பாகிஸ்தான் தேர்தலும் - இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் தோல்வியும் - sonakar.com

Post Top Ad

Saturday 4 August 2018

பாகிஸ்தான் தேர்தலும் - இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் தோல்வியும்


இம் மாதம் ஜூலை 25 ஆம் திகதி   உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் ஒன்றான,   அணு ஆயுதப்   பலம் மிக்க   நாடான பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று இதில்  இம்றான் கான் தலைமையிலான தஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சி (Pakistan Tehreek-e-Insaf (PTI)) பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது, அவர் மதீனாவின் ஆட்சியை போன்று ஆட்சி அமைக்கப்போவதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது , இதேவேளை இந்த தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ள இஸ்லாமிய அரசியல் கட்சிகள் குறிப்பாக முற்போக்கான இஸ்லாமிய அரசியல் சக்திகள்    இம்றான் கானின் வெற்றி பாகிஸ்தான் அரசியலில் ''மதசார்பற்ற , மற்றும் லிபெரல் அழுத்த குழுக்கள் வீரியமாக தொழிப்படவும் , மதசார்பற்ற அரசியல் முறைமையை  '' பாகிஸ்தானில்  உள்நுழைக்கவும் சந்தர்ப்பத்தை வழங்கலாம் என கூறியுள்ளன, பாகிஸ்தான் உருவானத்தில் இருந்து அது ஒரு இஸ்லாமிய குடியரசாக செய்லபடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றார்கள் .  தெற்கு ஆசியாவில் சுமார்  207 மில்லியன் மக்களைகொண்ட பாகிஸ்தானில் சுமார் 106 மில்லியன் பேர்  வாக்காளர்களாக பதிவு செய்திருந்தார்கள் ,  பகிஸ்தான் உலகில் ஆறாவது பெருந்தொகை மக்களை கொண்ட நாடு  , அதிலும் முஸ்லிமகளை கொண்ட நாடு தெற்கு ஆசிய பிராந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய நாடு,  அதுமட்டுமல்லாமல் மேற்குநாடுகளும் அதன் எஜமானர்களான சயோனிச சக்திகளும்   இஸ்லாத்தின்  எழுச்சியை முடக்க ஒரு கருவியாக பயன்படுத்தப்படும் நாடு என சில ஆய்வாளர்களினால் வர்ணிக்கப்படும் நாடு என்ற வகையிலும்  பலவீனமான பொருளாதாரத்தை கொண்ட நாடானாலும்  வளரும் பொருளாதாரத்தை  கொண்ட நாடு என்ற ரீதியிலும்  இதன்   முக்கியத்துவம் பிராந்திய மற்றும் சர்வதேச அரங்கில்  கவனத்தை பெற்றுள்ளது

இந்த தேர்தலில் சுமார் 30 கட்சிகள் போட்டியிட்டாலும் முக்கிய செல்வாக்கு உள்ள கட்சிகளாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி (Pakistan Muslim League-(PMLM )) , பாகிஸ்தான்  கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்  இம்றான் கான் தலைமையிலான தஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சி (Pakistan Tehreek-e-Insaf (PTI)) , பெனாசீர்  புட்டோவின் மகன் பிலாவல் புட்டோவின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி  (the Pakistan Peoples Party (PPP)) , பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமி உள்ளடக்கிய ஐந்து  இஸ்லாமிய கட்சிகளின் கூட்டணியான  மஜ்லிஸ்-ஏ-அமல் கூட்டணி (The Muttahida Majlis-i-Amal (MMA) ஆகியன பாகிஸ்தான் தேசிய அரசியலிலும் ,பிராந்திய அரசியலிலும் செல்வாக்கு செலுத்தும் கட்சிகளாக பார்க்கப்படுகின்றது. 

இந்த தேர்தல் 272 பாராளுமன்ற ஆசனங்களுக்காகவும்   மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய நான்கு  மாகாண சபைகளுக்குமான   தேர்தளாக   நடைபெற்றுள்ளது  

சுமார் 800 ஆண்டுகளுக்கும் அதிகமாக முஸ்லிம்கள் ஆட்சி செய்த இந்து சமுத்திர   நிலப்பரப்பில் 1947ஆம் ஆண்டு இந்தியா ,பாகிஸ்தான் என்ற நாடுகள் உருவானது தொடக்கம்  பாகிஸ்தான்  மக்களாட்சி மற்றும் இராணுவ ஆட்சிக்கு இடையிலான செல்வாக் கிற்கு   உட்பட்டு வந்துள்ளது,  பாகிஸ்தான் அந்நாட்டு மக்களினால் ஆளப்படுவதை விடவும் வெளி சத்திகளினால் ஆளப்படுவதே  அதிகம் என சில முன்னணி அரசியல் ஆய்வாளர்கள் கூறிவரும்  நிலையில்இந்த தேர்தல் பற்றி குறிப்பிட்டிருந்த  சில  ஆய்வாளர்கள்   பாகிஸ்தான் வரலாற்றிலேயே தேர்தலின் ஊடாக முறையாக  மக்களினால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்திடம்  ஆட்சியை ஒப்படைப்பது  இது இரண்டாவது முறையாக நடக்கவிருக்கிறது இது உண்மையில் மிக மகிழ்ச்சியான விடயம் என சுட்டிக்காட்டுகிறார்கள்.

....ஆனால் பாகிஸ்தானில் அரசு உருவாவதும்   அது அதிகாரத்துக்கு வருவதும் அரசியல் புன்புலம் கொண்ட குடும்பங்கள், மற்றும் இராணுவ செல்வாக்கு ஆகியவற்றின் உதவி இல்லாமல்  இயலாத ஒன்றாகவே இன்றும்  இருக்கின்றது என்பதைத்தான் நவாஸ் ஷரீப் அதிகாரத்துக்கு வருவதற்கு காரணமாக இருந்த அரசியல் குடும்பங்கள்   இம்ரான் கானின் அரசியல் பிரசார மேடைகளில் காணப்படுவதும்  ,இராணுவம் இம்ரானுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டுவருவதும் உறுதிப்படுத்துவதாக உள்ளது  என இன்னும் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் . பாகிஸ்தான் அரசியலில் குறித்த அரசியல் பின்புலம் கொண்ட குடும்பங்களின் ஆதரவையும் ,இராணுவத்தின் ஆதரவையும் பெற்றுக்கொண்ட கட்சிதான் அரசாங்கத்தை அமைகின்றது என பாகிஸ்தான் அரசியல் ஆய்வாளர்கள் பலரும் கூறிவருகிறார்கள், இந்த பின்னணியை  விளங்கிக்கொண்டு இந்த தேர்தல் பற்றி பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும் . 

25ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற  தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் பாகிஸ்தான்  கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்  இம்ரான் கான் தலைமையிலான தஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சி (Pakistan Tehreek-e-Insaf (PTI))  முன்னிலை வகிக்கின்றது , அறுதிபெரும்பான்மையை பெறமுடியாவிட்டாலும் ,சாதாரண பெரும்பான்மை பெற்று அல்லது கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைத்து வெற்றியை இக் கட்சி நிலைநாட்டிக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது  ஆனால் இந்த தேர்தல் முடிவை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன .

இந்த கட்டுரை எழுதப்படும் நேரம்வரை வெளியான முடிவுகளின் பிரகாரம் மொத்தமாக  272 தொகுதிகளில் தஹ்ரீக்-ஏ-இன்சாப்  கட்சி 116 ஆசனங்களை  கைப்பற்றியுள்ளது அதற்கு அடுத்தநிலையில்
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி (Pakistan Muslim League)  64 ஆசனங்களை கைப்பற்றியுள்ள நிலையில்,
பிலாவல் புட்டோவின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி  (the Pakistan Peoples Party (PPP))  43 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது 

பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியை உள்ளடக்கிய ஐந்து இஸ்லாமிய கட்சிகளின் கூட்டணியான  மஜ்லிஸ்-ஏ-அமல் கூட்டணி (The Muttahida Majlis-i-Amal (MMA) ,) இதுவரை 12 ஆசனங்களை   கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது தேர்தல் முடிவை தாம் சந்தேகிப்பதாகவும்  நிராகரிப்பதாகவும் ஒரு வாக்கு விளையாட்டு இடம்பெற்றுள்ளதாகவும் இந்த கூட்டணியும் அறிவித்திருந்தது .

 சுயேச்சை வேட்பாளர்கள் 23 ஆசனங்களை   கைப்பற்றியுள்ளனர்   .  இத் தேர்தலில் 137 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சியமைக்க முடியும் என்றவகையில்  இம்ரான் கானின் கட்சி கூட்டாக ஆட்சி அமைப்பதை தவிர வேறுவழியில்லை .  மொத்தம்  342 பாராளுமன்ற ஆசனங்களில்  272 ஆசனங்களுக்கு   மட்டுமே தேர்தல் மூலமாக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றார்கள்  . மீதமுள்ள  60 ஆசனங்களில்  பெண்களுக்காகவும், 
சிறுபான்மை மதத்தினருக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கட்சிகள் இறுதியாக பெரும் ஆசனங்களை பொறுத்து மூன்றாவது நான்காவது நிலையில் இருக்கும் கட்சிகள் அரசை தீர்மானிக்கும் ( king maker ) சகதியாக மாறும்,  தற்போது உள்ள முடிவுகளின் படி பார்த்தால் இம்ரான் கான் தலைமையிலான தஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சியுடன் இணைத்து ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக  பிலாவல் புட்டோவின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி அல்லது  இஸ்லாமிய கட்சிகளின் கூட்டணியான  மஜ்லிஸ்-ஏ-அமல் கூட்டணி மற்றும் சில சுயேட்சைகளுக்கும் இந்த சந்தர்ப்பம் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டாலும் பிரதான இரு கட்சிகளை அவர் நிராகரித்திருந்த நிலையில் மிக சில கட்சிகளுடனும் சுயேச்சை உறுப்பினர்களுடனும் அவர் பேசிவருவகாக தெரிவிக்கப்படுகிறது 

இதேவேளை மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷரீப்பின் குடும்பத்தினருக்கு ஊழளுடன்  தொடர்பு இருப்பதை நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, ஷரீப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்   அண்மையில் பாகிஸ்தான் நீதிமன்றம் ஊழல் குற்றச்சாட்டில் நவாஸ் ஷரீப்புக்கு பத்து ஆண்டு சிறையும்  அவரது மகள் மரியத்திற்கும் 7 ஆண்டுகள் சிறையும்  தண்டனையாக  விதித்திருந்தது .

கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள சாபஸ் ஷரீப், நவாஸ் ஷரீபின் சகோதரர்.  அவர்தான் தற்போது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் முன்நிறுத்தப்பட்டிருந்தார் இந்த கட்சியின் பின்னடைவுக்கு ஊழல் குற்றசாட்டுகளை எதிர்கொண்டமை பிரதான காரணமாக தெரிவிக்கப்படுகின்றது 

இதேவேளை இந்த தேர்தலில் இராணுவம் மற்றும் உளவு அமைப்புக்கள் இம்ரான் கானின் தலைமையிலான கட்சிக்கே தமது வெளிப்படையான ஆதரவை தெரிவித்தாக இவர்களினால்   பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது

நீதிமன்றத்தின் உதவியுடன் நாட்டின் சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பான இராணுவம் தங்களை இலக்கு வைத்து செயல்படுவதாக PML  கட்சி குற்றம்சாட்டியுள்ளது .இதேவேளை  தேர்தலில் மோசடி செய்ய "மோசமான, தீவிரமான மற்றும் இடைவிடாத முயற்சிகள்" மேற்கொள்ளப்படுவதாக கூறும் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம், இது "முறையான மக்களாட்சிக்கு பாகிஸ்தான் மாறுவதில் ஆபத்தான தாக்கங்களை" ஏற்படுத்தும் என்று எச்சரித்திருந்தது 


பாகிஸ்தானின் 70 ஆண்டுகால வரலாற்றில், தேர்தல் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி
மாற்றம் நடைபெறுகின்றது மகிச்சியான விடயம் என்றாலும் இராணுவத்தின் செல்வாக்கு  கவலைதரும் விடயமே . இதேவேளை இதுவரை பதவி வகித்த எந்த பிரதமரும் தமது ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

பாகிஸ்தான் உருவான போது இந்தியாவிடம் இருந்து வந்த எதிர்ப்பை சமாளிக்கவும் கிழக்கு பாகிஸ்தானை( பங்களாதேஷை  ) இழந்ததை போன்று கஸ்மீரையும் எதிர்காலத்தில் இழந்துவிடக்கூடாது என்ற நியாங்களை முன்வைத்து பாகிஸ்தானில் இராணுவம் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தது ஆனாலும் பிற்பட்ட காலங்களில் அமெரிக்க ,மேற்கு நாடுகளின் செல்வாக்கு இந்த இராணுவத்தின் ஊடக பாகிஸ்தானின் மீது செலுத்தப்படுவதாக குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது பாகிஸ்தான் இராணுவம் ஒரு அரசாங்கத்துக்குல்  மற்றுமொரு அரசாங்கமாக செயல்படுவதாக பலமான குற்றசாட்டுகள் உண்டு, இந்தியாவின் உளவு அமைப்புக்களின் செயல்பாடுகள் மற்றும் காஸ்மீரில் இந்திய  இராணுவம் மேற்றுகொண்டுவரும் நடவடிக்கைகள் என்பன இராணுவத்தின் செல்வாக்கை பாகிஸ்தானில் அதிகரிக்க காரணமாக மாறியுள்ளது . 

முன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவர்   இம்ரான்கானின்  PTI , (பாகிஸ்தான் தஹ்ரிக்-இ-இன்சாப்) கட்சி, பாகிஸ்தானின் பிரதான எதிர்கட்சியாக உள்ளது. ஆனால் PTI இதுவரை நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில்லை. இந்தமுறை, இம்ரான்கான் இராணுவத்திற்கு விருப்பமான பிரதமர் வேட்பாளராக இருப்பதாலும், இராணுவம் பிற கட்சிகளுக்கு எதிராக செயல்படுவதாலும் இம்ரான்கானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சில  அரசியல் ஆய்வாளர்கள்  குறிப்பிட்டிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது . இதை இம்ரான்கானும், இராணுவமும் மறுத்திருந்தார் .  ஆனால் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜென்ரல் பாஜ்வா, இம்ரான்கானைப் போன்ற ஜனநாயகத்திற்கு ஆதரவானவரை இதுவரை பார்த்ததில்லை என்று கூறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர் 

இதேவேளை ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற  பிலாவல் பூட்டோ ஜர்தாரி, வலுவான குடும்ப  அரசியல் பின்புலம் கொண்டவர் இவர் .  பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் பூட்டோவின் பேரனான பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் தாய் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் மகனாவார் , 28 வயது இளைஞரான இவர்  பிலாவல் பூட்டோ ஜர்தாரி,  "அமைதியான, முற்போக்கான, வளமான, ஜனநாயக பாகிஸ்தான்" என்ற முழக்கத்துடன் தேர்தலில் களம் இறங்கியிருந்தார் . PPP  கட்சி இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என தேர்தல் கணிப்புகள் குறிப்பிட்டிருந்தன . 


பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியை உள்ளடக்கிய இஸ்லாமிய கட்சிகளின் கூட்டணியாக  மஜ்லிஸ்-ஏ-அமல் கூட்டணி (The Muttahida Majlis-i-Amal (MMA) ,)  முந்திய அடைவுகளுடன் ஒப்பிடும்போது பின்னடைவையே சந்தித்துள்ளது என தகவல்கள் குறிப்பிடுகின்றன  , பாகிஸ்தானின் அரசியலில் பல்வேறு கட்சிகள் மத உணர்வுகளை கிளறிவிட்டு செல்லப்பட்டு வந்தாலும் அவற்றுக்கிடையில் இந்த கூட்டணி முதற்போக்கான ஒன்றாக பார்க்கப்படுகின்றது .


2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கூட்டணியில்   Jamiat Ulema-e-Islam- (JUIF), Jamaat-e-Islami (JI), Jamiat Ahle-e-Hadith, Jamiat Ulema-e-Pakistan-Noorani (JUPN) and Tehreek-e-Islami (TI). ஆகிய இஸ்லாமிய அமைப்புக்கள்  அங்கத்துவம் பெற்றன இந்த கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர் 6 வீதமாக இருந்த இஸ்லாமிய அரசியல் சகதிகளின் வாக்குப்பலம் 11 வீதத்தை எட்டியது இந்த கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதல் தேர்தலில் 60 பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியாக விளங்கியது  மட்டுமின்றி  மாகாண மட்டத்திலும் அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டது குறிப்பாக கைபர் பக்துன்வா (Khyber Pakhtunkhwa)  மாகாணத்தில் பெருன்பான்மையை கைப்பற்றி ஆட்சி அமைத்தது மற்றும் பலுசிஸ்தான் (Balochistan)  மாகாணத்தில் ஆட்சி அமைப்பதத்திற்கு உதவியது என்றாலும் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலை இந்த கூட்டணியில் ஜமாத்தே இஸ்லாமி  புறக்கணிக்க ஏனைய காட்சிகள் வித்தியாசமான முடிவுகளை எடுத்திருந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில்  இக்கூட்டணி பாரிய சரிவை சந்தித்தது   கைபர் பக்துன்வா  மாகாணத்தை  இம்ரான் கான் தலைமையிலான Tehreek-e-Insaf (PTI) இடம் பறிகொடுத்திருந்தது.

இதன் பின்னர் இந்த ஆண்டு 2018 மீண்டும்  கூட்டணி காட்சிகள் தம்மை வலுவான கூட்டணியாக மீள் ஒழுங்கு படுத்திக்கொண்டன ( ஆனால்  Maulana Samiul Haq’ தலைமையிலான    the Jamiat Ulema-e-Islam (JUIS))  கட்சி இக்  கூட்டணியில் இணைந்துகொள்ள வில்லை மற்ற   இஸ்லாமிய காட்சிகளை கொண்ட இக்கூட்டணி இத் தேர்தல் களத்தை சந்தித்துள்ளது இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய அரசியல் அமைப்புக்களின் அரசியல் சிந்தனை மற்றும் அரசியல் முதிர்ச்சி வேறுபட்டவையாக காணப்படுகின்றது இவற்றுள் ஜமாத்தே இஸ்லாமி கட்சி முற்போக்கான அரசியல் சிந்தனை கூறுகளை கொண்டிருந்தாலும் நடைமுறை அரசியலில் களத்தில்  பல்வேறு எல்லைப்படுத்தும் காரணிகளினால் (Limiting factors ) அதன் எழுச்சி சவால்களை எதிர்கொண்டுள்ளது

இந்த கூட்டணியின் தற்போதைய தலைவராக JUIF’ கூட்டணி கட்சியின் Maulana Fazlur Rehman செயல்படுகிறார்  இதன் செயலாளராக ஜமாத்தே இஸ்லாமியின்  Liaqat Baloch செயல்படுகிறார்

இக்கூட்டணி இந்த தேர்தலில் மக்களின் அரசியல் ஆதரவு தளத்தில் பின்னடைவுகளை சந்தித்துள்ளது  என்ற  தகவல்கள் உண்மையானால்  இந்த நிலையில் கண்டிப்பாக தம்மை அரசியல் தத்துவார்த்தநோக்கிலும்,  நடைமுறை அரசியல் அரங்கிலும்    மீள் ஒழுங்கு படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும் , பாகிஸ்தான் இஸ்லாமிய அமைப்புக்கள் துருக்கி , டினூசியா ஆகிய நாடுகளின் இஸ்லாமிய பின்புலம் கொண்ட கட்சிகள் அமைப்புகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய பாடங்கள் உண்டு என பாகிஸ்தானின் இஸ்லாமிய செயல்பாட்டாளர்கள் சிலர் கூறிவருவது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.

இஸ்லாத்தை தம் உயிரிலும் மேலாக, உணர்வுபூர்வமாக பின்பற்றும்  மக்களை கொண்ட நாடு என வர்ணிக்கப்படும் பாகிஸ்தானில்   இஸ்லாமிய அரசியல் கட்சிகள் தோல்வியை சந்தித்துள்ளமை நடைமுறை அரசியலில் அவை கற்றுக்கொள்ள வேண்டியவையும் ,நடைமுறைப்படுத்த வேண்டியவையும் நிறையவே இருக்கின்றது என்ற சாதாரண பாடத்தைத்தான்  கற்றுத்தருகின்றது .என்பதுடன் இம்றான்கான் இறைவனின் இறுதித்தூதரின் மதீனா ஆட்சியை பாகிஸ்தானில் பிரதிபலிப்பாரா  அல்லது பாகிஸ்தானின் முன்னாள் தலைவர்களின் ஒரு புதிய பிரதியாக செயல்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

-எஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி) 

No comments:

Post a Comment