சுற்றுச் சூழல் தொடர்பாக ரம்ய லங்கா வருடாந்தம் முன்னெடுத்து வரும் தேசிய வேலைத் திட்டத்தின் இவ்வருட கருப்பொருளான “சுற்றுச் சூழல் உணர்வுமிக்க பிரஜை" என்ற வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு 27.10.2019 ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) அக்குறணை பாலிகா முஸ்லிம் மகா வித்தியாலய வளாகத்தில் காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 12:30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சி போன்ற பல அம்சங்கள் இடம்பெற்றிருந்ததுடன் அகுரணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன், பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் M.I.M. மவ்ஜூத், பிரதேச சபையின் சுற்றுச் சூழல் அதிகாரி திருமதி N.M. ஷஹாப்தீன் மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க் M.H.M. உஸைர் ஆகிய அதிதிகளுடன் ரம்ய லங்கா உறுப்பினர்கள், பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இலங்கையின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் வளப்படுத்தவும் மேம்படுத்தவும் ரம்ய லங்கா நிறுவனம் வருடாந்தம் நாடு பூராகவும் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் இவ்வருடம் சுற்றுச் சூழல் உணர்வு மிக்க பிரஜை என்ற கருப்பொருளில் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு கருத்தரங்குகளையும் அதனையொட்டிய பல வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
இன்று உலகத்தின் பேசு பொருளாக புவி வெப்பமடைதல் காணப்படுகிறது. புவி வெப்பமடைவதற்கு பிரதான காரிணிகளில் ஒன்றாக மனித செயற்பாடுகளும் உள்ளடங்குகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் சுற்றுச் சூழல் மீது அன்பு செலுத்துகின்ற, பராமரிக்கின்ற, சுற்றுச் சூழல் மீது உணர்வு கொண்ட மனிதனாகவும் இந்த நாட்டின் நற் பிரஜையாகவும் மாற வேண்டும் என்ற நோக்கங்களின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் மரநடுகை, திண்மைக் கழிவு முகாமைத்துவம், பொலித்தீன் அற்ற கிராமம் போன்ற பல வேலை திட்டங்களை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும், அதற்கான உதவிகளையும் நாடளாவிய ரீதியில் பெற்றுக் கொடுப்பதற்கு ரம்ய லங்கா திட்டமிட்டுள்ளதுடன் மாணவர்களுக்கு மத்தியில் சித்திரப் போட்டிகள் நடாத்துதல், பயிற்சிப் பட்டறைகளை செய்தல்,
சுற்றுலாக்களை ஒழுங்குபடுத்தல் போன்ற பல விடயங்களும் இதில் உள்ளடங்குகின்றன.
எனவே இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் சுற்றுச் சூழல் உணர்வுமிக்க நற் பிரஜையாக மாறி, பசுமை மிக்க ஒரு நாடாக எமது இலங்கைத் திருநாடு திகழ உழைக்க முன்வருமாறும் எமக்கு (ரம்ய லங்காவிற்கு) உங்கள் ஒத்துழைப்புக்களையும், ஆதரவினையும் தந்துதவுமாறும் அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
-RL
-RL
No comments:
Post a Comment