33 வருட தபால் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார் ஓட்டமாவடி அப்துல் காதர் - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 May 2020

33 வருட தபால் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார் ஓட்டமாவடி அப்துல் காதர்ஓட்டமாவடியைச் சேர்ந்த எஸ்.எம்.எம்.அப்துல் காதர் தனது 33 வருட தபால் சேவையிலிருந்து (06.05.2020) ம் திகதி ஓய்வு பெற்றுள்ளார்.வாழைச்சேனையைச் சேர்ந்த மிஸ்கீன் பாவா சீனி முகம்மது, முகம்மது இப்றாகீம் சாலிஹா உம்மா தம்பதிகளுக்கு 1960ம் ஆண்டு 5ம் மாதம் 9ம் திகதி மகனாகப் பிறந்த இவர், தனது ஆரம்பக் கல்வியை வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையிலும் உயர் தரக் கல்வியை ஓட்டமாவடி தேசிய பாடசாலையிலும் கற்றார்.

வாகனேரி உப தபாலகத்தில் 1987ம் ஆண்டு 1ம் மாதம் 1ம் திகதி உப அஞ்சல் அதிபராக இவருக்கு முதல் நியமனம் கிடைத்தது.

வாகனேரி உப தபாலகம் 2000ம் ஆண்டு 08ம் மாதம் 04ம் திகதி தபாலகமாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இவர் 2ம் தர அஞ்சல் அதிபராக பதவி உயர்வு பெற்றார்.

அதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அஞ்சல் பயிற்சிக் கல்லூரியில் 2003ம் ஆண்டு, 6 மாத பயிற்சியினை முடித்து மீண்டும் வாகனேரி தபாலகத்தில் 13 வருடங்களாக சேவையாற்றினார்.

ஓட்டமாவடி அஞ்சல் அலுவலகத்திற்கு 2004ம் ஆண்டு இடமாற்றம் பெற்று கடமையாற்றியதோடு, 2012ல் நடைபெற்ற 1ம் தர அஞ்சல் அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து பதவி உயர்வு பெற்றார்.

மீண்டும் 2013ம் ஆண்டு வாகனேரி தபாலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற இவர் தனது தபால் சேவைக் காலத்தை நிறைவு செய்து ஓய்வு பெற்றுள்ளார்.

அனைவரிடமும் அன்பாகப் பழகும் இவர், தபாலகத்திற்கு வருகை தரும் நபர்களின் தேவைகளை உணர்ந்து வேலைகளை இலகுபடுத்த வழி வகுப்பதோடு, உத்தியோகத்தர்கள், ஊழியர்களுடன் சிறந்த முறையில் பழக் கூடியவர்.

அவர் சேவை புரிந்த காலத்தில் வாகனேரி தபாலகம் தரமுயர்த்தப்பட்டதை கூறும் போது, அதற்காக பாடு பட்ட நபர்களை அவர் இன்னும் மறக்காமல் நினைவு கூர்ந்தார்.

அவர்களில் ஒருவரான காவத்தமுனையைச் சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராக செயற்பட்ட எஸ்.எம்.ஏ.ஹுஸைன் என்பவர் நேரம், காலம் பாராமல் தபாலக தரம் உயர்வுக்கு பாடு பட்டுள்ளார் என்று நன்றி மறவாமல் கூறினார்.

தபால் சேவைக்காகப் பாடுபட்டு சிறந்த சேவைகளை செய்தது போன்று அவரின் பிள்ளைகளின் கல்வி விடயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.

ஐனுல் மர்ழியா என்பவரை திருமணம் முடித்துள்ள இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இவரின் வழிகாட்டலில் பிள்ளைகள் கல்வி கற்று இன்று நல்ல நிலையினை எட்டியுள்ளதை நினைத்தும் இவர் ஆனந்தம் கொண்டதை உணர முடிந்தது.

இவருடைய மூத்த மகன் ஓட்டமாவடி அமானா வங்கிக் கிளையில் பணிபுரிவதாகவும், இரண்டாவது மகன் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று பட்டதாரியாக வெளியேறியுள்ளதாகவும், அத்தோடு மகள் இம்முறை நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர் கல்வியைக் தொடரவுள்ளதாகவும் கூறினார்.

ஓய்வு பெற்றுச் சென்றுள்ள இவர் நீண்ட ஆயுளுடனும் நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a comment