நான்... நாம்...அவர்கள்.. இவர்கள்! - sonakar.com

Post Top Ad

Sunday, 26 May 2019

நான்... நாம்...அவர்கள்.. இவர்கள்!


20ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு ஒரேயொரு அடையாளமே இருந்தது. இன ரீதியாக சோனகர் என்ற அடையாளமே அது. நாளடைவில் 1915 வன்முறைகளின் பின் மத ரீதியிலான அடையாளத்தை முற்படுத்துவதே சிறந்ததென அக்காலத் தலைவர்கள் கருதியதால் இஸ்லாமியர்களாக வாழும் சோனகர், மலேயர், போரா, மேமன் சமூகங்களை ஒன்றிணைத்து 'முஸ்லிம்களாக' அடையாளப்படுத்துவது நன்மையளிக்கும் என பரவலாக கருதப்பட்டிருந்தது.இதுவும் முழுமையாக சமூக மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லையாயினும் அரசியல் ஆளுமை மிக்கவர்கள் முன் வைத்த இக்கருத்தில் பிரதானமாக கொழும்பு வர்த்தக சமூகத்தின் மத்தியில் வரவேற்பிருந்தது. ஆதலால் சமய ரீதியில் தம்மை முஸ்லிம்களாக அடையாளப்படுத்திக் கொள்வதில் ஒரு புறத்தில் இணக்கப்பாடும் காணப்பட்டது.

எனினும், மலே, போரா, மேமன் சமூகங்கள் தமது சமூகப் பாரம்பரியங்களைத் தொடர்ந்தும் கைவிடாமல் பின்பற்றி வந்த அதேவேளை பிரதான நீரோட்டத்தில் சோனகர்களுடன் கலந்து வாழ்ந்தனர். குறிப்பாக மலே சமூகத்தினர் திருமணம் மற்றும் வாழ்வியலில் சோனகர்களுடன் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், 1970 களின் பின் சோனக சமூகத்தின் மத்தியில் ஊடுருவிய வெளிநாட்டு கலாச்சாரங்கள் இச்சமூகத்துக்குள் நான் .. நீ .. அவர்கள் .. இவர்கள் எனும் பிரிவினைகளை உருவாக்கியது.

வெளிநாட்டு கொள்கை இயக்கங்களின் வரவு சமூகத்தின் எந்தக் கூறைக் கவர்ந்ததோ அந்தக் கூறு அடுத்தவரை எதிரியாகவும், தம்மில் சாராதவராகவும் பார்க்க ஆரம்பித்தது மாத்திரமன்றி தாம் மாத்திரமே சரியான இஸ்லாத்தைப் பினபற்றும் 'உண்மையான' முஸ்லிம்கள் என்ற மேன்மைவாதத்தையும் விதைத்தது.

இப்பின்னணியில், காலாகாலமாக இலங்கை முஸ்லிம்களை மார்க்க ரீதியாக வழி நடாத்திய சூபித்துவ கொள்கைச் சித்தார்ந்தங்கள் தொடர்பில் கேள்விகள் எழுந்ததோடு, பல மூட நம்பிக்கைகள் மறுதலிக்கப்பட்டது. திராவிட கலாச்சாரக் கலப்புடன் இலங்கைக்குள் இந்தியா வழியாக புகுத்தப்பட்டு, பல நூற்றாண்டு காலமாக மார்;க்கத்தின் பெயரில் பின்பற்றப்பட்டு வந்த பல்வேறு விடயங்கள் மீளாய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய தேவை இக்காலத்தில் உணரப்பட்டது. உணர்ந்தவர்கள் மாற்று வழியை நாடவும் உணர மறுத்தவர்கள் பிடிவாதமாய் இருக்கவும் கூட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

இதேவேளை, சர்வதேச முஸ்லிம் உம்மத்தினை மையமாக வைத்து இலங்கை சமூகத்துக்குள் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட முஸ்லிம் உணர்வும் ஒரு புறத்தில் வளர்ந்தது. இதில் தம்மை உள்வாங்கிக் கொண்டவர்கள் தாம் வாழும் மன்ணின் சமூக விவகாரங்களை விட மத்திய கிழக்கு அரபு நாடுகளின் உள்ளக அரசியல் விவகாரங்களுக்கு எதிர்வினையாற்றவும் ஆயத வழி போராட்டங்களை ஆதரிக்கவும் அபிப்பிராய வாத விவாதங்களை உருவாக்கவும் செய்தனர்.

சமய ஆய்வினூடாக தெளிவூட்டல்களை மேற்கொள்ளக் கிளம்பியதாகக் கூறிய பிறிதொரு குழுவினர் தொழுகை முறை, ஆடைக்கலாச்சாரம், சமூகவியலில் சிலவேளைகளில் வேகமான மாற்றங்களையும் ஆக்ரோசமான வழிமுறைகளையும் உட்புகுத்தலாயினர். மேலும் ஒரு பிரிவினர் சமய வாழ்வினை பிறிதொரு அடையாளப்படுத்தலுக்குட்படுத்தி தம்மைச் சார்ந்தோர், சாராதோர் எனும் பிரிவினையை உண்டாக்கியது.

இவ்வாறு கடந்த நாற்பது வருடங்களாக நமக்குள் நான் .. நாம்.. அவர்கள்.. இவர்கள் எனும் பிரிவினை மிக வலுவாக வளர்ந்துள்ளது. இதற்கு நாம் ஒவ்வொருவரும் காரணமாக இருக்கிறோம். நமக்குள் ஜமாஅத் பிரிவினைகளை வளர்த்துக்கொள்ளவும் அது சார்ந்து இருக்கவும் அதற்குள்ளேயே திருமண பந்தங்களை உருவாக்கவும் அதனூடாக பிரதான சமூக நீரோட்டத்தை பிளவுபடுத்தவும் ஒவ்வொருவரும் காரணமாகினோம்.

இன்றும், நம்மில் ஒவ்வொருவரும் தல்பீக், ஜமாத்தே இஸ்லாமி, தௌஹீத், தரீக்கா, தைக்கியா என ஏதோ ஒரு சமூகக் கூறாகவே காணப்படுகிறோம். தற்போது நாடு எதிர்நோக்கும் பிரச்சினையை ஒன்றிணைந்து வெல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் கூட, எம்மோடு இணைந்து கொள்ளுங்கள் அதனூடாக மற்றவர்களை நிராகரியுங்கள் என்ற கோசம் தான் வலுவாக முன் வைக்கப்படுகிறது.

பள்ளிவாசல்களை ஒட்டியமைந்திருந்த சியாரங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அவற்றைத் திறவுங்கள், பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்புங்கள் என ஒரு பிரிவு தெரிவிக்கிறது. இன்னொரு பிரிவு, நாம் இலங்கையர்களாக இருப்பதற்குத் தடையாக இருக்கும் போதனைகளை தடுக்க வேண்டும் என்கிறது. மேலும் ஒரு பிரிவு, நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட அடையாளமும் ஆடைக்கலாச்சாரமும் இனி வேண்டாம் என்கிறது. அதையும் தாண்டிய நிலையில் சகவாழ்வின் எல்லை எதுவென்ற குழப்பத்தில் மிகுதித்தரப்பு தவிக்கிறது.

இந்நிலையில், நம்மைச் சூழ்ந்திருக்கும் பிரச்சினைக்கு ஒற்றுமையாக பதில் காணமுடியுமா? அவ்வாறாயின் அது என்ன? என்ற கேள்விக்கும் விடை தேவைப்படுகிறது. 

இலங்கையில் சோனகர்களின் இருப்பு பூரணப்படுத்தப்பட்ட இஸ்லாத்துக்கும் முற்பட்டது என்பதை நவமணியில் 2019 ஜனவரி வரை வெளியான 'யார் இந்த இலங்கை முஸ்லிம்கள்' எனும் 100 வார தொடர் அலசித் தெளிவுபடுத்தியிருந்தது. அதில் 'முஸ்லிம்' அடையாளத்துடன் நாம் ஆகக்குறைந்தது 1300 வருடங்களாக இம்மண்ணில் வாழ்கிறோம், ஆனாலும் அந்த சமய அடையாளம் 1915ற்குப் பின்னரே அரசியல் மயப்படுத்தப்பட்டது என்பதும் தெளிவானது. இப்போது நம் பிரச்சினையெல்லாம் நமக்குள் இருக்கும் கொள்கைப் பிரிவினைகளுக்கப்பால் 'முஸ்லிம்களாக' நாம் வாழ்வதெப்படி என்பதுதான்.

யார் உண்மையான முஸ்லிம் என்ற கேள்வி இச்சமூகத்துக்குள் ஊடுருவிய கடந்த 40 வருட கால வரலாறு இன்று நமக்கு உருவாக்கித் தந்திருக்கும் வேதனையான சூழ்நிலையிலிருந்து விடுபட நமக்கு இருக்கும் மிகத் தெளிவான தெரிவு ஏக இறைவனை வணங்கி வழிபடும் அனைவரையும் சகோதரர்களாக பார்த்துப் பழகி வாழும் கலாச்சாரத்துக்கு மீள்வதுதான்.
இதற்கு நமக்குத் தடையாக இருப்பது கொள்கைப் பிரவினைகள் தான் என்ற ரீதியில், அதனை விலக்கி வைப்பதே நமக்கு சிறந்த தெரிவாக இருக்கிறது. மாறாக இருக்கும் குழப்பத்தில் யாரோ ஒரு குழு இதில் நன்மையடைய முயற்சிப்பது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு வழி வகுக்காது. சரி, அவ்வாறே ஒற்றுமைப்பட்டு விட்டாலும் எதிர்காலத்திலே இலங்கை முஸ்லிம்கள் எவ்வழியைப் பின்பற்ற வேண்டும்? தரீக்காவா, தப்லீக்கா, ஜமாத்தே இஸ்லாமியா? தௌஹீதா? எனும் கேள்வி மீண்டும் முன் நிற்கும்.

இதற்கான கூட்டுப் பொறுப்பை அனைத்து ஜமாத்துகளையம் சார்ந்த உலமாக்கள் பொறுப்பேற்று, கற்றுத் தேர்ந்தவர்கள் என்ற ரீதியில் தமக்குள் பேசித் தீர்த்து, ஆராய்ந்து, இணக்கப்பாட்டை எட்டி அதனை மக்களுக்கு எத்தி வைக்க வேண்டும். நமக்குள் ஊசலாடும் உணர்வுகளை மெதுவாகவும் வேகமாகவும் கூட கையளாலாம். சில வேளைகளில் பொறுமை அவசியப்படுகிறது. ஆனாலும் அதீத பொறுமை தொடர்ச்சியான வேதனையையே தந்திருக்கிறது.

ஆதலால், ஒரு கால வரையறையினை முன் வைத்து, சகல தரப்பு உலமாக்களும் ஒன்றிணைந்த தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், சந்திப்புகள், கேள்வி – பதில்கள் மூலம் இலங்கை முஸ்லிம்களுக்கான எதிர்கால சமய வழிமுறைகளை நெறிப்படுத்த வேண்டும்.

இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலானோருக்கு அல்-குர்ஆனை ஓதத் தெரியும். ஆனால், நவீன யுகத்தை எதிர்கொள்ள அது மாத்திரம் போதுமானதாக இல்லை. பெரும்பாலான அரபு கல்லூரிகள் அல்-குர்ஆனை மனனம் செய்தல் மற்றும் கற்றுக்கொடுத்தல் போன்ற செயற்பாட்டுடன் தம்மை வரையறுத்துக் கொண்ட காலம் போய் நவீன உலகத்துக்குத் தேவையான பாடத்திட்டங்களையும் இணைத்து வருகின்றன. இது முன்னேற்றகரமான முடிவு. ஆனாலும், ஒட்டு மொத்தமாகவே பாடசாலைக் கல்வியின்றி மத்ரசா கற்கையை நாடும் சிறார்களுக்கு அதற்கேற்ற வழிமுறை தேவைப்படுகிறது.

அந்த வகையில் இலங்கையில் இயங்கும் மத்ரசாக்களை கல்வி அமைச்சின் ஊடாக நெறிப்படுத்தி பொதுவான பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கிக் கொள்வதிலும் அதனூடாக செயற்படுவதிலும் தவறிருக்கப் போவதில்லை. ஆயினும், நமது விவகாரத்தை வேறு யாரும் கட்டுப்படுத்துவதா? எனும் எமது உணர்வுக்கு அது பதிலாக இருக்கது.

ஆகையால், நமது கேள்விகளின் தன்மையையும் - உணர்வுகளையும் மதிப்படவும் அதைக் கொண்டு செயற்படும் போது சிறுபான்மை சமூகமாக, கௌரவ குடிகளாக நாமும் நமது சந்ததியினரும் நிலைத்திருப்பதற்கும் தேவையான அணுகுமுறைகளும் அவசியப்படுகிறது.

ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் ஒவ்வொரு முஸ்லிமையும் பாதித்தது. இன்னும் யாரும் முழுமையாக விடுபடவில்லை. இந்நிலையில் நமது உணர்வுகள் அல்லோலகல்லோலப்படுகின்றன. ஆனால், சாதாரண நாட்களில் அது அளவுக்கு அதிகமாக மேலோங்கி தூர நோக்கற்ற நிலையையும் அடைகிறது.

இன்று நமக்குத் தேவை வந்திருக்கிறது எனும் அடிப்படையில் அமைதியாக இருந்து சிந்திக்க விளைந்தாலும் நான்கு மாதங்களுக்கு முன் அனைத்து அரபுக் கல்லூரிகளையும் வக்பு சபையின் கீழ் கொண்டுவருவதற்கு முஸ்லிம் விவகார அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி எவ்வகையான விளைவினைத் தந்தது என சற்றே பின்நோக்கிப் பார்த்தால் நாம் எவ்வாறு உணர்ச்சிமயப்படுகிறோம் என்பது தெளிவாகும்.

நான்கு மாதங்களுக்கு முன்னர் இதில் கூட இணக்கம் காண முடியாமல் முரண்பட்டிருந்த நம்மில் ஒரு பகுதியினர் இன்று புர்காவை, தொப்பியை, வெளிநாட்டு ஆடைக்கலாச்சாரத்தை விட்டு விடவும், சகோதரத்துவத்தை – நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாகக் கூறி சில இடங்களில் எல்லை மீறிய அச்சத்தையும் கூட வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றுவதைத் தவிர்த்து தூர நோக்குடனான சமூகமாக நாம் உருவாகாத விடத்து நமக்குள்ளான பிளவுகளை உபயோகித்து ஒட்டு மொத்த சமூகத்தையும் தலை குனிய வைக்கும் செயற்திட்டங்களையும் நாம் தடுக்க முடியாது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து, பிரிவினை கோரிய ஆயுதப் போராட்டம் - அதன் போதான இந்தியாவின் பங்கு, சர்வதேச முஸ்லிம் சமூகச் சிதைவில் இஸ்ரேலின், அமெரிக்காவின் பங்கு என பல்வேறு விடயங்களை ஆராயுமிடத்து, தனிப்பட்ட ரீதியில் எனக்குள் பல கேள்விகள் எழுந்தது.

தாக்குதல் நடந்து சிறிது நேரத்திற்குள் பிரதான தாக்குதல்தாரியை படத்துடன் அடையாளம் காட்ட விளைந்த அமெரிக்க ஊடகத்தின் இந்திய கிளைச் சேவையைப் பார்த்த போது அந்தக் கேள்விகள் மேலும் ஆச்சரியக்குறிகளாகின.

இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடாத்தப்படப் போகிறது என அறிந்து அதனை திசை திருப்பியதாக மார்தட்டிக் கொள்ளும் இந்திய புலனாய்வுத் துறை, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கடந்த தடவையும் - இனியும் தவறாக வழி நடாத்தாது என்பதற்கோ தற்போது அனைத்து தரப்பினர் மத்தியிலும் விதைக்கப்பட்டிருக்கும் வெறுப்புணர்வு மேலும் உருப்பெறாது என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.

ஏலவே, இன்னும் எத்தனை பேர் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள்? இதற்கான தளம் எத்தனை விரிவானது? ஊடுருவல் எத்தனை ஆழமானது? என்ற பல கேள்விகளும் விடைகாணப்பட வேண்டியதாக உள்ள நிலையில் சமூகம் விழிப்படையும் - தெளிவடையவும் ஒன்றிணைந்து செயற்படவும் எதிர்கால சமூகத்தைக் காப்பாற்றவும் வழிகாட்டவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறது.

ஆனாலும், சந்தர்ப்பவாத பிரிவினைகள் விளைந்துள்ள நிலையில் இதற்;கு முகங்கொடுக்க முடியாது. ஆகவே, பொறுப்புணர்ந்து தலைமைத்துவம் ஒன்றிணைய வேண்டும். சமய வழிகாட்டலைப் பின்பற்றும் பாரம்பரியத்தில் வாழும் சமூகம் எனும் அடிப்படையில் இதற்கான பொறுப்பை சமயத் தலைமைகளே கையிலெடுக்க வேண்டும் என்ற நிலையுள்ளது.

இதேவேளை, அரசியலையும் தம்மையும் வேறுபடுத்துவதும் உலமாக்கள் சமூகத்தின் மீதான காலத் தேவையாக இருக்கிறது. பிரச்சினைகள் வரும் போது அவற்றை மார்க்கத் தலைமைகளிடம் சாட்டி விடும் அரசியல்வாதிகள் தமது அரசியல் செயற்பாடுகள் ஊடாக சமூகத்துக்குள் உருவாக்கி வைத்திருக்கும் பிளவுகளை மறந்து விடுகிறர்கள்.

இவர்களிடம் இது பற்றிப் பேசுவதை விட மக்களிடம் அது பற்றிய தெளிவை உருவாக்குவது அவசியப்படுகிறது. அரசியல் சிந்தனைகள் - தேவைகள் சமூகத்தின் மத்தியில் இடத்துக்கிடம் வேறுபடுகிறது. அவரவர் சொந்தத் தேவைகளின் அடிப்படையில் அரசியல் எதிர்பார்ப்புகளும் மாறுபடும். ஆகவே, இதனை மட்டிட்டு வரையறுக்க முடியாது. எனினும், நம் சமூகத்தின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு கருத்தியல் மறுமலர்ச்சியை உருவாக்க முடியும்.

இப்பணியில், உலமாக்கள் போன்றே எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்களும் பங்காற்றலாம். இன்று குழம்பிப் போயுள்ள சமூகத்தைப் பொறுத்தவரை தமக்குள் பொதுவான தலைமைத்துவம் ஒன்றில்லையென்பதில் அது தெளிவாக இருக்கிறது.

இந்தத் தெளிவும் சூழ்நிலைத் தெளிவாக மறந்து போய்விடுவதறகு முன்பதாக செயலாற்றுவதும் அவசியப்படுகிறது. நாளை என்னாகும் என்று சிந்தித்து முடிவதற்குள் இன்றைய பிரச்சினைகள் பூதாகரமாக வளர்ந்து விடும் காலமாதலால் விரைவாகவும் முறையாகவும் செயற்படும் தேவை அவசியமாகிறது.

சிவில் சமூக அமைப்புகள் இவ்விடயத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் இச்செயற்திட்டங்கள் விரைவு படுத்தப்பட்டு சமூகத்துக்குள் அவசியம் தேவைப்படும் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

ஆனாலும், அவரவரின் ஜமாத் போர்வையோடு 'பொதுத்தளம்' நமதாகாது, மாறாக அவர்கள் இவர்களாகவே தொடரும்.

2ld3lJX

Irfan Iqbal
Chief Editor , Sonakar.com

No comments:

Post a Comment