அச்சம் - அடக்கம் - அத்துமீறல்! - sonakar.com

Post Top Ad

Sunday 2 June 2019

அச்சம் - அடக்கம் - அத்துமீறல்!


நூற்றாண்டு காலங்கள் எம் முன்னோர் தம் நற்செயல்களாலும் சாணக்கியத்தாலும் எம் சமூகத்தின் தனித்துவத்தை நிலைநிறுத்திப் பெற்றுக்கொண்ட பல்வேறு சலுகைகளும் உரிமைகளும் இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

பாரம்பரியமாக அனுபவித்து வந்த சலுகைகளைக் கூட ஒரு கட்டத்தில் சட்டபூர்வமானதாக மாற்றிக்கொள்ள எம் முன்னோர்கள் முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார்கள். 1806ம் ஆண்டளவிலேயே அப்போதைய ஆட்சியளர்கள் சோனக சமூகத்துக்கான பிரத்யேக சட்டங்களை அங்கீகரித்தார்கள். 

இந்த சட்டங்கள் ஊடாக முஸ்லிம்கள் தாம் பெற்றுக்கொண்ட சிறப்புரிமைகளை மிகக் கவனமாகவும் தெளிவாகவும் அறிந்து பயன்பெற்றார்கள். இலங்கை அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திர நாடாக மாறிய பின்னரும் கூட இது தொடர்ந்தது.

அக்காலப் பகுதியிலம் இனவாதமும் முஸ்லிம் விரோதப் போக்கும் வளர்ந்திருந்ததை 1915 வன்முறையிலிருந்து கற்றுக்கொள்ளலாம். தொடர் நெருக்கடிகளை சந்தித்த போதிலும் ஆட்சிபீடத்தில் தமது தனித்துவமான ஆளுமையை நிறுவியதன் ஊடாக தமது சமூக விவகாரங்களைக் காப்பாற்றி வந்தார்கள் அக்காலத் தலைவர்கள்.

இலங்கை இன மையக் கொள்கையின் அடிப்படையிலான அரசியல் நோக்கி நகர்ந்த போது நிலைமை மாறியது. எனினும், கல்வியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட நிர்வாகமொன்றில் நெருக்கடிகளைத் தாண்டிய நம்பிக்கையிருந்ததனால் சிறுபான்மை சமூகமாக ஒதுக்கப்படும் நிலை முஸ்லிம்களால் உணரப்படவில்லை.

தமிழ் சமூகம் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த போது எம்மில் ஒரு சாரார் அதைத் தமக்கானது என உணர ஆரம்பித்திருந்தார்கள். அந்த உரிமைப் போராட்டத்தில் சேர்ந்தியங்கினார்கள். அது ஆயுதப் போராட்டமாக மாறிய போது தனிப்பிரிவினை கோசம் தமக்கானதில்லையென அதிலொரு சாரார் முடிவெடுக்க, மேலும் சிலர் தொடர்ந்தும் இணைந்தியங்கி, இன்னுயிரையும் இழக்கலானார்கள்.

ஈற்றில், 1990களில்; அந்த நம்பிக்கை முழுமையாக வீணடிக்கப்பட்டு, முஸ்லிம் சமூகத்தின் மீது அதே ஆயுதப் போராட்டம் கோரத் தாண்டவம் ஆடிய போது தமது அரசியல் முனையைக் கூர்மைப்படுத்திக் கொள்ள விளைந்த சமூகம், உணர்வுபூர்வமாக அரசியல் போராட்டக் களத்தில் குதித்தது.

இந்தப் போராட்டத்தின் அளவும் ஆழமும் உணரப்பட்டதை விட அதன் உணர்வு ரீதியான வீச்சு மிக வேகமாக வளர்ச்சி பெற்றது. ஈற்றில், அரசியல் ரீதியான போராட்டத்தின் ஊடாகவே எமது உரிமைகளை பாதுகாக்க முடியும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்த சமூகம் இன ரீதியான அரசியலை தாமும் அங்கீகரித்துக்கொண்டது.

இதில் இரு கேள்விகள் உள்ளன. ஏலவே இன மையக் கொள்கையடிப்படையிலான அரசியலால் கட்டியிழுத்துச் செல்லப்படும் இலங்கை அரசியலில் அதனூடே இசைந்து செல்வதா? எதிர்ப்பாதையில் செல்வதா? என்பனவே அவை.

முஸ்லிம் அரசியல் தம்மை இணக்கப்பாட்டு விற்பன்னர்களாகக் காட்டிக்கொண்டது. ஆதலால், எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும் அதில் பங்கெடுத்து, நாளடைவில் பதவிகளையே குறிக்கோளாகக் கொண்ட வெற்று அரசியலாக இன்றளவில் அது மாறிவிட்டது.

முஸ்லிம் உரிமை, முஸ்லிம் சுயநிர்ணயம், முஸ்லிம் தேசம் என கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வெற்றுக் கோசங்கள் எல்லாம் இன்று துகிலுரிந்து, நிர்வாணப்பட்டு, அசிங்கப் பட்டுப் போயிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை அரசியல் ரீதியாக வென்றெடுக்கப்போவதாக போட்ட வெற்றுக் கோசங்களும் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்க முடியாமல் துவண்டு கிடக்கிறது.

இப்போது, இனி யார்? என்ற கேள்விக்கு விடை தேடி மக்கள் உள்ளம் அலை மோதிக் கொண்டிருக்கிறது. யார் வந்து குரல் கொடுப்பார்? யார் நமக்காகப் பேசுவார்? என்று தேடிக்கொண்டிருக்கும் சமூகம் தற்காலிகமாக தம் பகைமை மறந்து அவ்வாறு ஒருவர் பேசிவிட்டால் அவரைத் தலையில் தூக்கிக் கொண்டாடுகிறது.

நல்லது, எவர் பேசி இங்கு என்னாகிறது? என்ற கேள்வியே முக்கியம் பெறுகிறது. அவசரகால சட்டத்தினை நன்கு பயன்படுத்திக் கொண்டு வரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, அதனை அடுத்த மாதமாவது நீக்குவாரா? இல்லையா? என்பது விடையறியாக் கேள்வி. அல்லது அதனை நீட்டிப்பதற்கு எது அவசியமோ அதை செய்வதற்கு அரசியல் தயங்குமா? என்பது வரையறுத்து விடை கூற முடியாத கேள்வி.

இரு வாரங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர், நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி லண்டன் வந்திருந்தார். அங்;கு கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றுகையில், நாட்டில் தற்போதிருக்கும் சூழ்நிலையில், ஏதோ ஒரு வழியில் ஜனாதிபதி தேர்தலையும், மாகாண சபைகளுக்கான தேர்தலையும் நடாத்தினால் அதுவே தற்காலத்தில் ஜனநாயகத்துக்குக் கிடைக்கும் மாபெரும் வெற்றியெனக் கூறி பெருமூச்சு விட்டிருந்தார்.

ஆக, தேர்தல்களைப் பின்போடுவதற்கு அரசியல் எவ்வகையான காரணத்தை வேண்டுமானாலும் தேடும் என்பதையே உணரக் கிடைக்கிறது. தவிரவும், அதுவே இன்றைய பயங்கரமான அரசியல் சூழ்நிலையின் முதலீடாகவும் காணக்கிடைக்கிறது.

மினுவங்கொட, நாத்தாண்டிய பகுதிகளில் இம்மாதம் 12-13ம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல்வாதிகளின் ஈடுபாடு இருப்பதாக பலத்த சந்தேகம் நிலவிக்கொண்டிருக்கிறது. மினுவங்கொட சம்பவத்தின் போது அங்கு கால்நடையாகச் சென்று கொண்டிருந்த பிவிதுரு ஹெல உறுமயவின் முக்கியஸ்தர் மது மாதவ அரவிந்த அங்கு என்ன நடந்தது என தெரியவே தெரியாது என சாதிக்க, நாத்தாண்டிய பகுதியில் வன்முறையைத் தூண்டிய பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் உப்புல் ஹேரத் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் திகன வன்முறையின் சூத்திரதாரிகள் என லண்டனில் வைத்து ஜனாதிபதியால் நேரடியாகவே பெயர் குறிப்பிடப்பட்ட திலும் அமுனுகம மற்றும் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராகவும் காத்திரமான சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை, இன வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டில் கடந்த வருடமும் சிறை சென்று பிணையி;ல் மீண்ட அமித் வீரசிங்க இம்முறையும் கைது செய்யப்பட்டதிலிருந்து கைதுகளும் - தண்டனைகளும் கற்றுத்தந்து கொண்டிருக்கும் பாடங்கள் என்ன? என்பதும் கேட்கப்பட வேண்டிய கேள்வி.

இன்னொரு கருப்பு ஜுலை வேண்டாம் என மஹிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுக்கும் போது, 83 கண் முன் வந்து செல்கிறது. அளுத்கமயில் ஆரம்பித்து சிலாபம், மினுவங்கொட, குளியாபிட்டிய, கொட்டம்பிட்டிய, கொட்டரமுல்ல என அனைத்து இடங்களில் கட்டி வைத்து அடிக்கப்படும் சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள முஸ்லிம் சமூகத்தின் நிலைமை தவணை முறையில் அதனை ஞாபகப்படுத்திக் கொண்டே செல்கிறது. 

ஈஸ்டர் தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென முஸ்லிம் சமூகம் இனியும் எந்த வகையில் நிரூபிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெளிவில்லை. ஆனாலும், வீடுகளில் மௌலூது கிதாபு, அல்-குர்ஆன் விளக்கவுரைகள் வைத்திருப்பவர்களும் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஞானசாரவின், அமித் வீரசிங்கவின், டான் பிரியசாத்தின் வெறுப்பூட்டலை அவதானித்துக்கொண்டிருந்த அதேவேளை சமூகத்திற்குள் விரிவடைந்த கடும்போக்கை முஸ்லிம் சமூகம் கண்டறியத் தவறியது. இந்நிலையில், இன்று திடீரென வேகமாகப் பின் நோக்கி நகர்ந்து, தம்மை நல்லவர்கள் இந்த நாட்டின் நற்பிரஜைகள் என நிரூபிக்க எல்லை கடந்து செயற்படுகிறது.

இதன் உச்சகட்டமாக 29-05-2019 அன்று கெக்கிராவ, மடாட்டுகமவில் தௌஹீத் பெயரில் இயங்கி வந்த பள்ளிவாசலை எம்மவரே இடித்துத் தம் சமூக – நாட்டுப்பற்றைக் காட்டியிருக்கிறார்கள். 2011ம் ஆண்டு அநுராதபுரத்தில் சியாரமொன்றை அண்டியிருந்த சுமார் 400 – 500 வருடங்கள் பழமை வாய்ந்த கட்டிடமொன்று இடித்துத் தகர்க்கப்பட்ட போது 'அநுராதபுரம் .. எதற்கான ஆரம்பம்?' என கட்டுரையொன்றை வரைந்திருந்தேன்.

அப்போது பல விதமான மாற்றுக்கருத்துக்கள் முன் வைக்கப்பட்டிருந்தது. சியாரம் தானே அது உடைக்கப்பட்டால் என்ன? என கேள்வியெழுப்பப்பட்டது. அது முன்னோட்டம்; என்பதை அடுத்தடுத்த வருடங்களில் எம் சமூகம் உணர்ந்து கொண்டாலும் அது தாமதமான புரிந்துணர்வு என்பதால் நிகழ்கால சூழ்நிலைக்கு முகங்கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. 

அக்காலப் பகுதியில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரை முஸ்லிம்குரல் வானொலி நிகழ்ச்சிக்காகத் தொடர்பு கொண்டு இச்சம்பவம் பற்றி வினவிய போது, தனக்கு அது பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லையென்றார். யாரும் சொல்லித் தான் நீங்கள் தலையிட வேண்டுமா? என வினவிய போது, நாட்டின் சூழ்நிலையைத் தவறாக சித்தரிக்க வேண்டாம், மத்திய கிழக்கிலிருந்து வரும் நண்பர்கள் கூட, இலங்கை என்ன அரபு நாடா? என கேட்கும் அளவுக்கு தெருவுக்குத் தெரு பள்ளிவாசல்களும், வானொலியில் பாங்கோசையும் கேட்கிறது என பெருமையாகப் பதிலளித்தார்.

இதே நபர், இன்று சுற்றி வர அரசியல் அழுத்தத்துக்கு முகங்கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், அவரது தனிப்பட்ட விவகாரங்களுக்கும் சமூகம் பொறுப்பேற்றாக வேண்டிய சூழ்நிலை நிர்ப்பந்தத்தை விதைக்கும் கைங்கரியமும் பிரச்சார அளவில் இடம்பெற்று வருகிறது.

அதேவேளை, தாமே சிறந்த அரசியல் சாணக்கியன் எனத் தம் ஆதரவாளர்களை நம்ப வைத்துள்ள தலைவரின் சீடர்கள், நீதி மன்ற அவமதிப்பில் பொது பல சேனா ஞானசார சிறையிலடைக்கப்பட்டதும் தமது தலைவரின் சாணக்கியமான செயல் என வெட்கங்கெட்டுப் பேசும் அளவுக்கு நிலைமை உள்ளது.

வெளியே வந்த ஞானசாரவோ, வஹாபிசம் பற்றி இதுவரை இருந்த புரிதல்களை இன்னொரு கோணத்தில் புள்ளிவிபரத்தோடு பேச ஆரம்பித்துள்ளதுடன் சிங்கள சமூகத்தின் மத்தியில் மீண்டும் நச்சுக் கருத்துக்களை விதைத்து வருவதை அவதானிக்க முடிகிறது. இதனைத் தடுக்க முடியாமல் இந்த சாணக்கியர்கள் எந்த நாட்டில் அரசியல் செய்கிறார்கள் என்று அவர்களது தொண்டர்களுக்கும் தெரியாது.

ஆக, சுற்றி வளைத்து நெருக்குதலுக்குள்ளாகியிருக்கும் சமூகத்திடம் இயற்கையான அச்சமும் அடக்கமும் சூழ்ந்து கொண்டுள்ளது. அதேவேளை, அடுத்தவரை விரல்காட்டித் தம்மை நல்லவராக்கும் முயற்சிகளையும் எம் சமூகம், இப்பேற்பட்ட சந்தர்ப்பத்திலும் கைவிடவில்லை. ஆதலால், ஆளாளுக்கு ஜமாத்து வாதமும் பேசித் திரிகிறார்கள், ஒட்டுமொத்தத்தில் தலைமைத்துவம் இன்றித் தவிக்கும் நிலையில் திரும்பும் பக்கமெல்லாம் அழுத்தத்தை சந்திக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்னோர் வகையில், நமக்குள் நாமே பேசித் தீர்த்து முடிவு காண வேண்டிய விடயங்களை மார்க்கத்தைக் கடுமையாக்கிக் கொண்டுள்ள காரணத்தினால் வருடக்கணக்கில் இழுபறிக்குள்ளாக்கியிருக்கும் நாம், இன்றைய சூழலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரடியாக வந்து முஸ்லிம் பெண்களின் திருமண வயது 18 என சத்தமாக அறிவித்தும் ஓசையின்றி அடங்கிக் கிடக்கிறோம். 

இத்தனைக்கும் 2009ம் ஆண்டு முஸ்லிம் தனியார் சட்டத்தினை மீளாய்வுக்குட்படுத்தி குறித்த விவகாரத்தில் மாற்றத்தைக் கொண்டு வர நியமிக்கப்பட்டிருந்த 'சிறப்புக்' குழு, ஒன்பது வருடங்களாக ஒரு முடிவைக் காண முடியாமல் முண்டியடித்து இரு பிரிவுகளாக பிரிந்து நின்றதும் அறிக்கைகள் விட்டதும் தான் மிச்சம்.

இவ்வாறு, ஒரேயொரு தடவை திரும்பிப் பார்த்தாலும் வெட்கித் தலைகுனியும் அளவு செயற்பாடுகளைக் கொண்டுள்ள இச்சமூகத்திற்குள் பிரிவினை எத்தனை தூரம் வேரூன்றியிருக்கிறது என்பதைக் காலம் எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது.

இலங்கை சமூகத்தின் எதிர்காலத்தை மத்திய கிழக்கு அரசியலைக் கொண்டு நிர்ணயிக்கவும், வழி மாற்றவும் முயன்ற சக்திகள் இன்று தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ளப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஞானசார தோன்றிச் சொல்லும் புள்விபரங்கள் பல முஸ்லிம்களையே ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அரபுக்கலாசாலைகளின் ஏக உரிமையைக் கொண்டாடி ஏனையோரை முஸ்லிம்களாகவே ஏற்க மறுக்கும் கூட்டம் சரணடையத் திணறிக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம்களுக்கு  எதிராக உருவாகியிருக்கும் இவ்வழுத்த சூழ்நிலையை எச்சரிக்கைக் கோணத்தில் பார்க்கும் தமிழ் சமூகத்தின் ஜனநாயக சக்திகள் தமது கடந்த கால வரலாற்றை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்க, கருத்தியல் ரீதியாக முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தவும் காட்டேறிகளாகச் சித்தரிக்கவும் தமிழ் ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் மும்முனை அரசியலில் எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆபத்து எனும் அடிப்படையில் அத்துமீறல்களை எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாது முடங்கிப் போயுள்ளது சமூகம்.

நல்லவர் யார்? கெட்டவர் யார்? என பிரித்தறிய முடியாத சூழ்நிலையில், ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் நாலா திசையிலிருந்தும் தாக்கிக் கொண்டிருக்கிறது அரசியல். அந்த அரசியலினூடாக ஈற்றில் பயனடையப் போவது யார் என்பது தேர்தல் நெருங்கும் வரை அனுமானிக்க முடியாத ஒன்று. ஆனாலும் ஒவ்வொருவர் மௌனத்தின் பின்னும் ஆபத்து காத்துக்கிடக்கிறது எனும் அடிப்படையில் சமூகம் விழிப்புடன் இருக்கவும், திறந்த மனதுடன் - ஒற்றுமையுடன் தூர நோக்க சிந்தனையுடன் ஒன்று படும் தேவையும் காலத்தின் கட்டாயமாக உணரப்படுகிறது.


2ld3lJX

- Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment