சமூகக் கட்டமைப்பும் மீள்-வாசிப்பும்! - sonakar.com

Post Top Ad

Sunday 1 September 2019

சமூகக் கட்டமைப்பும் மீள்-வாசிப்பும்!


மக்களின் சிந்தனைப் போக்கும் அதே போன்று தேவைகளும் கூட காலத்துக்குக் காலம் மாறுபவை, மாறிக்கொண்டே இருப்பவை.

ஒவ்வொரு கால கட்டத்திலும் எது சரி? எது பிழை? என்ற அளவீடும் - மீளாய்வும், கடந்த காலத்தின் மீதான நமது மீள்வாசிப்பும் கூட அவசியப்படுகிறது. 2012 முதல் திடீரென பல முனை நெருக்குதல்களை சந்தித்து வரும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது இது வரலாற்றுக் கடமையாகியுள்ளது என்பதை பல வருடங்களாகவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். 

அதனைப் புரிந்து கொள்ளும் மனங்கள் எந்தத் தளத்திலிருந்து அதனைப் பார்வையிடுகின்றன என்பதைப் பொறுத்தே இவ்வாறான சமூகக் கடமைகள் மீதான புரிதலும் - ஈடுபாடும் உருவாகும். ஈஸ்டர் தாக்குலுக்குப் பின்னான தற்காலத்திலும் சமூக மட்டத்தில் தூர நோக்கு குறைவாகவே இருப்பது கவலை தரும் விடயமாகும்.

1970 முதல் 2010 வரையான நாற்பது வருட காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல் எவ்வாறு செதுக்கப்பட்டு அல்லது சிதைக்கப்பட்டது என்ற மீளாய்வை ஏதாவது ஒரு மையப்புள்ளியில் இருந்து ஆரம்பிப்பதற்கான பொதுத் தளமும், பொதுச் சிந்தனையும், கூட்டுப் பொறுப்பைச் சுமக்கும் தலைமைத்துவமும் நம் மத்தியில் ஈஸ்டர் தாக்குதல் வரை இருக்கவில்லையென்பது போக, அதன் பின்னும் நாம் இன்னும் உருவாக்காமலிருப்பது வரலாற்றுத் தவறாகும்.

சமூகப் பிரிவினைகள், அதாவது இச்சமூகம் பல கூறுகளாகப் பிரிந்திருக்கிறதே என கவலைப்படுவது கூட 'வஹிக்கு' எதிரானது என அண்மையில் ஒரு தீவிர கொள்கை இயக்கவாதி எனக்கு சிந்தனைச் சீர்திருத்தம் செய்ய முயன்றிருந்தார். அந்த அளவிலிருந்து தான் இன்றைய சமூகத்தில் ஒற்றுமை குறித்து பேச முடியும் என்பதைப் புரிந்து கொள்ளாமல் விடுவது தான் தவறு. ஆதலால், அந்த மட்டத்துக்கு சமூகம் வீழ்ந்திருப்பதை ஏற்றுக்கொண்டுதான் பேச வேண்டியிருக்கிறது என்பது நடைமுறை யதார்த்தம்.

எனவே, இந்த நிலையிலிருந்து நாம் ஒரு நாட்டின் சிறுபான்மைச் சமூகம் என்பதை எத்தி வைத்துப் பேச முடியுமா? என்பதே பாரிய கேள்வியாக மாறுகிறது. ஏனெனில், இலங்கையில் இந்த நாற்பது ஆண்டுகளுக்குள் வளர்ச்சி கண்ட கொள்கை இயக்கங்கள் தம்மைப் பின்பற்றுபவர்களை இலங்கையர்களாக சிந்திக்க அனுமதிக்கிறதா? என்ற அடிப்படைக் கேள்வி இதுவரை கேட்கப்படாமலேயே இருக்கிறது.

இம்மண்ணின் ஏனைய குடிகள் போன்று கல்வி – மருத்துவம் உட்பட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முஸ்லிம் சமூகத்துக்கும் இலவசமாகவே கிடைக்கிறது. மேலதிகமாக உள்வாங்கப்படும் அல்லது புகட்டப்படும் கொள்கைச் சித்தார்ந்தங்கள் தேசப்பற்றையும் தேசம் மீதான அபிமானத்தையும் எந்த அளவில் வலுவூட்டுகிறது என்பதும் கடந்த காலங்களில் கேட்க வேண்டியவர்கள் கேட்க மறந்த, வழி காட்ட வேண்டியவர்கள் ஏற்றுக்கொள்ள மறந்த விடயம்.

நாலாபுறமும் கடலால் சூழப்பட்டுள்ள இத்தீவின் கடந்த 70 வருட கால அரசியலின் அடிப்படையில், குறிப்பாக கடந்த 30 வருட கால சூழ்நிலைக்கேற்ப எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் சமூகம் தமது முன்னோர் கட்டியெழுப்பிய அரசியல் - சமூக பாரம்பரியத்தை கைவிட்டு விட்டது. எனவே, சமூகத்துக்குள் அரசியல் ஆழமாகப் புகுந்து யார்? யாரை ஆதரிக்கலாம், ஆதரிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டையும் உருவாக்கி வைத்திருக்கிறது.

எனவே, சமூகத்தின் சக மனிதர்கள் ஒவ்வொருவர் எடுத்திருக்கும் சுய நிலைப்பாட்டிலிருந்துமே ஏனையவர்கள் அளவிடப்படுகிறார்கள். அந்த அளவீட்டுக்கான அடிப்படை நியாயமானதா? இல்லையா? என்பது இவர்களது நியாயத்துக்கு அப்பாற்பட்ட விடயம். ஆதலால், எந்த விடயத்தை யார் செய்யலாம் செய்யக் கூடாது? யார் பேசலாம்? பேசக்கூடாது என ஆரம்பித்து எல்லா விடயங்களுக்கும் வடிகட்டியே (Filter) இச்சமூகம் பார்வையிடுகிறது. ஒரு வகையில் பொது வடிகட்டலும் தகைமையும் உருவாக்கப்படுதல் சமூகத்துக்கு ஆரோக்கியமானதே. 

அந்த வகையிலேயே காலாகாலமாக மார்க்க அறிஞர்கள் சமூக வழிகாட்டிகளாகவும் கடந்த நூற்றாண்டுக்குள் அதில் ஒரு பகுதியை அரசியல்வாதிகளும் பெற்றுக்கொண்டுள்ளார்கள். ஆயினும் தற்காலத்தில் இந்த இரு விடயங்களுமே சமூகப் பிரிவினையின் அடிப்படையாக மாறியுள்ளதையும் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.

ஏனெனில் இன்றைய முஸ்லிம் சமூகம் ஒரே மனதுடன் ஏற்றுக்கொள்ளக் கூடிய எந்தவொரு சமூக, சமய விடயமும் இல்லவே இல்லை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்திலிருந்தே புரிந்து கொள்ளவும் ஏற்றுக்கொள்ளப்படவும் எத்தி வைக்கவும் படுகிறது. ஆதலால், இங்கு ஒற்றுமையென்பதும் பல்வேறு வகைப்படுவதுடன் தாம் சார்ந்த கொள்கை இயக்கம் மற்றும் அரசியல் கட்சியுடன் சார்ந்து கொள்கிறது.

ஈஸ்டர் தாக்குதலின் பின், அவசரகால சட்டமும் அமுலுக்கு வந்து ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டார்கள், விசாரிக்கப்பட்டார்கள், சிலர் தொடர்ந்தும் தடுத்து வைக்கவும் பட்டுள்ளார்கள். ஆயினும் சமூகத்தைப் பொறுத்தவரை அதிலும் தரமறிந்தே கவலைப்படுகிறது. இதேவேளை, மாற்று இயக்கத்தாரைப் பற்றித் துப்புக் கொடுப்பதிலும் ஏட்டிக்குப் போட்டி நிலவுகிறது. இன்னுமொரு வகையில் இந்த சந்தர்ப்பத்தில் இவர்களை அழித்தால் நல்லது என்று கங்கணம் கட்டிச் செயற்படுவோரையும் பகிரங்கமாகவே காணக்கிடைக்கிறது.

ஆக, ஒற்றுமையென்பது நேற்றைய கனவாகி விட்ட நிலையிலேயே இன்றைய சமூகம் அதைப் பற்றி அவ்வப்போது பேசிக் கொள்கிறது. பிரச்சினையென்று வரும் போது தமக்கும் அதற்கும் தொடர்பில்லையென நிரூபிப்பதில் இருக்கும் ஆர்வம், இவ்வாறான நிலைக்குள் நமது சமூகம் தள்ளப்பட்டு விடக்கூடாது என்ற தூர நோக்குடன் கடந்த காலம் செயற்படவில்லையென்பதை ஏற்று மீளாய்வு செய்யத் தயாராக இல்லை.

அஹமதுகளும் முஹமதுகளும் ஆயிஷாக்களும் ஆமினாக்களும் தமது சகோதர – சகோதியரே என்ற நிலை மாறி அவர் எந்த கொள்கை இயக்கவாதியோ அந்த கொள்கை இயக்கத்தவருக்கு மாத்திரமே நண்பராகவும் நல்லவராகவும் தென்படும் இச்சூழ்நிலையில் நடுநிலையாளர்களுமே பாதிக்கப்படுகிறார்கள். 

ஒற்றைச் சமூகமாக வாழ வலியுறுத்தும் மார்க்கத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டு தமக்குள் தனித்தனி சமூகங்களையும் அது சார்ந்தவர்களையும் உருவாக்கி;க் கொண்டுள்ளதன் இவ்விளைவு இன்னும் மோசமான நிலையை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையெனலாம். அந்த வகையில் நேற்றைய நிலையும் இன்றைய நிலையும் ஒன்றல்ல என்பது எவ்வளவு உண்மையோ அது போன்றே நாளைய நிலையும் இது போன்றிருக்கப் போவதில்லையென்பதும் உண்மை.  விரும்பினால் மாற்றங்களையும் உள்வாங்கி அல்லது உருவாக்கிக் கொள்ளலாம்.

அப்படியானால் நமது சமூகத்துக்கு அவசியப்படும் ஒற்றுமை அல்லது புரிந்துணர்வை எந்தத் தளத்திலிருந்து உருவாக்க வேண்டும் அல்லது உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்றவொரு கேள்விக்கு விடை காணப்பட வேண்டும். அதற்கு ஏதுவாக இச்சமூகத்துக்குள் நிலவும் வேற்றுமைகளைக் களைய முடியுமா? அல்லது அதற்கான சாத்தியம் இருக்கிறதா? என்பதும் ஆராயப்பட வேண்;டும். அப்படியும் இல்லையென்றால் அதற்குத் தடையாக இருப்பது எது? என்ற கேள்விக்காவது விடை காணப்பட வேண்டும். இவையனைத்தும் எப்போது சாத்தியமாகும் என்ற கேள்வியை முன் வைத்தால், ஒவ்வொருவரும் அல்லது சமூகத் தலைமையை முன்னெடுத்துச் செல்வோராவது இதனை உணர்ந்தாலன்றி அதற்கான சாத்தியமில்லையென்பது தெளிவுறும்.

சமூகத்தைப் பொறுத்தவரை முஸ்லிமாக வாழ்தலுக்கும் இலங்கை பிரஜையாக வாழ்தலுக்கும் இடையில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் வித்தியாசம் உணரப்பட்டுவிட்டதா என்பதே தலையாய கேள்வி. பல சந்தர்ப்பங்களில் அதற்கு நேர்மாறான உணர்வுடன் நாம் வாழ்வதாகவே படுகிறது. குறிப்பாக முஸ்லிமகள் செறிந்து வாழும் பகுதிகளில் நாட்டின் சட்ட-திட்டம் மற்றும் ஒரு இலங்கைப் பிரஜைக்குரிய கடமையுணர்வுடன் வாழ்வியல் செதுக்கப்பட்டிருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பல சந்தர்ப்பங்களில் இதனைத் தூண்டி விடுவதி;லும் வழிகாட்டும் இடங்களில் உள்ளவர்களே பாரிய பங்களிப்பையும் செய்கின்றனர். அரசியலில் ஒரு பக்கமும் மார்க்கத்தின் பெயரால் இன்னொரு பக்கமும் இது போன்ற விடயங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இலங்கை முஸ்லிம்களான நாங்கள் தனித்து விடப்பட்டவர்கள் இல்லை நாம் சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் அங்கம் என்ற உணர்வும் உணர்வூட்டலும் இரு வேறு விடயங்கள். அவை யாரால்? எவ்வாறான சந்தர்ப்பத்தில் எதற்காக கூறப்படுகிறது? என்பதனைப் பொறுத்து அதன் அர்த்தங்களும் மாறுபடுகிறது. அண்மையில் காத்தான்குடியில் வைத்து இது போன்றவொரு உணர்வூட்டலைச் செய்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் கொழும்பில் அதற்கு வேறு அர்த்தம் கற்பித்ததைக் கண்டிருப்பீர்கள்.

அது போலவே உலக இஸ்லாமியப்படுத்தல் என்ற அடிப்படையில் இலங்கையை இஸ்லாமியப்படுத்தும் எண்ணவோட்டம் பற்றி அக்காலத்தில் பேசப்பட்டதற்கும் இக்காலத்தில் பேசப்படுதவதற்குமிடையில் வித்தியாசத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆயினும், கடந்த காலங்கள் யாவும் அனைவராலும் மறக்கப்பட்டு விட்டதா? அல்லது மறக்கப்பட்டு விடுமா? என்ற கேள்விக்கு தற்காலம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இச்சமூகம் எதிர்பாராத வகையில் இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல் சம்பவங்கள் இன்று நிலைமையை மாற்றியமைத்துள்ளது. நமது சமூகம் பற்றிய பிறர் பார்வை, நமது கடந்த கால நடவடிக்கைகள், அவை சார்ந்த எமது எண்ணவோட்டங்கள், செயற்பாடுகள் அனைத்தும் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு மீளாய்வுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது.

அதனைத் தூண்டுவதிலும், அவை விசாரிக்கப்படுவதற்கும் கூட முஸ்லிம்களே பங்களித்து வருகிறார்கள் என்ற அடிப்படையில் எங்கே பிழைத்தது? அல்லது எங்கிருந்து பிளவுக்கோடு உருவானது என்பது அறியப்பட வேண்டியது. ஆயினும், நீண்ட தூரம் பயணித்து விட்ட இச்சமூகத்துக்கு பின் நோக்கிச் சென்று அவற்றை அலசி ஆராய்வதற்கான ஆர்வமும் இல்லை.

ஆயினும் அது அவசியப்படுகிறது. ஈஸ்டர் தாக்குதல்தாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் முஸ்லிம்கள் இல்லையென முடிவெடுத்த மார்க்கத் தலைமைகள் அவர்களது எச்சங்கள் முஸ்லிம் மையவாடிகளில் அடக்கப்படுவதையும் நிராகரித்தது. ஆயினும், இவ்வாரம் மட்டக்களப்பில் இந்து மயானத்தில் முஸ்லிம் சமூகத்துக்குள் இருந்து உருவான ஒரு பயங்கரவாதியின் எச்சம் அடக்கப்படுவதை எதிர்த்து தமிழ் இனப்பற்று எனும் போர்வையில் வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளும் ஒரேயடியாக தூக்கி வீசப்பட வேண்டியவையன்று.

தொடர்ச்சியாக கிழக்கு மாகாணம் இலக்காகி வருவதும், அங்கு வாழும் முஸ்லிம்களின் வாழ்வியல் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருவதும், விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருவதும் அந்த பிராந்தியம் சார்ந்த விடயம் மாத்திரமன்றி, அது அரசியல் தேவைக்காக அரங்கேற்றப்படுகிறது என்பது ஏனைய இடங்களிலும் புரிந்து கொள்ளப்பட வேண்டியவொன்றாகும்.
ஒரு தேவைக்காக, 2017ல் சஹ்ரானுக்கு எதிராக காத்தான்குடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்லிம் சமூகம் உரிமை கோருகிறது. ஆயினும், உண்மையைப் பேச வேண்டுமாக இருந்தால் அன்றைய ஆர்ப்பாட்டங்களும் - எதிர்ப்புகளும் சஹ்ரானால் எதிர்க்கப்பட்ட ஒரு சமூகக் கூறினால் நடாத்தப்பட்டது. இரு சாராரும் ஒட்டு மொத்த சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாத பிரிவுகள் என்பதோடு அவர்களுக்குள்ளான சண்டையில் குளிர் காய்ந்ததிலும் ஏனையோருக்குப் பங்குள்ளது.

ஆயினும், இன்றைய காலத்தில் தேவை கருதி அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஏக போக உரிமை கொண்டாடப்படுகிறது. இது போன்றே இன்றைய நிலையில் சமூகத்துக்குள் நிலவும் ஏனைய கொள்கை இயக்க மற்றும் அரசியல் கட்சி மோதல்களும் இருக்கின்றன. அவற்றைப் பொறுத்தவரை ஒவ்வொரு தனி நபர் விருப்பு – வெறுப்புக்குட்பட்டே அனைத்து விடயங்களும் அளவிடப்படுகிறது.

அவரவர் மட்டத்தில் தாம் எந்த கொள்கை இயக்கத்தைச் சார்ந்தவர் என்ற அடிப்படையில் அடுத்த அமைப்பைச் சார்ந்தவர்களும் அவர்களது தலைவர்களும் எதிரிகளாகவும் வேண்டாதவர்களாகவும் கணிக்கப்படுகிறார்கள். இது கருத்து முரண்பாடு என்ற எல்லைக்கு அப்பாற்பட்ட பிரிவினையாகும்.

இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால் இந்தப் பிரிவினைகள் உட் சமூகப் போராகவும் இன்றைய சூழ்நிலையில் வளர்ந்துள்ளது. ஆதல்லா, ஒரு சாரார் இன்னொரு சாராரை வீழ்த்த வேண்டும் எனக் கங்கணம் கட்டிச் செயற்படுகிறார்கள். எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வதற்கும் தயாராக இருக்கிறார்கள்.

ஆயினும், வெளியார் பார்வையில் இந்த வித்தியாசங்கள் அல்லது அதன் அடிப்படைகள் இலகுவாகப் புரியக் கூடிய விடயமன்று. குறிப்பாக இனவாத வன்முறைகள் என்று வந்து விட்டால் அவர்களது பார்வையில் எல்லோருமே முஸ்லிம்களாகவே இருக்கப் போகிறார்கள். எனினும், சாதாரண சூழ்நிiலியல் எந்த முஸ்லிம் கூறு தமக்குத் தேவையானது அல்லது விருப்புக்குரியது என்பதையும் சந்தர்ப்பவாத அரசியல் அதன் தேவைக்கேற்ப முடிவெடுத்துக்கொள்கிறது.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரா சமூகத்தின் மாநாட்டுக்கான ஆயத்தங்களும் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய இந்நிகழ்வு தொடர்பில் அரசாங்கம் காட்டும் அக்கறையும், வழங்கி வரும் ஒத்துழைப்பும் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக இருக்கிறது.

இதேவேளை, நாட்டின் வருமானத்தில் கை வைக்கத் துணித்த ஹலால் சான்றிதழ் விவகாரம் சமூகத்துக்கு எத்தனை இடரானது? அதன் விளைவுகள் எவ்வாறு இருந்தது என்பதும் சம தளத்தில் வைத்து ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய விடயங்கள்.

அத்தனையும் தாண்டி வந்த போதிலும் ஏதோ ஒரு கட்டத்தில் வேற்றுமைக்குள் ஒற்றுமை காண்பது எப்படியென்பதையும் இங்கு பேசப்படும் மார்க்க மற்றும் அரசியல் காரணிகளே முடிவெடுக்கின்றன. அந்தத் தடையைத் தாண்டிய மீள்வாசிப்புக்கு இந்த சமூகம் எப்போது தயாராகும்? என்ற கேள்வி தொடர்ந்தும் கேள்வியாகவே இருக்கிறது.

wjR0LbU
-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment