28ம் திகதிக்குள் இயந்திரவாள்களை பதிவு செய்ய காலக்கெடு! - sonakar.com

Post Top Ad

Wednesday 20 February 2019

28ம் திகதிக்குள் இயந்திரவாள்களை பதிவு செய்ய காலக்கெடு!


நாட்டில் தற்போது  பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களும் பதிவு செய்யப்படுவது  கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக,  பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சராகச் செயற்படும்  ஜனாதிபதியின்  உத்தரவிற்கமைய, பாதுகாப்பு அமைச்சு மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக,  பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,  பதிவு நடவடிக்கைகள் இம்மாதம் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பதிவுகள் யாவும்  28 ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


காடுகள் அழிக்கப்படுவதைக்  கட்டுப்படுத்தல், இயந்திர வாள்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் வியாபாரத்தைத் தடுத்தல் மற்றும் மரங்கள் வெட்டப்படுவதை  மட்டுப்படுத்தல் போன்றவைகளை நோக்காகக்  கொண்டே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய அரச, அரச சார்பு, தனியார் துறை நிறுவனங்கள் அல்லது தனிப்பட்ட ரீதியில் பயன்படுத்தப்படும் சகல இயந்திரவாள்களும் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எடுத்துச் சென்று,  அவற்றைப்  பதிவுசெய்து அதற்கான அனுமதிப்பத்திரங்களைப்  பெற்றுக்கொள்வது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிவுசெய்யப்பட்டதை அடையாளம் காண்பதற்காக,  விசேட  அனுமதிபத்திரம் மற்றும் இலக்கத்தகடுகளை  விநியோகிக்க நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பிலான  அறிவுறுத்தல்கள்,  நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் அனைவரினது  ஒத்துழைப்புக்களையும்  எதிர்பார்ப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கேட்டுள்ளார்.

-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment