இஸ்லாமிய வரலாற்றில் மிக பிரபல்யமாக பேசப்படும் அபூ வலித் பின் முஹம்மத் பின் அஹ்மத் பின் அல்-ருஸ்த்(Bin Al-Rushd) அவர்கள் "உலமாக்கள்" என்போர் தத்துவவாதிகள் (philosophers) அல்லாமல் வெறுமனே ஒரு துறைக்குள் நின்றுகொண்டு, தாங்கள் "உலமா" என்பதால் அவர்கள அப்படியாகிவிடமுடியாது என வாதாடுகின்றார். அதே போலவே காத்தாண்குடியை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றும், முன்னைய அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவருமான கலாநிதி அமீர் அலி அவர்கள் அகில இலங்கை உலமா சபையின் "உலமாக்கள்" என்று சொல்லப்படுவோர் உண்மையில் "கற்றுத் தேர்ந்தவர்கள்"(learned) என்ற பொருள்பட பாவிக்கப்படும் இந்த வார்த்தைக்கு பொருத்த மில்லாதவர்கள் என்று வாதிடும் அதே நேரத்தில் "முல்லாக்கள்" என்ற வரையறையே சாலப்பொருந்தும் என்கின்றார். ஆகவே அகில இலங்கை உலமா சபை "உலமா" என்ற வரையறைக்குள் வரமுடியாதவர்கள் என்பதனால் "முல்லாக்கள்" என்ற வார்த்தயையே நானும் இங்கு பயன்படுத்துகிறேனே அல்லாமல் வேறு நோக்கங்களுக்காகவோ அல்லது இந்த அமைப்பின் உறுபினர்களுக்கு கலங்கம் கற்பிக்கவோ அல்ல.
அண்மைக்காலமாக சிங்கள பெளத்த கடும்போக்குவாத தேரர்கள் நாட்டின் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லீம்களை பயமுறுத்துவதும், அரசாங்கத்துக்கு எச்சரிக்கையிடுவதும், வெளிநாடுகளுக்கு சவால் விடுவதுமாக உள்நாட்டில் எவ்வளவு தூரம் அரசியல் அதிகாரத்தை கையிலெடுக்க முடியுமோ அதை குறியாக வைத்து பயணிக்கின்றனர். ஸ்ரீ லங்கா உலத்தின் ஒரே ஒரு சிங்கள நாடு, பெளத்தம் இந்நாட்டின் முதன்மை சமயம், எனவே சமய குருக்களின் ஆட்சி(Theocracy) ஒன்றை உருவாக்கும் ஒரு நப்பாசையில் செயல்படுகின்றனர் இந்த கடும்போக்குவாத பெளத்த குருக்களும் அவர்களை சமய ரீதியாக நெறிப்படுத்தும் சில "நிக்காய" க்களும். இது இப்படியிருக்க அகில இலங்கை முல்லாக்கள் சபையோ ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சமய ரீதியாக மக்களை பயமுறுத்துவதும், அரசியல் ரீதியாக முஸ்லீம் பாரளுமன்ற உறுபினர்களுக்கு அதிகபட்ச அழுத்தம் கொடுப்பதின் மூலம் தம் மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளவும் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றனர் என்றால் அது மிகையில்லை. இதன் அண்மைய உதாரணம்தான் கொழும்பு- கண்டி பள்ளிவாயில்கள் சம்மேளனத்தின் தெஹிவளை கூட்டம் என்பது என் அவதானிப்பு. அந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களில் முக்கியமானது பெண்கள் தொடர்பானது, அவர்கள் உடை தொடர்பானது, விவாக விவாகரத்து சட்டத்தில் அவர்களின் நிலை தொடர்பானது.
மனித வரலாறு பதியப்பட்ட காலத்தில் இருந்து பெண் ஒரு பண்டமாகவே (chattel) பார்கப்பட்டாள் என்ற செய்தியானது இயற்கையிலேயே அது அப்படித்தானா அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்படுத்தப்பட்ட மீறமுடியாத ஒரு ஒழுங்கா என்ற கேள்விக்கே இடமில்லாதவாறு, இது ஆணாதிக்கத்தின் முரட்டுக் குணத்தினதும், அடங்கிப்போகும் பெண்ணின் மனநிலையினதும் பிரதிபலிப்பாகும் என்று சுருங்கக் கூறிவிடலாம். இந்த பெண்கள் விடயத்தில் பெளத்த நிக்காயக்கள் தாராளத் தன்மையுடன் நடந்து கொள்வதால் சிங்கள பெண்கள் தங்களது சமய அமைப்புகளினால் அவர்களது உரிமைகள் மறுக்கப்படுவதாக எங்கும் முறைப்படுவதில்லை. ஆனால் இந்த முல்லாக்கள் சபை இன்று பல பக்க தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய பரிதாபகரமான நிலையில் இருப்பது நாடறிந்த விடயமாகும்.
21ம் நூற்றாண்டின் அதி முக்கியமான விடயமே "மனித உரிமை" என்ற அம்சம். இதில் சில உரிமைகள் "மீற முடியாதவை" என்ற சிறப்பு அந்தஸ்த்தையும் பெறுகின்றன. ஆனாலும் "மனித" என்ற பெயரடை (adjective) கூட "ஆண்" என்ற பொருள்கொள்ளளோடு தொடர்புபடுத்தி மனித உரிமை என்பது ஆண்களின் உரிமையாக மாற்றப்படும் அல்லது பொருள் கொள்ளப்படும் போக்கே முஸ்லீம்களை பெரும்பான்மையாகக் கொண்ட அனேகமாக அனைத்து நாடுகளிலும் காணப்படுவது போலவே சிறுபான்மையாக முஸ்லீம்கள் வாழும் நாடுகளிலும் காணப்படுகின்றது. இஸ்லாமிய போதனைகளுக்கு முற்றிலும் நேர் எதிரானது இந்த விடயம்தான் பெண்களை இரண்டாம்தர மனித பிறவிகளாக மாற்றியுள்ளது. அப்படியானால் இந்த பெண்ணின் நிலை மாற்றப்பட முடியாததொன்றா? அவளின் மனித உரிமையை யார் உறுதி செய்வது? என்ற கேள்விகள் எழுகின்றன.
காலத்துக்கு காலம் சமூக மாற்ற சிந்தனைவாதிகள், செயற்பாட்டாளர்கள் தோன்றி பெண்களின் நிலையை முன்னோக்கி நகர்த்தினாலும் அது இன்னும் முற்றுப் பெறவில்லை என்பது இன்றைய "பெண் நிலைவாதம்" என்ற ஒரு கருத்தாக்கத்தின் அடிப்படையில் செயற்பாட்டு அமைப்புகள் தோன்றி அதற்காக செயல்படுவதில் இருந்து அறிந்து கொள்ளலாம். அதிலும் கூட சில சிக்கல்கள் தோன்றியுள்ளன. இது பெண்களின் விவகாரம் என்பதால் பெண்களாகிய நாங்கள்தான் முனைப்புடன் செயல்பட வேண்டும், நாங்கள் ஆண்களிடம் விசேடமாக ஒன்றையும் கேட்கவில்லை, அவர்களிடம் தருவதற்கு எதுவுமே இல்லை. எமக்கு எது தேவை என்பது எமக்குத் தெரியும், அதை அடைந்து கொள்வதும் எப்படி என்பதும் எமக்குத் தெரியும். ஆகவே நீங்கள் குறுக்கே வராமல் ஒதுங்கி நில்லுங்கள் என்று வெளிப்படையாக சொல்லிய போதும் கூட, இல்லை, இல்லை எமது பங்களிப்பில்லாமல், எமது அனுசரணையில்லாமல் உங்களின் உரிமைகள் உத்தரவாதப்படுத்த முடியாது என சமய காவலர்களான சில ஆண்கள் அடம்பிடிப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
இதை பிரதிபலிப்பதாகத்தான் ஸ்ரீ லங்காவில் இப்போது மீண்டும் சர்ச்சைகளை கிளப்பிவிட்டுள்ள முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டம்(Muslim Marriage and Divorce Act) காணப்படுகின்றது. இந்த தனியார் சட்டத்தின்(Personal Law) சில ஏற்பாடுகள் சீர்திருத்ததிற்குட்பட வேண்டும், ஏனெனில் இது பெண்களின் பல உரிமைகளை மறுதலிக்கின்றது என்ற ரீதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு முன்நாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கெளரவ சலீம் மார்சுப் அவர்களை தலைமையாகக் கொண்ட குழு அரசாங்கத்தினால் உறுவாக்கப்பட்டது அனேகமாக யாவரும் அறிந்த விடயம். இந்தக் குழு நத்தை வேகத்தில் இயங்கினாலும் இறுதியில் இந்த சட்டத்தில் சில மாற்றங்களை பரிந்துரை செய்ததும் பலர் அறிந்த விடயமே. அதில் முக்கியமாக பெண்களின் திருமண வயது, திருமண பதிவு புத்தகத்தில் (Marriage Register) மணப்பெண் கையொப்பமிடல், பெண்களையும் திருமணப் பதிவாளர்களாகவும்(Marriage Registrars), நீதிபதிகளாகவும்( Quazis) நியமித்தல், நீதிபதிகளாக வருவோர் இஸ்லாமிய சமய அறிவுடன் ஆகக் குறைந்தது ஒரு சட்டத்தரணியாக இருத்தல் போன்ற விடயங்கள் இடம் பெறுகின்றன.
வெறுமனே "பருவமடைதல்", அனேகமாக 12 வயது, திருமணத்துக்கான ஆரம்ப எல்லையாக இந்த சட்டத்தின் மூலம் இதுவரை கடைபிடிக்கப்பட்ட நிலைப்பாட்டை மாற்றி நவீன காலத்துடனும் முஸ்லீம் பெரும்பான்மை நாடுகள் பலதில் சீரமைக்கப்பட்ட ஆரம்ப வயதெல்லை 18 என்ற அடிப்படையில், ஸ்ரீ லங்காவிலும் அதை அமுல்படுத்துவது காலத்தின் கட்டாயம் மாத்திரமல்ல இஸ்லாமிய சமய நம்பிக்கைப்படியும் இந்த சீர்திருத்தம் அவசியமானதாகும். இந்த கோரிக்கை குறிப்பாக பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படப்போகும் அல்லது அதற்கான சாத்தியம் அதிகம் காணப்படுப்படுவதாக கருதும் பெண்களினதும் அவர்களுக்கு ஆதரவான சமூக முன்னேற்ற ஆர்வமுடைய ஆண்களினதும் நிலைப்பாடாகும்.
.
இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கான இறைத் தூது வெறுமனே நாளாந்த தொழுகையையும், வருடத்தில் ஒரு மாத நோன்பையும், வருடத்தில் ஒருமுறை ஏழைவரி செலுத்துதலையும், வாழ்க்கையில் ஒரு முறை மக்காவிற்கான பயணத்தை ஊக்குவிக்கவும், கண்காணிக்கவும் வழங்கப்படவில்லை. மாறாக நம்பிக்கையின் அடிப்படை அம்சமான இந்த விடயங்களின் ஊடாக சமூக மாற்றதிற்கான நீண்ட பயணத்தினை சாத்தியமாக்கவும், அதன் மூலம் நீதியான சமூகம் ஒன்றை கட்டி எழுப்புதல் என்ற இறுதி நோக்கத்தை அடைவதுமே இந்த தூதின் தாற்பரியமாகும். ஆனால் இந்த முக்கியமான அம்சம் மறக்கப்பட்டு முழு மனித சமூகத்துக்கும் வழிகாட்ட வந்த சமயத்தை, மனித சமூதாயத்துக்கு பொருத்தமில்லாத ஒரு சமயம் என்று மற்றோர் தீர்ப்பிடுமளவுக்கு அல்லது சிங்கள பெளத்த கடும்போக்குவாத தேரர்கள் எமக்கு இஸ்லாம் சொல்லித்தர துணிந்திருக்கும் அளவுக்கு ஏதோவெல்லாம் செய்து வைத்துள்ளோம் என்றால் அதை மறுக்க யாரும் முன்வரமாட்டார்கள்.
நீதியான சமூகம் எனும் போது அது சமூகத்தின் அனைத்து உறுப்பினருக்கும் நீதி கிடைக்கும் சூழ்நிலையை உருவாக்கும் திறன் உள்ளதாக இருக்க வேண்டும். ஆனால் நம் ஆணாதிக்க சமூகம் மனித நடத்தையின் அனைத்து விடயங்களுக்கும் ஆணின் சிந்தனையில் உதிப்பதே அளவுகோலாக இருக்கவேண்டும் என்ற அடிப்படை நிபந்தனையை ஏற்படுத்திவிட்டு, அதில் இருந்து மீளமுடியாத பரிதாபத்துக்குரியவராக இருந்து கொண்டு, "மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" யாய் தெரிவது போல; அரசாங்கம் எம்மை கஸ்டத்துக்குள்ளாக்கின்றது, ஐரோப்பாவும், அமெரிக்காவும், இஸ்ரேலும் நம் சமூகத்தை சீர்குலைக்கும் திட்டத்தை அரசாங்கத்துக்கு வழங்குகின்றன என்று நம் கையாலாகாத நிலையை மறைக்க மற்றவரை குற்றம் சொல்கின்றோம்.
முஸ்லீம்களின் இந்த தனியார் சட்டத்தை எந்த வித காரணமுமின்றி "ஷரியா சட்டம்" என்ற ஒரு மேலதிக அந்தஸ்தை வழங்கி, அதாவது இது இறைவனால் இயற்றப்பட்ட சட்டம், ஆகவே அதை சீர்திருத்தும் அதிகாரம் எப்போதும் யாருக்கும் இல்லை; என்ற ஒரு பரிதாபகரமான பயங்காட்டல் மூலம் சமூகத்தை ஒரு பெட்டிக்குள் பூட்டிவைத்து அதன் திறப்பையும் எங்கோ தூர எறிந்துவிட்டவர்களாகவே இந்த முல்லாக்கள் காணப்படுகின்றனர்.
"ஷரியா" என்றால் சமூக பிரச்சினைகளின் தீர்வுகளுக்கான வழிகாட்டல். ஆகவேதான் அன்னை ஆயிஷா 9 வயதில் மணம் முடித்தார்கள் ( அன்னை ஆயிஷா அவர்கள் 19 வயதுக்கும் 21 வயதுக்கும் இடையிலேயே மணம் முடிதார்கள் என அனேகர் ஆதாரங்களுடன் நிரூபிப்பது புறம்பாக பேசப்பட வேண்டிய விடயம்) என்ற முஸ்லீம்களின் பொதுவான நிலைப்பாட்டையும் மீறி இந்த சட்டம் 12 வயதே பெண் பிள்ளையின் திருமண ஆரம்ப வயதாக வரையறுக்கின்றது என்பது இன்றைய பிரச்சினையை சரியாக அறிந்து கொள்ளும் ஆரம்பப் புள்ளியாகும்.
காலனித்துவ காலத்தில் இலங்கை கரையோர பிரதேசங்களில் நடைமுறையில் இருந்த திருமணத்தோடு தொரடர்புடைய விடயங்கள் சம்பந்தமான பழக்க வழக்கங்கள் "முஹம்மதியரின் கோவை" ( Mohamadian Code) என ஆங்கிலேயரினால் பெயர் குறிக்கப்பட்டு சட்ட அந்தஸ்த்தைப் பெற்றது. இந்த சட்டத்தில் உள்ள முக்கியம் அம்சம் என்ன வென்றால் அன்னை ஆயிஷாவை ஆதாரம் காட்டி 9 வயதில் திருமணம் முடிப்பது இலகுவாக்கப்படாமல் அன்றைய காலனித்துவ காலத்துக்கு சற்று முன்பிருந்தே 12 வயதை ஆகக் குறைந்த திருமண வயதெல்லையாக கணித்து சட்டம் அனுஸ்டிக்கப்பட்டது என்ற அம்சமாகும் (சில விதிவிலக்கான சந்தர்பங்களில் காதி நீதிமன்ற அனுமதியுடன் 12 வயதிற்கும் குறைந்த வயதுடைய பெண் பிள்ளைகளின் திருமணம் அனுமதிக்கப்பட்டது), ஆகவே இன்றைய காலத்தின் பொதுவான சமூக சூழ்நிலைக்கேற்ப பெண்களின் திருமண ஆரம்ப வயதெல்லை, 12ல் இருந்து 18 என்ற புது கணிப்புக்குற்படுவது அவசியமானதொன்றே என்ற அம்சம் அதில் உள்ளதை கூட இவர்களால் புரிந்து கொள்ள முடியாத நிலையில் மனிதனுக்கு வெறும் உயிரியல் வயது(biological age) மாத்திரமல்ல , உடல் வயது(body age), மன வயது (mental age) என்ற அம்சங்கள் இருப்பதும்; ஆகவே ஒரு மனிதனின் வயதை வித்தியாசமான நோக்கங்களுக்காக கணிப்பிடும் போது இந்த பலதரப்பட்ட வயதுகளும் கருத்தில் எடுக்கப்படுவது மிக முக்கியம் என்ற அம்சம் அவர்களால் என்றும் புரிந்து கொள்ள முடியாத விடயமே. இருப்பினும் இன்றைய இந்த முல்லாக்கள் சபை, தாம் விதிப்பதுதான் சட்டம் அதை பின்பற்றுவதுதான் உண்மையான முஸ்லீமின் கடமை என்ற விதத்தில் சீர்திருத்த பரிந்துரைகளுக் கெதிராக சமயத்தை பாதுகாக்கும் தம் அயராத பணியினை கண்ணீர் மல்கும் உரைகளை நாடெங்கிலுமுள்ள பள்ளிவாயில்களில் நிகழ்த்தி தம் பிற்போக்குவாத்தை சாதிக்கப் பார்க்கின்றனர். அதன் முன்னோட்டமே தெஹிவளையில் முக்கிய முஸ்லீம் அரசியல்வாதிகளின் பங்குபற்றலுடன் நடந்தேறிய பள்ளிவாயில்கள் சம்மேளனக் கூட்டம்.
இந்த வயதெல்லை மாற்றத்தைப் போன்றதே ஒரு மணப்பெண் குறித்த ஆணுடனான தன் திருமண பந்தத்திற்கு தன் விருப்பத்தை உறுதிபடுத்தும் முகமாக திருமண பதிவில் கையெழுத்திடுவதும், அந்த திருமணம் முறையாக பதிவு செய்யப்படும் அம்சமுமாகும். நடை முறையில் இருக்கும் சட்டத்தில் பெண்ணின் பாதுகாவளர் (வலி) ஒருவர் பெண் சார்பாக கையொப்பம் இட்டால் போதும் என்ற நிலையும், திருமணத்தை பதிவு செய்வது தேவையில்லாத ஒரு விடயமாகவுமே காணப்படுகின்றது. இங்கே முடிசெய்யப்பட்ட திருமண பந்தத்தில் வாழப்போவோர் திருமண தம்பதிகளே அல்லாமல் மணமகனும் பாதுகாவலராக கையொப்பமிட்ட இன்னொரு ஆணுமல்ல. இந்த கையெழுத்திடும் முறையின் மூலமும், திருமணத்தை பதிவு செய்வதின் மூலமுமே ஆண்களின் முறை தவறிய பலதார மணத்தை தடுக்கவும், திருமணப் பந்தம் விவகாரத்தில் முடியும் போது மனைவிக்கும், குழந்தைகளுக்குமான வாழ்வாதாரா கொடுப்பனவுகளை சரியான முறையில் நெறிப்படுத்தி நடை முறைப்படுத்தவும் முடியும்.
இந்த விவகாரத்தின் அடுத்த அம்சம்தான் பெண்கள் திருமண பதிவாளர்களாகவும், காதி நீதிபதிகளாகவும் செயல்பட தகுதி இல்லாதவர்கள் என்ற அகில இலங்கை முல்லாக்கள் சபையின் நிலைப்பாடு. இன்று காதி நீதிபதிகளாக வருவோர் இஸ்லாமிய சமய அறிவோ ஆகக் குறைந்தது நாட்டின் சட்டத் திட்டத்தில் அனுபவமோ இன்றி காணப்படுகின்றார்கள். இந்த நிலையை மாற்றி காதி நீதிபதியாக வருவோர் ஒரு சட்டத்தரணியாகவும் இருத்தல் வேண்டும் என்ற பல முன்மொழிவுகள் இதில் இடம் பெறுகின்றன.
இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் அன்னை கதீஜா, ஆயிஷா தொடங்கி Shuhdah Al Baghdadiyyah, Sitt Al Arab, Nana Asma , Munira Al Qobaysi, Haweaa Zakery ஊடாக சமகால பெண் சட்டவாளர் Riffat Hassan வரை பெண்கள் முக்கிய பதவிகளையும், பொறுப்புக்களை மிக கச்சிதமாக நடத்தி முடித்த குறிப்புக்கள் பரவிக்கிடக்க இலங்கை முஸ்லீம் பெண்கள் மட்டும் உரிமையிழந்த "அறிமை"காலத்து(Period of Ignorance) பெண்கள் போல இருக்க எதிர்பார்க்கப்படுவது இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரான நிலைப்பாடாகும்.
இந்த முல்லாக்கள் சபையை விட முன்னை நாள் கல்வி அமைச்சர் கலாநிதி பதியுதீன் முஹம்மத் அவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லீம் சமூகத்துக்கு அதிலும் குறிப்பாக பெண்களுக்கு சிறந்த பணியாற்றியுள்ளார் என்றால் அது மிகையாகாது. அதாவது இஸ்லாம் கல்வி கற்றலை ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டாயமாக்கிய போதிலும் முஸ்லீம் சமூகம் நெடுங்காலம் கல்வியில் பின்தங்கியே காணப்பட்டது. அந்த பரிதாப நிலையை மாற்றியமைக்கும் முகமாக கல்வி அமைச்சர் கல்வி தராதர சாதாரண தரத்தில்(GCE O/L) சித்தி எய்திய முஸ்லீம் பெண்களுக்கு ஆசிரியர் தொழில் வழங்கியதன் மூலம் முஸ்லீம் சமூகத்தில் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். அதன் பயனாக இன்று முஸ்லீம் ஆண்களும், பெண்களும் பல உயர்மட்ட நிர்வாகிகளாக, நீதிபதிகளாக, வைத்தியர்களாக, சட்டத்தரணிகளாக கல்வியில் ஏனைய சமூகங்களுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்து செல்கின்றனர். ஆனாலும் தம் இருப்பு 100 வருடங்களை நெருங்குகின்றது என்று பெருமை கொள்ளும் இந்த முல்லாக்கள் சபை பெண்கள் கல்வித் துறையில் முன்னேறுவதை அல்லது அதற்குள் பிரவேசிப்பதைக்கூட விரும்பாதவர்களாக இருக்கும் அதே நேரத்தில் பெண் கல்வியை தாங்களும் ஊக்குவிக்கின்றோம் என்ற அடிப்படையில் தாம் கற்ற மிக பழமைவாய்ந்த அறிவை மிக உயர்ந்த சுற்று மதில் கொண்ட கட்டிடங்களுக்குள் இந்த பெண்கள் மீது திணிக்கும் கைங்கரியத்தையே செய்து வருகின்றனர். ஆராய்தலுக்கும், தெளிவு பெறுவதற்கும், வழிகாட்டுவதற்கும் இந்த குறுக்கப்பட்ட இஸ்லாமிய "மதரஸா" கல்வி முறை பொருத்தமற்றது என்பதையும் அறியாமல் 21ம் நூற்றாண்டின் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு ஏழாம் நூற்றாண்டில் காணப்பட்ட சமூக அமைப்பின் ஊடாக பரிகாரத்தை தேடும் பரிதாப்பட்டவர்கள் நம் சமூகம் என்றால் அதை அமைதியாக ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.
பல்துறை பாண்டித்தியம் பெற்ற (learned) ஆண்கள், பெண்களிடம் இருந்து வரும் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை புறம்தள்ளி தமது மட்டுப்படுத்தப்பட்ட அறிவின் அடிப்படையில் சட்டதிருத்தம் அவசியமில்லை என்பதோ அல்லது தமது நிலைப்பாட்டின் படி மாற்றங்கள் செய்யப்படுவதே சரி என இந்த முல்லாக்கள் சபை அடம்பிடிப்பதோ எதிர்கால சந்ததிகளின் விவாக விவாகரத்து விவகாரங்களுக்கு எந்த விதத்திலும் பிரயோசனப்படாது என்பதோடு இந்த நிலைப்பாடானது இச்சபை அதன் நூற்றாண்டு வரலாற்றை எட்டமுடியாத ஒரு "தடைகல்" லாக இந்த சபையினரே இருக்கப் போகின்றார்கள் என்பதை இதுவரை இவர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை. சட்ட சீர்திருத்தம் சரியாக செய்யப்பட்டால் இச்சபையின் இருப்பு தொடரும், சீர்திருத்தம் இலை என்றால் இச்சபையின் இருப்பு நம் சமூகத்துக்கு அவசியமில்லை என்றாகிவிடும்.
-Mohamed SR Nisthar
No comments:
Post a Comment