையாக 'சந்தனாலெப்ப' கிரீம் பூசி அதுவும் சரிவரவில்லையென முகத்தைக் கழுவி விட்டு வந்து நிற்கிறாள்ளூ முகம் காய்ந்த பின் 'கோரி' கிரீம் பூசுவதற்காக.

  சியாமா. இரண்டாவது மகள். வயது 18. அலுமாரியைக் குடைந்து கொண்டிருக்கிறாள். புதிய உடுப்பு இல்லையாம். இருக்கின்ற உடுப்புகளெல்லாம் இரண்டு மூன்று தடவைகள் டவுனுக்குப் போவதற்காக உடுத்ததாம்.

  இதற்குள் சரீப் நானா அவசரப்படுத்திக் கொண்டிருக்கின்றார். ''ரெடியா எல்லாரும்?...ஆட்டாக்கு கோல் பண்ணட்டா?.......''    மைமூனா ஒருவாறு ஆயத்தமாகி அபாயாவுக்குள் புகுந்து கொண்டு ஹோலுக்கு வருகின்றார்.

  அங்கே அஸ்மா எந்த ஆயத்தமுமின்றி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள்தான் கடைசிப் பிள்ளை. வயது 13.   'எல்லாரும் ரெடியாயிட்டிருக்காங்க....நீ மட்டும் என்ன சும்மா உட்கார்ந்திருக்காய்...' தாய்க்குரிய கனத்தோடு கேட்கிறாள் மைமூனா.

'நான் வரல்லம்மா..... ஒரு ஆட்டாவுல ரெண்டு பேரத்தான் போகச் சொல்லிருக்கி.......தள்ளி இருக்கனுமாம்...டவுன்ல பொலிஸ் இருக்காங்க......நாம எல்லாரும் ஒரு ஆட்டாவுல போனா பொலிஸால புடிச்சிடுவாங்க..... எனக்கு பயமாக இருக்கு.....நான் வரல்ல.....' அஸ்மா அமைதியாகச் சொன்னாள்.  

சரீப் நானாவின் காதுகளுக்கு இது எட்ட அவர் வந்து கனிவோடு மகளிடம் பேசினார். 'அப்படின்னா... மகள்..நாங்க ரெண்டு ஆட்டாவுல போவம்... நீங்க ரெடியாவுங்க மகள்....

'எனக்கு வர ஏலா வாப்பா...' – அஸ்மா
'ஏன்'... - சரீப் நானா.

'போன வருஸம் ஹஜ்ஜுப் பெருநாளக்கி எடுத்த எடுப்பு இருக்கு...... அத ஒரு தரந்தான் நான் உடுத்த..... அத உடுக்க போறன்....எனக்கு  அது போதும்....'  - அஸ்மா

'மகள் ...எல்லாருக்கம் உடுப்பெடுக்கத்தான் காசு வெச்சிருக்கன்.....ரெடியாவுங்க மகள்....' - சரீப் நானா

'வாப்பா... ஒவ்வொரு நாளும் மஃரிபுக்குப் பொறவு நம்ம பள்ளி ஹஸ்ரத் ஸ்பீக்கர்ல சொல்றத நீங்க கேக்குற இல்லயா?......கொரோனா பிரச்சின இருக்கிறதால உலகமே முடங்கி போய் கிடக்குது.....சுகாதாரப் பிரச்சின இருக்குது....அதால யாரும் டவுனுக்கு போய் உடுப்பு வாங்காதீங்க.....உங்கள்ட்ட இருக்கிற உடுப்புல நல்;லத உடுத்துட்டு பெருநாள கொண்டாடுங்க..... என்று ஹஸ்ரத் ஒவ்வொரு நாளும் சொல்றது நமக்கும் சேரத்துத்தான் வாப்பா....இதக் கேக்காம நாங்களும் டவுனுக்குப் போனா எங்கட சமூகத்தத்தான குற சொல்லுவாங்க... 'லொக்டவுன்' காலத்துல மத்த சகோதரங்களும் அவங்கட பெருநாள, விசேசங்கள கொண்டாட இல்லயே....நாம போய் ஏன்.....'

அந்த பிஞ்சு உள்ளத்திருந்து உருவெடுத்த சத்தான கருத்துக்கள் சரீப் நானாவின் இதயத்துக்குள் ஈட்டியாய் பாய்ந்து மூளையைக் குடைய ஆரம்பித்தது. சற்று நேரம் மௌனமானார். பின் தெளிவோடு மனைவியையும், மற்ற பிள்ளைகளையும் பார்த்தார்.

'நம்ம சின்னவள் சொன்னதுக்கப்புறம்தான் எனக்கு ஒரு தெளிவே புறந்திச்சி....  ஊர் மக்கள் எல்லாருக்கும் சேத்துத்தான் ஹஸ்ரத் சொல்றாரு என்றத ஏன்ட மகள் உணர்த்திட்டா.... ஓவ்வொரு வீட்ல இருந்தும் இப்படி சிந்திக்கனும்.......இனி டவுன் பக்கமே போற இல்ல.... இருக்கிறத வெச்சி பெருநாள் கொண்டாடுவம்.... எனக்கு ஒரு ஐடியா வருது..... உடுப்பெடுக்க வச்சிருக்கிற காச பெருநாளன்று சாப்பிட வழியில்லாம இருக்கிறவங்களுக்கு சாமான் வாங்கிக் கொடுப்பம் என்று......' தீர்க்கமான முடிவோடு முடித்தார் சரீப் நானா.

முகம் மலர்ந்து சிரித்த அஸ்மா, 'அது நல்ல ஐடியா வாப்பா.... நான் சாமானையும்.. வசதியில்லாதவங்கட 'லிஸ்டயும்' போட்டுத் தாரன்......' என்றவாறே ஒரு கொப்பியுடனும் பேனையுடனும் ஓர் ஓரமாயிருந்து 'லிஸ்ட்' போடத் தொடங்கினாள்.

-M.B.M. மாஹிர் (பொலன்னறுவை)

No comments:

Post a Comment