ரமழான் பாடசாலை விடுமுறை விவகாரம்: விரைவில் சிவில் சமூகம் கலந்துரையாடல்! - sonakar.com

Post Top Ad

Sunday 20 January 2019

ரமழான் பாடசாலை விடுமுறை விவகாரம்: விரைவில் சிவில் சமூகம் கலந்துரையாடல்!


ரமழான் மாத்தில் நாட்டின் ஏனைய பாடசாலைகள் இயங்குவதைப் போன்று மேல் மாகாணத்தில் முஸ்லிம் பாடசாலைகளும் இயங்குவதில் தவறில்லையென ஆளுனர் அசாத் சாலி அப்பிராயம் வெளியிட்டுள்ள நிலையில், அது பற்றி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் சிவில் சமூக அமைப்புகள் பெப்ரவரி முதல் வாரத்தில் கலந்துரையாடவுள்ளன.

2016ம் வருடம் முஸ்லிம்குரல் வானொலிக்கான நேர்காணல் ஒன்றிலும் அசாத் சாலி இக்கருத்தினை வலியுறுத்தியிருந்ததோடு, குறித்த மாற்றத்தின் ஊடாக தேசிய கால அட்டவணையை விரும்பி இயங்கும் சிறந்த ஆசிரியர்களையும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு உள்வாங்க முடியும் என விளக்கமளித்திருந்தார்.


இந்நிலையில், தற்போது மேல் மாகாண ஆளுனராகப் பணியாற்றும் நிலையில் இக்கருத்தினை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளமை பேசுபொருளாகியுள்ளது. இப்பின்னணியில் முஸ்லிம் கவுன்சில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உட்பட பல்வேறு அமைப்புகள் இது பற்றி அவருடன் கலந்துரையாடவுள்ளன.

இது தொடர்பில் சோனகர்.கொம் நேரடியாகவே ஆளுனரிடம் வினவிய போது, பந்துல குணவர்தன கல்வியமைச்சராக இருந்த காலத்திலும் இத்திட்டம் செயற்படுத்தப்படவிருந்ததாகவும் இறுதி நேரத்தில் இரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை சர்ச்சைக்குட்படுத்தியிருந்ததாகவும் தான் வெளியிட்ட அபிப்பிராயத்தின் நன்மை - தீமைகளை அலசி எதிர்கால நன்மையைக் கருத்திற் கொண்டு இயங்குவதே சிறந்தது எனவும், இது பற்றித் தன்னுடன் கலந்துரையாடவுள்ள அமைப்புகளை வரவேற்கக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்சமயம் அவர் தனது அபிப்பிராயத்தையே வெளியிட்டுள்ள நிலையில் பல கட்டப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே இது பற்றிய இறுதி முடிவொன்று எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment