முகா உயர்பீடக் கூட்டமும் ஒழுக்காற்று நடவடிக்கை நாடகமும் - sonakar.com

Post Top Ad

Sunday 14 February 2021

முகா உயர்பீடக் கூட்டமும் ஒழுக்காற்று நடவடிக்கை நாடகமும்

 



நேற்று (14) நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக்கூட்டத்தில் 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களால் கூறப்பட்டதாக அதன் தலைவரால் தற்போது கூறப்படுகின்ற விடயங்களை சற்று அலசுகின்ற போது, பல சந்தேகத்திற்கிடமான கேள்விகள் எழுகின்றது.


01) இப்போது உயர்பீடத்தைக்கூட்டிய நீங்கள் அன்று ஏன் உயர்பீடத்தைக்கூட்டி 20க்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்ற முடிவை எடுக்கவில்லை.


02) ஒட்டுமொத்த முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் தாங்கள் எனக்கூறிக்கொள்ளும் ஒரு கட்சியின்  தலைவர், அரசுக்கெதிராகவும் ஏனைய உறுப்பினர்கள் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உரிமைகளையும் ஒரு நொடியில் தகர்த்தெறிந்த அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்து விட்டு அவர்களால் மன்னிப்புக்கோரப்படுமிடத்து, அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று உங்களது கட்சி யாப்பில் எங்கேயாவது கூறப்பட்டுள்ளதா? 


03) அரசாங்கம் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், அரசுக்கு ஆதரவளிப்பதால் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என்ற காரணத்திற்காகவும் தாம் ஆதரவளித்ததாகக் கூறுகிறார்கள். அப்படியாயின், எந்த விடயத்தில் அரசாங்கம் இவர்களை ஏமாற்றியிருக்கின்றது என்பதில் தெளிவற்ற தன்மையே காணப்படுகிறது.


04) ஒரு வாதத்திற்காக ஜனாஷா எரிப்பு விடயத்தில் இவர்களை அரசாங்கம் ஏமாற்றியிருப்பதாக எடுத்துக்கொண்டால், ஏன் இவர்கள் கொரோனா தொற்றினால் இறக்கின்ற ஜனாஷாக்களை அடக்கம் செய்யலாம் என்ற வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டபின் 20க்கு ஆதரவளித்திருக்கலாமல்லவா?


04) அப்படிச்செய்யாமல் இவர்கள் ஆதரவளித்தவையானதும், பச்சிளம் பாலகனின் ஜனாஷா எரியூட்டப்படும் போது, உல்லாச விடுதியில் மகிந்தவின் விருந்தில் ஆடிப்பாடிக் கொண்டாடிக்கொண்டிருந்ததும் எந்தவிதமான கோரிக்கையும் முன் வைக்காமல் பணத்திற்காக சோரம் போனதைத்தானே உறுதிப்படுத்துகிறது.


05) அன்று சூழ்நிலைக்கைதியாகி விட்டேன் என நீங்களும் தலைவருக்குத் தெரிந்து தான் நாங்கள் ஆதரவளித்தோம் என்று அவர்களும் கூறியதும் இன்று நீங்கள் அவர்கள் தொடர்பாகக் கூறுகின்ற கருத்துக்களையும் வைத்துப்பார்க்கின்ற போது, அன்று அவர்கள் கூறியது தான் உண்மை என்று எண்ணத்தோன்றுகிறது.


06) ஏதோவொரு தேவைக்காக எந்தவிதக் கோரிக்கையும் முன்வைக்காமல் தாங்கள் அனைவரும் சேர்ந்து ஏற்கனவே திட்டமிட்டு 20க்கு ஆதரவாக அவர்களும் எதிராக நீங்களும் ஆதரவளித்து நடிப்பின் உச்சிக்கே நீங்கள் சென்று உங்களை நம்பி வாக்களித்த மக்களின் உரிமைகளைப் பேரினவாதிகளிடம் அடமானம் வைத்து விட்டு, இப்போது தங்களின் வழமையான தந்திரத்தோடு மக்களை ஏமாற்றலாம், முட்டாள்கலாக்கிவிடலாம் என நினைக்கின்றீர்கள்.


அல்லது அவர்களுக்கெதிராக நடவடிக்கையெடுத்தால், கட்சியில் தான் மட்டும் தான் எஞ்சியிருப்பேன் என அச்சப்படுகிறீர்கள். அவ்வாறு அச்சப்படுவீர்களானால், கட்சியையும் உங்களையும் நம்பி வாக்களித்த மக்களுக்கு நீங்கள் செய்கின்ற மிகப்பெரிய துரோகம் என்பதை மறந்து விட வேண்டாம்.


எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றான். அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.


நாஸர் இஸ்மாயில்

No comments:

Post a Comment