ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது ஒரு இனத்திற்குகோ ஒரு மதத்திற்கோ மட்டும் சார்ந்த கட்சி அல்ல. முழு நாட்டு மக்களையும் ஒன்படுத்தக் கூடிய ஒரு அரசியல் அமைப்பாகும் என்று முன்னாள் அமைச்சர் பசீல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பத்தரமுல்லவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமைக் காரியாலயத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுன முஸ்லிம் அமைப்பாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பசீல் ராஜபக்ஷ இவ்வாறு இன்று இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் முஸ்லிம் அமைப்பான முற்போக்கு முஸ்லிம் முன்னணி என்ற பெயரில் இயங்கி வந்த அமைப்பு ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுன என்ற புதிய பெயரில் இயங்குவதாக முடிவுவெடுக்கப்பப்பட்டதுடன் மாவட்டத்திற்குரிய அமைப்பாளர்களைக் கொண்ட தலைமைத்துவ குழுவொன்று அமைக்கப்பட்டது. இதில் நக்கீப் மௌலானா, உவைஸ் ஹாஜியார், அப்துல் சத்தார் உட்பட முக்கியஸ்தர்கள் உள்வாங்கப்பட்டனர்.
அங்கு தொடர்ந்து பேசுகையில், 2015 ஜனவரி 8 ஆம் திகதி இந்த நாட்டு முஸ்லிம் மக்கள் அன்று இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக வாக்களித்து அவரை தோற்கடித்த விவகாரம் எங்களுக்கு கசப்பாக இருந்தாலும் அன்று இந்த நாட்டு முஸ்லிம் மக்கள் அன்று எடுத்த தீர்மானத்தில் நான் ஒரு நியாயத்தைக் காண்கின்றேன். எங்கள் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஏதோ ஒரு வகையில் பிழைகள் தவறுகள் நடந்திருக்கலாம். அன்று நாங்கள் அதை உணர வில்லை. இதன் பின்பு தேர்தல் கூட முஸ்லிம் மக்களின் ஆதரவில்லாமல் எங்களால் ஆட்சி அமைக்க முடியாது. முஸ்லிம்களின் வாசற்படிகளுக்குச் சென்று இன்று இந்த நாட்டு முஸ்லிம்களுக்குரிய பிரச்சினைகளை அடையாளம் காண வேண்டும். முஸ்லிம்களை வழிநடத்தும் உலமாக்களை சந்தித்து முஸ்லிம் சமூகத்தின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் நாங்கள் இங்கு கூடி பேசுவதாலோ முடிவெடுப்பதாலோ முஸ்லிம் வாக்குகளை எங்களுக்குப் பெற முடியாது. முஸ்லிம் கிராமங்கள் தோறும் சென்று முஸ்லிம்களுக்கு மத்தியில் யதார்த்தத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.
அத்தோடு கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சியும் தங்களுக்கே அதிகமான முஸ்லிம் வாக்குகள் கிடைத்தது என்று மார்தட்டிக் கொண்டாலும் ஸ்ரீ சு. கட்சியில் தான் அதிகமான முஸ்லிம் உள்ளுராட்சி சபைக்குரிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதை நாம் மறந்து விடக் கூடாது. இப்படியானவர்களின் ஆதரவை நாங்கள் எவ்வாறு பெறுவது என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். குறுகிய காலத்திற்குள் பல இலட்சக் கணக்கான மக்களின் வாக்குகளைப் பெற்ற ஸ்ரீபொதுஜனப் பெரமுனக் கட்சிக்கு முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்டுவது இங்குள்ள முஸ்லிம் அமைப்பாளர்களின் பொறுப்பாகும் என்று மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி
No comments:
Post a Comment