அடி புடி all the பில்டிங் level த மட்டம் ! - sonakar.com

Post Top Ad

Friday 16 August 2019

அடி புடி all the பில்டிங் level த மட்டம் !


ஒன்றில் யாரையாவது ஓஹோ என்று புகழ வேண்டும் இல்லையென்றால் முடிந்தளவு மட்டம் தட்டிப் பேசி மகிழ வேண்டும்;. ஆக மொத்தத்தில் எதிரியில்லாமல் வாழ்வது பெரும்பாலான முஸ்லிம்களுக்கு மிகவும் கஷ்டமான ஒரு விடயம்.உனக்கெதிரே இருக்கிறவன் வாழைப்பழத் தோலை மேலிருந்து உரித்தால், நீ கீழிருந்து உரிக்க வேண்டும். ஏனெனில் நபியவர்கள் காபிர்கள் செய்வதற்கு மாறாகவே எப்போதும் செயற்பட்டார்கள் என்று சின்ன வயதிலேயே 'பயான்' கேட்டிருக்கிறோம். அதைக் கேட்டு, அப்படியே இன்று வரை எதிர் மனப்பான்மையுடனேயே வாழும் நபர்களையும்; காண்கிறேன்.

ஈஸ்டர் தாக்குதலையடுத்து லண்டன் மாநகர இந்து கோயில் ஒன்றில் இடம்பெற்ற நல்லிணக்க நிகழ்வொன்றில் உரையாற்ற அழைப்பு விடுத்தார்கள். மனமுவந்து ஏற்றுக்கொண்டு அங்கு செல்லும் வழியில் ஒரு பால்ய நண்பனும் ஏறிக் கொண்டான். ஆனால், கோயிலுக்குள் வந்தால் தன் ஈமான் கெட்டுவிடும் எனக் கருதிய அவன் வெளியிலேயே நின்று கொண்டான். இன்னும் சில நாட்களில் மத்திய லண்டன் பகுதியில் இடம்பெற்ற அமைதி ஊர்வலம் ஒன்றின் பின் மெதடிஸ்த தேவாலயம் ஒன்றில் சகல இனத்தவர்களும் ஒன்று கூடிய சமாதானத்தை வலியுறுத்தும் நிகழ்வொன்று நடந்தது. அதில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் நான் உரையாற்றியிருந்தேன். நிகழ்வின் முடிவில் வேறு தேவாலய சமூகங்களைச் சேர்ந்தவர்களும் வந்து மன நிறைவோடு தம் உணர்வுகளை என்னோடு பகிர்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால், தாடி வைத்த ஒரு சமூகப் போராளி மாத்திரம் வெளியில் நிற்பதைக் கண்டு, பின்னர் காரணம் கேட்டேன். அவரும் தேவாலயத்துக்குள் வந்தால் அவர்களது வணக்கங்களையெல்லாம் ஏற்றுக் கொண்டதாகி விடும் என்று உணர்வோங்கப் பதிலளித்தார்.

2019ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபே ராஜபக்ச, ஓகஸ்ட் மாதம் 14ம் திகதி கண்டிக்கு சென்றார். முதலில், மல்வத்து பீடம் சென்று பிரித் ஓதித் தன் கையில் ஆசீர்வதிக்கப்பட்ட நூலைக் கட்டிக்கொண்ட அவர், பின் அங்குள்ள பிள்ளையார் கோயில் சென்று வழிபட்டுத் தனதும் தன் சகோதரன் மஹி;ந்தவின் நெற்றியிலும் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டு அதே நிலையில் கண்டி மீரா மக்கம் பள்ளிவாசலுக்குச் சென்றார்.

அங்கு நெற்றிப் பொட்டோடு சகோதரர்கள் இருவரையும் அமர வைத்து, சூரத்துல் பாத்திஹா ஓதி, துஆ கேட்டு முஸ்லிம்களின் நல்லிணக்கத்தைச் செப்பி வழியனுப்பி வைத்தார்கள். இதன் போது அங்கு அழைக்கப்பட்டிருந்த பௌத்த பிக்கு ஒருவர் கவனிப்பாரற்றுக் கைவிடப்பட்ட நிலையில் மூலையில் நி;ன்றதாக நண்பர் ஒருவர் அன்றே சொன்னார். பின்னர், அதே பிக்குவுடன் செல்பி எடுத்து பேஸ்புக்கில் போட்ட இன்னுமொருவர், அந்த பிக்குவை ஜாதி, மத, இனம், மொழி தாண்டி... மனித நேயத்துக்காய் கிடைத்த ஒரு சிறந்த உறவு என வர்ணித்தும் இருந்தார். பிக்குவும் புன்னகைத்துக் கொண்டு போட்டோவில் நின்றார். பாவம் அவர் கஷ்டத்தைக் கேட்கத்தான் அன்று ஆளில்லை. இப்படி எம் சமூகத்தின் பல அவதாரங்களை நாட்டுக்கு வெளியிலிருந்து அவதானிக்கும் போது சில வேளைகளில் சிரிப்பு வரும், சில வேளைகளில் அளவு கடந்த கவலை வரும்.

2015ம் ஆண்டு காத்தான்குடியில் மக்கள் போராட்டம் ஒன்று வலுக்கட்டாயமாக உருவானது. ஒரு கொள்கை இயக்கம் சார்ந்த அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் அதனை இன்னும் பெரிதாக்கினார்கள். முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் தொல்பொருட் திணைக்கள அனுமதியுடன் அப்பகுதியில் பூர்வீக நூதனசாலையொன்று உருவானது. துரதிஷ்டவசமாக, அரசியல் இலாபம் கருதி அந்த நூதனசாலையானது இஸ்லாமிய நூதனசாலையென அப்போது பிரச்சாரப்படுத்தப்பட்டிருந்தது. ஆதலால், அங்கு உருவ பொம்மைகள் இருக்கக் கூடாது என ஆர்ப்பாட்டங்கள் நடந்து பத்வாவும் கொடுக்கப்பட்டது.
ஆயினும், இன்றும் அது பூர்வீக நூதனசாலை என்றே அறியப்படுகிறது. துரதிஷ்டவசமாக இன்று கூட அந்தத் தெளிவு பலரூக்கு இல்லை. அன்றைய ஆர்ப்பாட்டத்தின் பின்னணி பற்றி விளக்கம் கூறுபவர்கள், சிலை வைக்க அனுமதித்தால் அது நாளடைவில் இணை வைப்பாக மாறிவிடும் என்றதாலேயே அவ்வாறு நடந்ததாகக் கூறுகிறார்கள். 

அந்த பூர்வீக நூதனசாலைக்குள் ஆரம்பத்தில் நிறுவப்பட்டிருந்த உருவ பொம்மைகள் பல அப்பகுதியின் வாழ்வியல், பாரம்பரியம் மற்றும் பண்பாட்டையும் எடுத்துக் கூறுவதாகவே அமைந்திருந்தது. அதனை அப்போதே காணொளிப் பதிவாக உருவாக்கி இணையத்தில் நாம் வெளியிட்டிருந்ததோம். அதில் ஒரு பகுதியில் பெண்ணொருவர் காய்-கறி வியாபாரம் செய்வது போன்ற சித்தரிப்பும் அதேவேளை அக்கால 'டீக் கடை'யும் அளவளாவிக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் போன்ற சித்தரிப்புடனான உருவ பொம்மைகளும், இன்னும் சிங்கள மன்னனின் அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்கள் இருப்பது போன்ற சுவரோவி;யங்கள் கூட இருந்தன. இவற்றைப் பார்த்து யாருடைய ஈமானாவது கெட்டுப் போகுமோ இல்லையோ, ஆகக்குறைந்தது இவ்வாறான சித்தரிப்புகள் நீக்கப்படுவதன் ஊடாக அம்மண்ணில் உறுதியான செய்தியொன்று சொல்லப் பட்டதாகவே கொள்ள வேண்டியிருந்தது.

ஆதலால், உருவ பொம்மைகளே நிராகரிக்கப்பட்ட ஊரில் உயிருள்ள ஏழைப் பெண்கள், அன்றாட ஜீவனோபாயம் தேட தெருவோர வியாபாரம் செய்யும் நிலை காண்பின், மார்க்க – சமூகப் பற்றாளர்கள் வியாபாரப் பெருந்தகைகள் முந்திச் சென்று, ஏழைத் தாய்மார் சுய தொழிலில் ஈடுபட விரும்பினால் அதனை அவர்கள் வீடுகளிலிருந்தோ அல்லது கௌரவமாக ஒரு இடத்திலிருந்தோ செய்ய உதவி செய்து, அவர்கள் தெருவோரக் காட்சிப் பொருட்களாவதைத் தடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் எனக்கிருந்தது. ஆனாலும், அது தவறவிடப்பட்டு, அண்மையில், அப்பகுதியில் இவ்வாறு தெருவிலே பெண்கள் வெற்றிலை விற்பனையில் ஈடுபடுவது போன்ற படங்கள் சமூகவலைத்தளத்தில் பெருமையுடன் பரப்பப்பட்டு வந்தது. 

இதனைக் கண்ணுற்றுக் கவலையுற்று அதை நான் சுட்டிக்காட்டிய போது, அது காத்தான்குடி பெண்களில்லை ஏறாவூர் பெண்கள் என்ற ஊர்வாதமே அவ்வூரின் அரசியலில் ஈடுபடும் முக்கிய நபர் ஒருவரிடமிருந்து பதிலாகக் கிடைத்தது. இங்கு சமூக நீதி கேள்விக்குட்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாமல் போயிருந்தது கண்டு ஆச்சரியமாக இருந்தது. அது மாத்திரமன்றி, இக்கேள்வியானது ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் வாழும் என் போன்ற ஒரு நபர் தன் ஊர் மீது கொண்ட 'காழ்ப்புணர்வு' என வினோதமான வியாக்கியானத்தை முன் வைத்து சிந்திக்க மறுப்பதை அவர் நியாயப்படுத்தியும் கொண்டார்.

இவ்வாறு, சமூகத்தில் நாம் தவற விடும் - ஏற்றுக்கொள்ளும் விடயங்கள் யாவும் சுயநலம் சார்ந்திருக்கிறதேயன்றி பொதுநலம் குறைந்திருக்கிறது. ஆதலால் உணர்வோங்கலில் பொங்கியெழுந்து அவ்வப்போது நாமே பேசும் சமூகக் கட்டமைப்பின் அத்திவாரத்தை இன்னும் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு வாதத்திற்காக, பெண்கள் சுய தொழில் முயற்சியில் ஈடுபடக்கூடாதா? என்றும் கேள்வியெழலாம். அதில் தவறில்லை, அதில் மார்க்கத்தில் இடமிருக்கிறது. ஆனால், நாம் முழுமையாக இஸ்லாமியமயப்படுத்தி விட்டதாகப் பெருமை கொள்ளும் மண்ணில் இதற்கான வரையறை, ஒழுங்கு மற்றும் கண்ணியமான வழி முறைமையின் வழிகாட்டலின் அவசியம் பற்றிச் சிந்திக்க வேண்டியதும் நமது கடமையாகிறது என்பதே எனது நிலைப்பாடு.

சமூக – அரசியல் விவகாரங்களில் பொதுவாகவே எமது சமூகத்தின் செயற்பாடு ஒரு வகை உணர்வோங்கிய கொதி நிலையிலேயே நகர்ந்து கொண்டிருக்கிறது. 2011 – 2019 வரையான காலப்பகுதியில் இலங்கையில் முஸ்லிம்கள் முகங்கொடுத்து வரும் இனவாத சவால்களுக்கு யார் பொறுப்பாளி? அல்லது யார் மீது பொறுப்பை சாட்டலாம்? என்ற கேள்விக்கும்; சமூகத்தின் பதில்கள் பல வகைப்படும்.

இலங்கையில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் பொதுவாகவே அரசியலின் அடிப்படையில் தனக்கு இரண்டு தேர்வுகளை வைத்துக் கொண்டுள்ளான். ஒன்று, பிராந்திய ரீதியில் எந்தக் கட்சியை ஆதரிப்பது? இரண்டாவது தேசிய ரீதியில் எந்தக் கட்சியை ஆதரிப்பது? என்ற முடிவுகளே அவையாகும். ஜனநாயக சோசலிஷ குடியரசின் பிரஜையென்ற அடிப்படையில் ஒவ்வொரு தனி நபருக்கும் தாம் விரும்பும் கட்சியை, அரசியல் தலைவரை ஆதரிக்கும் வாக்களிக்கும் உரிமையுண்டு. அதனைத் தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆயினும் அதை ஒரு சமூகத்துக்குள்ளான போராட்டமாக மாற்றிக் கொள்வதனாலேயே விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன.

2014ம் ஆண்டு அளுத்கம வன்முறை இடம்பெறுவதற்கு சில மாதங்கள் முன்பாகவும், பின்னரும் பேருவளை பகுதியில் இரு வேறு குழு மோதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. இவ்விரு மோதல்களும் பெருந்தேசிய கட்சிகளின் ஆதரவாளர்களான முஸ்லிம்கள் மத்தியிலேயே தோன்றியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எனும் இரு அணிகளாக மோதிக் கொண்ட சமூகம் அப்போதைய அரசியல் உணர்வுக்குக் கொடுத்திருந்த முக்கியத்துவம் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற சமூகத்துக்கெதிரான வன்முறையை பிரதேசத்தில் காலாவதியாக்கியிருந்தது.

இது தவிரவும் நாட்டின் பல பாகங்களில் முக்கிய தேர்தல் காலங்களில் பல்வேறு சண்டை – சச்சரவுகள் கொலைச் சம்பவங்களும் முஸ்லிம் சமூகத்துக்குள்ளே இடம்பெற்றிருக்கிறது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கூட மலைநாட்டில் தனிப்பட்ட தகராறு ஒன்றின் பின்னணியில் ஒருவரை இன்னொருவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் இடம்பெற்றது.

இவ்வழியில் இப்போது சஜித்தா – கோட்டாபேவா என சூடாகிக் கொண்டிருக்கும் தேர்தல் களத்திலும் விரைவாக கொதிநிலையை அடைந்துள்ளது முஸ்லிம் சமூகமே என்பதை இச்சமூகத்தின் மனோவியல் மற்றும் கருத்தியலை ஆராய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். பொதுவாகவே கோட்டாபே ராஜபக்ச மீதிருக்கும் குற்றச்சாட்டுகள் மீதான அச்சம் ஒரு புறமிருக்க, இன்னொரு புறத்தில் அரசியல் ரீதியாக ஐக்கிய தேசியக் கட்சியூடாக எந்த நன்மையையும் அடைய முடியாது என்ற சிந்தனைப் போக்கும் வலுத்துள்ளது.

கடந்த நான்கரை வருடங்களாக முஸ்லிம் சமூகம் முகங்கொடுக்க நேர்ந்த சவால்களும் - மஹிந்த ஆட்சியின் போது இடம்பெற்ற ஒரேயொரு சம்பவமும் ஈடாகி விடுமா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. கிந்தொட்ட, அம்பாறை, திகன, குருநாகல், மினுவங்கொட என ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற தொடர் வன்முறைகளை எந்த கோணத்தில் பார்ப்பது என்பதில் பாரிய கருத்து வேறுபாடும் ஏட்டா – போட்டி நிலைமையும் காணப்படுகிறது.

முஸ்லிம்களின் வாக்குகள் இல்லாமல் யாரும் ஜனாதிபதியாக வர முடியாது என ஹிஸ்புல்லாஹ் கிழக்கில் வைத்துச் சொல்வதும், மலை நாட்டினரது ஆதரவில்லாது எவராலும் ஜனாதிபதியாக முடியாது என நவின் திசாநாயக்க நுவரெலியவில் இருந்து சொல்வதும், ரணில் என்ன முடிவெடுப்பது? நாமே களத்தில் இறங்குகிறோம் என பதுளையில் சஜித் பிரேமதாசவுக்காக ஹரின் பெர்னான்டோ பொதுக் கூட்டம் நடாத்துவதும், வசந்த சேனாநாயக்க அடிக்கடி கட்சி தாவுவதும், ஆட்சியதிகாரத்துக்கு ஆபத்து வரும் போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக உம்ரா செல்வதும் - பின் நாடு திரும்பி ஆளையாள் விமர்சிப்பதும் அரசியல் தெரிந்தவர்கள் ஆடும் பக்குவமான விளையாட்டு.

இந்த விளையாட்டை ஆடும் அவர்களுக்குள் இது குறித்த சிறந்த புரிந்துணர்வுண்டு. ஆதலால் முற்பகல் பேசி விட்டு பிற்பகல் ஒன்று கூடி அளவளாவிக் கொள்வார்கள். ஆனால் சமூக மட்;டத்தில் உருவாகும் அரசியல் பகையோ நிரந்தரமாகத் தொடர்கிறது. சில இடங்களில் அது தீராப் பகையாக ஒவ்வொரு தேர்தலின் போதும் புதுப்பிக்கப்படுகிறது. எப்போதும் சண்டைக் கோழிகளாக தயார் நிலையில் இருக்கும் இவ்வுணர்வோட்டம் இனவாத வன்முறைகளின் போது அடங்கிப் போவது இன்னொரு ஆச்சரியம். ஆயினும், தேர்தல் காலத்தில் மீளெழும், ஆளைக் கொல்லும், அடித்து நொறுக்கும் அல்லோலகல்லோலப்படும். ஆக மொத்தத்தில், அடி புடி ஓல் த பில்டிங் லெவல் த மட்டம் என்ற உணர்வுதான்.

தேர்தல் காலத்தில் இடம்பெறும் குத்பா பிரசங்கங்களில் இது பற்றிச் சுட்டிக்காட்டப்படுகிறதா? மார்க்கத் தலைமைகள் மக்களிடம் இது பற்றிப் பேசுகிறார்களா? என்று பல வருடங்களாக தேடிக் கொண்டிருக்கிறேன். இவ்வருடம் முன் கூட்டியே நினைவூட்டிப் பார்க்கலாம் என்றும் நப்பாசை. மறுபுறத்தில் அரசியல் தலைவர்கள் இதைப் பற்றி ஏன் பேசுவதில்லையென்ற கேள்விக்கு அரசியல் என்பது நேரடி பதில் என்பதால் அதைப் பேசியும் பயனில்லையென்றாகிறது. அவ்வாறாயின், சிந்திக்க வேண்டிய கடமை யாருக்கு இருக்கிறது? என்ற கேள்வி ஒவ்வொரு தனி நபர் சார்ந்ததாகி விடுகிறது.

கட்சி ஆதரவு – குறித்த அரசியல்வாதி மீதான ஆதரவு போன்றவை நிலைப்பாடுகளேயன்றி நிலையானவையன்று. 2014 டிசம்பர் வரை பொலன்நறுவ மக்களின் பிரதிநிதிகளுள் ஒருவராக மாத்திரமே இருந்த மைத்ரியைப் பற்றி அறிந்தும் அறியாமலும் அவரை ஜனாதிபதியாக்கியே தீர வேண்டும் என எழுந்த அன்றைய உணர்வலையை இன்று மேர்வின் சில்வா வழியில் மரத்தில் கட்டி வைத்துப் புகட்டினாலும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை. ஆக, அந்த நிலைப்பாடு மாறி விட்டது. அன்றைய நிலைப்பாடுகளும் கூட ஏதோ ஒரு வகையான எதிர்பார்ப்புடன் உருவானதென்பதால் ஏமாற்றம் இன்றைய நிலைப்பாட்டின் அடிப்படையாக மாறிக் கொள்கிறது.

அதையும் தாண்டிய உண்மையொன்றையும் நாம் கூர்ந்து அவதானிக்கக் கடமைப்படுகிறோம். அதாவது 2014 வரை இடம்பெற்றது சர்வாதிகார ஆட்சியென முடிவெடுத்த மக்கள், ஒட்டு மொத்தமாகத் திரண்டெழுந்து நாட்டை ஜனநாயக வழிக்குத் திருப்ப வேண்டும் என்று உழைத்தார்கள். ஆனால், ஆட்சி மாற்றம் நடந்து ஓரிரு நாட்களுக்குள்ளேயே அவனைப் பிடித்து சிறையில் அடை, இவனுக்கு மரண தண்டனை கொடு என்று உணர்வோங்கப் பேச ஆரம்பித்து விட்டார்கள். அதாவது, ஒரு சர்வாதிகாரியைப் பதவியிறக்கி மீண்டும் மக்கள் எதிர்பார்த்தது இன்னொரு வகையிலான சர்வாதிகாரமே. குற்றம் நிரூபிக்கப்படாத வரை ஒருவன் நிரபராதியே என்ற அடிப்படையில் சிந்திக்க நேரமில்லாத சமூகம் தமக்கு ஊட்டப்பட்ட உணர்வுகளின் அடிப்படையில், விசாரணைகளற்ற உடனடி தண்டனையையே வேண்டி நின்றது, ஈற்றில் ஏமாந்து போனதாகவும் தற்காலத்தில் உணர்கிறது.

இப்பேற்பட்ட சமூகத்தை இன்றும் உணர்வூட்டுவது கடினமான காரியமன்று, அதனை எவ்வழியில் செய்தால் தமது கைகளில் கறை படியாது என்பதை அரசியல்வாதிகள் நன்கறிந்து வைத்திருப்பார்கள் என்பதால் அடி மட்டத் தொண்டர்களே அவசர பலியாடுகளாவார்கள். சற்றே நிதானித்துப் பார்த்தால் ஒவ்வொரு தினமும் யாரோ ஒருவரால் அல்லது ஏதோ ஒரு சம்பவத்தால் குறிப்பாக முஸ்லிம் சமூகம் கொதி நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது ஞானசாரவாகத்தான் இருக்க வேண்டும் என்பது எந்தக் கட்டாயமுமில்லை, அவர்களல்லாத மற்றவர்கள் எல்லோரும் புனிதர்கள் என்ற அர்த்தமும் இல்லை.

நிதானம் - அவசியம்!

wjR0LbU

- Irfan Iqbal
Chief Editor, Sonakar.com
https://www.facebook.com/irfaninweb


No comments:

Post a Comment