முஸ்லிம்கள் பயப்பட வேண்டாம். கோட்டாபய ராஜபக்ஷ் ஜனாதிபதியானால், அவருடைய ஆட்சியின் கீழ் முஸ்லிம்களுக்கு நல்லவையே நடக்கும். எனவே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு முஸ்லிம்கள் வழங்கும் வாக்குகள், எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய மிகப் பெறுமதியான தேர்தலாகும் என, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் முன்னணியின் ஏற்பாட்டில், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ்வை ஆதரித்து, தெஹிவளை ஸஹ்ரான் வரவேற்பு மண்டபத்தில், ஸ்ரீல.பொ.பெ. முஸ்லிம் முன்னணியின் தலைவர் மில்பர் கபூர் தலைமையில், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
ஸ்ரீல.பொ.பெ. வின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்த ஒன்றுகூடல் நிகழ்வை பைஸர் முஸ்தபா வழி நடாத்தினார்.
இக்கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, கோட்டாபய ராஜபக்ஷ் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு ஏதாவது விபரீதங்கள் நடந்துவிடுமோ என அஞ்சுகின்றனர். இவ்வாறு எந்தவொரு முஸ்லிமும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. கோட்டாபய ராஜபக்ஷ் அவருடைய ஆட்சியை, சிறந்த முறையில் வழி நடாத்திச் செல்வார்.
முஸ்லிம்கள் தொடர்ந்தும் மடத்தனமான வேலைகளைச் செய்துகொண்டே வருகின்றனர். இந்நிலைமை, அவர்களுடைய உள்ளங்களிலிருந்து அகற்றப்படல் வேண்டும். ஆகவே, தேசிய ஒற்றுமை, பாதுகாப்பு, அபிவிருத்தி என்பவற்றைக் கருத்திற் கொண்டு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் தமது ஆதரவை கோட்டாபயவுக்கு வழங்க முன்வர வேண்டும் என்றார்.
-ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment