மு.காங்கிரசுக்கு எமனாக மாறிய புதிய உள்ளூராட்சி தேர்தல் முறை - sonakar.com

Post Top Ad

Tuesday 27 March 2018

மு.காங்கிரசுக்கு எமனாக மாறிய புதிய உள்ளூராட்சி தேர்தல் முறை


நடந்துமுடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, பொத்துவில், இறக்காமம் ஆகிய தனது அனைத்து சபைகளிலும் ஏனைய கட்சிகளைவிட வழமைபோன்று அதிகப்படியான வாக்குகளை பெற்றுக்கொண்டது. 

அவ்வாறு அதிகப்படியான வாக்குகளை பெற்றிருந்தும் புதிய தேதல்முறையின் காரணமாக தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலைமை உருவாகியது. 


இதனால் முஸ்லிம் காங்கிரஸ் தனது அனைத்து சபைகளிலும் தோல்வி அடைந்துள்ளது என்ற எதிரிகளின் விசம பிரச்சாரத்தின் மூலம் மு.கா ஆதரவாளர்களினதும், போராளிகளினதும் மனநிலைகளை சோர்வடையச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  

பழையமுறையில் இத்தேர்தல் நடைபெற்றிருந்தால் அம்பாறை மாவட்டத்தின் தனது அனைத்து சபைகளிலும் வழமைபோன்று மு. காங்கிரசே தனித்து ஆட்சி அமைத்திருக்கும். 

எந்தவொரு உள்ளூராட்சிமன்ற தேர்தல்களிலும் மு.கா தனித்து போட்டியிடுவதே வழமையாகும். ஆனால் இந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனக்கு இலகுவாக வெற்றியடையக் கூடிய அனைத்து சபைகளிலும் ஐ. தே கட்சியின் யானை சின்னத்திலேயே போட்டியிட்டது. 

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஐ. தே கட்சியின் முஸ்லிம் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே யானை சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடவில்லை. 

மாறாக மு. காங்கிரசில் அரசியல் முகவரி பெற்றவர்கள் சிலர் தங்களுக்கு தொடர்ந்து அரசியல் அதிகார பதவியும், பணமும் கிடைக்கவில்லை என்ற காரனத்தினால் மக்கள் காங்கிரஸ் என்ற போர்வையில் முஸ்லிம் காங்கிரசை அழித்துவிட அதிகம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 

இந்த நிலைமையில் மு. கா தனித்து போட்டியிட்டிருந்தால், மக்கள் காங்கிரசினர் ஐ. தே கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் அம்பாறை மாவட்டம் முழுவது களம் இறங்கியிருப்பார்கள். 

அவ்வாறு மக்கள் காங்கிரசினர் யானை சின்னத்தில் களம் இறங்கினால், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில், ஐ. தே கட்சியின் முஸ்லிம் வாக்காளர்களும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பார்கள். இந்த நிலையினை தடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே முஸ்லிம் காங்கிரஸ் யானை சின்னத்தில் போட்டியிட்டது. 


மு. கா ஓர் அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அவ்வாறு தேர்தல் வியூகம் வகுத்ததில் எந்த தவறுமில்லை. ஆனால் புதிய தேர்தல் முறைதான் மு. காங்கிரசுக்கு எமனாக மாறியுள்ளது. 

அவ்வாறு மு.கா யானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தும் ஐக்கிய தேசிய கட்சியின் முஸ்லிம் வாக்காளர்கள் யானை சின்னத்துக்கு வாக்களிக்கவில்லை. மு.காங்கிரசை அழிப்பதற்கு எந்த கட்சி வரிந்துகட்டிக்கொண்டு நின்றதோ அந்த கட்சிக்கே அவர்கள் வாக்களித்திருந்தார்கள். 

எனவே ஐ. தே கட்சியிலுள்ள முஸ்லிம் வாக்காளர்களை கவரும்பொருட்டு இனிமேலும் எதிர்காலங்களில் யானை சின்னத்தில் போட்டியிட மு. கா விரும்பினால் அது தற்கொலைக்கு சமனாகும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. 

-முகம்மத் இக்பால்

1 comment:

Sano said...

Dear Ikbal,
do not try to hold the tail of your leader. your leader was voted for the new election method to be implemented. do not try to fool us.

Post a Comment