மு.காவை புறந்தள்ள முயலும் ரணில்; குமுறும் ஹக்கீம்! - sonakar.com

Post Top Ad

Saturday 24 March 2018

மு.காவை புறந்தள்ள முயலும் ரணில்; குமுறும் ஹக்கீம்!



ங்களுக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளை பார்க்கின்றபோது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கஷ்டமான விடயம். நாங்கள் வெற்றியீட்டிய சபைகளில், எங்களை புறந்தள்ளிவிட்டு மாற்று அணிகளுடன் ஐ.தே.க. ஆட்சியமைத்தால் அரசியல் ரீதியாக அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தெரிவான உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று (23) மாலை கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.



அங்கு உரையாற்‌றிய அமைச்சர் மேலும் கூறியதாவது;

நாங்கள் கடந்த 3 வாரங்களாக சிறிகொத்தாவில் ஐ.தே.க. முக்கியஸ்தர்களை சந்திந்து பேசிவந்த விவகாரங்களையும் பின்னர் நடந்த விபரீதங்களையும் வைத்து பார்க்கின்றபோது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு மிகவும் கஷ்டமான விடயம் என்பதை மிகவும் வேதனையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

உள்ளூராட்சி தேர்தலில் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட நிலையில், எங்களுக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளினால் அவர்களுடன் தொடர்ந்து பயணிப்பதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இப்படியான சூழ்நிலையில் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் சவாலுக்குரிய விடயம்.

முஸ்லிம் காங்கிரஸ் அமோக வெற்‌றியீட்டிய சபைகளில் எங்களுக்கு தவிசாளர் பதவி தரவேண்டிய நிலையில், எங்களை புறந்தள்ளிவிட்டு மாற்று அணிகளுடன் கூட்டுச் சேர்வதாக இருந்தால் அதற்கு அரசியல் ரீதியாக நாங்கள் தகுந்த பதிலடியை கொடுப்பதற்கும் தயங்கமாட்டோம். இயலுமானவரை இந்த ஆட்சியில் ஒற்றுமையுடன் பயணிப்பது என்ற நோக்கத்தில் இருந்தாலும், எங்களை பலவீனப்படுத்திக்கொண்டு பயணிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment