ஜெருசலக் கனவுகள்! - sonakar.com

Post Top Ad

Sunday, 2 February 2020

ஜெருசலக் கனவுகள்!சுமார் 2000 ஆண்டுகளாக கானானியர்கள், யூதர், கிறிஸ்தவர், முஸ்லிம்கள் என்ற பல தரப்பட்ட ஆளுகைக்குட்பட்ட ஜெருசலேம் இன்றைய உலக சிக்கல்கள் பலவற்றின் மத்திய புள்ளியாகத் திகழ்கிறது.இலங்கையிலும் தகவல் தொழிநுட்பம் தற்காலம் அளவுக்கு முன்னேறியிருக்காத, சஞ்சிகைகள், பத்திரிகைகளில் படித்தே உலக விவகாரங்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்த காலங்களில் கிலாபத் விதையூட்டலுக்கு ஜெருசலேம் முக்கிய கருப் பொருளாக இருந்தது. 

யசீர் அரபாத்தின் பாலஸ்தீனம் விடுதலை பெறும் என்ற நம்பிக்கையை யாரும் இழந்திருக்கவில்லை. விடுதலைப் போராட்டம் என்றாலே முதலில் வந்து நிற்கும் காட்சி பலஸ்தீன விடுதலைப் போராட்டமாகவே இருந்தது. பலஸ்தீன மக்களின் விடுதலை மற்றும் நிம்மதிக்காக துஆ கேட்காத ஜும்மாக்கள், ரமழான் இரவுகள் கூட இருந்திருக்க மாட்டாது. அந்த அளவுக்கு இலங்கை முஸ்லிம்களுக்கும் பலஸ்தீன-ஜெருசல விவகாரங்கள் உணர்வுபூர்வமானதாக இருந்தது.

இருந்தாலும், இப்போது கோட்டாபே ராஜபக்ச ஆட்சிக் காலம் என்பதாலோ என்னவோ இலங்கையின் முஸ்லிம் கொள்கை இயக்கங்கள் எல்லாம் தமக்குப் புதிய முகம் தேடி அலை மோதிக் கொண்டிருக்கின்றன. சில தசாப்தங்களாக ஜெருசல கனவினை ஊட்டி வளர்க்கப் பாடுபட்ட முஸ்லிம் சஞ்சிகைகள் கூட இனி நாம் இலங்கையர்கள் என்ற முடிவுக்கு இப்போது வந்து, ஆசிரியர் தலையங்கங்களிலேயே ஜனாதிபதி புகழ் பாடிக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

ஒரு கணம், இந்த அச்ச உணர்வை படைத்தவன் மேல் வைத்திருந்தால், நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட இத்தீவில் கடந்த நூற்றைம்பது வருடங்களில் 2.5 வீத அளவுக்கே சனப்பெருக்கத்தைக் கண்டுள்ள, சிறுபான்மையான முஸ்லிம் சமூகத்தை தேச உணர்விலிருந்து வழி கெடுக்காமல் விட்டிருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

அறிவு மற்றம் தொழிநுட்பம் வெகுவாக வளர்ந்துள்ள இக்காலத்திலேயே சைனாவில் உள்ளவர்களுக்கு நிகாப் அணிவதன் நன்மையை உணர்த்தவே அங்கு கொரோனா வைரஸ் உருவாகியிருப்பதாக எம் மக்கள் கூறிக் கொள்கிறார்கள். அதேபோல, அங்கு முஸ்லிம்களைத் துன்புறுத்தியதனாலேயே சைனாவுக்கு வைரஸ் அழிவு வந்துள்ளது என்றும் கூறிக் கொண்டு பார்மசிக்கு முகமூடி வாங்குவதற்கு அவசரகமாக ஓடுகிறார்கள்.

ஒரு வகையில் இது மனித மனங்களின் பல வீனத்தின் வெளிப்படையாகவும் கருதக் கூடிய விடயமாகும். நாளை இமாம் மஹ்தி எம் உம்மத்து முன் தோன்றினால், அவர் தான் மஹ்தி என்பதை நிரூபிக்கவே படாத பாடு பட வேண்டும். ஈஸா (அலை) மீள வந்ததும் மிகக் கடினமாக உழைத்து தனக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அற்புதங்களை ஊர் ஊராக செய்து காட்டி நிரூபிக்க நேரிடும். அந்த அளவுக்கு அதிசயங்கள்-அற்புதங்கள் ஏதும் நடாத்தப்பட்டால் மாத்திரமே இறை சக்தியை நம்பக் கூடிய அளவுக்கே மக்கள் இருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் மாத்திரமன்றி எல்லா மதத்தவர்களின் நிலையும் அவ்வாறே. ஆதலால் தான் இந்தியாவில் மந்திர-தந்திர வித்தைக்காரர்கள் எல்லாம் சாமியாராகிறார்கள், அவர்களுக்கென லட்சக் கணக்கில் பக்த கோடிகளும் உருவாகிறார்கள். ஆனாலும், இவ்வுலகின் இயக்கத்தைத் திட்டமிட்ட போதே இறுதித் தூதரையும் தீர்மானித்து விட்ட இறைவன், இவ்வாறு அற்புதங்களைக் காட்டித் தான் இஸ்லாத்தை நிறுவ வேண்டுமென்றிருந்தால் எம்பெருமான் கண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கு மிகச் சிறந்த அற்புதங்களைத் தந்திருக்க முடியும்?

மாறாக, அவரோ தனக்குக் கிடைத்த 23 வருட காலத்தில் மனிதத்துவத்துடன் வாழ்ந்து, ஆழமான ஆன்மீக சிந்தனையை விதைத்து எல்லோரும் போலவே மரணித்தார்கள். அதற்கடுத்து வந்த சில நூற்றாண்டு வரையான முஸ்லிம் உம்மத்திடம் காணப்பட்ட உறுதியான ஈமான் அங்கிருந்து தேய ஆரம்பித்து இன்று கொரோனா வைரசுக்க உரிமை கொண்டாடும் அளவில் வந்து நிற்கிறது. எனினும், உலகளவில் பாதிக்கப்பட்ட அனைவருக்குமாக பிரார்த்திப்போம் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஒரு அறிக்கையையாவது வெளியிட்டிருப்பது ஆறுதல்.

ஆயினும், சதா உணர்ச்சிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம் ஆறுதலடைய நாழியாகலாம். இந்த சந்தடியில் மத்திய கிழக்குக்கான சமாதானத் திட்டம் என்ற பெயரில், பலஸ்தீனம் என்ற தேசத்தினையும் உருவாக்கி அங்கீகரிக்கும் நூற்றாண்டின் சிறந்த திட்டத்தை தான் முன் வைத்துள்ளதாக தெரிவிக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களால் புனித நகராகப் பார்க்கப்படும் பிரிக்க முடியாத ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக்குவதாகவும் ட்ரம்ப் அறிவிக்க, அதனை இஸ்ரேல் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்தக் கனவு ஒரு போதும் நனவாகாது, ஜெரூசலத்தை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இல்லையென பலஸ்தீனம் உறுதியாக தெரிவிக்கிறது. ஆயினும், அண்டை அரபு நாடுகளுக்குள் ஒற்றை நிலைப்பாடு இல்லை.

ஈற்றில், வேறு எந்த நாட்டினதும் உதவிகளில் தங்கியிராத தன்நிறைவடைந்த நாடாக பலஸ்தீனம் உருவாகும் என்ற டிரம்பின் பேச்சுக்க மத்திய கிழக்கே சேர்ந்து அங்கீகரிமளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனினும், அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் போது கிழக்கு ஜெருசலம் பக்கமாக பலஸ்தீனத்துக்கு ஒரு தலை நகரம் கிடைக்கும். மேற்கு காசாவில் அமைந்துள்ள இஸ்ரேலின் புதிய குடியேற்றங்களும் நிலையாகத் தொடரும். 

இதனை மேலும் உறுதிப்படுத்த, தன் திட்டத்தை விளக்கிய ட்ரம்ப், எந்தவொரு பலஸ்தீனரோ இஸ்ரேலியரோ தமது வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட மாட்டார்கள் என்று சொல்கிறார். எனினும் நிர்வாக அலகை இஸ்ரேலிடம் தாரைவார்த்துக் கொடுப்பதே திட்டம் என்பதால் ஜெருசலம் முற்றாகப் பறிபோகும். அல்-அக்சா நிர்வாகத்தை தொடர்ந்தும் ஜோர்தான் பார்த்துக் கொள்ளும் என்று ட்ரம்ப் மகிழ்ச்சிக் களிப்புடன் சொல்லும் போதே ஜோர்தான் எதிர்க்கப் போவதில்லையென்பது முடிவாகத் தெரிகிறது.

பலஸ்தீன தேசம் உருவாவதனால் உள்ள நன்மைகளை ஏற்றுக்கொள்வது புத்திசாலித்தனம் என டிரம்பின் திட்டத்தைப் பின் தொடர்ந்து எகிப்து அறிவுரை சொல்லும் போது அங்கும் நிலைமை வேறு என்பதைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. எல்லாம் சரி, பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை மையமாக வைத்து இலங்கையில் பல தசாப்தங்களாக உணர்ச்சியூட்டலில் ஈடுபட்டு வந்தவர்களின் நிலை என்னாயிற்று? என்று பார்க்கும் போது ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள தேசப் பற்று இன்னொரு பக்கத்தில் மெய்சிலிர்க்க வைக்கிறது.

காரணம் உண்டு. இதற்கு முன் தேசப்பற்று பற்றி பேசும் பொழுது, உலக உம்மத் என்பதுதான் தேசியம், நாம் இலங்கையராகப் பிரித்துப் பார்க்க முடியாது என்று தான் விளக்கம் கூறப்பட்டது. ஆனால், இப்போது இலங்கையர் என்ற வரையறை தான் சரியென பிரச்சாரத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளார்கள். கடந்த காலங்களில் இவ்வாறு ஒரு பகிரங்கமான நிலைப்பாட்டுக்க இந்த கொள்கையிஸ்டுகள் வந்திருந்தால் ஒருவேளை ஈஸ்டர் தாக்குதல் என்ற மாயைக்குள் இளைஞர்கள் சிக்கிக் கொண்டிருக்க மாட்டார்களோ? என்ற கேள்வியெழாமலில்லை.

இனவாத சம்பவங்களால் தோய்ந்து போயிருந்த மனங்களாயினும் கூட தம் தேசப் பிணைப்பினூடாக பெரும்பாலான முஸ்லிம்கள் தீவிர சிந்தனைகளை கேட்கக்கூட விரும்பவில்லை. கவலையிருந்தது, ஆட்சியாளர்கள் தீர்வொன்றைத் தருவார்களோ இல்லையோ சட்ட-ஒழுங்கை நடைமுறைப்படுத்தினாலே போதுமானது, எல்லா சமூகங்களுக்கும் சமநீதி கடைப்பிடிக்கப்பட்டாலே போதுமானது என்றே முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்தது.

வரலாற்றை மிக ஆழமாக ஆராயும் போது, மக்கா-மதீனாவிலிருந்;து ஏனைய நாடுகளைச் சென்றடைந்த இஸ்லாமிய ஆன்மீகக் கோட்பாடுகள் பெரும்பாலான இடங்களில் பிராந்திய கலாச்சார-பண்பாட்டு விடயங்களுடன் ஒன்றரக் கலந்தே வலுவான நம்பிக்கையாக உருவெடுத்திருந்ததைக் காணலாம். இறைவனிடம் முழுமையாகச் சரணடைந்த நிலையில் உறுதியான ஈமானைக் கொண்டிருந்த அக்கால மக்கள் எதிர்நோக்கிய ஆபத்துக்கள், யுத்தங்கள் மற்றும் சிக்கல்களில் மிகச் சிறு பங்கே கடந்த 600 வருடங்களாக இலங்கை முஸ்லிம்கள் சந்தித்து வருகிறார்கள். 

ஒவ்வொரு கால கட்டத்திலும் சோதனைகளைத் தாண்டிச் செல்ல சமூகமும் அதன் தலைமையும் ஒன்றிணைந்து, தூர நோக்குடன் திட்டமிட்டுப் பணியாற்றியது. ஆனால், இக்காலத்தில் இந்த பொதுத்தன்மை எள்ளளவும் இல்லையென்பதால் சிதைந்து நிற்கிறது.

இலங்கையில் இந்த சிதைவின் பெருமை யாவும் சமூகத்தை பல கூறுகளாகப் பிரித்த கொள்கை இயக்கங்களையே சாரும். இதற்கு முன் சென்ற காலங்களில் இலங்கையில் வாழும் முஸ்லிம்களை இலங்கையர்களாக சிந்திக்க வைப்பது அல்லது அது தொடர்பில் பகிரங்கமாக பேசுவது மிகக் கடினமானது என நினைத்தவர்கள் இன்று திடீரென தமது சஞ்சிகைகளில் கோட்டாபே ராஜபக்ச புகழ் பாடும் போது மாற்றத்தின் வடிவம் பளிச்செனத் தெரிகிறது.

அரசியலாக இருக்கட்டும், மார்க்கப் பிரச்சினையாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் இன்றைய இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்த்தரப்பைப் பழிவாங்க ஆட்சியாளர்களின் உதவியையே நாடுகிறார்கள். அதில் வெற்றி கண்டவர்கள் பாதுகாப்பாக மைக் போட்டு ஏனையோரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள், இன்னும் இன்னும் தகவல் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக, இன்றைய காலத்தில் போட்டியென்னவோ ஆட்சியாளர்களின் ஆசி மற்றும் நட்பைப் பெறுவதுதானே தவிர படைத்தவனின் திருப்திக்காக உழைப்பதோ சமூக ஒற்றுமையோ இல்லை.

உதுமானிய பேரரசை இஸ்லாமிய ஆட்சியின் சிகரமாக கருதுவோர் பல லட்சங்களில் இருந்தாலும் கூட அந்த ஆட்சி உருவாவதற்கான அடிப்படைப் போராட்டமும் அதற்கு முந்தைய சூழ்நிலைகளும் பிராந்திய முஸ்லிம் உம்மத்துக்கு எதை உணர்த்தியிருந்தது? அப்போது எது இல்லாமல் இருந்தது? எதை அடைந்து கொண்ட பின்னர் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தமது மண்ணையும், மக்களையும், கோத்திரங்களையும் பாதுகாக்க முடிந்தது? என்பதை யாரும் ஆராயச் செல்வதில்லை.

அனைத்து கோத்திரங்களும் தமது வேற்றுமைகளைக் களைந்து ஒன்றிணைந்து, ஒரே உம்மத்தாக போராடினாலன்றி வெற்றி காண முடியாது எனக் கண்டறிந்து முடிவெடுத்த முதற் தலைமுறை வெற்றியைக் காணவும் இல்லை, உதுமானிய பேரரசின் தந்தை சுல்தான் முதலாம் உஸ்மானின் காலத்தில் உருவம் பெற்ற உதுமானிய அமீரகம் பேரரசாக மாறுவதற்கு அடுத்த சில நூற்றாண்டுகளும் அது வரையான தொடர் முயற்சியும் போராட்டமும் தேவைப்பட்டது. இக்கால கட்டத்தில் அம்மக்களிடம் இறை நம்பிக்கை மேலோங்கியிருந்தமை மறுமலர்ச்சியின் (Resurrection) அடிப்படையாக அமைந்தது.

இன்னொரு புறத்தில் இந்த வீழ்ச்சியும் எழுச்சியும் நபிகள் நாயகம் (ஸல்) மறைவிலிருந்து அடுத்த நான்கு முதல் ஆறு நூற்றாண்டுகளுக்குள் நடைபெற்றது எனும் போது அங்கிருந்து இன்னும் ஆறேழு நூற்றாண்டுகள் கடந்து வந்துள்ள இன்றைய முஸ்லிம் சமூகத்தின் நிலை எவ்வாறிருக்கும்? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உலக அளவில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் ஒவ்வொரு நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தையும் பாதிக்கச் செய்கிறது. குறிப்பாக, இலங்கையில் மேலோங்கியுள்ள முஸ்லிம் விரோதம் அரசியல்மயப்படுத்தப்பட்டதனால் மிகவும் ஆபத்தானதாகவே தொடர்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் கொள்கை இயக்கங்கள் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தூர நோக்கில் இச்சமூகத்தை இன்னும் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

எல்லைக் கோடுகளும், இறையான்மை மற்றும் பொருளாதார, இராணுவ பலம்-பலவீனங்களால் நாடுகளுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் நிலையில் இலங்கை முஸ்லிம்கள் தாயகத்தின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட ஒற்றைச் சமூகமாக மறுமலர்ச்சி பெறுவதும் அவசியமாகிறது. இந்த மறுமலர்ச்சி அரசியல் சூழ்நிலைகளுக்கான சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளாக இன்றி தூய்மையான பயணமாக இருக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

1970களுக்குப் பின், 2000ம் ஆண்டுக்குப் பின் உள்ள முஸ்லிம் சமூகத்தைக் குறை காணும் அளவுக்கு சுதந்திரத்துக்கு முன் மற்றும் சுதந்திரத்துக்குப் பின்னான இரு தசாப்தங்களைச் சேர்ந்த எம் முன்னோரை இலங்கை அரசியல் குறை காணவில்லை. இன்று கூட எதற்கெடுத்தாலும் டி.பி. ஜாயா, ஏ.எம்.ஏ அசீஸ், அப்துல் காதர், எம்.சி.எம். கலீல் என்று 20ம் ஆண்டின் முற்பகுதியில் வாழ்ந்த சமூக முன்னோடிகளைய திரும்பத் திரும்ப தேடிப் புகழ்பாட வேண்டியிருக்கிறது. புதிதாக உள்ளவர்களை தேசிய அரசியலும் நியாயமானவர்களாகப் பார்க்கவில்லை, தேசமும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கணம், ஏன்? என சிந்தித்தால் தாமும் பொறுப்பாளிகளாகிவிடுவோம் என்ற அச்சத்தால் மக்களும் சிந்திப்பதில்லை.

சரி, நேற்றைய தலைமுறை அதற்கான ஆவன செய்யாமல் விட்டுவிட்டது என்றே வைத்துக் கொள்வோமே, நாளைய தலைமுறைக்காக நாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறோம்? துதி பாடித் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் சமூகம் சிந்திக்கக் கடவதாக!

jTScYcS
-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a comment