ஆபத்துக்குள் புதிய தலைமுறை! - sonakar.com

Post Top Ad

Thursday 20 September 2018

ஆபத்துக்குள் புதிய தலைமுறை!


பிள்ளைகளைப் பெற்றெடுத்த ஒவ்வொரு தாயும், தந்தையும்; அப்பிள்ளைகளை வளர்த்தெடுப்பதில் நெருப்பை தலைமேல் கட்டிகொண்டு தெரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சம வயதுக் குழுக்கள் முதல் வழிதவறச் செய்யும் ஊடகங்கள் வரை பிள்ளைகளின் நடத்தைப் பிறழ்வுகளுக்குக் காரணமாக அமைந்துள்ள இக்காலகட்டத்தில் எந்தப் பிள்ளை எத்தகைய நடத்தைக் கோலங்களைக் கொண்டுள்ளது. எத்தகைய நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்  கொண்டு வருகிறது என்பதைப் பெற்றோர்களினால் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு  பிள்ளைகளின் செயற்பாடுகள் மாறிவிட்டன. எதிர்பார்க்க முடியாத சம்பவமொன்றில் பிள்ளை சம்பந்தப்படுகின்றபோதுதான் பெற்றோரினால் அப்பிள்ளையின் விஸ்பரூபத்தை அடையாளம் காண முடிகிறது.

அந்தளவுக்கு திசைமாறிப் பயணிக்கும் புதிய தலைமுறையினர் குறித்த அவதானம் சமூகப் பொறுப்பாக்கப்பட வேண்டும் என்பது காலத்தின் அறைகூவலாகவுள்ளது. ஏனெனில், நாளைய தலைவர்களாக, துறைசார் வல்லுணர்களாக, நிபுணர்களாக, சமூகத்தையும், பிரதேசத்தையும், நாட்டையும் நல்வழிப்படுத்துபவர்களாக எதிர்காலத்தில் மிளிரவுள்ள புதிய தலைமுறையினர்; நற்பண்புகளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழிகாட்டப்படுவது அவசியமாகும். பெற்றோர்கள,; ஆசிரியர்கள் உட்பட ஒட்டுமொத்த சமூக உறுப்பினர்களும்; இந்த அவசியப் பொறுப்பைச் சுமக்க வேண்டியுள்ளது. 

புதிய தலைமுறையினரை வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு தவறும்பட்சத்தில், ஆரோக்கியமற்ற, சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடக் கூடிய சமூகமொன்றையே நாம் எதிர்காலத்தில் காண முடியும்.  அவ்வாறான ஆபத்தான நிலை உருவாக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின,; இன்றைய புதிய தலைமுறையினராகக் கருதப்படுகின்ற குறிப்பாக மாணவு சமூகம்; ஒழுக்க விழுமியத்துடனும,; பண்பாட்டுக் கலாசாரங்களுடனும், ஆன்மீக ஈடுபாட்டுடனும் வாழக் கூடியவர்களாக வீட்டுச் சூழலிலும,; பாடசாலைகளிலும், வழிபாட்டுத்தளங்களிலும் வழிகாட்டப்பட வேண்டியது காலத்தின் தேவையாக மாறியுள்ளது.

அறிவு மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணங்களினால் எவையெல்லாம் நவீன கலாசாரமென்று அறிமுகப்படுத்தப்படுகிறதோ, அவையெல்லாம்  அநாகரியமாக மாறி, புதிய தலைமுறையினரை வழி தவறிப் பயணிக்கச் செய்து கொண்டிருக்கிறது. நவீன கலாசார மோகத்திற்குள் தள்ளப்பட்டுள்ள இளைஞர், யுவதிகள் தங்களைத் தாங்களாகவே அழித்துக்கொள்வதையறியாது அழிந்துகொண்டிருக்கிறார்கள்.

முறை தவறிய அதிகளவிளான 'பேஸ்புக்', 'வட்சப்' என்ற சமூக வலையத்தளங்கள் மற்றும் தொலைபேசிப் பாவனை, போதைவஸ்த்துப் பயன்பாடு என்பவற்றுக்கு அடிமையாகி கால நேரங்களையும், பணத்தையும் வீண்விரையம்  செய்து. அழிவினதும், ஆபத்தினதும் விளைவுகளை விளங்கிக் கொள்ளாமல் அல்லது விளங்கியும் அவற்றிலிருந்து விடுபட்டுக்கொள்ள முடியாமல் மூழ்கித்; தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். 
சமூக மயமாக்கலில் ஏற்படும் தவறுகள் புதிய தலைமுறையினரை இவ்வாறான அதல பாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்கிறது. இதற்கான முழுப் பொறுப்பையும் புதிய தலைமுறையினரின்; சமூகமயமாக்களின் முகவர்களே சுமக்க வேண்டும். ஏனெனில், அவர்களின் வினைத்திறனற்ற வழிகாட்டல்கள் அல்லது வழிகாட்டல்களில் விடும்  தவறுகள் அல்லது விட்ட தவறுகள் எதிர்கால வளமான சமூகத்தைச் சின்னாபின்னமாக்கியிருக்கிறது. 

முகவர்களும் புதிய தலைமுறையினரும்

வாழும் சூழல் மற்றும் சமூகத்திற்கு ஏற்ற வகையில் வாழப் பழகிக் கொள்ளும் நெடுங்கால செயன்முறையை சமூக மயமாக்கல் என்று கூறப்படுகிறது. ஒரு பிள்ளையின் சமூக மயமாக்கலில் குடும்பம், சம வயதுக் குழுக்கள், பாடசாலை, கல்வி நிறுவனங்கள், மத வழிபாட்டுத்தளங்கள் என்பவற்றிற்கு மேலாக ஊடகமும் தாக்கம் செலுத்துக்கிறது. 

ஒரு பிள்ளை ஒழுக்க விழுமியமுள்ள பண்பாட்டுக் கலாசாரத்துடன் வீட்டுச் சூழலில் வளர்க்கப்படுமாயின் அப்பிள்ளை பாடசாலைச் சூழலில் ஏற்படும் பண்பாட்டு மாற்றத்தினாலும,; சம வயதுக் குழுக்களின் அழுத்தங்களினாலும் வழி தவறிச் செல்வதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படும். பிள்ளையின் நடத்தை, மனவெழுச்சிச் செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோர்களும், குடும்பத்தினரும், பாடசாலைச் சமூகமும் கவனத்திற்கொள்ளாது செயற்படுகின்றபோது அப்பிள்ளை சம வயதுக் குழுக்களினால் திசைமாற்றப்படுதைத் தடுக்க முடியாது.

அந்தவகையில,; தற்காலத்தில் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள், சமூகவலைத்தள பாவனைக்கு அடிமையாகி அநாகரிகமாகச் செயற்படும் சம்பங்கள் அதிகரித்துவிட்டதை அவதானிக்க முடிகிறது. மாணவர்கள் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடும் சம்பவங்கள் நகரப் புறங்களில் மாத்திமின்றி, கிராமப் புறங்களிலும் விரைவாக பரவி வருகிறது. நாகரிகம் என்ற பெயரில் கட்டிளமைப்பருவத்தினர் இப்போதைவஸ்த்துப் பாவனைக்குள் இழுத்துச் செல்லப்படுகின்றனர். 

பாடசாலை முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை போதைப் பொருட்களை இலகுவாகக் கொள்வனவு செய்வதற்கும,; அவற்றை வின்பனை செய்வதற்குமான நுட்பங்களை கட்சிதமாக போதைப் பொருள் வர்த்தக மாபியாக்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

பணத்தின் மீது அபரீத மோகம் கொண்ட மாபியாக்களின் மாய வலைக்குள் சிக்குண்டு தவிக்கும் மாணவர்களை இப்போதைப் பொருள் பாவனையிலிருந்து காப்பாற்றுவது காலத்தின் காட்டாயமாகும். அவர்களுக்கான சீரிய வழிகாட்டல்களை வழங்குவது சமூக மயமாக்கல் முகவர்களின் தார்மீகப் பொறுப்புமாகும் என்பதோடு போதைப்பொருள் வர்த்தக மாபியாக்களை சமூகங்களிலிருந்து விரட்டியடிப்பதற்கு எத்தகைய முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகிறதோ அவற்றில் எதிர்கால சமூகத்தின் மீது பற்றுக்கொண்ட அனைவரும் கைகோர்ப்பதும் காலத்தின் தேவையாகும்.

சமூக மயமாக்கல் முகவர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்ற பெற்றோர்களும், ஆசிரியர்களும் பிள்ளைகள் தொடர்பில் தங்களது பொறுப்பை அலட்சியப்படுத்துகின்றபோது அல்லது அவற்றில் அக்கறைகொள்ளாதபோது இத்தகைய மாபியாக்களினாலும,; மாபியாக்களின் முகவர்களாகச் செயற்படுகின்ற சில சம வயதினர்களினாலும் பல மாணவர்கள் தவறான வழிகளின்பால் இழுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பணப் பேராசை பிடித்த போதைப்பொருள் விற்பனை மாபியாக்கள் புதிய தலைமுறையினரை அழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றதொரு அபாயகரமான விடயத்தை சமூகத்திலுள்ள முக்கியமானவர்கள் முழுமையாக உணர்ந்து இதற்கெதிரான நடவடிக்கைகளை வினைத்திறன் மிக்கதாகவும் விளைத்திறன்மிக்கதாகவும் முன்னெடுப்பதற்கு இன்றுவரை முன்வராமல் மாற்றான்தாய் மனப்பாங்குடன் செயற்படுவது இத்தகைய மாபியாக்களின் நடவடிக்கைகளுக்கு மறைமுக ஒத்துழைப்பை வழங்குகிறார்களாக என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. 

மாணவர்களும் போதைப் பொருள் பாவனையும்

நாடளாவிய ரீதியிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையில் 14 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களில் 13 வீதத்தினார் ஏதாவதொரு வகைப் போதைக்கு அடிமைப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கைகள் மூலம் அறிய முடிகிறது. அடிமைப்பட்டுள்ளவர்களில் ஆண் மாணவர்களே அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். இவ்வாறு அடிமைப்பட்டவர்களில் பலர் பல்வேறு உடல், உள பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு உட்பட தென்னிலங்கை அடங்கலாக மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுகின்றமையை அங்காங்கே இடம்பெறுகின்ற சம்பங்கள் நன்கு புடப்போடுகின்றன. 

இந்நிலையில், வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நண்பர்கள் என புதிய தலைமுறையினர் அங்காங்கே ஒன்று கூடுவதும் அவ்வொன்று கூடலில் போதைப்பொருள் பாவனை உட்பட பல்வேறு விரும்பத்தாக விடயங்களில் ஆண்களும் பெண்களும் ஈடுபடுவதும் என்ற அநாகரிக மோகம் எல்லை கடக்கும் நிகழ்வுகள் அரங்;கேற்றப்பட்டுக் கொண்டிருப்பதானது புதிய தலைமுறையினர் ஆபத்துக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் வாத்துவ பிரதேசத்திலுள்ளதொரு ஹோட்டலில் 1000 சமூக வலைத்தள நண்பர்கள் ஒன்று கூடிய நிகழ்வொன்றில் ஹோட்டல் மண்டபத்தில் ஏற்பட்ட வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக மூன்று பேர் உயிர் இழந்த சம்பவமும், கடந்த மே மாதம் ஹிக்கடுவையில் இவ்வாறு ஒன்று கூடியவர்கள் போதைவஸ்த்து பாவனையில் ஈடுபட்டிருந்த நிலையில் பெலிஸாரினால் கைது செய்யப்பட்ட இச்சம்பவமும் புதிய தலைமுறையினர் ஆபத்துக்ளின் வழி பயணிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. 

இவ்வாறு ஆபத்துக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருப்பவர்களில் பாடசாலை மாணவர்களும் உள்ளடக்கப்படுவதானது  விழுமியமுள்ள எதிர்கால சமூகமொன்றைக் கட்டியெழுப்ப முடியுமா? என்ற சந்தேசகத்தை வலுவடையச் செய்து கொண்டிருக்கிறது என்றே கூற வேண்டியுள்ளது.

மாணவர்கள் போதைப் பொருள் மற்றும் சமூகவலைத்தளங்களுக்கு அடிப்பட்டு இடம்பெறுகின்ற சம்பவங்கள் தென்னிலங்கையில் மாத்திரிமின்றி, வடக்கு கிழக்கிலும் அதிகரித்திருப்பது சமூக பிரச்சினைகளைத் தோற்றுவித்திருக்கிறது. வடக்கு கிழக்கில் கடந்த காலங்களில் நிலவிய அசாதாரண சூழ்நிலை தற்போது இல்லை என்றபோதிலும், போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டவர்களினால் புரிப்படுகின்ற குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டதை அரசியல் வாதிகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை குறிப்பிட்டுக்காட்டுவதைச் சுட்டிக்காட்ட வேண்டும். 'வடக்கு கிழக்கு இளைஞர்களை இலக்கு வைத்து தீய சக்திகள் இயங்குகின்றன. அவை போதைப் பொருள் பாவனை மற்றும் சட்டவிரேராத நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றன என வடக்கு அரசியல் தலைமைகளினால் கூறப்பட்டு வருவதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். 
இவ்வாறுதான் கிழக்கிலும் மாணவர்களிடையே போதைப் பொருள் பாவனை அதிகரித்திருக்கிறது என்ற தகவல்களும் தற்போது வெளிவரத் தொடங்கியிருக்கிறது. போதை தலைக்கேரி மாணவர்கள் புரியும் அட்டகாசங்களினால்; அவர்களைக் கைது செய்ய சட்ட நடவடிக்கை எடுக்க பாடசாலை அதிபர்களாலேயே பொலிஸாருக்கு தகவல் வழங்கும் நிலை உருவாகியிருப்பது எதிர்கால சமூகம் தொடர்பில் அதிகம் சிந்திக்க வேண்டும் என்ற செய்தியைச் கூறி நிற்கிறது.

2020 ஆண்டில் போதைப் பொருள் பாவனையற்ற நாடாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சுகாhதார  அமைச்சராக இருந்த காலம் தொட்டு இந்நாட்டிலிருந்து போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
  
இவ்வாறான நிலையில்,, போதைப் பொருள் நாட்டிற்குள் கொண்டு வரப்படுவதையும்,  விற்பனை செய்யப்படுவதையும். பயன்படுத்தப்படுவதையும் இன்னும் தடுக்க முடியாமலே உள்ளமை துரஷ்ட வசமாகும். சட்டம் முறையாகச் செயற்படுத்தப்படாமையும் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களின் பணியில் காணப்படும் வழுக்கலுமே போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதையும,; பயன்படுத்தப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க முடியாமல் உள்ளதாக சமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

மாபியாக்களும் போதைப் பொருள் விற்பனையும்

தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாபுல், பீடா, பன்பராக், மாவா போன்றவற்றின் பாவனைகள் அதிகரித்துவிட்ட நிலையில் பல்கலைக்கழக மாணவர்களும்  கேரளக் கஞ்சாப் பாவனையில் ஈடுபடுவதாகக் குறிப்பிடப்படுகிறது. யார் எவ்வாறு அழிந்தாலும் தங்களது வர்த்தகமும் அதனால் கிடைக்கின்ற வருமானமும் எந்தவிதத்திலும் குறைந்துவிடக் கூடாது என்ற பணத்தின் மீது பேராசை கொண்ட மாபியாக்களினால் எதிர்கால சந்ததியினர் அழிந்துபோதை எவ்வாறு அங்கீகரிக்க முடியும். 

மிகவும் வெளிப்படையாகவும,; மறைமுகமாகவும,; வீதியோரக் கடைகளிலும் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகச்; சூழலில் விற்கப்படும் இத்தகைய பொருட்கள் சில மாணவர்களினால் வகுப்பறைகளுக்குள்ளேயே பயன்படுத்தப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன. 

சமகால மாணவ சமூத்தினரினால் பயன்படுத்தப்படுகின்ற இத்தகைய பொருட்கள் 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட  மதுசாரம் மற்றும் புகையிலைத் தடைச் சட்டத்தின் கீழ் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தடுக்கப்பட்டுள்ள இப்பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு சட்டம் சரியாக அமுல்படுத்தப்படாமல் இருப்பது இந்நாட்டின் எதிர்காலத்தை சந்ததியினரின் ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கலாம். 

எதிர்கால சந்தியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பதை அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் புடம்போடுகின்றன. கடந்த வருடங்களில்; இடம்பெற்ற குற்றச் செயல்களில் குற்றவாளிகளாகக் கருதப்பட்டவர்களில் கனிமான எண்ணிக்கை கொண்டவர்கள். 15க்கும் 20 வயதுக்குமிடைப்பட்டவர்களும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுமே இக்குற்றச் செயல்கள் சிலவற்றில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நாகரிக கலாசாரத்திற்குள் மூழ்கித் தத்தளிக்கும் மாணவர்கள் தெருவோரக் கடைகளில் விற்கப்படுகின்ற  போதை தரக் கூடிய பாவனைப் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஆளாகி தங்களைத் தாங்களாவே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். 

பணத்தை மாத்திரம் மையப்படுத்தி போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோர். வளரும் இளம் சந்ததியினரை ஆண்மையற்றவர்களாக பிள்ளைப் பேற்றில் பலவீனமானவர்களாக இன்னும் பல்வேறு உடல் உபாதைக்கு தளப்படக் கூடியவர்களாக மாற்றுகிறார்கள் என்பதை மறந்து இவர்கள்; பணத்தில் கொண்ட பேராசையினால் இத்தகைய போதைப் பொருட்களின் விற்பனையில் ஈடுபடுகிறார்கள். இத்தகையவர்களின் பண ஆசைக்கு பலியாகும் அப்பாவி மாணவர்களைக் காப்பாற்ற வேண்டியது பெற்றோர்களினதும், ஆசிரியர்களினதும் மற்றும் சமூகத்திலுள்ள ஒவ்வொரு நல்லுள்ளம் படைத்தவர்களின் கட்டாயப் பொறுப்பாகவுள்ளது. அதிலும் பாடசாலைகள் இவ்விடயத்தில் அக்கறை செயலுத்துவது இன்றிமையாதது.
கல்வியை வர்த்தகமாகக் கொண்டுள்ள ஒரு சில பாடசால ஆசியர்கள் கல்வி வர்த்ததகத்தில் காட்டுகின்ற அக்கறைக்குச் சமாந்திரமாக மாணவர்கள் வழிதவறாது ஒழுக்க விழுமியமிக்கவர்களாக பாடசாலைகளிலும், சமூக வாழ்விலும் மிளிர வழிகாட்ட வேண்டுமென்பது சமூக ஆர்வலர்களின் ஆவாவாகவுள்ளதையும் இங்கு பதிவிட வேண்டியுள்ளது.  

விழுமியக் கல்வியும் வழிகாட்டலும்

அநாகரீகப் போதைக்குள் விழுந்து தத்தளிக்கும் புதிய தலைமுறையினருக்கு ஒழுக்க விழுமியங்களாடு வாழ்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்படுவது அவசியமாகும். சமூக, பொருளாதார, குடும்ப சீரழிவை ஏற்படுத்தும்  ஒழுக்கவிழுமியமற்ற நடத்தைப் பிறழ்வுகளிலிருந்து எதிர்கால சமூகத்தைப் பாதுகாக்கவும்  ஒழுக்கவிழுமியமிக்க எதிர்கால சமூகத்தை உருவாக்கவும் விழுமியக் கல்வித்திட்டமும் விரசமற்ற பாலியல் கல்வியும் முறையாக பாடசாலைகளில் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை குறித்து சமகாலத்தில் பேசப்பட்டு வருகின்றன.

இலங்கையில் மாணவப் பருவத்திலுள்ளவர்களும் பாலியல் நோய்த்; தொற்றுகைக்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பில் மாணவர்கள் அறிவூட்டப்படுவது அவசியமாகவுள்ளது. இதற்கு பாடசாலைகளில் பாலியல் கல்வி கட்டாயமாக்கப்படுவது அவசியம் என்ற கருத்துக்கள் பரிமாறப்பட்டு வந்தாலும,; மாணவர்களை அறிவூ10ட்;டுவதற்காக பாடசாலைகளில் பாலியல் கல்வி நடைமுறைப்படுத்தப்படுகின்றபோது இக்கல்வி நடவடிக்கைகளும் அதன் பாடப்பரப்புக்களும் பாலியல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக அமைந்து விடாத வகையில் இப்பாடதுக்கான பாடவிதான அலகுகள் தயார்படுத்தப்படுவது அவசியமாகும். 

சமூக ஒழுங்குப் பிறழ்வுகள், பயில் நிலை வழியாகச் சீர்படுத்தப்பட வேண்டுமாயின் பாடசாலைக் கலைத்திட்டத்தில் அனுபவங்கள்  உள்ளடக்கப்பட வேண்டும். பாடசாலைக் கலைத்திட்ட அமைப்பியலையும் அதன் சமகாலச் செயல் நிலைகளையும் ஆராய்ந்து பார்க்கும்பொழுது  மாணவர்களிடையேயும் ஒரு சில ஆசிரியர்களிடையேயும் ஆரோக்கிய மனவெழுச்சிக்குரிய பயிற்சிகள் போதாமல் இருப்பது தெளிவாகிறது. இதனைப் புடம்போடும் வகையில், சில சம்பவங்கள் சில பாடசாலைகளில் இடம்பெற்று வருகின்றன . இதனால், ஆரோக்கியமான மனவெழுச்சிக்குரிய பயிற்சிகளும் விழுமியக் கல்வியும் ஒன்றிணைந்தவையாகக் காணப்படுவது அவசியமாகும். 

தற்கால மாணவ சமூகத்தினதும் சில ஆசிரியர்களினதும் மனவெழுச்சிகள், மனப்பாங்குகள், நடத்தைக்கோலங்களை உற்றுநோக்குகின்றபோது அவை ஆரோக்கியமானதாக அமையவில்லை. அவ்வாறுதான் சில பல்கலைக்கழக விரிவுரையாளர்களின்; நடத்தைக் கோலங்களும் காணப்படுகின்றன. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக ஒரு விரிவுரையாளர் குற்றஞ்சாட்டப்பட்டு பணியிலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் கல்வி நிறுவனங்களின் விழுமியக் கோட்பாடுகளை  கேள்விக்குட்பட்டுத்தியுள்ளது.

வீட்டுச் சூழலிலும், பாடசாலையிலும் பலவீனமடைந்துள்ள விழுமியங்களும், வழிகாட்டல் ஆலோசனை நடவடிக்கைகளும் சமூக முகவர் நிலையங்களிலும், மத வழிபாட்டுத் தளங்களிலும் பலமிக்கதாக்கப்படுவது காலத்தின் அவசியமாகும். இதன்மூலம். ஆபத்துக்குள் சிக்கித் தவிக்கும் புதிய தலைமுறையினரை சமூக விழுமியங்களையும்,  ஒழுக்க நெறிகளையும் பின்பற்றுகின்ற, கட்டுக்கோப்புக்குள் வாழுகின்ற எதிர்கால ஆரோக்கியமான நாகரீமிக்க சமூகமொன்றாககக் கட்யெழுப்ப முடியுமென்பதுடன் பரிதாபகரமான, நாகரீகமற்ற நிகழ்வுகளையும் அதன்பாதிப்புக்களையும் தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதும் நிதர்சனமாகும்.

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment