முஸ்லிம் சமூகமும் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னரான எதிர்காலமும் - sonakar.com

Post Top Ad

Saturday 18 May 2019

முஸ்லிம் சமூகமும் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னரான எதிர்காலமும்இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில், ஏன் இலங்கையின் வரலாற்றிலேயே, ஏப்ரல் 21 என்பது எழுத்துக்களின் வடிக்க முடியாத, பேச்சுக்களால் சமாதானப்படுத்த முடியாத சமூக வடுவை ஏற்படுத்திய கரிய ஞாயிறு என்பதில் எங்கள் எவருக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது. நடந்தவைகள் யாவும் இன்று அக்குவேறு ஆணிவேராகவும், உண்மை எது?, ஊடக விபச்சார திரிபு எது?, அரசியல் ஆய்வு எது?, அரசியல் சதுரங்க விளையாட்டு எது? என சிந்திக்கத்தெரிந்த, தெளிவுள்ள மக்களுக்கு ஐயமின்றி புரிந்து கொள்ள முடிகின்றது. 

ஆம், இலங்கையின் சில தீவிரவாதிகளால் கொடூர, வக்கிரமான குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு அதன்பால், பல உயிரிழப்புக்களும், இலங்கையின் பாதுகாப்பும் இல்லாமல் செய்யப்பட்டது உண்மை. இதன் பின்னரான இலங்கையும், இலங்கை முஸ்லிம்களும் எனும் விடயம் பற்றியே இங்கு நான் உங்களின் உண்மையான மனச்சாட்சியுடன் உரையாடலாம் என எண்ணுகிறேன்.

இலங்கையின் பாதுகாப்பு

இலங்கை அரசு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் புலனாய்வுத்துறை, பொலிஸ், இராணுவம், கடற்படை என பலதரப்பட்ட படைப்பிரிவுகளும், மேலும் வெளிநாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரும் இலங்கையின் மூலைமுடுக்கெல்லாம் குவிக்கப்பட்டிருந்தனர். இருந்தும் இங்கு முஸ்லிம்களாகிய நாம் மார்புதட்டி பெருமையுடன் கூறமுடியும், குறிப்பாக கிழக்கு முஸ்லிம்கள் நாட்டின் மீது கொண்ட அக்கரை மற்றும் உண்மையான புனித இஸ்லாத்தை விளங்கி, வாழ்ந்து கொண்டிருக்கும் நடைமுறையினால் இன்று பாரிய அழிவினை ஏற்படுத்தவிருந்த, எதிர்கால தற்கொலை குண்டுத்தாக்குதல் களை, பயங்கரவாதிகளின் சதி நடவடிக்கைகளினை காட்டிக்கொடுத்தனர். மேலும் தினம் தினம் தங்களுக்குத் தெரிந்த விடயங்கள், சந்தேகமான நடமாட்டங்கள், புதுமுகங்கள், வாகன ஊசலாட்டம், வெற்று பாழடைந்த வீடுகள், வளவுகள் என உண்மையான தேசப்பற்றுள்ளவர்களாக இலங்கை பாதுகாப்பு பிரிவினருக்கு உண்மைத்தகவல்களை உடனடியாக முன்கூட்டியே வழங்கிவருகின்றனர். இதனாலேயே இன்று பெருமளவு பொருட்கள் கைப்பற்றப்பட்டும், சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டும் வருகின்றனர். 

எமது மதத்தலைவர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வழிகாட்டல், பள்ளிவாசல் தலைமைகள், நிர்வாகத்தினர், அரச பொறுப்புதாரிகள், எமது முஸ்லிம் அரசியல் வாதிகளின் ஒத்துழைப்பு என்பவை மிக மிக முக்கிய காரணங்களாகும். இலங்கை மக்களின் உயிர்களை அது பௌத்தனா? இந்துவா? கத்தோலிக்கனா? இஸ்லாமியனா? என பாராது யாதும் உயிரே என மதித்து இன்று பள்ளிவாசல்கள், ஊர் எல்லைகள், பொது நிகழ்வுகள் என அனைத்து நிகழ்வுகளிலும் எமது ஊர் மக்களும், பள்ளிவாசலும் பாதுகாப்பை வலிந்து ஏற்று, கண்முழித்து அரச படைகளுடன் சேர்ந்து காவல் காக்கின்றனர். அத்துடன் அரச படைகளினால் மேற்கொள்ளப்படும் சோதனைகள், கேள்விக்கணைகள் என்பவற்றுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.

ஊடகங்களும், துண்டுப்பிரசுரங்களும் 

அகிம்சையாக, இலங்கைவாழ் பிரஜையாக, அமைதியை விரும்பும் இஸ்லாமியனாக இன்று இலங்கை முஸ்லிம்கள் அரசுக்கு ஒத்துழைத்து உண்மையாக வாழ்ந்து வருகின்ற நிலையிலேயே, வேண்டுமென்றே சில பத்திரிகைகள், ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், துண்டுபிரசுரங்கள் என வருந்தி கட்டிக்கொண்டு, உண்மைக்குப் புறம்பான, மனச்சாட்சிக்கு எதிரான, மத வெறியினை தூண்டக்கூடிய உணர்வுகளை உசுப்பேற்றும் கருத்துக்களை அணுதினமும் பிரசுரித்துக்கொண்டிருக்கின்றன. முஸ்லிம் கடைகளை தவிர்ப்போம்!!! முஸ்லிம் வியாபாரிகளை ஊருக்குள் அனுமதிக்காதீர்கள்!!! முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என சமூக வலைத்தளங்களிலும், துண்டுபிரசுரங்களிலும் மக்களை வழிகெடுக்கின்றனர். சில அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், மதத்தின் பெயரால் வயிறு வளர்ப்பவர்கள், சம்பளத்திற்காக சமூக வலைத்தளங்களில் எழுதும் இளைஞர்கள், வியாபார போட்டிக்காக விளம்பரம் தேடும் வியாபாரிகள், சந்தர்ப்பம் பார்த்து வஞ்சம் தீர்க்கும் பாதிக்கப்பட்;டவர்கள் போன்றவர்களே இந்த இனவாத கருத்துக்களால் இன அழிப்பினை ஏற்படுத்தலாம் என கனவு காண்கின்றனர்.

சூழ்ச்சிகாரனுக்கெல்லாம் சூழ்ச்சிகாரன் இறைவன். அவன் யாவும் அறிந்தவன். ஷஷதலைக்குவந்தது தலைப்பாகையோடு போய்விட்டது|| எனும் முதுமொழிக்கேற்ப இலங்கை முஸ்லிம்களுக்கு வந்த பேராபத்தை இத்துடன் முடித்து எம்மை காப்பாற்றிவிட்டான். இங்கு அரசின் கவனம் வெறுமென ஆயுதங்கள் கைப்பற்றல், பயங்கரவாதிகளைப் பிடித்தல், சந்தேகத்தின்பேரில் கைது செய்தல் போன்ற நடவடிக்கைகளை மாத்திரம் செய்யாது, அடுத்த பக்கத்தில் உண்மையான நாட்டுப்பற்றுள்ள அப்பாவி முஸ்லிம்களை பாதுகாக்கும், அவர்களின் மனதினைப் புண்படுத்தும் விடயங்களை தடைசெய்யும், அடிப்படை உரிமைகளை மதிக்கும் விடயங்களிலும் கவனம் செலுத்தினால் இன்னும் அமைதியான, பயங்கரவாதமற்ற இலங்கைத் தாய் நாட்டை ஓரிரு மாதங்களினுள் நாம் வென்றுவிடலாம். 

ஊடகங்களே..!
மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பதுபோலும், வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போலும் செயற்படாது நீங்கள் உண்மைகளைக்கூறாவிடினும் பரவாயில்லை பொய் வதந்திகளைப் பரப்பாது இருங்கள் உதவி செய்யாது விடினும் பரவாயில்லை உபத்திரம் செய்யவேண்டாம்.

நோன்பு காலமும் முஸ்லிம்களும்

அனைத்து முஸ்லிம்களினதும் மிக மிக முக்கிய மார்க்க கடமைகளுள் ஒன்றான நோன்பு எனும் கடமையை கடைப்பிடித்து வருகின்றோம். இதில் முஸ்லிம்கள் பகல் நேரத்தில் ஏனைய நாட்களில் ஆகுமாக்கப்பட்ட உண்ணல், குடித்தலில் இருந்து தவிர்ந்து பலதரப்பட்ட மார்க்க கடமைகள், நல்லமல்களில் ஈடுபட்டு நன்மைகளை சுவீகரித்துக்கொள்வார்கள். இன்றைய சூழ்நிலையில், நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இலங்கை முஸ்லிம்கள் நோன்பு நாட்களில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் எனும் அறிவுறுத்தல்களை எமது பள்ளிவாசல் நிருவாகம், ஊர் பெரியவர்கள், முஸ்லிம் அரசியல் வாதிகள், ஜம்இய்யத்துல் உலமா சபை போன்ற முன்கூட்டியே தெளிவாகவும், தீர்க்கதரிசனமாகவும் முன்வைத்தல் வேண்டும். அதாவது, 

நோன்பு மாதத்தில் கஞ்சி காச்சுதல், இதற்காக எவ்வாறு நடந்துகொள்ளல், இதன் போது பாவிக்கப்படும் கத்திகள், மாட்டு எலும்புகளைக் கொத்துவதற்கு பாவிக்கும் சிறிய கோடரிகள், கிடாரங்கள், மண்ணெண்ணெய் போன்றவற்றை முன்கூட்டியே அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கூறி உரிய அனுமதிபெறல் அல்லது தெளிவூட்டல் அவசியமாகும். 

கஞ்சு காச்சுபவர்கள், உதவியாளர்கள் முடிந்தளவு உள்ளுர் வாசிகளாக இருத்தல் நன்று. அல்லாது வெளியூர்வாசி ஆயின் அவர்களது பெயர், விலாசம், தேசிய அடையாள அட்டை பிரதி, புகைப்படம் என முழு விபரமும் பெறப்பட்டு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிதல் நன்று. முடிந்தளவு வீண்விரயங்கள், அதிகளவு கஞ்சி காச்சுதலைத் தவிர்த்து தத்தமது பள்ளிகளில் நோன்பு திறக்க வருபவர்களுக்கு மாத்திரம் கஞ்சுகாச்சுதலும் ஏனையவர்களை தத்தமது வீடுகளில் காச்சுமாறும் பணித்தல் நன்று. 

தராவிஹ் போன்ற இரவு வணக்கங்களை அதிகம் பிற்போடாமலும், நீண்ட சூறாக்களை ஓதாமலும், நேர காலத்தோடு முடித்தல் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தின் உதவியுடன் எமது நேர அளவு, கால அவகாசம், பாதுகாப்பு போன்றவற்றுக்கு ஒத்துழைப்புப் பெறமுடியும். 

முடிந்தளவு இரவு அமல்கள், குர்ஆன் ஓதுதல், மேலதிக சுன்னத்தான தொழுகைகளை வீட்டிலேயே தனிமையாக ஈடுபட அறிவுறுத்தல் செய்தல். பாதுகாப்பு நலன்கருதி இது காலத்தின் தேவை என்பதை மக்களுக்கு உரிய முறையில் தெளிவுபடுத்த வேண்டும்.

இரவு நேரங்களில் தராவிஹ் தொழுகையின் பின்னர் வாலிபர்கள், ஆண்கள், சிறுவர்கள் என கூட்டம் கூட்டமாக கூடிநிற்றல், குழுக்களாக அரட்டையடித்தலை தவிர்த்து நேரகாலத்தோடு வீடுகளுக்கு செல்லுதல் வேண்டும்.

பலதரப்பட்ட பிரிவுகளாக பிரிந்து மார்க்கக் கடமைகளில் ஈடுபடுதலைத் தவிர்த்து உரிய முறையில் திட்டமிட்டு மார்க்கக் கடமைகளில் ஈடுபடுதல் நன்று.

நோன்பு காலங்களில் அதிகம் அதிகமாக எமது பாதுகாப்புக்கும், நாட்டின் அமைதிக்கும், எமது இருப்புக்கும் கேள்விக்குறி வந்துவிடாது இறைவனிடம் துஆப் பிரார்த்தனையில் ஈடுபடச்செய்யுமாறு பணித்தல்.

சுந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் பிரதேச அமைவிடங்கள் என்பவற்றை கருத்தில் கொண்டு அவ்வாறான பிரதேசங்களில் ஜும்ஆ ராத்திரி, ஒன்றுகூடல்களை தவிர்ப்பது சிறந்தது. மேலும் தத்தமது ஊர்களிலேயே பாதுகாப்புடன் அதனை செய்ய ஒழுங்கு செய்தல்.

தத்தமது பிள்ளைகளின் பாதுகாப்புக்கும், நடவடிக்கைக்கு பெற்றோர்களே பொறுப்பு என நன்கு வலியுறுத்தல் வேண்டும். அத்துடன் ;தமது கணவன்மார்களின் பாதுகாப்புக்கும் நல்வழிக்கும் மனைவியரே பொறுப்பு என தெளிவுபடுத்தல் வேண்டும்.

இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி மூலமாக, மார்க்க உபன்னியாசங்கள் நிகழ்த்துதலை முடிந்தளவு தவிர்த்தல். முக்கியமாக பலதரப்பட்ட மக்களுடன் வாழும் இடங்களில் மிகவும் பக்குவமாகவும், பிறரது உரிமைகளை மதித்தும் நடத்தல். 

நோன்பு காலங்களில் பள்ளிவாசல்களின் முன்பாகவும், கடைத்தெருக்கள், பிரதான வீதிகளின் இரு புறங்களிலும் தெருக்கடைகள், கூவி விற்கும் விற்பனை உடுதுணிகள், இரவு நேரங்களில் விற்பனை செய்தலைத் தவிர்த்தல். முடிந்தளவு பகல் நேரங்களில் மட்டுமே வியாபாரம் செய்யுமாறும் இதுவே எமக்கு பாதுகாப்பு நிறைந்தது எனவும் அறிவுறுத்தல்.

பள்ளிவாசலுக்கு வருபவர்கள், பயணிகள், இஹ்திகாப் இருப்பவர்கள், வேலையாட்கள் என புதுமுகங்கள் அனைவர் மீதும் ஊர் மக்களின் கவனம் இருப்பதுடன் சந்தேகமான பொருட்கள், பொதிகள் நபர்கள், அறியப்படின் உடனடியாக பள்ளிவாசல் நிருவாகத்தின் மூலம் பாதுகாப்புப் பிரிவிக்கு அறிவித்தல் வேண்டும். 

இது போன்ற இன்னும் பல விடயங்களையும், பாதுகாப்பையும் கருத்திற்கொண்ட, எதிர்காலத்தை நோக்கிய தீர்க்கதரிசனமான விடயங்களில் எமது தலைமைகளும் பள்ளிவாசல் நிர்வாகமும் கவனம் செலுத்துதல் வேண்டும்.

கொள்கை வாதிகளும் இயக்கங்களும் 

முஸ்லிம் அறிஞர்களே..! உலமாக்களே..! சமயத்தலைவர்களே..!
பொதுமையில் ஒற்றுமை காண்போம், முரண்பாடுகளுக்கு அப்பால் உடன்பாடு அடைவோம். நமக்குள் அடித்துக்கொள்வதால், சிறு சிறு விடயங்களில் பிரிந்து நிற்பதால் நம்மை வெளிநாடுகளும், மற்றைய மதங்களும், தீவிரவாதிகளும் நமது கைகளைக்கொண்டே நமது கண்களை குத்தி எமது முஸ்லிம் சமூகத்தையே குருடர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். இனியாவது விழித்தெழுங்கள். எமது நாடு, எமது மக்கள், அமைதி, சுபீட்சம் என ஒன்றிணைந்த இலங்கைக்குள் எமது மார்க்கக் கடமைகளை செய்வோம். 

கர்ச்சித்து, பெரும் இரைச்சலுடன் மார்க்கக் விடயங்களை சத்தமிட்டு பிரச்சாரம் செய்யாமல் அமைதியின் மார்க்கமான இஸ்லாத்தை பூவை விடவும் மென்மையாக, எமது நன்னடத்தைகளினால், எமது ஒழுக்கத்தினால், உயரிய பண்பினால் வளர்த்தெடுப்போம். எம்மை சிந்திக்கவிடாமல் தடுக்கும் வெளிச்சக்திகளுக்கு துணைபோகாது உண்மையின்பால் ஒற்றுமையாக ஒரே ஊராக, ஒரே நாடாக ஒன்றிணைந்த இலங்கைக்குள் மதப்பிரிவினைகளுக்கு அப்பால் ஒன்றிணைவோம். இதற்கு உங்களது வீணான வரட்டுக் கௌரவம், பிடிவாதம் என்பவற்றை கழற்றியெறிந்துவிட்டு பக்குவம், முதிர்ச்சியின் வடிவங்களாக நீங்கள் அனைவரும், அனைத்து கொள்கைத் தலைவர்களும் ஓரிடத்தில் ஒரே நாளில் ஒன்றாக அமர்ந்து மனம்விட்டு பேசுங்கள், விட்டுக்கொடுங்கள். உங்களால், எம்மால், நம்மால் நிச்சயமாக ஒன்றுபட முடியும்.

இஸ்லாமிய அரசியல் வாதிகளே

நீங்கள் வேறுபட்ட கட்சிகள், கொள்கைகள், பதவிகள், அமைச்சுக்களில் இருக்கலாம் அது உங்களினது சொந்தத்தீர்மானம். இன்றைய காலகட்டத்தில் எமது சமூகத்தின் எதிர்கால நல் ஆரோக்கியமான இருப்புக்காக ஒற்றுமை எனும் கையிற்றை பலமாகவும், ஒன்றாகவும், ஓரணியாகவும் இறுக பற்றிப்பிடியுங்கள். ஒருவரை வீழ்த்தி ஒருவர் முன்னேர இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டாம். ஒருவர் முதுகில் ஏறி மற்றவர் சவாரி செய்யவேண்டாம். எமக்குள் அமைச்சு பதவி, தலைமை, , போட்டி இப்போதைக்கு வேண்டாம். ஊர்வாதம், பிரதேச வாதம், கட்சி பேதம் தற்போதைக்கு வேண்டாம். சற்று நிதானமாக சிந்தியுங்கள். எமது சமூகத்திற்காக தூர சிந்தனையுடனும், அக்கறையுடனும் செயற்படுங்கள். ஓரணியில் நின்று இலங்கைத் தாயினதும், முஸ்லிம்களினதும் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு, இஸ்லாமிய நடவடிக்கைகளை எவ்வாறு கொண்டு செல்லலாம் என கலந்தாலோசியுங்கள். உங்களுக்குள் காணப்படும் எதிர்கருத்துகள், விரிசல்களை எமது எதிரிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தவும், ஊடகங்களில் எம்மவர்களை வைத்தே எமது முஸ்லிம் அரசியல்வாதிகளை, முஸ்லிம் சட்டங்களை எள்ளிநகையாடும், பலவீனப்படுத்தும் சதி வலைக்குள் சிக்கிவிடாது பக்குவமாகவும், பண்பாகவும் ஒற்றுமையாக ஒரே கருத்தில் ஒன்றுபடுங்கள்.

கண்கெட்ட பின் சூரிய நமஷ்காரம் எதற்கு? என்பது போல, எல்லாமே நடந்து முடிந்த பிறகு என்ன பேசி என்ன ஆகப்போகிறது. கப்பல் ஒன்றில் ஏற்பட்ட சிறு துவாரம் கூட உரிய முறையில் அடைக்கப்படா விட்டால் அதுவே அந்தக் கப்பல் மூழ்கிவிடுவதற்கு ஏதுவாகிவிடும் என்பதை நாம் அறிவோம். இப்Nபுhது எமது சமுதாயக் கப்பலில் கரிய ஞாயிறு என்ற துவாரம் எப்படியோ ஏற்பட்டு விட்டது இந்த துவாரத்தை சுயநலவாத அரசியல்களைக் களைந்து ஒன்றுபட்ட சக்தியாகி அடைந்துவிட முயற்சிக்க வேண்டும். ஆதன் மூலமாகவே எமது சமுதாயக் கப்பலை தொடர்ந்தும் மூழ்கிவிடாமல் காப்பாற்ற முடியும். நீங்களே எமது பேசு பொருட்கள், எமது அரசியல் சக்திகள், நீங்கள் அமானிதத்தை சுமந்துள்ளீர்கள், பொறுப்புக்கூறும் கடமையில் உள்ளீர்கள் எனவே எம்மை உரிய காலத்தில் சரியாக வழிநடத்துவீர்கள் என நம்புகின்றோம்.

எதிர்கால வேண்டுதல்கள் 

இன்று ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையினால் ஏற்பட்ட கொடூர சம்பவத்தை வைத்துக்கொண்டு சிலர் பாரிய விளைவுகளை இலங்கை திருநாட்டினுள் ஏற்படுத்த முயல்கின்றனர். எமது அரசும் பாதுகாப்புப் படையினரும் சிறந்தமுறையில் பக்குவமாக ஈடுபட்டு மீண்டும் அமைதியான நாட்டினை படிப்படியாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

எமது இளைஞர்கள், ஆண்களை உசுப்பேத்தும், மனவிரக்தியை ஏற்படுத்தும், மன உளைச்சல்களை உண்டாக்கும் விடயங்களை, நபர்களை உரிய முறையில் கண்காணித்து சாந்தப்படுத்துமாறு வினயமாக கேட்டுக் கொள்கின்றோம். 

பெண்கள், தாய்மார்களை கிண்டல் செய்யும், ஆடைகளை விமர்சிக்கும், நாட்டுக்கு பாதகமற்ற முறையில் நடப்பதை கேலி செய்யும் சில ஊடகங்கள், துண்டுப்பிரசுரங்களுக்கு உரியவர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும்,

மதஸ்தலங்கள், மத விழுமியங்களை மதிக்காது கேலி செய்யும் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், துண்டுப்பிரசுரங்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும்,

திசைமாறாத, விரக்தியடையாத உண்மையான சாந்தமான இலங்கை முஸ்லிம்களை இந்நாட்டின் குடிமக்கள் என்னும் கட்டுக்கோப்புடனும், உரிய அந்தஸ்துடனும் வழிநடத்தி எம்மை கண்காணிப்பீர்கள் என அரசாங்கத்தை வேண்டிக்கொள்கின்றோம்.

இலங்கை முஸ்லிம்கள், அரசுக்கும் இலங்கைக்கும் சமாதானத்திற்கும் உண்மைக்கும் என்றும் ஒத்துழைப்போம் என வாக்குறுதியளித்து, எங்கள் நலனில் அரசாங்கம் என்றும் அக்கரையுடன் செயற்படும் என நம்புகின்றோம்.


எம்.சி.எம்.கமறுர் றிழா
Dip in Psychology & Counselling, Dip in Human Rights

No comments:

Post a Comment