அரபுக் கல்லூரிகள் தொடர்பில் நான் எடுத்துள்ள தீர்மானங்கள் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. அண்மைக்கால சம்பவங்களைத் தொடர்பு படுத்தி எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. எனது தீர்மானம் எந்தத் தரப்பினதும் அழுத்தங்களுக்கு உட்பட்டதானதல்ல. அரபுக்கல்லூரிகளை தரமுயர்த்தி எமது மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதே எனது இலக்காகும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்தார்.
அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அரபுக் கல்லூரிகள் தொடர்பில் மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; அரபுக் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்பட்டதென்றால் கட்டாயமாக வக்பு சபையின் கீழ் பதிவுசெய்யவேண்டும். பழைய அரபுக் கல்லூரிகள் என்றால் சுய விருப்பத்தின் கீழ் வக்புசபை யில் பதிவு செய்து கொள்ளலாம். அரபுக் கல்லூரிகள் வக்பு சபையில் பதிவு செய்யப்படாது விட்டால் அவை கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் வருவதற்கு சாத்தியம் உள்ளது. அரபுக் கல்லூரிகள் வக்புசபையின் கண்காணிப்பில் இருப்பதே எமக்கு நன்மை பயக்கும்.
பள்ளிவாசல்கள் வக்புசபையின் கீழ் பதிவு செய்யப்படுவது போன்று அரபுக் கல்லூரிகளும் பதிவுசெய்யப்பட வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்பட்டாலே பள்ளிவாசல்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகள் மற்றும் உதவிகளை அரபுக்கல்லூரிகளுக்கும் பெற்றுக்கொடுக்க முடியும்.
தற்போது அரபுக் கல்லுரிகள் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் ஒன்று மாத்திரமே வழங்கப்படுகின்றது. இளைஞர்களது எதிர்காலம் அரபுக்கல்லூரிகளிலே தங்கியிருக்கிறது. சில அரபுக் கல்லூரிகள் பல்வேறு துறைகளில் மாணவர்களைப் பயிற்றுவிப்பது வரவேற்கத்தக்கதாகும்.
அரபுக்கல்லூரிகள் தொடர்பான தீர்மானங்கள் உலமாக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. சமூகம் சார்ந்த தீர்மானங்கள் உலமாக்களின் ஆலோசனைகளின்படியே முன்வைக்கப்படும். அரபுக்கல்லூரிகளைச் சீர்திருத்தி தரமுயர்த்தி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்படுகின்றன. மாறாக அரபுக் கல்லூரியின் வளர்ச்சியைக் தடைசெய்ய வேண்டுமென்பதல்ல. அஹதிய்யா பாடசாலைகளுக்கு அரசாங்கம் உதவிகளைச் செய்துள்ளது. அந்த அடிப்படையில் அரசாங்கத்தின் செலவில் 12 பாடப்புத்தகங்கள் மூன்று மொழிகளில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான உதவிகளை அரபுக்கல்லூரி களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே எனது இலக்காகும் என்றார்.
-Razy Hashim
No comments:
Post a Comment