SLTJ விவகாரம் : கசப்பான உண்மைகளும் விட்டுக்கொடுப்பின் அவசியமும் ; ஆதாரங்களுடன் ! - sonakar.com

Post Top Ad

Saturday 24 May 2014

SLTJ விவகாரம் : கசப்பான உண்மைகளும் விட்டுக்கொடுப்பின் அவசியமும் ; ஆதாரங்களுடன் !

 


ஒரு பக்கம் இனவாதத்தின் கொடுமைகளால் எமது சமூகம் துவண்டு கொண்டிருக்க இன்னொரு புறத்தில் நமக்குள்ளான முரண்பாடுகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. புத்தரையும் புத்த மதத்தையும் நிந்தனை செய்யும் வகையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக் சிங்கள மொழியில் கடந்த வருடம் உரையாற்றிய ஒளிப்பதிவிலடங்கிய விடயங்கள் இந்த வருடம் நீதி மன்றை அடைந்திருக்கிறது.


தவறு


குறித்த விடயத்தில் தான் தவறிழைத்ததாக சம்பந்தப்பட்டவர் பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார். அது மாத்திரமன்றி அத்தவறை அப்போதே உணர்ந்து அது தொடர்பில் மகாநாயக்கர்களுக்கு கடித மூலம் அறிவித்திருந்ததாக அவர் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. எனினும் இவ்விடயம் தற்போதுதான் சூடு பிடித்திருப்பதால் இது தொடர்பில் மீளவும் விளக்கமளிக்கவும் மன்னிப்பைக் கோரவும் அவர் மீது நிர்ப்பந்தம் ஏற்பட்டு அவரும் அதைச் செய்திருக்கிறார்.


இந்தத் தவறுக்கு மன்னிப்பைக் கோரியது மாத்திரமல்ல இனி வரும் காலங்களிலும் தஃவா பணியில் ஈடுபடுவோர் இதைவிடக் கவனமாக செயற்பட வேண்டும் என்கிற பாடத்தைக் கற்றுக்கொண்ட நல்ல தருணமாகவே இது அமைய வெண்டும்.


வழக்கு


இதற்கிடையில் வழக்கொன்றும் அந்த வழக்கின் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பங்கும் இன்று நமக்குள் மேலும் பிரிவினைகளை உருவாக்கி வருகிறது. SLTJ  தொண்டர்களிடம் இருக்கும் வேகத்தை சமூகம் நிராகரிக்க முடியாது. அது போல அவர்கள் தம் விவேகத்துடனான நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் அவசியம் இருக்கிறது என்பதை மறுதலிக்க முடியாது.


இவ்வழக்கில் பிரதானமாக இரு விடயங்கள் பேசு பொருளாக மாறியிருக்கின்றது.


ஒன்று: மஹாநாயக்கர்களிடம் சென்று மன்னிப்புக் கோரும்படியான கட்டளையிடப்பட்டதாகக் கூறப்படும் விடயம்.


இரண்டு: ஜம்மியத்துல் உலமா சார்பில் வழக்கறிஞர் ஒருவர் ஆஜரானாரா இல்லையா என்கிற விடயம்.


இதில் இரண்டாவது விடயத்தில் பொறுமையிழந்துள்ள தவ்ஹீத் ஜமாத்தார் காரசாரமான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். அவர்கள் உணர்வுகள் மதிக்கப்படும் அதேவேளை அதைவிடச் சிறந்த விட்டுக்கொடுப்புக்கு நீங்கள் தயாராக வேண்டும் எனும் கோரிக்கையுடன் இவ்விவகாரம் தொடர்பான மேலதிக விபரங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.


முதலாவது, மஹாநாயக்கர்களிடம் மன்னிப்புக் கேட்கும்படியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா இல்லையா என்பதற்கான விளக்கமானது, அது ஒரு சாராரால் எடுத்துக்கொள்ளப்பட்ட விடயமே தவிர அந்த விவகாரம் அங்கு பேசப்பட்ட சந்தர்ப்பம் தொடர்பாக இவ்விடயத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் சோனகர்.கொம்முக்கு வழங்கிய பிரத்யேக தகவலின்படி அவ்வாறான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை ஆனால் அது தொடர்பில் பேசப்பட்டது என்பதாகும்.


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் செயலாளர் அப்துல் ராசிக் குறித்த விடயத்திற்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார் என்பதை வழக்கறிஞர் மைத்ரி குணரத்ன நீதிபதியிடம் தெரிவித்து கடிதத்தை ஒப்படைத்த போது சரி கடிதம் அனுப்பியது கிடைத்ததோ என்னவோ எதற்கும் நேரில் சந்தித்து ஒரு தடவை பேசலாமே என்று கூறப்பட்டதாகவே ஒரு வழக்கறிஞர் உட்பட வேறு இருவரும் குறித்த நாள் இது தொடர்பில் எமது தளத்தில் வெளியான ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் செயலாளர் அப்துல் ராசிக்கின் விளக்கமும் அமைந்திருந்தது.



சிறை செல்லத் தயார்


எனவே, மஹாநாயக்கர்களிடம் சென்று மன்னிப்புக் கேட்கும் அவசியம் இல்லை. அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்படவுமில்லை. அப்படியொரு நிலை வந்தால் அதை விட சிறை செல்வோம் என SLTJ தரப்பில் உறுதியாகத் தெரிவித்து எமது தளத்திற்கும் ஆக்கங்களும் அனுப்பப்பட்டிருக்கிறது. இருந்த போதும் இவ்வாறான உணர்ச்சி மிகுதல்களுக்கு அப்பால் உண்மையை முழுமையாகக் கண்டறிந்து வெளியிடும் நோக்கம் எம்மிடம் இருந்ததால் அவற்றைப் பிரசுரிப்பதைத் தவிர்த்திருந்தோம்.


இது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை SLTJ சார்பில் எமது பிரதிநிதிகளுடன் உரையாடிய அவ்வமைப்பின் துணை செயலாளர் ரஸ்மின் மீண்டும் இந்த விடயத்தை வலியுறுத்திய போதும் அவரிடமும் பொறுமை காக்கும்படி கேட்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் நேற்று ஜம்மியா சார்பில் உரையாடுவது போன்ற ஒரு கட்டுரை ஒரு சில இணையத்தளங்களில் வெளியாகி ஜம்மியாவின் அறிக்கை விரைவில் வெளி வரும் எனவும் ஜம்மியா மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வீசப்படுவதாகவும் வெளியாகி இரு தரப்பு நிலைப்பாட்டையும் மேலும் பிரிவினைக்குள்ளாக்கியிருந்தது.


எனினும், எம்மைப் பொறுத்தவரை இவ்விடயம் மேலும் விபரமாக சமூகப்பொறுப்புடன் ஆராயப்பட்டிருக்க வேண்டும் என்பதால் சகல தரப்பு பிரதி வாதங்களையும் தவிர்த்திருந்தோம்.


இதனடிப்படையில் SLTJ அமைப்பினால் ஜம்மியத்துல் உலமா மீது முன்வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டுகளாவன :


  1. ஜம்மியா செயலாளர் முபாரக் மெளலவி SLTJ அமைப்புக்கு எதிராக புலனாய்வுப் பிரிவிடம் தகவல் வழங்கினார்.
  2. ஜம்மியா தமக்கெதிராக ஒரு சட்டத்தரணியை வழக்குக்கு அனுப்பியிருந்தது ஆகியனவாகும்.


இதில் முதலாவது விடயம் பற்றிய மேலதிக புரிந்துணர்வு தேவை. ஏனெனில் முபாரக் மெளலவியிடம் மேற்கொள்ளப்பட்ட "கலந்துரையாடலின்" அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு பொலிசார் தமக்கு சாதகமான முறையில் நீதிமன்றில் தகவல் வழங்கியுள்ளனர். உங்கள் அமைப்பில் சேர்வதானால் என்ன தகைமை வேண்டும்? யாரையெல்லாம் உங்கள் அமைப்பில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறீர்கள்? அவர்களுக்கு எவ்வகையான பயிற்சிகளைப் பெற்றிருக்க வேண்டும் போன்ற விடயங்கள் கேள்விகளாகக் கேட்கப்பட்டு விடைகள் பெறப்பட்டிருக்கின்றன என்பதே முபாரக் மெளலவி வழங்கிய தகவல்களைக் கொண்டும் நாம் மேற்கொண்ட விசாரணையில் அறிந்து கொண்ட மேலதிக விடயங்களைக் கொண்டும் வெளிப்படுத்தக்கூடிய அனுமானமாகும்.


இது தொடர்பாக முபாரக் மெளலவியிடம் வினவப்பட்ட போது:



இரண்டாவது ஜம்மியாவினால் ஒரு சட்டத்தரணி நியமிக்கப்பட்டதாகக் கூறப்படும் விடயம். இந்த விடயத்தைப் பொறுத்தவரை நேற்றைய தினம் இது தொடர்பில் உலா வந்த கட்டுரை கூட தீர விசாரிக்கப்படாத நிலையில் அல்லது "ஏதோ" ஒரு அவசரத்தில் எழுதப்பட்டிருக்கிறது எனவே கொள்ளலாம்.


ஏனெனில் குறித்த விடயத்தில் ஜம்மியா செயலாளர் முபாரக் மெளலவி அறிந்ததை விட அறியாதவை அதிகமாக இருக்கின்றன என்பதையே புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.


எனவே, முபாரக் மெளலவியிடம் கேட்கப்பட்ட கேள்விகள் உண்மையில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடமே கேட்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஒரு புறம் ஜம்மியா தாம் அனுப்பவில்லையென்று கூறுவதும், இன்னொரு புறம் அதை வைத்து தவ்ஹீத் ஜமாத்தினர் உணர்வுகளைக் கொட்டுவதும் தொடர்வதானது நமக்குள் இருக்கும் பிளவுகளை மேலும் அதிகரிப்பதற்கு எண்ணை ஊற்றும் விடயங்களாகும்.


அந்த வகையில், இப்பிரச்சினையில் ஒளிவு மறைவின்றி விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமாயின் சம்பந்தப்பட்டவரைத் தொடர்பு கொள்வதே தகும். அந்த வகையில் சம்பந்தப்பட்டவரைப் பற்றி பேச முன்னர் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விடயம் சட்டத்தரணி அலி சப்ரி ஒரு ஜனாதிபதி சட்டத்தரணி மாத்திரமல்ல, அவர் ஒரு முன்னணி சட்டத்தரணியும் கூட. இந்நிலையில் ஏதோ ஒரு வழக்கில் எது விதத் தொடர்புமில்லாமல் அவர் ஏன் உள்ளே செல்கிறார் என ஒரு கேள்வி எழுகிறது. அந்தக் கேள்விக்கு விடையாக இதோ ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வழங்கிய விளக்கம்:



இதனடிப்படையில் ஜம்மியாவின் வேண்டுகோளின்றி ஜனாதிபதி சட்டத்தரணி இவ்வழக்குக்கு செல்லவில்லை என்பது உண்மையாக இருக்கின்ற அதே வேளை ஜம்மியா செயலாளர் முபாரக் மெளலவிக்கு இது தொடர்பில் தெளிவான அறிவிறுத்தல்களோ தகவல்களோ வழங்கப்படவில்லை என்பதும் உண்மையென்பதை அவரால் தரப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் தகவல்களைக் கொண்டு நாம் ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறோம்.


அப்படியானால் சட்டத்தரணி அலி சப்ரி அவர்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்கியதும் செயற்பட வைத்ததும் யார் எனும் கேள்வியும் எழுகிறது.


இதற்கான விடை ஜம்மியத்துல் உலமாவின் பிரதிநிதியொருவர் (அவரது பெயர் தவிர்க்கப்படுகிறது) என்பதை ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்திருந்தார்.


அதன் பின்னணி பற்றியும், குறித்த நபர்கள் பற்றியும் அவசரத்தில், உணர்ச்சி மிகுதியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினர் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள முன்பதாக அமைதியுடன் இந்த விடயத்தைக் கையாளும் சமூகப் பொறுப்புடன் இருக்கிறீர்கள் என்பதையும் சிந்திக்கக் கடமைப்படுகிறீர்கள்.


விட்டுக்கொடுப்பு


நமது சமூகம் ஏற்கனவே பல பிளவுகளை சந்தித்தாயிற்று. அதில் மேலும் பிரதானமானது நம்மிடையே காணப்படும் இயக்க வேறுபாடு. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் வேகம் இலங்கை முஸ்லிம் சமூகத்திடம் இயல்பு நிலையை அடைவதற்கு இன்னும் காலம் தேவைப்படும். அதேவேளை இயல்பு நிலை எதுவென்பதைப் புரிந்து பணியாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பும் உங்களிடம் இருக்கிறது. காரணம், இலங்கை முஸ்லிம் சமூகம் பல நூற்றாண்டுகளாக வாழப்பழகிக்கொண்ட நிலையிலிருந்து புதிய நிலைக்கு ஒரேயடியாக தள்ளப்பட முடியாதது.


இதற்கான ஒரே தீர்வு விட்டுக்கொடுப்புடனான கலந்துரையாடலாகும். எம்மைப் பொறுத்தவரை தவ்ஹீத் ஜமாத்துக்கு ஆதரவாக எழுதுவோரும் எதிராக எழுதுவோரும் அது போன்றே ஏனைய ஜமாத்கள் தொடர்பில் ஆதரிப்போர் முரண்படுவோர் அனைவரும் "முஸ்லிம்களே". இதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை. எனவே கருத்து முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வதற்கான வழி முறைகளில் கலந்துரையாடல் மிக முக்கியமானது.


உலகமே பொய்யைக் கூறினாலும் உண்மைகள் ஏதாவது ஒரு வழியில் வெளி வரும். நடு நிலையான ஊடகமாக இரு பக்க விடயங்களையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறோம். அந்த வகையில் சில அறியப்படாத உண்மைகள் மூலம் இந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறோம். எனவே, இது தொடரப்படக்கூடாது என்பது எமது வலுவான தாழ்மையான வேண்டுகோளாகும்.


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சகோதரர்கள் குறித்த விடயம் தொடர்பில் எழுதிய, பேசிய விடயங்களில் உண்மையிருக்கிறது என்பது இங்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியோ அல்லது ஜம்மியாவின் தலைவர் ரிஸ்வி முப்தியும் இல்லாத நிலையில் முன் வைக்கப்பட்ட யோசனைகளுக்குப் பின்னாலான குறித்த மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடு தொடர்பிலோ உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசப்படுவதை விட அறவழியில் நன்மை பயக்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவது நம் அனைவரினதும் கடமையாகிறது.


எனவே, "எங்கோ தவறு நடந்திருக்கிறது" என ஏற்றுக்கொள்வோம்!


புத்த மத நிந்தனை தொடர்பில் நீங்கள் பகிரங்கமான மன்னிப்பு கேட்கும் வகையில் "தவறு" நடந்தது. அதே போன்று உங்கள் விவகாரத்தில் ஜம்மியாவின் பக்கம் வேறு வகையான பார்வையிருந்திருக்கிறது. அந்தப் பார்வையைக் களைவதும், கலந்துரையாடல் மூலம் தெளிவுகளையும் புரிந்துணர்வதையும் வளர்ப்பதும் உங்கள் கடமை!


நாம் அனைவரும் முஸ்லிம்கள், நமக்குத் தேவை ஒற்றுமை! உண்மைகள் எப்போதும் வெளி வந்தே தீரும். உங்களிடம் இருக்கும் வேகத்தையும் பக்குவத்தையும் செப்பனிட்டு இந்த விடயத்தை இனி எவ்வாறு கையாளப் போகிறீர்கள் என்பதை ஒட்டு மொத்த இலங்கை சமுதாயமும் பார்த்துக்கொண்டிருக்கிறது.


முதலில் நாம் முஸ்லிம்களாக ஒன்றிணைந்து கொள்வோம் ! இவ்விடயத்தில் பக்குவமான முன்னெடுப்புகளை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மேற்கொள்ளும் எனும் அதீத அவாவையும் வேண்டுகோளையும் எமது தளங்கள் சார்பிலும் எமது நடு நிலையான வாசகர்கள் சார்பிலும் முன் வைக்கிறோம்.


அதேவேளை, லண்டன் ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்றது போன்றே மீண்டும் ஒரு அறிக்கைத் தவறை செய்வதை ஜம்மியத்துல் உலமாவும் தவிர்ந்து கொள்ளும்படி மிகத் தாழ்ந்த முறையில் எமது வேண்டுகோளை முன் வைக்கிறோம்.


இவ்விடயம் இனி நடந்து முடிந்தாயிற்று, இதில் மூன்றாவது தரப்பாக ஏறிச் சவாரி செய்ய நினைப்பவர்களுக்கும் இரு தரப்பினரும் இடம் கொடுக்காது எமது சமூக ஒற்றுமையைப் பேணி முன்னேறிச் செல்ல இறைவனின் நல்லருளை வேண்டி பிரார்த்திக்கொள்கிறோம்!


- சோனகர் வலைத்தளம் (sonakar.com)

No comments:

Post a Comment