முஸ்லிம்களுக்கு 'சரியான' தலைமைத்துவம் இல்லை: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Sunday 18 March 2018

முஸ்லிம்களுக்கு 'சரியான' தலைமைத்துவம் இல்லை: சம்பிக்க



முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் ரீதியிலும் சமய ரீதியிலும் கூட்டுத்தலைமைத்துவமும் சரியான வழிகாட்டல் இன்மையுமே அந்த சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது என்று ஜாதிக ஹெல உறுமயின் தலைவரும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கிரிஸ்தவ சமூகத்தை பேராயர் கர்தினால் சரியாக வழிநடத்துவது போன்று முஸ்லிம் சமூகத்தையும் வழிநடத்த முஸ்லிம் சமய தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் முஸ்லிம் சிவில் அமைப்பு பிரதிநிதிகளிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் அழைப்பின் பேரில் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்காவின் தலைவர் என் எம் அமீன் தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உட்பட முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று 2018.03.17ஆம் திகதி  காலை கொழும்பில் நடைபெற்றது.

கொழும்பு 7 ல் உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் :-

கிரிஸ்தவர்கள் மத்தியில் சமூக ரீதியிலோ அல்லது தேசிய ரீதியிலோ ஏதாவதுவொரு பிரச்சினை எழுகின்ற போது அதனை வளரவிடாமல் அதில் தலையீடு செய்து அவற்றை கட்டுப்படுத்தி அவற்றுக்கு உரிய அல்லது நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதில் பேராயர் கர்தினால் சரியான தலைமைத்துவத்தை கொடுத்து வருகின்றமையை காண முடிகின்றது. இது போன்ற தலைமைத்துவத்தை முஸ்லிம் மதத் தலைவர்களும் சரியான நேரத்தில் வழங்குவாராயின் அநேகமான பிரச்சினைக்கு தீர்வை கண்டிருக்க முடியும் என்பதை அமைச்சர் பல தடவைகள் வலியுறுத்தி கூறினார்.

அம்பாறை மற்றும் கண்டி, திகன ஆகிய பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற அழிவுக்கு பொய்யான பிரச்சாரங்களும், சரியான தெளிவின்மையே பிரதான காரணமாகும் என்று தெரிவித்த அமைச்சர், இந்த சம்பவத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே உரிய நடவடிக்கையை மேற்கொள்ள அரச இயந்திரம் தவறிவிட்டது என்றார்.

ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்கு அனுமதி உண்டு மாறாக ஆர்ப்பாட்டம் என்ற பேரில் வன்முறையில் ஈடுபடுவதையோ, தீவைத்து மற்றவர்களின் சொத்துக்களுக்கு சேதம் விலைவிப்பதையோ ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனவே, இந்த சம்பவங்கள் தொடர்பில் சரியான முறையில் விசாரனைகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என்பதிலும் சட்டமும் ஒழுங்கும் சரியான முறையில் நிலை நாட்டபட வேண்டும் என்பதிலும் தான் உறுதியாக உள்ளதாக தெரிவித்த அமைச்சர் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

நல்லாட்சி என்ற பதத்தை பாதுகாப்பதற்காக தற்பொழுது அனைத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே, பலத்தை உரிய முறையில் பயன்படுத்தி உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இளைஞர்களை வீணாக தூண்டிவிட்டு நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல சிலர் முயற்சிக்கின்றனர் இவற்றை ஆரம்பித்திலேயே கட்டுப்படுத்த சகல தலைவர்களும் பெரியவர்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டிய காலக்கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். நல்லாட்சியை சீர்குலைக்கவும் சிலர் முயற்சிக்கின்றனர் அதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது விஷேடமாக ஜனாதிபதியும் பிரதமரும் இரு துருவமாக இல்லாமல் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தனது பெயரை சிலர் பயன்படுத்துகின்றனர். அவ்வாறான குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மைகளும் கிடையாது அவ்வாறான கூற்றை தான் முற்றாக மறுப்பதாக தெரிவித்த அமைச்சர் இது அரசியல் நோக்கங்களுக்காக சிலரால் முன்னெடுக்கப்படும் பொய்ப் பிரச்சாரம் என்றார் தமது உறுப்பினர்கள் இதவரை எந்தவொரு சம்பவங்களுடனும் தொடர்புயில்லை என்பதை தான் திறந்த மனதுடன் கூறிக்கொள்ளதாக தெரிவித்த அவர் தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டு மக்களுக்கு தனது அமைச்சின் ஊடாக சேவைகளை வழங்கும் போது இன ரீதியிலான பாகுபாடுகள் காண்பித்தில்லை என்றார். தனது அமைச்சின் ஊடாக நிர்மானிக்கப்பட்டு வருகின்ற வீடுகளில் அநேனமானவை முஸ்லிம்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.


அத்துடன் முஸ்லிம்கள் தொடர்பில் பெரும்பான்மை சமூகத்தினரால் எழுப்பப்படும்  பல்வேறு சந்தேகங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்ட அமைச்சர் ஹலால் விடயத்தில் திறந்த மனதுடன் பேசி வாதிட்டு தீர்வு கண்டது போன்று ஏனைய விடயங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் இது போன்ற சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்வுக்காணப்பட வேண்டும் என்றும் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் அமைச்சர் கோரிக்கை முன்வைத்தார்.

அம்பாறை, கண்டி சம்பவங்கள் தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் சரியான முறையில் நிலைநாட்டப்படல் வேண்டும், ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும், பள்ளிவாசல்கள் புனமைக்கப்படும் அதேசசமயம் மக்களின் வாழ்வாதாரத்தை துரிதமாக மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு அரசாங்கம் உத்தரவாத் வழங்குதல் போன்ற வற்றுக்கு அரசாங்கத்திற்கும் அமைச்சரவையிலும் தாங்கள் அழுத்தம் கொடுத்து நீதியை நிலைநாட்ட உதவ வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் உட்பட முஸ்லிம் பிரதிநிதிகள் அமைச்சரிடம் பலமான கோரிக்கைகளை முன்வைத்தனர். இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் உத்தரவாதம் அளித்தார்.

இதேவேளை, சுமார் ஒன்றரை மணித்தியாலமாக இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது கிரான்ட்;பாஸ் பள்ளிவாசல் காணி பிரச்சினை மற்றும் தம்புள்ளை பள்ளிவாசல் விடயமாகவும் விஷேடமாக கலந்துரையாடப்பட்டன. அவற்றில் கிரான்ட்பாஸ் பள்ளிவாசலுக்காக தான் ஏற்கனவே உறுதியளித்த ஐந்து பேர்ச்சர்ஸ் காணியை வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சருடனான இந்த சந்திப்பில் ஜாதிக ஹெல உறுமையின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகான சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்ஹ ,அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் இளைஞர் அமைப்பின் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூர் ஆமித், முஸ்லிம் கவுன்ஸிலின் உப தலைவர் ஹில்மி அஹமட், ஸ்ரீலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் செயலாளர் சட்டத்தரணி எஸ். பாரிஸ், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி, அகில அகில இலங்கை வை. ஏம். எம். ஏ பேரவையின் தேசிய தலைவர் எம். என். எம். நபீல், ஓய்வு பெற்ற கேர்ணல் பைசுர் ரஹ்மான், டாக்டர் மூசீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹான், உப தலைவர் எம். ஏ. எம். நிலாம், தொழிலதிபர் ஷிப்ளி விலா காசிம் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

-SLMMF

No comments:

Post a Comment