ஒற்றுமை எனும் தூய காற்றை தினமும் சுவாசிக்க வேண்டும்: ஹலீம் - sonakar.com

Post Top Ad

Monday 12 August 2019

ஒற்றுமை எனும் தூய காற்றை தினமும் சுவாசிக்க வேண்டும்: ஹலீம்


இலங்கை வாழ் முஸ்லிம் அனைவருக்கும் தியாகத் திருநாள் ஈதுல் அள்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமிதம் அடைகின்றேன் என்று முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.


ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:

இந்நாட்டில் வாழும் பிற இனங்களுடன்  புரிந்துணர்வுடனும் நேச மனப்பான்மையுடனும்  முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்ட  எமது முஸ்லிம்கள் தேசிய நலனுக்காக பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார்கள். இதை எவராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. 

இக்கெட்;டான கால கட்டத்தில் கூட  எமது முஸ்லிம்கள் சகிப்புத் தன்மையோடு  மிக நிதானமாகவும் தூரநோக்கோடும் பிற இன மக்களுடன்  பரஸ்பர நல்லுறவைப் பேணி  நெருக்கமான நட்புறவை   கட்டி எழுப்புவதில் மிகச் சிறந்த முன்னேற்றகரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.  அந்தவகையில் எமது சமூகம் மனித நேயத்தை முன்னிறுத்தி சமூக இணக்கப்பாடுகளில் இஸ்லாம் காட்டிய உயர்ந்த நெறிமுறையில் சரியான பாதையுடன் இந்நாட்டு முஸ்லிம்கள் இன்னும் பிரகாசித்துக் கொண்டு இருக்கின்றார்கள். குறிப்பாக இந்நாட்டு முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையிலும் பல்லின மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய தெளிவான பார்வையை வேரூன்றச் செய்த காலகட்டத்தில் கொண்டாடும் பெருநாளே இது.

எனவே தியாகத்தையும்  சகிப்புத்தன்மையையும் ஒற்றுமையையும் எடுத்துக் காட்டுகின்ற இன்றைய ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் இந்நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் எதிர்கால சுவிட்சத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும் ஏனைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து எமது சமூகமும்  ஒற்றுமை என்கின்ற தூய்மையான காற்றை தினமும் சுவாசிக்க வேண்டும். இது என்னுடைய திடமான எதிர்பார்ப்பாகும்.  இந்தச் சந்தர்ப்பத்தில் இந்நாட்டிலுள்ள சகல முஸ்லிம் மக்களுக்கும் இந்த இனிய நன்நாளில் ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்   என்று அவர் மேலும் தெரிவித்தார்.

-இக்பால் அலி


No comments:

Post a Comment