கல்வியியல் பணியில் 41 ஆண்டுகளைக் கடந்து விடைபெறும் திருமதி அபீரா சலீம் - sonakar.com

Post Top Ad

Tuesday 27 February 2018

கல்வியியல் பணியில் 41 ஆண்டுகளைக் கடந்து விடைபெறும் திருமதி அபீரா சலீம்பெண்களுக்கான அரசியல் தலைமைத்துவங்களும் தலைநிமிர் கல்விப் பணிகளும் சிலாகிக்கப்படும் இக்காலத்தில் தமது 41 ஆண்டுகளைக் கொண்ட ஆசிரியர்-அதிபர் சேவைக்காலத்தில் இவற்றையெல்லாம் சொப்பனமாக்கி 'ஐசழn டுயனல' இரும்புப் பெண்மணியாக தலைநிமிர்ந்து நிற்பவர் திருமதி அபீரா சலீம்.


சம்மாந்துறையில் மிகவும் ஏழ்மையான-சாதராரண குடும்பத்தில் காதர் சாஹிப் இஸ்மாலெப்பை-மீராலெப்பை கதீஜா உம்மா ஆகியோருக்கு மூத்த பிள்ளையாக 26.02.1958 இல் பிறந்த அபீரா சலீம் 26.02.2018 இல் தமது 60 ஆவது வயதில் தமது சேவைக்கு விடை கொடுக்கிறார்

பாடசாலைக்காலம்

ஆரம்பக் கல்வி தொட்டு உயர்தரம் வரை சம்மாந்துறையின் கண்களில் ஒன்றான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் கற்றவர் திருமதி அபீரா சலீம்.

பாடசாலைக் காலத்தில் கிறாஅத்-பேச்சு-பாட்டு-நடனம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் அபார திறமை காட்டி தேசிய ரீதியில் பரிசில்கள் பலவற்றைத் தனதாக்கிக் கொண்டவராகத் திகழ்ந்ததுடன் 19 வயதுக்கு உட்பட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த சரித்திர மாணவியாக இருந்ததுடன் சிரேஷ்ட மாணவத் தலைவியாக இருந்து ஆற்றிய முன்னெடுப்புக்கள் இவரது ஆசிரியர்களால் நினைவு கூரப்படுகின்றன.

1977 ஆம் ஆண்டு சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி பாடசாலைக்குப் பெருமை சேர்த்தார்

ஆசிரியப் பணி

பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான அதே ஆண்டு ஜுன் மாதம் 3 ஆம் திகதி ஆசிரியர் நியமனமும் தான் கற்ற பாடசாலையிலேயே கிடைக்கிறது. படித்த பாடசாலையிலேயே முதல் நியமனமும் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதித் தம்பணியைத் தொடர்ந்தார்.

ஆசிரியப் பணியோடு பல்கலைக்கழகத்தையும் சிலர் தொடர்ந்த போதிலும் இவரைத் தொடர விடக் கூடாது என்பதில் ஒரு சிலர் முனைப்புடன் செயற்பட ஆசிரியப் பணிக்கு முன்னுரிமை வழங்கி குடும்ப நிலையினையும் கருத்திற்கொண்டு தம் பயணத்தை முன்னெடுத்தார்.

அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைக்குச் சென்ற காலத்துடன் இணைத்து சம்மாந்துறை தாறுஸ் ஸலாம் மகா வித்தியாலயம்-அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி அடங்கலாக 22 வருடங்கள் ஆசிரியர் சேவையில் சிறப்புப் பணியாற்றி சம்மாந்துறையில் பெயர் கூறும் பல உயர் பதவியாளர்களின் மனங்களில் வாழும் நல்லாசிரியையாக விருதுகள் பல பெற்றுத் திகழ்கின்றார்.

அதிபர் சேவை

பாடசாலைக் காலத்திலும்; ஆசிரியர் பணியிலும் கிடைத்த தலைமைத்துவ அனுபவத்தின் பேறாக 1996 ஆம் ஆண்டு சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தின் அதிபர் பொறுப்பை ஏற்குமாறு கோரப்பட்டது. எனினும் குடும்பச் சூழல் காரணமாக அவ்வாய்ப்பை நிராகிரித்த நிலையில் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி யூ.எல்.எம். முகைதீன்-வலயக்கல்விப் பணிப்பாளர் சாபிடீன்-உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.சலாம் ஆகியோரின் தொடரான வேண்டுகோளின் நிமித்தம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த அல்மனார் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் பொறுப்பை 1999 ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்டார்.

25.01.2011 ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் அல்-மனாரின் அதிபராக இருந்து தமக்கிருந்த அரசியல் மற்றும் நிருவாகத் தொடர்புகளைக் கொண்டு எவ்வித அடிப்படை வசதிகளும் அற்றிருந்த அப்பாடசாலைக்கு சகல வசதிகளும் கொண்ட மூன்று மாடிக் கட்டிடம்- சுற்றுமதில்-பிரதான நுழைவாயில் அமைப்பு-மின்சாரம்-நீர்வசதி-மல சல கூட ஏற்பாடு-ஆராதனை மண்டபத்தை நிறுவுதல் உள்ளிட்ட பௌதீக வளங்களை உருவாக்குவதில் தம்மை அர்ப்பணித்தார.; 

அப்பாடசாலையில் இருக்கும் போதே 2000 ஆம் ஆண்டு பொறுப்பு அதிபராக இருந்த இவர் அதிபர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டார். பௌதீக வளத்தோடு நின்று விடாமல் 2003 ஆம் ஆண்டு முதன்முறையாக மூன்று மாணவர்களை தரம் 5 புலமைப்பரிசில பரீட்சையில் சித்தியடைய வைத்து வரலாற்றுச் சாதனையின் சொந்தக் காரனானார். இப்பாடசாலையில் இருக்கும் போதே 2005 ஆம் ஆண்டு சிறந்த அதிபருக்கான 'வித்தியா விஜய சம்மான' தேசிய விருதைப் பெற்றுக் கொண்டார்.

8 ஆசிரியர்கள்-250 மாணவர்களுடன் அதிபர் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் சம்மாந்துறையின் பெண்கள் பாடசாலையாக ஊருக்கு மத்தியில் தலைநிமிர்ந்து நிற்கும் அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபர் பொறுப்பை ஏற்க வேண்டுமென்ற அழைப்பு விடுக்கப்பட்டது. மிகவும் அசாதாரண சூழ்நிலையில் அன்றைய வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரின் பணிப்புரைக்கமைய கல்வியமைச்சின் செயலாளரது உடனடி நியமன ஏற்பின் பிரகாரம் 25.01.2011 இல் அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபரானார் திருமதி அபீரா சலீம்.

சுமார் 1500 மாணவர்கள்-100 ஆளணிகளுடன் கூடிய இப்பாடசாலை சவால் மிக்கதாக இருந்த போதிலும் மிகச்சிறந்த ஆசிரியர் குழாமின் ஒத்தாசையுடன் அல்-மர்ஜான் குடும்பத்தை மிகக் குறுகிய காலத்தினுள் தம் வசப்படுத்தினார். அரசியல் காரணத்தினால் இடமாற்ற ஏற்பாடொன்று முளைவிட்ட போதிலும் ஆசிரியர் குடும்பம் அவருக்காக விரைந்து செயற்பட்டு இப்பாடசாலையில் பணியைத் தொடர வைத்தமை அவரது நிருவாக விருப்பத்திற்குக் கிடைத்த கிரீடம் என்றே சொல்லாம்.பெண்கள் பாடசாலையாக அல்-மர்ஜான் இருந்தமையால் அம்மாணவிகளின் ஒழுக்கம் மற்றும் சமூக முன்னேற்றத்திலும் அதிக அக்கறை காட்டிய ஒருவராக இவர் திகழ்ந்ததுடன் ஆசிரியர்களைக் கையாள்வதில் மிக நிதானமும் நுணுக்கமும் உள்ள 'தொழிநுட்ப அதிபராக' தொடர்ந்தும் செயற்பட்டு வந்திருக்கின்றார்.

அல்-மர்ஜானில் பதவியேற்று சுமார் 7 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில் இவரது காலப்பகுதியிலேயே இப்பாடசாலை பௌதீக மற்றும் கல்வி சார்ந்த செயற்பாடுகளில் தொடரான முன்னேற்றங்களைக் கண்டு வந்திருக்கின்றது என்றால் அதனை யாரும் மறுதலிக்க முடியாது

அகில இலங்கை ரீதியில் தமிழ்த்தினப்போட்டி-ஆங்கில தினப்போட்டி-சித்திரப்போட்டி-மீலாத் தினப் போட்டி எனப் இப்பாடசாலை பல சாதனைகளைப்புரிவதற்கு இவர் காலாக இருந்திருக்கின்றார்.

போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் வரும் போது அதனை இருட்டடிப்புச் செய்கின்ற அதிபர்கள் நிறைந்த காலத்தில் மாணவர்களைத் தயார்படுத்துவதிலும் ஆசிரியர்களைத் தூண்டுவதிலும் தம்மை அதிகம் அர்ப்பணித்துள்ளார். போட்டிகளுக்கு அழைத்துச் செல்வதற்குரிய சூழல் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் இல்லாத சந்தர்ப்பங்களில் அப்பொறுப்புக்களைத் தானே ஏற்ற சந்தர்ப்பங்களும் இவரது காலத்தில் பதிவாகியுள்ளமை பாடசாலையின் மீது கொண்ட காதலுக்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

முதன்முறையாக புலமைப்பரிசில் பரீட்சையில்(2016) 4 மாணவிகளை சித்தியெய்த வைக்கவும் அதிக சித்தி வீதத்தை ஏற்படுத்தவும் உழைத்ததுடன் 2011 ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கு ஐ.எல்.உம்முல் ஹுஸ்னா என்ற மாணவி தெரிவு செய்யப்பட்டமையும் 2012-2013-2016 ஆம் ஆண்டுகளில் க.பொ.த(சா த)ரத்திலும் உயர்தரத்திலும் 9ஏ-3ஏ கிடைத்தமையும் வலய மட்டத்தில் கலைத்துறையில் சித்தி வீதங்கள் அதிகரித்தமையும் இவரது நிருவாகத்தூண்டுதலின் பேறேயாகும்.

பாடசாலை மேம்பாட்டுத்திட்டத்திற்காக உலக வங்கிப்பிரதி நிதிகள் வரவழைக்கப்பட்டமை- வலய மட்ட பொருட்கண்காட்சியை நடத்த முன்னின்றமை-பரிசளிப்பு விழா-மஹிந்தோதய ஆய்வு கூடத்தை கொண்டுவர முன்னின்றமை-சர்வதேச மகளிர் தினத்தை முதன்முதலாக விமர்சியாக அரங்கேற்ற சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தமை-பாடசாலை வளாகத்தினுள் மரநடுகைத்திட்டத்தை அறிமுகம் செய்தமை-மத ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டத்தை அழகுபடுத்தியமை-பாடசாலை முன்வாயிலை சீராக்கியமை- பாடசாலையின் உள்ளடக்க பட வரைபை காட்சிப்படுத்தமை-பாடசாலைத் தோட்டத்தை ஒழுங்குபடுத்தியமை-விளையாட்டுப் போட்டிகளை நடத்தியமை-மாணவர் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு காலாக அமைந்தமை-பாடசாலையின் செய்திகளைத் தாங்கிய 'அல்-மர்ஜான் நியூஸ்' செய்திமடல் இரண்டு பிரதியீடுகள் வர முன்னின்றமை  என ஆசிரியர் குடும்பத்தின் ஒத்துழைப்புடன் அல்-மர்ஜானின் அதிபர் சேவைக்காலத்தில் செய்யப்பட்ட செயற்பாடுகளில் முக்கியமான அடையாளப்படுத்தல்களாகும்.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக 2013 ஆம் ஆண்டு சிறந்த அதிபருக்கான பிரதீபா பிரபா விருது இரண்டாவது தடவையாகவும் இவருக்குக் கிடைத்தது. அதற்காக பாடசாலைச் சமூகம் அன்னாரை பிரதம அதிதியாகக் கொண்டு தங்கப்பதக்கம் அணிவித்து கௌரவித்தமை அதிபர் திருமதி அபீரா சலீமது கல்விப்பணியின் முக்கிய தடவலாகும்.

அதிபர் சேவைக்காலத்தில் அதிக தடவை பிரதம அதிதியாக பாடசாலை சமூகமே அங்கீகரித்த பெருமையும் அபீரா சலீமையே சாரும்.

அரசியல்-சமூக சேவை ஈடுபாடு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியுடன் அஷ்ரஃபின் கொள்கையினால் இவரது குடும்பமும் 1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஈர்க்கப்பட்டது. அரசியல் அறிவு-பேச்சாற்றல் முதலிய பலனங்களுடன் இருந்த திருமதி அபீரா சலீம் 1986 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மகளிர் அமைப்பின் தலைவியாக மர்ஹும் அஷ்ரஃபால் நியமிக்கப்பட்டார். அன்று முதல் அக்கட்சியின் தீவிர செயற்பாட்டாளராக மாறினார். இவரின் கட்சிப்பணிகளுக்கு இவரது கணவர் ஏ.எல்.எம். சலீமின் பக்கத்துணை முக்கிய பலமாகும்.

முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய வரலாற்றுத் தடமாகப் பதியப்பட்டுள்ள 1997 ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் நடந்த தேசிய மீலாத் விழாவில் சிறு கைத் தொழில் கண்காட்சிப் பொறுப்பாளராக இருந்து அரும்பணியாற்றனார்.

1990 ஆம் ஆண்டு சமாதான நீதிவானக நியமிக்கப்பட்டதுடன் பின்னாட்களில் பிரதேச பொருளாதார அபிவிருத்திக் குழுத் தலைவியாகவும் சிவில்பாதுகாப்புக் குழுத்தலைவியாகவும் இருந்து பணியாற்றினார்.

'அபீரா சலீம் மிகச் சிறந்த நிருவாகி. கல்விப்புலத்திலிருந்து அவர் ஓய்வு பெறுவது மிகப்பெரிய வெற்றிடமாகும்' என நமது கல்லூரியில் நடந்த கடந்த சாதாரண தர விழாவின் போது வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சௌதுல் நஜீம்; குறிப்பிட்டது போல் அல்-மர்ஜானின் வரலாற்றில் அதிபர் அபீரா சலீமின் பணி நினைவு கூரத்தக்கது. இருக்கின்ற காலத்தில் பேசப்படுவதை விட இல்லாத காலத்தின் ஒப்பீடுகளால் நினைவு கூரப்படுவது அதிக மதிப்புக்குரியது என்ற நியதியில் இவர் பேசப்பட்டுக்கொண்டே இருப்பார் என்பதற்கு இவரது அர்ப்பணிப்புமிக்க பணி சான்றாகும்.பேச்சாற்றலும் கல்விப்புலமும் பிரபல்யமும் துணிச்சலான முன்னெடுப்புக்களும் அரசியல் அனுபவமும் கொண்ட அதிபர் அபீரா சலீமின் எதிர்காலம் தற்கால சமூக எதிர்பார்ப்புக்களை நோக்கியதாக அமைய வாய்ப்புண்டு. அவர் செல்லும் துறைகளில் பிரகாசிக்க எமது அல்-மர்ஜான் குடும்பத்தின் சார்பான வாழ்த்துக்கள் 

-ஜெஸ்மி எம்.மூஸா


   No comments:

Post a Comment