அத்தனகல்ல: மாட்டிறைச்சி விற்பனையை தடுக்க பிரேரணை - sonakar.com

Post Top Ad

Friday 10 January 2020

அத்தனகல்ல: மாட்டிறைச்சி விற்பனையை தடுக்க பிரேரணை



பொதுஜன பெரமுனவின் ஆட்சியின் கீழ் உள்ள அத்தனகல்ல பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டு இறைச்சி விற்பனையினை முற்றிலும் தடை செய்வதற்கான பிரேரணை  ஒன்றிணை அடுத்த சபை அமர்வில் தான் கொண்டு வரப்போவதாகவும், அதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமெனவும்  பிரதேச சபை தலைவர் பிரியந்த புஷ்பகுமார கடந்த 7 ம் திகதி பகல் நடைபெற்ற சபை அமர்வில் தெரிவித்திருந்தார்.



ஆளும் SLPP இல் உள்ள அனைத்து உறுப்பினர்கள் மற்றும் ஐதேக, சுதந்திரக் கட்சி, ஜேவிபி, ஆகிய கட்சிகளின் சில உறுப்பினர்கள், DUNF, ஹெல உறுமயவின் உறுப்பினர்கள் இதற்காக எழுந்து நின்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் இறைச்சிக் கடைகளின் மூலம் வருடாந்தம் கிடைக்கும் டென்டர் வருமானம் பிரதேச சபைக்கு முற்றாக இல்லாமல் ஆகும் எனவும், அதனையும் பொருட்படுத்தாமல் இச்செயலில் துணிந்து களமிறங்கவுள்ளதாகவும் சபை தலைவர் பிரியந்த மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அத்தனகல்ல பிரதேச சபையின் ஜேவிபி உறுப்பினர் இன்சாப் அவர்களை தொடர்பு கொண்டு இது குறித்து வினவிய போது, அந்த நேரத்தில் சபையின் 7 முஸ்லிம் உறுப்பினர்களிலும் இருவர் மாத்திரமே இருந்ததாகவும், தான் இது நடைபெற வேண்டும் என்றால் மாட்டிறைச்சி மட்டுமல்லாது கோழி, பன்றி போன்ற சகல விலங்கினங்களையும் பலியிடுவதை தடுக்கும் பிரேரணை கொண்டு வந்தால் கட்டாயம் ஆதரவளிப்பதாகவும் அங்கு தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதேச சபை உறுப்பினர் இன்சாப் எம்மிடம், இது குறித்து அடுத்த சபை அமர்வுக்குள் ஏனைய முஸ்லிம் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி குறித்த விடயத்தை எதிர்க்கவுள்ளதாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குகளை குறிவைத்து இதனை அவர்கள் செய்கிறார்கள் என்றும் தெரிவித்தார். தனது கட்சி (ஜேவிபி) இதனை ஆதரித்தாலும் தான் எதிர்க்கப் போவதாக மேலும் தெரிவித்தார்.

-கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்

No comments:

Post a Comment