சுய கற்றல் மூலம் சாதனை: வா'சேனை ஆயிஷா மாணவி! - sonakar.com

Post Top Ad

Friday 12 October 2018

சுய கற்றல் மூலம் சாதனை: வா'சேனை ஆயிஷா மாணவி!


நான் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 191 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் முதலாமிடத்தையும் மாவட்ட ரீதியில் ஆறாமிடத்தையும் பெற்றுள்ளேன் என்று வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி எம்.யூ.ஹைரா தெரிவித்தார்.

குறித்த சாதனை மாணவியை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் நேற்று பாடசாலையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு அம் மாணவி தெரிவித்தார்.

தொடர்ந்தும் சாதனை மாணவி எம்.யூ.ஹைரா தெரிவிக்கையில்,

இது எனக்கு மட்டுமல்லாமல் இப் பாடசாலைக்கும், இக் கிராமத்திற்கும் கிடைத்த பெருமையாக நான் கருதுகின்றேன் எனது இந்த வெற்றிக்கு பல வகையிலும் ஒத்துழைத்து ஆலோசனை வழங்கிய எனது பெற்றோருக்கும் மற்றும் அதிபர், கற்பித்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதே போன்று எனக்கு தரம் ஒன்றிலிருந்து தரம் மூன்று வரை சிறப்பாகக் கற்பித்த அனுஜா ஆசிரியை மற்றும் தரம் நான்கில் கற்பித்த அஜ்மீர் ஆசிரியர், சில்மியா ஹாதி ஆசிரியை ஆகியோர்களுக்கும் மற்றும் தரம் ஐந்தில் கற்பித்து இரவு பகல் பாராது பரீட்சைக்குத் தயாராக்கிய ஆசிரியை எம்.எம்.சனூபா மற்றும் எம்.பீ.எம்.அன்வர் ஆசிரியர் ஆகியோர்களுக்கும் எனது நன்றிகளைக் காணிக்கையாக்கிக் கொள்கின்றேன். இவர்களுள் அன்வர் ஆசிரியர் அவர்களின் கடுமையான உழைப்பே என்னை முன்னேற்றுவதற்கு தூண்டுதலாக இருந்தது அவர் பல வழிகளிலும் புத்திமதிகளைக் கூறுவார்.

அத்துடன் ஓய்வு நேரங்களில் எனது சாச்சாவும், சாச்சியும் கற்பித்து ஊக்கப்படுத்துவார்கள் இவ்விடத்தில் அவர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.
நான் சிறுவயதிலிருந்தே சுயமாக கற்பதற்கு எனது பெற்றோர்கள் வழிகாட்டினார்கள் பாடசாலையில் கற்கும் விடயங்களை ஒவ்வொரு நாளும் மீட்டிக் கொள்ளுமாறு கூறுவார்கள் இதன் காரணமாக வேறு வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய தேவை எனக்கு ஏற்படுவதில்லை மேலும் எங்களது வீட்டில் தொலைக்காட்சியோ, கணனியோ இல்லை இதனால் எனது வீட்டுச் சூழல் படிப்பதற்கு வசதியாக இருந்தது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வின் கருணைப் பார்வையும் என் வெற்றிக்குக் காரணமாக உள்ளது. என்னுடைய எதிர்காலம் இன்னும் சிறப்பாக அமைய அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.

இனிவரும் காலங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள எனது சகோதரிகளுக்கு நான் கூறும் அறிவுரை என்னவென்றால் ஆசிரியர்கள் கற்பிக்கும் விடயங்களை உடனுக்குடன் மீட்டிக் கொள்வதோடு, சுயமாக இருந்து கற்பதற்கு அதிக நேரத்தை செலவு செய்யுமாறும் ஒரே ஆசிரியரிடத்தில் கற்று மன நிறைவுடன் பரீட்சையில் சித்தியடைய முயற்சியுங்கள் என்பதாகும்.

எனவே என்னைப்போல் நீங்களும் சிறந்த முறையில் சித்தியடைய அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment