பெருநாளும் எதிர்கால மாற்றமும் - sonakar.com

Post Top Ad

Wednesday 22 August 2018

பெருநாளும் எதிர்கால மாற்றமும்


இற்றைக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நபி இப்றாகிம் (அலை) அவர்கள் இறை கட்டளையை ஏற்று புரிந்த தியாகத்தை உலக முஸ்லிம்கள் இன்றைய நாட்களில் நினைவு கூறிக் கொண்டிருக்கிறார்கள். நபி இப்றாகிம் (அலை) அவர்களும் அவர்களின் குடும்பமும் பல சவால்களுக்கும், சோதனைகளுக்கும் மத்தியிலும் வல்ல இறைவனின் கட்டளைக்கு மாறு செய்யாது புரிந்த தியாக வரலாறானது இவ்வுகின் இறுதி நாள் வரை புனித ஹஜ் கடமையினூடாக நினைவூட்டப்பட்டுக் கொண்டே இருக்கும்.


பொதுவாக சவால்கள் வெற்றி கொள்ளப்பட வேண்டுமாயின் அச்சவால்களை வெற்றிகொள்வதற்காக பல்வேறு விடயங்கள் தியாகம் செய்யப்படுவது அவசியமாகும்.  அந்தவகையில், ஒரு சமூகம் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள வேண்டுமாயின் அச்சமூகம் அச்சவால்களை வெற்றிகொள்வதற்காக ஒற்றுமைப்படுவதும் அதற்காக தியாகங்கள் புரிவதும் இன்றியமையாததாகும். அத்தகைய தியாகத்தை புனித ஹஜ் கடமையானது உணர வைக்கிறது. ஒவ்வொரு வருடமும் நிறைவேற்றப்படும்  ஹஜ் கடமையானது ஒற்றுமை மற்றும் தியாகம் தொடர்பில் பல படிப்பினைகளையும் கற்றுத் தருகிறது. ஹஜ் கற்றுத்தரும் படிப்பினைகள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஒற்றுமையும், ஒற்றுமைப்படுவதற்கான அல்லது ஒற்றுமைப்படுத்துவதற்கான தியாகமும் அத்தியாகத்துடனான செயற்பாடுகளும்; சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த வழிவகுக்கும். சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தியாக மனப்பாங்கு ஒவ்வொருவரது சிந்தனையிலும் ஏற்பட வேண்டும். சிந்தனை மாற்றப் பெறும்போது மனப்பாங்கிலும் மாற்றம் ஏற்படும். அம்மாற்றமானது  செயற்பாடுகளிலும் நல்ல மாற்றத்தை உருவாக்கும் அவ்வாறு உருவாகும்  மாற்றங்கள் சமூகத்தின் எதிர்காலத்தை வளமிக்கதாக்கும். வளமிக்க எதிர்காலத்தை அடைவதற்கு நிகழ்காலத்தில் ஒற்றுமையோடும் தியாகத்தோடும் செயற்பட வேண்டிய தேவையுள்ளது. 

மேற்;படி படிநிலைகள் தற்காலத்தில் உலக மற்றும் இத்தேசத்தில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகிறதா என்பது கேள்விக்குறியாகும். இக்கேள்விக்குறியை முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்துவதற்காக உருவாக்கப்பட்ட குழு இரு அணிகளாகப் பிரிந்து இரு திருத்த முன்மொழிவுகளை நிதி அமைச்சர் தலதா அத்துக்குரலவிடம்  சமர்ப்பித்திருப்பதன் மூலம் முஸ்லிம்களின் ஒற்றுமையின் பலவீனம் புடம்போடப்பட்டிருக்கிறது.

அது மாத்திரமின்றி;, வாதப் பிரதிவாதங்களினூடாகவும், அறிக்கைகள், ஊடக மகாநாடுகள் ஊடாகவும் உள்வீட்டுப் பிரச்சினையை முற்சந்திக்கு இழுத்து வந்து தமது பல்லைக்குற்றி பிறருக்கு நுகரக் கொடுக்கப்பட்டிருப்பதையும் இந்நிலைமையானது எத்தகைய சிக்கல்களை இத்திருத்தச் சட்டத்தில் ஏற்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில், முஸ்லிம் தனியார் சட்டமானது விவகாம் மற்றும் விவாக ரத்து உட்பட முஸ்லி;ம்களுக்கென்ற தனித்துவ விடயங்களில் ஷரியாவிற்கு முரண்பாடாத வகையில் சட்டம்   வகுக்கப்பட்டு அச்சட்டமானது இலங்கைப் பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டதாகும். 

தற்போது இச்சட்டத் திருத்தம் தொடர்பில் சட்டத்திருத்தக் குழுக்களுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகள் அரசியல் மயப்படுத்தப்பட்டு பிரதொருகோணத்தில் இத்திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கப்பட்டால் இதன்பாதிப்பின் பிரதிகூலங்களுக்குப் பொறுப்பானவர்கள்; முரண்பட்டு விடாப்பிடியாகவிருப்பவர்கள்தான். இத்திருத்தச்சட்ட விவகாரத்தில் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்பதை உரியவர்கள் புரிந்து செயற்பட வேண்டியது இத்தியாகத்திருநாள் எமக்கு எடுத்து இயம்பும் படிப்பினைகளில் ஒன்று என்பதையும் காலம் உணர்த்துகிறது.

ஒற்றுமையும் முஸ்லிம்களும் 
அரபுலக மண்ணில் இடம்பெற்று வரும் கொள்கைக்கான போராட்டம் இலட்சக்கனக்கான அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களை காவு கொள்ளச் செய்துள்ளதுடன் அனாதைகளாகவும், அங்கவீனர்களாகவும் ஆக்கியுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் முகவரியற்ற ஏழை அகதிகளாக அலைந்து திரிகின்றனர். ஒவ்வொரு விடியலும் இத்தகைய நிழ்;வுகளை அரபு மண்ணில் அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தினமும் காணொலிகளினூடாக பார்த்து வருகின்றோம்.

ஒற்றுமைப்பட்டுப் பொது எதிரிகளை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் தங்களுக்குள் எதிரிகளை உருவாக்கிக் கொண்டு அல்லது தாங்களாகவே எதிரிகளாக மாறிக் கொண்டு மாண்டு கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களிடையே காணப்படும் ஒற்றுமையின் பலவீனம் திட்டமிட்டு முஸ்லிம்களை அழிப்பதற்கு முஸ்லிம்களின் எதிரிகளுக்கு சாதகமாவுள்ளது. அவ்வாறானதொரு நிலையில்தான் தற்காலத்தில் சிரியாவிலும,; எமனிலும, ஆப்கானிஸதானிலும் இன்னும் பல முஸ்லிம் நாடுகளிலும்;; முஸ்லிம்கள் நன்கு திட்டமிடப்பட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

மியன்மார் உள்ளிட்ட  முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதும் இஸ்ரேலில் முஸ்லிம் சிறுவர்கள் உட்பட பெண்கள் முதியவர்கள் கொல்லப்படுவது, துன்புறுத்தப்படுவது குறித்து சர்வதேசம் கண்டும் காணாமல்போல் நடித்துக் கொண்டிருப்பதன் பின்னணியானது முஸ்லிம்கள் ஒற்றுமை இழந்து  பலவீனமடைந்துள்ளமையை மறுக்க முடியாது. 

உலக நாடுகளில் வாழும் முஸ்லிம்களின நிலை இவ்வாறு உள்ள நிலையில் இலங்கையில் வாழும் முஸ்லிம்களிடையேயும் ஒற்றுமை இல்லை. ஏறக்குறைய 10 வீதம் வாழுகின்ற முஸ்லிம்களுக்குள்; இறை ஏகத்துவக் கொள்கைகளில் மாற்றமில்லையென்றபோதிலும், இஸ்லாமிய இயக்கக் கொள்கைகள் மற்றும் அரசியல் ரீதியில் உருவாக்கிக் கொள்ளப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் சுயநலம் கொண்டு பிரிந்து நின்று செயற்படுவதைக் காண முடிகிறது. 

சமுதாயத்தின் இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையிலும் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கிடையிலும் ஒற்றுமை சிதைவடைந்து பலயீனம் ஏற்படுகின்றபோது, அந்த ஒற்றுமையற்ற பலயீனமான நிலைகள் கடந்த காலத்திலும், சமகாலத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையானது, எதிர்காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. சமூகத்திற்குள் பிரச்சினை காணப்படுகின்றபோது அல்லது சமூகத்தை நோக்கி பிரச்சினைகள் எழுகின்றபோது, அப் பிரச்சினைகளிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க, பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க ;சமூகத்தின் மத்தியிலிருந்து ஒன்றுபட்ட கருத்துக்கள் வெளி வரவேண்டியது காலத்தின்  அவசியமாகும்.

ஆனால், முஸ்லிம் தனியார் திருத்தச் சட்டம் தொடர்பில் தற்போது எழுந்துள்ள முரண்பாடுகள் சமூகத்தின் தனித்துவ சட்டத்தில் பிறர் மூக்கை நுழைக்க வழிகோலும். முஸ்லிம் தனியார் திருத்தச் சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு அநீதியிழைக்கக் கூடாது என்று அண்மையில் ஒரு சிலர் மட்டக்களப்பில்  பதாகைகளை ஏந்தி நின்றதன் மூலம் பிறரின் தலையீடு இச்சட்டதை நோக்கி முன்நகர்த்தச் செய்வதற்கான முன்னுதராணமாக கொள்ளப்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொள்கைகளின் அடிப்படையில் ஜமாத்துக்களாகப் பிரிந்து செயற்படுகின்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கைத்தளத்தியிலிருந்து கொண்டு இத்தனியார் சட்டத்திருத்தம் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து அக்கருத்துக்களின் வழியே செயற்பட முனைகின்றபோது அவை ஒட்டுமொத்த சமூகத்தையும் தலைகுனியச் செய்யும்.

முஸ்லிம் அரசியல் கட்சிகள் சுயநல அரசியல் இலாபத்திற்காக  பிரிந்து நின்று முஸ்லிம்களின் அரசியல் பேரம் பேசும் சக்தியை வலுவிலக்கச் செய்தது போன்று ஜமாத்துக்களும், கொள்கைகளின் அடிப்படையில் பிரிந்து செயற்பட்டு தங்களது கொள்கைகளையும், செயற்பாடுகளையும்  மெய்பிப்பதற்கான குர்ஆன் வசனங்களையும் நபி போதனைகளையும் மக்கள் மத்தியில் முன்வைத்து பிரச்சாரங்களை மேற்கொள்வதானது தற்போதை முஸ்லிம் தனியார் சட்டத்தில் முஸ்லிம்களின் எதிரிகள் மற்றும் கடும்போக்காளர்கள் இணைந்து திருத்தங்களை மேற்கொள்ள வழிவகுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முஸ்லிம்

இந்நிலையில் புனித ஹஜ் பெருநாள் இலங்கையில் புதன் கிழமை கொண்டாடப்படுகிறது. கடந்த நோன்புப் பெருநாள் இரு தினங்களில் கொண்டாடப்பட்டது போன்று கடந்த 2016 ஹஜ்பெருநாள் இரு தினங்களில் கொண்டியது போல இவ்வருடத்தில் நாட்டிலுள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ஹஜ் பெருநாளை ஒரேதினத்தில் கொண்டாட இருந்தாலும் அதிலும் சிலர் சர்வதேச பெருநாளைக் கொண்டாடவும் செய்தனர். 

சமூகத்தின் ஒற்றுமையை விட ஒற்றுமைக்கான தியாகங்களை விட மாற்றமடையாத கொள்கைகளும், செயற்பாடுகளும் இத்தகையவர்களுக்கு முக்கியமானது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.  இன்று புதன் கிழமை ஹஜ் பெருநாள் கொண்டாடுகின்ற நிலையில் சிலர் செவ்வாய்க்கிழமை பெருநாளைக் கொண்டாடியிருக்கின்றனர். இத்தகையவர்களின்; செயற்பாடுகள் பல்லின சமூகம் வாழும் இந்நாட்டில் ஒரு சமூகமாகவுள்ள முஸ்லிம்களை நோக்கி ஏனைய சமூகங்களிடமிருந்து பல கேள்விகளைத் தொடுக்கச் செய்கிறது என்பது புரியப்படுவதில்லை.

அத்தோடு, முஸ்லிம் சமூகத்தின் சமூகக் கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட வேண்டும். நீண்ட கால பிரச்சினைகள், அடிப்படைப் பிரச்சினைகள், சமகாலப் பிரச்சினைகள் என்பவற்றுக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.   இந்நாட்டிலுள்ள 9 மாகாணங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்கின்ற பிரசேதங்களில் எதிர்நோக்கும் நீண்ட காலப் பிரச்சினைகள் மற்றும் சமகாலத் தேவைகள் தொடர்பில் முழுமையான ஆவணப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். நாடுதழுவிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் உறுதியுடன் பகிரங்கப்படுத்தக் கூடிய அளவிற்கு ஆவணப் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்த கருத்துக்களும், அறிக்கைகளும் அதிகாரமுள்ளவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கப்படுவதை காணமுடியாதுள்ளது.

இந்நிலையினை மாற்றியமைக்க வேண்டுமாயின,; சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும். அந்த ஒற்றுமைக்கு இடைஞ்சலாக காணப்படுகின்ற காரணிகளை உடைந்துதெரியும் மனப்பாங்குகள் உருவாக வேண்டும். அம்மனப்பாங்கை ஏற்படுத்துவதற்கு தியாகம் புரியப்படுவது அவசியமாகவுள்ளது. 

ஹஜ் கற்றுத்தரும் ஒற்றுமை மற்றும் தியாகம் என்பன தியாகத் திருநாளில் பள்ளிவாசல்களில், திறந்த மைதானங்களில் கூட்டாக நின்று தொழுவதினாலும் அல்லது தனியாகவோ அல்லது கூட்டாகவோ இணைந்து குர்பான் கொடுப்பதனாலும் மாத்திரம் ஏற்பட்டுவிடாது. அவை கடமை. ஆனால், அக்கடமைகளானது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்போதுதான் அக்கடமைகளின் தார்ப்பரியத்தை அடைந்து கொள்ள முடியும்.

ஒற்றுமைப்படுவதற்கும் அதற்கான தியாகங்களைப் புரிவதற்கும் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மனப்பாங்கு மாற்றமே நமக்குள் வேற்றுமையை மறக்கச் செய்து  விட்டுக்கொடுப்புக்களையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும்.  

எதிர்காலத்தில் அரசியல் ரிதியாகவோ இஸ்லாமிய இயக்கங்கள் ரீதியாகவோ பலம் பெற வேண்டுமாயின் கொள்கை கோட்பாடுகளுக்கு அப்பால் அரசியல் தலைமைகள் என்று தங்களை அழைத்துக்கொண்டிருப்பவர்களுக்கிடையிலும், நாங்கள் சொல்லுவதுதான் மார்க்கம் அல்லது நாங்கள்தான் இஸ்லாத்தை வாழவைத்துக்கொண்டிருக்கின்றோம் அல்லது நாங்கள் செல்லும் பாதைதான் உண்மையான இஸ்லாமியப் பாதையென மார்ப்புதட்டிக்கொண்டிருக்கும்  ஜமாத்துக்களுக்கிடையேயும்  ஒற்றுமை ஏற்படுவது அல்லது ஏற்படுத்தப்படுவது அவசியமாகும்.

அவரவர் சுயநலன்களின் மேம்பாட்டுக்காக ஆளுக்கொரு கட்சி, ஆளுக்கொடு இயக்கக் கொள்கை என்ற ரீதியில் செயற்பட்டு சுயநலன்கள் வெற்றிகொள்ளப்பட்டாலும் அல்லது அவை தன்னிறைவு அடைந்தாலும் அதனால் முஸ்லிம் சமூகம் எவ்வித பயனையும் அடையப்போவதில்லை. சமூகம் நன்மையடைய வேண்டுமாயின் முரண்பாடுகள் கலையப்பட்டு ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஒற்றுமை பற்றி வார்த்தைகளால் எவ்வளவு கூறினாலும் அதற்கான செயற்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படாத விடத்து அந்த வார்த்தைகளுக்கு வெற்றி கிடைக்காது. போலிக் கௌரவங்களாலும் வீராப்புக்களாலும் தங்களது கொள்கைகளை விட்டுக் கொடுக்காது செயற்படுவதன் மூலமே நம்மை நாம் பலவீனப்படுத்திக்கொண்டிருக்கின்றோம். 

முஸ்லிம் சமூகம் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பல சவால்களை எதிர்நோக்கியிருப்பதுடன்  தேவைகளையும் குறைகளையும் வேண்டிநிற்கின்றன. இச்சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு சமூகம் எவ்வாறு தங்களைத் தயார்படுத்துவது. அதற்கான வழிகாட்டல்கள் எவை.  அவர்கள் வேண்டிநிற்கும் குறைகளையும் தேவைகளையும் எவ்வாறு பெற்றுக்கொடுப்பது என்ற கேள்விகளிலிருந்து அவற்றிற்கான முறையான திட்டங்கள் வகுக்கப்படுவது அவசியமாகும்

தேர்தல் காலத்தில் மற்றும் மக்கள் குறைகள் தொடர்பில் பேசப்படுவதும் வாக்குறுதிகள் அளிக்கப்படுவதும் பின்னர் அவை நிறைவேற்றாமல் விடப்படுவதும், மறக்கப்படுவதும் என்ற நிலை மாற்றியமைக்கப்படுவதும் அவசியம். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மனப்பாங்குகள் மக்கள் பிரதிநிதிகள் மனங்களிலும் உருவாக வேண்டும். அதற்காக தியாகங்கள் புரியப்பட வேண்டும்.

8வது பாராளுமன்றம் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. கட்சி, கொள்கை, பிராந்திய, பிரதேச வேறுபாடுகளைத் துறந்து, எதிர்கால சமூகத்தின் நலனுக்காக அவற்றை தியாகம் செய்து, சமூகத்தின் எழுச்சிக்கான புரட்சியை ஏற்படுத்துவற்காக இந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபடுவதும் ஒன்றுபட்டு செயற்படுவதற்னான கூட்டமைப்பொன்றை உருவாக்குவதும் காலத்தின் கட்டாயமாகும். சமூகத்தின் எதிர்காலத்தை ஆரோக்கியமாக்குவதற்கும் சமூகமும், சமூகத்தின் தனிநபர்களும் எதிர்நோக்கும் சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இக்கூட்டமைப்பு  வழியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 

சமகால அரசியல் நகர்வுகள் முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஆரோக்கியமற்றதாகவேவுள்ளது. அரசியல் நகர்வுகள் ஆரோக்கியப்படுத்தப்பட வேண்டுமாயின் இந்நகர்வுகளிலுள்ள ஆபத்துக்கள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தரப்புக்கள் ஒன்றுபட்டு தமது குரல்களை ஒலிக்கச் செய்ய வேண்டும்.  இராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். பத்திரிகை அறிக்கைகளாகவல்லாது ஆக்கபூர்வ செயற்பாடுகளாக அமைய வேண்டுமென்பதே வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பும் மக்களின் எதிர்பார்ப்பாவுள்ளது. 

பெருநாளுக்கான வாழ்த்துச் செய்திகளில் முன்வைக்கப்படுகின்ற நல்ல சிந்தனைகளும், ஆழமான கருத்துக்களும் செயலுருப் பெரும்போதான் அவை எதிர்காலத்தில் சமூகத்தின் மத்தியில் நல்ல ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதோடு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் சமூகத்தை தலைநிமிரச் செய்யும்.

பெருநாளும் மாற்றத்திற்கான ஆரம்பமும்  
சமூகத்தில் சிலர் வாழ்வின் இன்பத்தைச் சுவைத்துக் கொண்டிருந்தாலும் பலர் சோதனைகளையும,; வேதனைகளையும், சவால்களையும் சுமந்து  கொண்டிருக்கிறார்கள். வல்ல இறைவன்  சோதிப்பதற்காகவே   சிலரை எல்லா வளமும் கொண்டவர்களாகவும் இன்னும் சிலரை வளமாற்றவர்களாகவும் படைத்துள்ளான் என்பதை மறக்க முடியாது.

நம்பில் பலர் உடல், உள, குடும்ப, பொருளாதார சமூக ரீதியில் பல்வேறு சோதனைகளையும் சுமைகளையும் சுமந்தவர்களாக இப்பெருநாளை எதிர்நோக்கியிருக்கிறார்கள். 

இவர்களின் இதய வேதனைகளை சந்தோஷத்தால் நனைப்பவர்கள் யார்? இவர்களும் பெருநாளின் இன்பப் பொழுதை ரம்பியமாகக் கழிக்கக் கூடாதா? என்ற கேள்விகளுக்கு சமூகத்தின் மத்தியில் சகல வளங்களும் பெற்றவர்களிடம்; விடை இருக்கிறது. ஆனால் அதற்கு விடைகொடுக்க மனப்பாங்கு இடம் வழங்காமால் இருக்கிறது.

'அயல் வீட்டார் அன்னியவராக இருந்தாலும் அவர் அயல்வீட்டார் என்பதற்காக அவரிலும் நமக்கு பொறுப்பு உள்ளது' என்ற  நபிகளாரின் திருவசனம் நம்மில் பலரது உள்ளங்களிலிருந்து எடுபட்டுவிட்டது. இதனால்தான்,  அண்டைவீட்டு நம் சகோதரன் குடிசை வீட்டில் பாயில் படுத்துறங்க, நம்மில் பலர் மாடா மாடிகைகளில் பஞ்சன மெத்தையில் புரண்டு எழும்புகின்றனர். ஏழைகளின் துன்ப துயரங்களில் கலந்துகொள்வதிலும் நம்மில் பலருக்கு நேரமிருப்பதில்லை. மாறாக பிரபல்யமிக்கவர்களின் திருமண வைபவங்களிலும், பிரபல்யமிக்கவர்கள் மரணித்துவிட்டால் அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொண்டதை விளம்பரப்படுத்துவதற்காக செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் உலா விடுவதற்கு பலருக்கு  நேரமிருக்கிறது என்பதை சமகாலத்தில் அவதானிக்க முடிகிறது.

சமுதாயத்திலுள்ள வளம் படைத்தோர் தங்கள் வளத்தை முறையாக சமுதாய எழுச்சிக்காக, சமுதாய மேம்பாடுக்காக பயன்படுத்தத் தவறுவதனால் சமுதயாத்திலுள்ள வளம் குன்றியவர்கள், தேவையுள்ளவர்கள் அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வும் ரஸுலும் விரும்பாத வழிகளை நாடுகின்றனர். இவற்றை உதாரணப்படுத்தும் பல சம்பவங்கள் சமூகத்தின் மத்தியில் தினமும் நடந்துகொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் நகரப் புறங்களிலுள்ள வட்டிக் கடைகளில் தங்களது நகைகளை அடகு வைத்துவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தலையை மூடி பர்தா அணிந்த தமது சமூகத்தின் பெண்மணிகள் வரிசையில் நிற்கும் அவல நிலைமையாகும்.

இந்நிலைமைக்குக் காரணம் முஸ்லிம்களில் வளம் பெற்றோர் அவ்வளத்தை சமுதாயத்தின் தேவைக்காக,  மாற்றத்திற்காக பயன்படுத்தாது, பெருமைக்கும,; புகழுக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு ஒரு சிலரின் வளங்கள் தலைநகர ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெறும் ஆடம்பர திருமண வைபவங்களுக்கு பயன்படுத்தப்படுத்துவதானது அவ்வப்போது புடம்போடப்படுகிறது.

தற்காலத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் முஸ்லிம் சமூகம் ஒவ்வொரு துறையிலும் பின்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அவை சரியாக அடையாளம் காணப்படவில்லை. மாற்றமின்றிய வாழ்க்கைப் பயணத்தை மாற்றுவதற்காக பலர் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுவதற்கான  முறையான வழிகாட்டல்கள், பொறிமுறைகள் ஏற்படுத்தப்படவில்லை. அவற்றை ஏற்படுத்துவதற்கு நம்மிலுள்ள ஒரு சிலரின் வளங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. திட்டமிடப்படுவதுமில்லை.

சமூகம் மாற்றம் பெற வேண்டுமாயின் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு துறைசார்ந்தோரும் தங்களால் முடிந்த சமூகப் பங்களிப்பை நிறைவேற்றுவதற்கான மனப்பாங்கை உருவாக்கி அந்த மனப்பாங்குடன் சமூக மாற்றத்திற்காக தங்களது வளங்களை தியாகம் செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் நபி இப்றாகிம் அலை அவர்களின் தியாக வரலாற்றை உணர்த்தும் ஹஜ்ஜும,; பெருநாளும் யதார்த்தமாக்கப்படும். அதுமாத்திரமின்றி, நிகழ்கால சமூகம் எதிர்பார்க்கின்ற மாற்றத்தையும்  எதிர்காலத்தில்  காண முடியும் என்பதே நிதர்சனமாகும். 

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment