கட்சியின் 'உத்தரவு'க்குத் தான் அடி பணிந்தேன்: ஹிஸ்புல்லா - sonakar.com

Post Top Ad

Thursday 5 April 2018

கட்சியின் 'உத்தரவு'க்குத் தான் அடி பணிந்தேன்: ஹிஸ்புல்லா



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்துக்கு அமையவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தான் பங்கேற்கவில்லை என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்று இரவு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் அதில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்கவில்லை. அது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இராஜாங்க அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- 


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரிவாக ஆராய்ந்தது. நல்லாட்சி அரசின் பங்காளியான சு.கா. நாட்டின் பொருளாதார, அரசியல் ரீதியான பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என்று தீர்மானித்தது. 

கட்சியின் தீர்மானத்துக்கு அமையவே நாங்கள் குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டை ஸ்தீரமற்ற நிலைக்கு தள்ளுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்தோம். அந்த வகையிலேயே நாங்கள் வாக்கெடுப்பிலும் பங்கேற்கவில்லை. என்றார்.

-R.Hassan

No comments:

Post a Comment