கொரோனா பொருளாதார பாதிப்பும் ஆலிம்களின் நிலையும் - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 May 2020

கொரோனா பொருளாதார பாதிப்பும் ஆலிம்களின் நிலையும்

  • கடந்த 3 மாதங்களாக பள்ளி மௌலவி எந்தவொரு வேலையும் செய்யல்ல ,இந்த மாசம் அவருக்கு ஒரு சம்பளமும் கொடுக்க ஏலாது. (பள்ளி நிருவாகிகள்)
  • கடந்த மூன்று மாதமாக சம்பளம் எதுவுமுன்றி இரிக்கம். அல்லது அரைச் சம்பளம் ,கால் சம்பளமே கிடைக்கிது. நாங்க எப்புடி எங்க குடும்பச் செலவுகள ஈடுசெய்ற? ( பள்ளி இமாம்கள்)
  • மூனு மாசமா மத்ரஸாவே நடக்கல்ல, புள்ளயள்ர மாசக் காச வெச்சித்தான் நம்மட குடும்பச் செலவே நடக்குது, என்ன செய்ய அல்லாஹ்வே போதுமானவன். (மத்ரஸா ஆசிரியர்கள்)
  • மூனு மாசமா மத்ரஸாவே நடக்க இல்ல. எப்புடி மாதக் காசி கேட்பாங்க ? இவங்களுக்கு மன சாட்சியே இல்லியா? நாங்க குடுக்க மாட்டம். (பெற்றோர்கள்)
  • கொரோனா பிரச்சினை முடிஞ்சி நிலம சீராகிற வரைக்கும் சந்தா கிந்தான்னு இஞ்சாலப் பக்கம் ஆரும் வந்துரப்புடா. (நலன்விரும்பிகள்)
  • இந்த முறை கொரோனாவால வாப்பாவுக்கு ஒரு உதவியும் கிடைக்காதாம், சம்பளமும் இல்லியாம். பெரு நாளைக்கு உடுப்பு, சாமான் எதுவும் கேட்டு கஸ்டப்படுத்தக் கூடாண்டு உம்மா சென்னா (ஆலிம்களின் பிள்ளைகள்)

கடந்த சில நாட்களாக காதுகளில் விழுந்த மிகக் கவலையான வார்த்தைகள். இவையே இக்கட்டுரையை எழுத்தூண்டின.


கொரோனா வைரஸ் தாக்கம் தேசிய, சர்வதேச அளவில் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் தாக்கத்துக்கு பல தரப்பினரும் உள்ளாகியுள்ளனர்.

இலங்கையில் இவ்வாறு பெரும் பாதிப்புக்குள்ளான பகுதியினருள் பள்ளிவாயல்கள், அரபுக் கல்லூரிகள், குர்ஆன் மதரஸாக்களில் கடமையாற்றும் உலமாக்கள் சமூகத்தால் கண்டு கொள்ளப்படாத பிரிவினராக் காணப்படுகின்றனர். இவர்கள் பற்றியும் சமூக அக்கரை கொள்ள வேண்டும் எனும் விளிப்புணர்வுக்காக இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

மார்க்கப் பணியில் உலமாக்களின் வகிபாகம்

இலங்கையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாயில்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட அரபுக் கல்லூரிகள் ஆயிரத்துக்கும் மேலான குர்ஆன் மத்ரஸாக்கள் இயங்கிவருகின்றன. இவை அனைத்திலும் உலமாக்களே கடமையாற்றுகின்றனர்.

இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மார்க்கப்பற்றுடையவர்களாக வாழ்வதற்கும் மார்க்க கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றுவதற்கும் இவர்களது பங்களிப்பு மகத்தானது .குறிப்பாக நமது சிறார்களையும் இளைஞர் யுவதிகளையும் மார்க்க விழுமியங்களின் அடிப்படையில் வாழ வைப்பதில் இவர்களது வகிபாகம் இன்றியமையாத தேவையாகும்.

உலமாக்களின் நிலையும் சமூகத்தின் பொறுப்பும்

சமூகத்திற்காக உழைக்கும் இந்த உலமாக்களை மதிப்பதிலும் அவர்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றி கொடுப்பதிலும் அவர்களை கவனிப்பதிலும் எமது சமூகம் குறைபாடு கொண்டதாகவே காணப்படுகின்றது என்பதனை இங்கு மனவேதனையுடன் குறிப்பிட்டேயாக வேண்டும் .எமது உலமாக்களில் மிக அதிகமானோர் வறுமையின் பிடியின் கீழ் வாழ்கின்றனர் .நமது நாட்டில் பெரும்பாலும் செல்வ வளம் படைத்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் மார்க்கக்கல்வி பயில்வதற்கு செல்வதில்லை. வறிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளே பெரும்பாலும் மார்க்கக் கல்வி கற்று உலமாக்களாக வெளியேறுகின்றனர் .

இதனால் பெரும்பாலான உலமாக்கள் வறுமை நிலையிலேயே உள்ளனர் .செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மார்க்கக்கல்வி கற்க வரும்போது கற்று முடிந்ததும் பெரும்பாலும் மார்க்கப் பணியை விட்டு விட்டு தமது குடும்ப, பரம்பரை தொழிலுக்கு சென்றுவிடுகின்றனர் .இதனால் பள்ளிவாயல்களிலும் அரபுக் கல்லூரிகளிலும் குர்ஆன் மதரசாக்களிலும் பணியாற்றி இந்நாட்டு மக்களின் ஆன்மீக அடையாளத்தை பாதுகாத்து இரவு பகலாக உழைத்துக் கொண்டிருப்பவர்கள் வறிய உலமாக்கள் எனின் மிகையன்று.

பிறரின் தயவில் தங்கியிருக்கத் தூண்டும் மத்ரஸாக்களின் கல்விமுறை

பொதுவாக இந்நாட்டிலுள்ள பல அரபுக் கல்லூரிகளின் தூர நோக்கற்ற, சமயோசிதமற்ற கல்விக் கொள்கை காரணமாக பெரும்பாலான உலமாக்கள் அரச, தனியார் துறைகளில் தொழில்களை பெற்றுக்கொள்ளும் தகைமையுடையவர்களாக இல்லை.

சிலர் முழுத் தகைமையும் தங்களிடமிருந்தும் அரச தொழில்களுக்குச் செல்லாது மார்க்கப் பணிக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. வர்த்தகரீதியான தொழில் முயற்சிகள் பற்றிய அறிவு, அனுபவம் கூட அவர்களுக்கு போதுமானதாக இல்லை .இதனால் பெரும்பாலும் மற்றவர்களில் தங்கிவாழும் இக்கட்டான நிலையில் அவர்கள் உள்ளனர்.

குறிப்பாக பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகள், குர்ஆன் மத்ரஸாக்கள், வீடுகளுக்குச் சென்று குர்ஆன் கற்பிக்கும் வகுப்புக்கள் மூலமே அவர்களது வருமானங்கள் அமையப் பெற்றிருக்கின்றன. இத்தகைய நிறுவனங்கள் ஊடாக அவர்கள் மேற்கொள்ளும் சமயப்பணி குறைத்து மதிப்பிடப்பட முடியாத அதேவேளை இவற்றையே தமது வருமானத்திற்கான பிரதான வழியாக அவர்கள் கொண்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.

தங்கியிருக்கும் நிலையும் குறைந்த வேதனமும்

மேற்குறித்த நிறுவனங்கள் பெரும்பாலும் பிரதேச மக்களின் மாதாந்த சந்தாக்கள், நன்கொடைகள், பருவகால உதவிகள் மூலமே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பொதுவாக தங்களது அன்றாடத் தேவைகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவழித்து வரும் பலர் இத்தகைய நிறுவனங்களுக்கு உதவி செய்வதில் ஒன்றுக்கு பலதடவை கணக்கு பார்க்கின்றனர். தமது வருமானத்தில் மிகச் சொற்பமான தொகையையே இத்தகைய பணிகளுக்கு மிக சிரமத்துக்கு மத்தியில் வழங்குகின்றனர்.

அதுவும் மிகச் சிலரே வழங்குகின்றனர். அவ்வாறு வழங்குகின்றவர்கள் கூட தமது உதவிகளை தொடர்ச்சியாக வழங்குவதில்லை.

இதனால் இந்நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கான வேதனைகள் கவர்ச்சிகரமானதாக இல்லை என்பதுடன் அவை நியம முறையில் உரிய காலத்தில் தொடர்ச்சியாக வழங்கப்படுவதில்லை என்பதும் பொதுவான குறைபாடாகும். சாதாரணமாக கூலித் தொழிலாளி ஒருவர் நாளாந்த சம்பளமாக இரண்டாயிரத்துக்கு குறையாத ஒரு தொகையை பெறுகின்றார். சாதாரண அரச ஊழியர்கள் 40,000 தொடக்கம் மாதாந்த சம்பளம் பெறுகின்றனர்.

ஆனால் பள்ளிவாயல்களில் கடமையாற்றும் உலமாக்களும் அரபுக் கல்லூரிகளில் கடமையாற்றும் உஸ்தாத்மார்களும் மிகக்குறைந்த வேதனத்தையே இலங்கையில் பெறுகின்றனர் .சில பள்ளிகளில் பத்தாயிரம் முதல் பதினையாயிரம் வரையான சம்பளமே வழங்கப்படுகிறது.

சில பள்ளிகளில் இதை விடவும் குறைவு. அரபுக் கல்லூரிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இதைவிட சற்று அதிக வேதனம் வழங்கப்பட்ட போதும் 30, 35 ஆயிரத்தை தாண்டவில்லை. நகர்ப்புறங்களிலுள்ள மற்றும் வருமான வழிகள் கூடிய பள்ளிவாயில்கள் அரபுக் கல்லூரிகளில் பணியாற்றும் உலமாக்களின் சம்பளங்கள் இதிலிருந்து விதிவிலக்காக இருக்கலாம். ஆயினும் பொதுவாகப் பார்க்குமிடத்து உலமாக்களுக்கு வழங்கப்படும் சம்பளமானது அவர்களது வாழ்க்கைச் செலவை ஈடுசெய்யக்கூடிய அளவுக்கு இல்லை என்பது இங்கு குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய விடயமாகும்.

இத்தகைய நிறுவனங்களில் பணியாற்றும் பெரும்பாலான உலமாக்கள் அன்றாட உணவுத் தேவை ,உடு புடவைகள், மருத்துவச் செலவுகள், பிள்ளைகளின் படிப்புச் செலவுகள், வயது வந்த பெண் பிள்ளைகளின் திருமணச் செலவுகள் என்பவற்றுக்காக தொடர்ந்து போராடி கடன் சுமைகளுடனேயே வாழ்ந்து வருவது அவதானிக்கப்படுகின்றது .

கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு

இந்தப் பின்னணியில் கடந்த மூன்று மாத காலமாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளது. தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு சட்டம் காரணமாக பலர் தங்களது தொழில்களை இழந்துள்ளனர். பலர் தமது அன்றாட குடும்பச் செலவுகளுக்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவது மறுக்க முடியாத உண்மையாகும். கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக இலங்கையிலுள்ள பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகள், குர்ஆன் மத்ரஸாக்கள் என்பன கடந்த மூன்று மாதங்களாக அனைத்தும் இழுத்து மூடப்பட்டுள்ளன.

இந்நிறுவனங்களில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான உலமாக்கள் தமது வருமானத்தை இழந்துள்ளனர். இந்நிறுவனங்கள் இயங்காமல் இழுத்து மூடப்பட்டுள்ளதாலும் பிரதேச மக்கள் தமது வருமான பற்றாக்குறையினாலும் குறித்த நிறுவனங்களுக்கு மாதாந்தம் வழங்கும் சந்தா தொகைகளையும் நன்கொடைகளையும் வழங்காததன் காரணமாக இந்நிறுவனங்களில் பணியாற்றிய பல உலமாக்களுக்கு மார்ச் ,ஏப்ரல் ,மே மாதங்களுக்கான சம்பளங்கள் பல நிறுவனங்களால் வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. சில நிறுவனங்கள் முழுச் சம்பளத்தை வழங்காமல் அரைச் சம்பளத்தையோ அல்லது ஒரு பகுதியையோ வழங்கியிருக்கின்றன. சில நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றிய உலமாக்களை முழுமையாக இடைநிறுத்தி வேறு தொழில்களை தேடிக் கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கின்றன.

ரமழான் கால நன்கொடைகளுக்கு விழுந்த பேரிடி

இவ்வாறான நிலையில் இத்தகைய நிறுவனங்களில் கடமையாற்றிய உலமாக்கள் பொருளாதார ரீதியாக நெருக்கடி நிலையை அடைந்துள்ளனர்.
தனக்கும் தனது குடும்பத்துக்கும் புனித ரமலான் மற்றும் பெருநாள் தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியாது தத்தளிக்கின்றனர். பெரும்பாலும் இத்தகைய நிறுவனங்களில் கடமையாற்றும் உலமாக்களுக்கு ரமலான் காலம் மிகப்பெரும் வரப்பிரசாதமாகும். இக்காலப்பகுதியில் ஏழை, எளியவர்களுக்கும் தேவையுடையவர்களுக்கும் தனவந்தர்கள் வாரி வழங்கும் போது இவர்களுக்கும் தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்குவார்கள். நகர்ப்புறங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு பரோபகாரிகளால் நிறைய உதவிகள் கிடைக்கப் பெறுவதுண்டு. அதன் மூலம் கடந்த வருடத்தில் நிலுவையான தமது கடன்களை அடைப்பதிலும் வீட்டுத் தேவைகளை நிறைவு செய்வதிலும் குடும்ப உறவினர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வதிலும் அவர்கள் கவனம் செலுத்துவர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த ரமலானில் பள்ளிவாயல்கள் இயங்காததன் காரணமாக அந்த உதவிகளும் அவர்களுக்கு இம்முறை கிடைக்கப்பெறாமல் பேரிடி விழுந்துள்ளதென்பது மிகவும் கவலையான விடயமாகும் .

எல்லாம் மூடப்பட்டிருக்கும் போது சம்பளம் எதற்கு ?

சில பள்ளிவாயல்கள், அறபுக்கல்லூரிகளின் நிர்வாகிகளும் பொதுமக்களும் பள்ளிவாயல்கள், கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் போது அவர்களுக்கு எதற்காக சம்பளம் கொடுக்க வேண்டும்? மக்கள் பொருளாதாரரீதியாக கஸ்டத்தில் இருக்கும்போது மாதாந்த சந்தாக்களையோ நன்கொடைகளையோ பள்ளிவாசல்களுக்கும் மத்ரஸாக்களுக்கும் வழங்க முடியாது என கூறுகின்றனர். பெரும்பாலும் அரபுக் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களது மாதாந்த கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டே பல அரபுக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. குறித்த இந்த மூன்று மாதங்களும் கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை அறவிடமுடியாத நிலை காணப்படுவதுடன் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தமது பொருளாதார நிலையைக் காரணம் காட்டி மாதாந்த கட்டணங்களை செலுத்த முடியாது எனக் கூறுவதுடன் சில நேரம் கடிந்தும் கொள்கின்றனர். இதனால் நிருவாகங்கள் தமது நிறுவனங்களில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கின்றன.

மறு பக்கத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் என்றாலும் பொருளாதார கஸ்டம் என்றாலும் யாரும் உண்ணாமலும் இல்லை குடிக்காமலும் இல்லை பெருநாளுக்கு புத்தாடைகள் வாங்காமலும் இல்லை எனபதே உண்மை நிலையாகும் இத்தகைய சூழலில் பள்ளிவாயல்களிலும் அரபு கல்லூரிகளிலும் குர்ஆன் மத்ரஸாக்களிலும் கடமையாற்றிய உலமாக்களுக்கும் பணியாளர்களுக்கும் அவர்களது கஸ்ட நிலையை உணர்ந்து தங்களால் முடிந்த உதவிகளை வழங்க நிர்வாகிகளுக்கும் மஹல்லா வாசிகளுக்கும் பெற்றோர்களுக்கும் மனம் இல்லாமல் போனது கவலைக்குரிய விடயமாகும். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, பிள்ளைகள் இருக்கின்றார்கள், பசி இருக்கிறது, வாயிம் வயிறும் இருக்கின்றன. தேவைகள் இருக்கிறன என்பதை இவர்கள் உணராமல் இருப்பது என்பது மிகவும் கவலையைத் தருகிறது. மற்றவர்களெல்லாம் வேளா வேளைக்கு உண்டு, புசித்து, உடுத்து மகிழ வேண்டும். பள்ளிகளிலும் மத்ரசாக்களிலும் கடமையாற்றும் உலமாக்கள் மட்டும் மண்ணைத்திண்டு மழைத் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அல்லது பட்டினி கிடந்து சாக வேண்டும் என்ற எண்ணத்திலா ? இந்த சமுதாயம் இருக்கிறது என கேட்கத் தோன்றுகிறது.

எனவே பள்ளிவாயல்கள் மற்றும் மத்ரஸாக்களின் நிருவாகிகள் இவ்விடயத்தில் தீவிர கவனம் செலுத்துவதுடன் ஊர் ஜமாத்தார்களும் பெற்றோர்களும் தமக்காகவும் தமது பிள்ளைகளின் கல்வி நலனுக்காகவும் இரவு பகலாக உழைக்கின்ற இந்த உலமாக்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்யாமல் கைவிடுவது எந்த வகையில் நியாயம் எனச் சிந்திக்க வேண்டும் என அன்பாக கேட்டுக் கொள்பவனாக இருக்கின்றேன்.

நிருவாகிகளின் பொறுப்பு

நிறுவனங்களில் நிருவாகப் பொறுப்பு என்பது அந்தப் பதவிக்கான அலங்காரம் கிடையாது .மாறாக தேவையான நேரத்தில் களமிறங்கி செயற்பட்டு இத்தகைய தேவைகளை நிறைவேற்றுவதும் அவர்களது பொறுப்பாகும். வெறுமனே பள்ளிவாசல்களிலும் நிறுவனங்களிலும் வைப்பில் உள்ள நிதிகளை செலவழித்து விட்டு இனி ஒன்றுமில்லை என கைவிரித்து விடுவது பொறுப்பு வாய்ந்த நிருவாகிகளுக்கு அழகாக இருக்காது என்பதை நினைவூட்டுவதுடன் சகல சகோதரர்களும் பொருத்தமான பொறிமுறையூடாக இவர்களுக்கு இந்த ரமழான் மாதத்திலாவது உதவ முன் வர வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

-அஷ்ஷெய்க் ஏ. எல். பீர்முஹம்மது (காஸிமி) M. A
(Mohamed Farzan)

No comments:

Post a Comment