MMDA: விட்டுக் கொடுப்பு இல்லை; ஆனால் மாற்றங்கள் தேவை - sonakar.com

Post Top Ad

Friday 2 August 2019

MMDA: விட்டுக் கொடுப்பு இல்லை; ஆனால் மாற்றங்கள் தேவை


“முஸ்லிம் தனியார் சட்டம் அல்-குர்ஆன் மற்றும் ஸுன்னஹ்வின் ஒளியில் மீளாய்விற்கு உற்படுத்தப் படல் வேண்டும், இஸ்லாமிய ஷரீஅத் சட்ட வல்லுனர்கள், முஸ்லிம் சட்ட நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகளின் ஆலோசனைகளை பெறாது முஸ்லிம் (தனியார்) விவாக விவாக ரத்துச் சட்டங்கள் குறித்த எத்தகைய முடிவுகளையும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் எந்த ஒரு அவையிலுமோ குழுவிலுமோ எடுக்கக் கூடாது.  இது ஒரு வரலாற்றுக் கடமையாகும்.  2009 ஆம் ஆண்டு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஸலீம் மர்ஸுப் அவர்கள் தலைமையில் அன்றைய நீதியமைச்சரினால்  நியமிக்கப் பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை சமூகத் தலைமைகள் பெற்று மீளாய்வு செய்தல் வேண்டும். “இலங்கையில் இஸ்லாம் அறிமுகமான காலம் இருந்து சிங்கள மன்னர்கள் காலம் முதல் போர்த்துக்கீசர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் காலம் வரையும் சுதந்திரத்திற்குப் பின்னரும் தமது சமய கலாசார தனித்துவங்களை பேணி வந்துள்ளனர், குறிப்பாக விவாக, விவாக ரத்து, வாரிசுரிமை போன்ற  ஆள்சார், ஆதனம் சார் சட்டங்களை வழக்காறுகளை தனித்துவமாக பேணிக் கொள்கின்ற உரிமைகளை பெற்றிருந்தனர்.

பல்லின மக்களைக் கொண்ட நம்  நாட்டில்  கீழ் காணும் தனியார் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன:

கண்டியச் சட்டம் – (1952ம் ஆண்டின் 44ம் இலக்க சட்டம்) இது கண்டி வாழ் சிங்கள மக்களுக்கு மட்டுமான தனியார் சட்டமாகும்.
தேச வழமைச் சட்டம் – (1948ம் ஆண்டின் இலக்க சட்டம்) இது யாழ்ப்பாணத் தமிழருக்கு மட்டும் உரித்தான சட்டம். மட்டக்களப்புத் தமிழருக்கு இது பொருந்தாது.
முஸ்லிம் தனியார் சட்டம் – (1951ல் 13ம் இலக்க  சட்டத் திருத்தம்) முஸ்லிம் தனியார் சட்டம் என்பது முற்று முழுதாக இஸ்லாமிய ஷரீஅத்துச் சட்டங்களை மாத்திரம் உள்ளடக்கிய ஒரு சட்டத் தொகுப்பு அல்ல அதில் அன்று நடைமுறையில் இருந்த சில வழக்காறுகள் உள்ளடக்கப் பட்டுள்ளது போல் பிரத்தியேகமான அமுலாக்கல் கட்டமைப்பு விதிமுறைகளும் அடங்குகின்றன.

அந்தந்தச்  சமூகங்கள் அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான உரிமையை அரசியலமைப்பின் (16-1) உறுப்புரை உறுதிப்படுத்தியுள்ளது.  அதனை நீக்கிவிடுமாறு எழுப்பப் படுகின்ற கோரிக்கைகளை முஸ்லிம் சமூகம் ஒரு பொழுதும் அங்கீகரிக்கப் போவதில்லை, மேற்படி தனியார் சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படின் அது குறிப்பிட்ட சமூகங்களினால் மாத்திரமே மேற்கொள்ளப் படல் வேண்டும், அதனை அரசாங்கமோ அல்லது வேறேதேனும் மூன்றாவது சக்திகளோ திணிக்க முடியாது.

மேற்படி ஏற்பாட்டை நீக்கிவிடுமாறோ அல்லது முஸ்லிம் தனியார் சட்டத்தை முழுமையாக சீர்திருத்துமாரோ ஐரோப்பிய யூனியன் நிபந்தனை விதிக்கவில்லை என அதன்இலங்கைக்கான தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார், பொதுவாக இலங்கையில் சிறுவர் திருமணம் அதிகரித்துள்ளதால் சர்வதேச வயதெல்லை நியமங்களை அறிமுகம் செய்யுமாறே தாம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக  அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

GSP + வரிச் சலுகை என்பது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துக் கொண்டிருக்கும் தேந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில ஐரோப்பிய நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்காக வழங்கப்படும் வரி விலக்காகும்.  மேற்படி வரிவிலக்குடன் முஸ்லிம் தனியார் சட்டத்தை முடிச்சுப் போடுவது விசித்திரமான விவகாரமாகும்.

இலங்கையில் அமுலில் உள்ள முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படல் வேண்டும் என சமூக மட்டத்தில் நீண்டகாலமாக கருத்தாடல் இடம்பெற்று வருகின்றது, குறிப்பாக  இஸ்லாமிய ஷரீஅத்துச் சட்டதிற்கு முரணான வழக்காறுகள் சீர்திருத்தப் படல் வேண்டும், காதி நீதிமன்ற கட்டமைப்பு, அமுலாக்கல் பொறிமுறை, நீதிபதிகள் நியமனம், அவர்களது தகைமைகள் போன்ற விடயங்கள் மீளாய்வு செய்யப்பட்டு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் படுதல் வேண்டும் என முன்மொழிவுகள் முன்வைக்கப் பட்டுள்ளன.

அதேபோன்றே சிறுமிகளின் திருமண வயதெல்லை குறித்த விவாதம் ஒன்றும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது,   1995ம் ஆண்டின் 18ம் இலக்க திருத்த சட்டத்தின் மூலம் தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண வயது 18 என்ற எல்லையை நிர்ணயித்தது அதற்கு முன்னர் 1907ம் ஆண்டில் 17ம் இலக்க திருமண மற்றும் விவாகரத்து கட்டளைச் சட்டதின்  15ம் ஷர்த்தில் ஒரு ஆணின் திருமண வயது 16 என்றும் பெண்ணின் திருமண வயது 12 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது, 1951 ஆம் ஆண்டு முஸ்லிம் திருமண சட்டமும் அதே வயதெல்லையை மாற்றாமல் கொண்டிருந்தது.

தற்போதைய சமூக பொருளாதார, இரவல் கலாசார மற்றும் உடலியல், உளநிலை காரணிகளை கருத்தில் கொண்டு சிறுமியர் பொறுப்புணர்வு “ருஷ்து” வயதெல்லையை 16 அல்லது அதற்கு மேல் நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டுள்ளன. பாகிஸ்தான் , பங்களாதேஷ், மலேஷியா, துருக்கி, மொரோக்கோ, கட்டார், குவைத், இந்தோனேசியா, அல்ஜீரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து போன்ற முஸ்லிம் நாடுகளில் அவ்வாறன வயதெல்லை நிர்ணயங்கள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றமை உதாரணமாக சொல்லப்படுகின்றது.

விவாகம், விவாக ரத்து விடயங்களில் பெண்களுக்கு பாரிய அநீதிகள் இடம் பெறுவதாகவும் இலங்கையில் அமுலில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டம் துஷ்பிரயோகப் படுத்தப் படுவதாகவும் பல நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டுள்ளன.  அல்-குரான் சுன்னாஹ்வின் ஒளியில் அநீதிகள் துஷ்பிரயோகங்கள் இடம் பெறாத வகையில் சீர்திருத்தங்களை நாம் அறிமுகம் செய்தல் வேண்டும்.

2009 ஆம் ஆண்டு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஸலீம் மர்ஸுப் அவர்கள் தலைமையில் அன்றைய நீதியமைச்சரினால்  நியமிக்கப் பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை சமூகத் தலைமைகள் பெற்று மீளாய்வு செய்தல் வேண்டும்.

அவசர அவசரமாக அரசியலமைப்பு மாற்றத்தினூடாக செய்து கொள்ள முடியாவிடின் பாராளுமன்ற சட்டவாக்க நடைமுறைகளூடாக மேற்படி சீர்திருத்தங்களை முஸ்லிம் சமூகம் மேற்கொள்ளல் வேண்டும்.

மேலோட்டமாக கோஷங்களையும் கோரிக்கைகளையும் முன்வைக்காது எல்லா இஸ்லாமிய அமைப்புக்களும் நிறுவனங்களும், புத்திஜீவிகளும் சமய அரசியல் மற்றும் சிவில் தலைமைகளும் தமது உரிமைகள் மற்றும் தனித்துவம் சார்ந்த சகல அரசியலமைப்பு முன்மொழிவுகளையும் ஆராய்தல் வரலாற்றுக் கடமையாகும்.

முஸ்லிம் தனியார் சட்டம் – யுகத்தின் தேவைகளிற்கேற்ப இஜ்திஹாத் செய்வதற்கு இடமிருக்கின்றது.
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பெண்களது திருமண வயது

ஆண் பெண் உறவுகளை இஸ்லாம் நெறிப்படுத்தி அழகிய குடும்ப வாழ்வை காட்டித் தருவதற்கு முன்னர் பெண்களை போகப் பொருளாக மாத்திரமே ஜாஹிலியா சமூகம் கருதியது, பெண்களை மனிதர்களாகவே மதிக்காத காலமது, இஸ்லாம் அவர்களுக்கு உயர்ந்த இடத்தை வழங்கியது, அவர்களது திருமணத்தை உடன்படிக்கை மூலம் சட்ட வலுவுள்ள பாதுகாப்பான உறவாக மாற்றியமைத்தது, அவர்களுக்கு மஹர் கொடுப்பதனை கட்டாயமாக்கியது, பெண்களுக்குரிய சொத்து உரிமைகளை நிர்ணயம் செய்துள்ளது அவர்களுக்குரிய வாழ்வாதரங்களை ஆண்களே பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தியது.

பெண்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு ஆணின் சுகபோகப் பொருளாக ஒரு மங்கையை ஒப்படைத்துவிடும் கொடுக்கல் வாங்கல் (அடிமை சாசனம்)  அல்ல, அது பொறுப்புணர்வுடன் கூடிய கடப்பாடுகள் நிறைந்த குடும்ப வாழ்வின் அத்திவாரமாகும், ஒரு ஆண் பெண்ணிற்கோ அல்லது ஒரு பெண் ஆணிற்கோ அநீதிகள் இழைத்து விடாது பரஸ்பர புரிந்துணர்வுடன் ஒன்றிணைந்து வாழ்கின்ற ஒரு குடும்ப நிறுவனத்தை கட்டி எழுப்புகின்ற அறிவுபூர்வமான இல்லறமாகும்.

பருவவயதை அடைவது திருமணத்திற்கான அடிப்படைத் தகைமையாகும், பருவ வயதை அடைந்தவுடன் அவர்களை கட்டாயம் தீர்மானம் செய்து வையுங்கள்  என்றோ இத்தனை வயதில் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்றோ இஸ்லாம் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்ல,  அந்த விடயம் சம்பந்தப்பட்ட மாதர் அவர்தம் பெற்றோர் பாதுகாவலர் ஆகியோரின் தீர்மானத்திற்கு விடப்பட்டுள்ளது.

ஒரு பருவ மங்கையின் திருமணம் குறித்து அவரிடம் அனுமதி கேட்குமாறு இஸ்லாம் கூறியுள்ளது, அவரது திருமணம் குறித்து பெற்றார் அல்லது பாதுகாவலர் முடிவுகளை எடுக்கின்ற அனுமதியை இஸலாம் வழங்கியுள்ளது, அவ்வாறு பெற்றார் பாதுகாவலர் முடிவுகளை எடுக்கும் பொழுது மாதர்களின் உணர்வுகளை உரிமைகளை விருப்பு வெறுப்புக்களை கவனத்திற்க் கொள்ள வேண்டிய அவசியமில்ல என வாதிடுவது ஏனைய இஸ்லாமிய ஒழுக்கவியல் வழிமுறைகளிற்கு முரணான கருதுகோளாகும்,     ஏற்கனவே திருமணமாகி விடுபட்டோர் தமது திருமணம் குறித்த முடிவை எடுக்கும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

இவ்வாறு திருமணத்துடன் தொடர்புடைய பல்வேறு தரப்புக்களும் பல்வேறு விவகாரங்களை கரிசனைக்கு எடுத்து யாரை எந்த வயதில் யாருக்கு திருமணம் செய்து வைப்பது என்ற முடிவுகளை எடுத்துக் கொள்ளும் திறந்த அனுமதியை இஸ்லாம் வழங்கியுள்ளது.

இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் “ ஏற்கனவே திருமணமாகிய பெண்ணாயின் அவரது கட்டளை பெறப்படுவதனையும், கன்னிப் பெண்ணாயின் அவரது பெற்றார் பாதுகாவலரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பதனையும் குறிப்பிட்டுள்ளார்கள், பெண்களது, விருப்பு வெறுப்புக்களை, உரிமைகள் கடமைகளை கவனத்தில் எடுக்காது அவர்களை பலவந்தமாக திருமணம் செய்து வைக்குமாறு எங்குமே குறிப்பிடவில்லை, மாறாக இஸ்லாமிய அவர்கது உணர்வுகளை அபிலாஷைகளை உரிமைகளை மதிக்குமாறே இஸ்லாமிய ஒழுக்கவியல் பண்பாட்டு வழிகாட்டல்கள் உணர்த்தி நிற்கின்றன.

அனாதைகளின் திருமணம் பற்றி பேசும் அல்குரான் அவர்களை அவதானித்துக் கொண்டிருங்கள் அவர்கள் திருமண வயதை அடையும் பொழுது அவர்களது பொறுப்புணர்வு சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல் உடையவர்களாக நீங்கள் காணும் பொழுது அவர்களது சொத்துக்களை அவர்களிடம் ஒப்படையுங்கள் என்று அல்லாஹ்  கட்டளையிட்டுள்ளான்.

அநாதைகளிற்கு சேரவேண்டிய சொத்துக்களை அவகளது பருவமடையும் வயதை மாத்திரமன்றி பொறுப்புணர்வு “ருஷ்து” வயதுவரையும் காத்திருந்து கண்காணித்து அவர்களிடம் ஒப்படைக்கச் சொல்வதன் மூலம் அவர்களது உரிமைகளை எவ்வாறு இஸ்லாம் உத்தரவாதப் படுத்துகின்றது என்பதனை அறிவோம், அவ்வாறெனின் தமது குழந்தைச் செல்வங்களான சிறுவர்  சிறுமியர்களை அடுத்தவரிடம் ஒப்படைப்பது குறித்தும் பல்வேறு பரிமாணங்களில் சிந்தித்து முடிவெடுப்பதும் எம்மீது கடமையாகின்றது.

பருவமடைதல் மாத்திரமல்ல ஆணாயினும் பெண்ணாயினும் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, அறிவில் தெளிவு “ருஷ்து” என பல்வேறு விடயங்களிலும் தகைமை பெற்றிருப்பதனை இஸ்லாம் வலியுறுத்துகின்றது, குறிப்பாக திருமண வாழ்வை கொண்டு நடத்த முடியுமானவர்கள் என தகைமை பெற்றவர்களையே திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் ஊக்குவிக்கின்றது.

இஸ்லாத்தில் பலவந்தம் கிடையாது, இஸ்லாம் அநீதிகள் இடம் பெறுவதனை அனுமதிப்பதில்லை, இஸலாம் நன்மைகளை ஏவுவது போல் தீமைகளை தடுக்கின்றது, அனாதைகளது சொத்துக்களை மாத்திரமல்ல அநாதையற்ற ஏனைய  ஆண் பெண் சிறிய வயதினறது சொத்துக்களில் கூட அநீதி இழைக்கப் படுவதனை இஸ்லாம் அனுமதிப்பதில்லை.

இவ்வாறான நியாயமான இஸ்லாமிய வழிகாட்டல்களை மையமாக வைத்து ஒவ்வொரு சமூகங்களும் ஒவ்வொரு கலப்பிரிவிலும் திருமண விவாகரத்து மற்றும் சொத்துப் பகிர்வுகள் குறித்த சட்டதிட்டங்களை அமுல படுத்தினர், 1800 , 1900 களில் பதின்ம வயது இளைஞர்கள் திருமணத்திற்கு தகைமை பெற்றிருந்தார்கள் மாதர்களின் வயதெல்லையை அன்றைய கால சூழ்நிலைகளைப் பொறுத்து குறிப்பிட்ட கரிசனைகளை உள்வாங்கியே பெண்களின் திருமண வயதை 12 என வரையறை செய்தார்கள், அல்-குர்ஆனோ சுன்னாவோ வரையறை செய்யவில்லை.

இஸ்லாமியர் மாத்திரமன்றி உலகம் முழுவதும் பண்டைய காலங்களில் இருந்து இன்றுவரை திருமண வயது, குடும்பவாழ்வு மற்றும் பொறுப்புணர்வுப் பராயம் என பல்வேறு அம்சங்கள் பரிணாமம் பெற்றுவந்துள்ளன, இவ்வாறான பல்வேறு சமூக பொருளாதார உயிரியல், உளவியல், அறிவியல் காரணிகளை கருத்தில் கொண்டு  இஸ்லாமிய அறிஞர்கள் மாத்திரமன்றி முஸ்லிம் நாடுகள் கூட திருமண வயதெல்லை குறித்த நிபந்தனைகளை அறிமுகம் செய்துள்ளனர்.

ஒரு நாட்டில் அல்லது குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் சட்டம் இயற்றப் படும் பொழுது பொதுவான கருதுகோள்களை அடிப்படையாகக் கொண்டு சில வரைமுறைகள் கொண்டுவரப்படுகின்றன, இஸ்லாத்திற்கு முரணான பல்வேறு கலாசார பண்பாட்டு மற்றும் பாரம்பரிய நடைமுறைகளைக் கொண்டுள்ள முஸ்லிம் திருமண நடைமுறைகளில் உள்ள சீர்கேடுகளை அல்லது முறைகேடுகளை தடுப்பதற்கான சில ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயம் சமூகத்திற்கும் குறிப்பாக இஸ்லாமிய அறிஞர் பெருமக்களிற்கும் இருக்கின்றது.

அந்த அடிப்படையில் திருமணத்திற்கான முஸ்லிம் மாதரின் குறைந்த பட்ச வயதெல்லையை 16 அல்லது 18  ஆக உயர்த்துவது யுகத்தின் தேவையாகும், பாகிஸ்தான் , பங்களாதேஷ், மலேஷியா, துருக்கி, மொரோக்கோ, கட்டார், குவைத், இந்தோனேசியா, அல்ஜீரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து போன்ற பல முஸ்லிம் நாடுகளில் அவ்வாறு வரையறை செய்திருக்கின்றார்கள், அதனை விட குறைந்த வயதில் திருமணம் செய்துவைக்க வேண்டிய கட்டாய நிலை வரின் அதற்குரிய அனுமதியை காதி நீதிமன்றிடம் பெறுவதற்கு உரிய நிபந்தனைகள் விதிக்கப் படல் வேண்டும்.

அநீதிகள் இடம் பெறுவதை தவிர்த்தல், சட்டத்தில் உள்ள ஓட்டைகள் துஷ்பிரயோகம் செய்யப் படுவதனை தடுத்தல், சமூக கலாசார அநீதிகள் இடம் பெறுவதை தடுத்தல், சிறுமியர்களது உரிமைகளை பாதுகாப்பை உத்தரவாதப் படுத்தல் போன்ற மார்க்கத்தில் முன்னுரிமைப் படுத்தப் பட வேண்டிய அம்சங்களை ஒரு “சலுகை” க்காக சமரசம் செய்ய வேண்டிய அவசியம் இஸ்லாத்தில் இல்லை.

குறிப்பாக கைக்கூலி சீதனம் சீர்வரிசை போன்ற வழி கெட்ட வரதட்சணைக் கலாச்சாரங்களை அனுமதிக்கும் தனியார் சட்டம் அமுலில் உள்ள ஒரு நாட்டில் பெண்களுக்கு எதிரான சமூக அநீதிகள், கொடுமைகள் அதிகரித்து காணப்படும் சூழ்நிலையில் இளவயது திருமணங்கள் கட்டாயமாக தடை செய்யப் படல் வேண்டும் என உலமாக்கள் இஜ்திஹாத் முடிவு ஒன்றை வெளியிடுவது காலத்தின் கட்டாயமாகும்.

பருவம் எய்தியதும் திருமணம் செய்து வையுங்கள் என்று அல்-குரானோ அல்-ஸுன்னாஹ்வோ எவரையும் கட்டாயப் படுத்தாத ஒரு விடயத்தில் அநீதிகள் அக்கிரமங்கள் இடம் பெறாதிருப்பதனை உறுதி செய்வதற்கான இஜ்திஹாத் தீர்வை உலமாக்கள் உரிய தர்ப்புக்களிற்கு முன்வைத்தல் வேண்டும்.

அன்றைய யுகத்தின் பாரம்பரியங்களிற்கு அமைய சிறிய வயதில் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களை இறைதூதர் (ஸல்) திருமணம் செய்தமை திருமண வயதெல்லையை தீர்மானிப்பதில் உம்மத்தை கட்டாயப் படுத்துகின்ற ஒரு ஸுன்னஹ்வாக விவாதிக்கப் பட வேண்டிய அவசியமில்லை, இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் தனது மகள் ஆயிஷாவை (ரழி) ஒப்படைத்த அபூபக்கர் (ரழி) அவர்கள் சித்தீக் ஆக இருந்தார்கள்.

முஸ்லிம் தனியார் சட்டத்தை முஸ்லிம்களாக முன்வந்து ஆராய்ந்து சீர்திருத்தங்களை மேற்கொண்டு அரசியலமைப்பில் சட்டமாக்கிக் கொள்வதனை ஷரீஅத்துச் சட்டத்தில் கைவைப்பதாக எவரும் மேலோட்டமான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அநீதிகள் இடம் பெறுவதை தவிர்த்தல், சட்டத்தில் உள்ள ஓட்டைகள் துஷ்பிரயோகம் செய்யப் தடுத்தல், சமூக கலாசார அநீதிகள் இடம் பெறுவதை தடுத்தல், சிறுமியர்களது உரிமைகளை பாதுகாப்பை உத்தரவாதப் படுத்தல் போன்ற மார்க்கத்தில் முன்னுரிமைப் படுத்தப் பட வேண்டிய அம்சங்களை ஒரு “சலுகை” க்காக சமரசம் செய்ய வேண்டிய அவசியம் இஸ்லாத்தில் இல்லை.

பருவ வயது வந்த 14, 15, 16 வயது சிறுவர்களை திருமணத்திற்கு அனுமதித்த காலமும் வரலாற்றில் இருந்தது, முஹம்மத் பின் காசிம் ஆசிய நாடுகள் நோக்கி படையினருக்கு தலைமை தாங்கும் பொழுது அவரது வயது 16.

ஒரு சிறுமி திருமணத்திற்குரிய உடல் உள, அறிவு வளர்ச்சியை பக்குவத்தை பெற்றிருக்கின்றாரா என்பதனை அறிவு பூர்வமாக, விஞ்ஞான பூர்வமாக பண்டைய மரபுகளிற்கு அப்பால் தீர்மானிப்பதனை இஸ்லாமிய ஷாரீஆவின் அடிப்படை இலக்குகள் தடுப்பதற்கில்லை.

இளவயது திருமணம் என்பது ஒரு தனித்த, வயதுடன் மாத்திரம் மட்டுப் படுகின்ற ஒரு விவகாரமல்ல, முறைப்படி மஹர் கொடுகின்ற, பெண்வீட்டை சீதனம், கைக்கூலி, சீர்வரிசை என சூரையாடாத) இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பில் வாரிசுரிமைச் சட்டங்கள், ஒரு விதவை மறுவாழ்வு பெறுவதற்கான வாய்ப்புக்கள், சமூக பொருளாதார கலாசார, உடலியல், உளவியல் காரணிகள் என பரந்த பரப்புக்களுடன் தொடர்பு பட்ட ஒரு விவகாரமாகும்.

சட்டரீதியாக கடமைகள் பொறுப்புக்களை ஏற்கும் (சட்ட வயது – Legal Age)

இலங்கையை பொறுத்தவரை பெண்ணின் திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப் படுவதில் தவறில்லை என்றே கருதுகிறேன், ஏனெனில் இலங்கையில் சட்டரீதியாக கடமைகள் பொறுப்புக்களை ஏற்கும் (சட்ட வயது – Legal Age) 18 ஆகும், எனவே திருமணம் சார் சிவில் விவகாரங்களில் மற்றும் குற்றவியல் விவகாரங்களில் இலங்கையின் சட்டத்துறையை சுயமாக நாடுகின்ற வயதெல்லை அவர்கது அடிப்படை உரிமைகளிற்கு போதிய (Legal safeguard) சட்ட ரீதியான பாதுகாப்பினை வழங்கும்.

ஆனால் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் பெண்களுடைய பெற்றார் பாதுகாவலர் காதி நீதிபதிகள் தீர்மானிக்கின்ற பட்சத்தில் மாத்திரம் அதற்கு குறைந்த வயதில் (15-16) நிகாஹ் செய்து வைக்க அனுமதிக்கும் ஏற்பாட்டினை செய்து கொள்ளலாம். அவ்வாறான நிலையில் சட்ட வலுவுள்ள வேறேதேனும் உடன்படிக்கையொன்றை  பெற்றார் பாதுகாவலர் செய்து கொள்தல் கட்டாயமாகும்.

ஏனெனில் பலர் இளவயது பெண்களை திருமணம் செய்து விட்டு மணமகள் 18 வயதாகும் வரை திருமணப் பதிவை மேற்கொள்வதில்லை, அவ்வாறன நிலையில் இலங்கை நாட்டின் சட்ட திட்டங்களின் படி மணப்பெண்ணின் வாழ்வில் எதிர்பாராத சிவில் அல்லது குற்றவியல் பிணக்குகள் தோன்றின் கணவன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிட இடமிருக்கிறது. 

ஒரு பெண்ணுக்கு அவளது கல்வி, தொழில், திருமணம், துணைவன் போன்ற விவகாரங்களில் பலாத்காரம் பிரயாகிக்கப் படுவதனை அனுமதிக்க முடியாது, அவர்கள் சுயமாக இஸ்லாமிய வரைமுறைகள் மீறாது தீர்மானம் எடுக்கின்ற சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப் படல் வேண்டும்.

இதனால் தான் உடன் பதிவு செய்யப்படாத நிகாஹ் வலிதாவாதில்லை என நிபந்தனை விதிக்குமாறு பாதிக்கப்பட்ட  சில தரப்புக்கள் வலியுறுத்துகின்றன, உண்மையில் நீதியை நிலை நிறுத்துவதும் அநீதி இடம் பெறாமல் தடுப்பதுவும் இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படை

அதேபோன்றே திருமண பதிவின் போது மணப் பெண் கையொப்பமிடுதல்  நிபந்தனையாவதிலும் தவறில்லை, அது ஷரீஆவிற்கு முரணான விடயமுமில்லை என்பதே எனது அபிபிரயமாகும்.

உண்மையில் இவ்வாறான சட்ட ரீதியிலான பாதுகாப்புகளை அன்றைய ககால சூழ்நிலைகளிற்கேற்ப இஸ்லாமே பெண்களுக்கு பெற்றுக் கொடுத்தது, அன்றைய காலத்தில் இளவயதில் பெண்கள் திருமணம் முடிக்கும் வழமை இருந்த பொழுது அவர்களிற்கு பெற்றார் பாதுகாவலரின் (சட்ட வலுவுள்ள ) பாதுகாப்பை பெற்றுக் கொடுப்பதற்காகவே (வொலி) காரனின் கையொப்பம் இரண்டு சாட்சிகள் என சில உடன்படிக்கை நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

அன்றைய கால சூழ்நிலையில் அடிமைகளை மனைவிகளாக வைத்திருக்கும் சட்டதிட்டங்களும் இருந்தன, ஆனால் காலப்போக்கில் அடிமைகளை விடுதலை செய்வதனை இஸ்லாம் ஊக்குவித்ததது காலப்போக்கில் இஸ்லாமிய உலகில் அடிமைகள் இல்லாது போயினர்.

திருமணம் சார்ந்த பலநூறு சமூகக் கொடுமைகளுக்கு ஆளாகி தனக்கொரு துணையை விலைக்கு வாங்க கடல் கடந்து அரபியின் வீட்டில் அடிமைச் சேவகம் செய்ய ஆயிரக் கணக்கான சகோதரிகள் மஹ்ரமின்றி வெளியேறும் அவலத்திற்கு தீர்வு சொல்ல முடியாத ஒரு சமூகத்தில் இள வயது திருமணம் தடுக்கப் படல் வேண்டும்.

அது மாத விடாய் காலத்தில் உடலுறவை தவிர்ப்பது போல, வலியும் விளைவுகளும் கவனத்தில் கொள்ளப் படல் வேண்டும்.

இத்தகைய காரணிகளை கருத்தில் கொண்டு ஒவ்வொருவராக சான்றிதழ் வழங்கி அனுமதி வழங்கவும் முடியாது எனவே இளவயது திருமணங்களை தடுப்பதற்கான சட்ட திருத்தம் மேற்கொள்ளப் படுவதனை தனிப்பட்ட முறையில் பூரணமாக நான் ஆதரிக்கின்றேன்.

காதி நீதி மன்ற கட்டமைப்பு:

முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் விடுவரப்படுவத்தோடு காதி நீதி மன்ற கட்டமைப்பு ஒரு தரப்படுத்தலுக்கு உட்படுத்தப் படல் வேண்டும், காழி மார்களின் தகைமைகள் நிர்ணயம் செய்யப் படுத்தல் வேண்டும்.

காதிமார்கள் நியமனத்தின் பொழுது குறைந்த பட்சம் அடிப்படைக் கல்வித் தகைமை மற்றும் இதர தகைமைகள் நிர்ணயம் செய்யப் படுவதோடு அவர்கள் பயிற்ரப் படுவதற்கான ஒரு ஏற்பாடும் அவசியமாகும், தகுதிகாண் போட்டிப் பரீட்சை ஒன்றையும் நிகழ்த்துவது குறித்து உரிய தரப்புக்கள் கவனம் செலுத்துதல் வேண்டும்.

காதி நீதிமன்றங்களிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை வளங்களினை அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளும் உரிமை எமக்கிருக்கிறது, அதேபோன்று அவர்களிற்கான கௌரவமான கொடுப்பனவு காரியாலய வசதிகள் போன்ற இன்னொரன்ன விடயங்கள் விரிவாக ஆராயப்படல் வேண்டும்.

எனது இந்தப் பதிவு குறித்த விவகாரம் இன்னும் விரிவாகவும், ஆழமாகவும் உரிய தரப்புக்களால், உரிய மட்டங்களில் ஆராயப் பட நிச்சயமாக வழி வகுக்கும் என்ற நம்பிக்கையுடன் இடப்பட்டுள்ளது.

இறுதியாக ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன், மேற்படி விவகாரத்தை இலங்கை முஸ்லிம் சமூகம் தனது உள்வீட்டு விவகாரமாகவே அணுக வேண்டும், ஏனைய அந்நிய பெண்ணிய அமைப்புக்கள், உரிமை அமைப்புக்கள், வெகுசன ஊடங்களில் இதனை சர்ச்சைக்குரிய விவகாரமாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

உள்வீட்டில் பிரத்தியேகமாக கூட்டாக விரிவாக ஆராயப்பட வேண்டிய தனித்துவமான பல அரசியல் சமூக கலாசார பொருளாதார விடயங்கள் இருக்கின்றன.

அவ்வாறான பல்வேறு விவகாரங்கள் சந்திக்கு கொண்டுவரப்பட்டு இரண்டாவது மூன்றாவது தரப்புக்களின் தலையீடுகள் காரணமாக தீர்க்க முடியாத பிணைக்குகளாக மாறுவதற்கு எமது ஒற்றுமையின்மையே காரணமாகும், ஏனைய சமூகங்களை நாம் குறை கூறவே முடியாது.

குறிப்பிட்ட ஒரு பொதுவான சமூக விவகாரத்தை சமூகத்தின் அரசியல் தலைமைகள் எவ்வாறு கையாளுக்கின்றன, சன்மார்கத் தலைமைகள் எவ்வாறு அணுகுகின்றன, சிவில் தலைமைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதனை ஒருவருக்கொருவர் அறியாதிருப்பது போல் சமூகத்தின் சிந்தனைப் பள்ளிகளும் வெவ்வாறான நிலைப்பாடுகளை எடுத்து செயற்படுகின்றன.

இங்கு ஒரு தரப்பு மற்றொரு தரப்பிற்கு விரல் நீட்டுவதில் அர்த்தமில்லை. எல்லோருமாக தவறிழைத்துக் கொண்டிருக்கிறோம்.

அவற்றை உரிய தரப்புக்கள் கூட்டுப் பொறுப்புடன் உரிய காலத்தில் செய்யத் தவறிவிடுவதால் தான் இடைவெளிகள் பிழையான தரப்புக்களால் நிரப்பப் படுகின்றன, நாம் வழமைபோல் காலம் கடந்து கைசேதப் படுகின்ற சமூகமாகவே இருக்கின்றோம்.

புதிய அரசியலமைப்பு சார்ந்த பல்வேறு விடயங்கள் விரிவாக துறைசார் நிபுணர்கள் துணையுடன் ஆராயப்பட்டு ஏகோபித்த நிலைப்பாடுகள் எய்தப்பட வேண்டியுள்ளன.

முஸ்லிம் தனியார் சட்டம் ( MUSLIM PERSONAL LAW )

ஒரு நாட்டின் மத, கலாசார, பிரதேச அடிப்படைகளில் வாழ்கின்ற தனித்துவமான குழுமங்களின் தனித்துவங்களைப் பேணும் வகையில், அவர்கள் பின்பற்றுகின்ற, அவர்களுக்கே உரித்தான ன சட்டங்கள், நடைமுறைகள், வழக்காறுகள்  முதலானவற்றை அவர்களுக்கு உடைத்தாக்கும் சட்டம் தனியார் சட்டம் எனப்படும்.

பல்லின மக்களைக் கொண்ட நமது இலங்கை நாட்டில் தற்சமயம் நடைமுறையில் உள்ள தனியார் சட்டங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. கண்டியச் சட்டம்
– இது கண்டி வாழ் சிங்கள மக்களுக்கு மட்டுமான தனியார் சட்டமாகும்.
2. தேச வழமைச் சட்டம் (இது யாழ்ப்பாணத் தமிழருக்கு மட்டும் உரித்தான சட்டம். மட்டக்களப்புத் தமிழருக்கு இது பொருந்தாது)
3. முஸ்லிம் தனியார் சட்டம்

முஸ்லிம் தனியார் சட்டம் என்பது இஸ்லாத்தின் அனைத்துச் சட்ட திட்டங்களையும் கொண்ட  ஒரு சட்டத் தொகுப்பு அல்ல.

முஸ்லிம் தனியார் சட்டத்தின் உள்ளடக்கம்:
இது இரு பிரிவுகளக் கொண்டதாகும்.

ஆள்சார் சட்டம் – ( Personal Law )
ஆதனம் சார் சட்டம் – ( Law of Property)
ஆள்சார் சட்டம் – ( Personal Law ) இச்சட்டத்தின் கீழ் பின்வருவன உள்ளடங்குகின்றன.

திருமணம், பலதார மணம்
2. விவாகரத்து
3. பராமரிப்பு
4. பிரதி பலன்களை எதிர்பார்க்காத கொடைகள்
5. பருவமடைதல்
6. தத்தெடுத்தல் அல்லது மகவேற்பு
7. பிள்ளைகளது பாதுக்காப்பு
8. திருமணம் செய்யத் தடுக்கப்பட்டோர்
9. மஹரும்  கைக் கூலியும்.
முஸ்லிம் தனியார் சட்டத்தை (விவாகம், விவாக ரத்து) நடைமுறைப்படுத்தும் தாபனங்கள்
1. காழி நீதி மன்றம்:
நீதிச் சேவைகள் ஆணையாளரால் காழிகள் நியமிக்கப்படுவர்
காழிகளின் அதிகாரங்கள்
1. மஹரைப் பெற்றுக் கொடுத்தல்
2. வாழ்க்கைச் செலவை அதிகரித்தல்
3. விவாகரத்தை  மேற்கொள்ள உதவுதல்
4. கைக்கூலியை மீளப் பெற உதவுதல்
5. அவசியத்தின் நிமித்தம்  வலீயாகச் செயற்படல்
6. சமரசம் செய்தல்                                                                                                                                                                                                                                                                                                 2.காழிகள் சபை:                                                                                                                              காழிகளின் தீர்ப்பில் திருப்தி அடையாத ஒருவர், பத்து நாட்களுக்குள் இச்சபைக்கு மேன்முறையீடு செய்ய வேண்டும்.
– இதில் ஐந்து உறுப்பினர்கள் இருப்பர்.
– ஒரு தீர்வு வழங்கப்படும்போது குறைந்தது மூன்று உறுப்பினர்கள்  அல்லது நீதிபதியாவது இருக்க வேண்டும்.

3. மேன்முறையீட்டு நீதிமன்றம்4. சுப்ரீம் கோட்
மேன்முறையீட்டில் திருப்தி காணாதோர் இந்த நீதி மன்றத்தில் வழ்க்கைத் தாக்கல் செய்யலாம். அமைச்சர் ரவூப் ஹகீம் நீதியமைச்சரக இருந்த பொழுது தெரிவித்த கருத்துக்கள்:

“இந்த நாட்டின் நீதி நிருவாகம் குறித்த பிரச்சினைகளில் முஸ்லிம் விவாகம், விவாகரத்து சட்டத்தை அமுல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்கு ஓர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவுக்கு தலைமை வகிக்கும் நீதியரசர் சலீம் மர்சூப் இந்த காதி நீதிமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது.அவருடைய தலைமையிலான அந்த ஆணைக்குழுவின் ஊடாக முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை ஆராய்ந்து, அச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரப்பட வேண்டும் என்பது பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட விடயமாகும்.அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டாலும் இச் சட்டத்தில் முழுமையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருந்தது. அதில் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் செயலாளர் உட்பட, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, முன்னாள் சட்டமா அதிபர் ஷிப்லி அஸீஸ் மற்றும் சில பெண்கள் தரப்பினர் உட்பட உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.அடிக்கடி பெண்கள் மத்தியில் இருந்து காதி நீதிமன்ற அலுவல்கள் சம்பந்தமான விடயங்களில் பெண்கள் எதிர்நோக்குகின்ற உள ரீதியான பாதிப்புகள் பற்றி முறைப்பாடுகள் எனது அமைச்சுக்கும், நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கும் வந்த வண்ணமுள்ளன.”


-Masihudeen Inamullah

No comments:

Post a Comment