நிலையறும் நியதிகளும் நிரந்தரமில்லா வலிகளும்! - sonakar.com

Post Top Ad

Friday 2 October 2020

நிலையறும் நியதிகளும் நிரந்தரமில்லா வலிகளும்!

 


இலங்கை ஒரு விவசாய நாடென்பது கடந்த அமைச்சரவைக் கூட்டம் வரை பலருக்கு மறந்து போன விடயம். நாட்டின் விவசாயத்துறையைக் காப்பாற்றவே மாடறுப்பைத் தடை செய்யப் போவதாக பிரதமர் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்த கதையைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தவர்களும் இருந்திருப்பர்.


முஸ்லிம்கள் விவசாயத்தில் ஈடுபடுவது வெகுவாகக் குறைந்து போயுள்ள காலமாதலால் இலங்கையின் விவசாயத்துறை பற்றிய ஆழமான தகவல்களைப் பார்ப்பதும் காலத்தின் கட்டாயமாகிறது. சுருக்கமாகக் கூறின், பங்களதேஷிலிருந்து, மியன்மாரிலிருந்தெல்லாம் அரிசி இறக்குமதி செய்தாலும் கூட தேயிலை போன்றே இலங்கை பொருளாதாரத்தில் அரிசி விவசாயத்துக்கும் முக்கிய பங்குண்டு.


அண்மைக்கால தகவல் ஒப்பீட்டுக்காக 2012 – 2016 காலப்பகுதியிலான இலங்கை விவசாயத்துறையின் அபிவிருத்தி பற்றிய புள்ளிவிபரத்தை ஆராய்வின், ஒரு காலத்தில் முக்கிய  வர்த்தகமாக விளங்கிய இறப்பர் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் அரசி, மரக்கறி, தேயிலை, வாசனை திரவியங்கள், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்துறை போன்றவை நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளதுடன் அந்நிலை இன்னும் தொடர்கிறது என்றால் மிகையில்லை.


கடந்த அரசும், இந்த அரசும் விவசாயிகளுக்கான சலுகைகளை வழங்குவதைத் தமது தேர்தல் வாக்குறுதிகளாக முழங்கிக் கொண்டிருந்ததை சற்றே நினைவு மீட்டினால் அடி மட்ட மக்கள் மத்தியில் விவசாயத்துறைக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். நாட்டின் உணவு உற்பத்தி மாத்திரமன்றி தொழில்வாய்ப்பும் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் நடைமுறை அரசும் அதில் அதீத அக்கறை செலுத்துகிறது.


இலங்கையின் விவசாயத்துறை வீழ்ச்சி கண்டு வருகிறது மற்றும் வருமானக் குறைபாடுள்ளது என்ற வாதம் ஒரு புறமிருக்க 2016ம் ஆண்டுக்கான மத்திய வங்கி அறிக்கையின் படி, ஏற்றுமதிக்கான கேள்வி அதிகமிருக்கின்ற போதிலும் உள்நாட்டு உற்பத்தி போதிய அளவில் இல்லையென சுட்டிக்காட்டப்படுகிறது. அண்மைய வருடங்களில் காணப்பட்ட சீரற்ற காலநிலையும் இதில் தாக்கம் செலுத்துவதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது.


அதைவிட முக்கியமாக, விவசாயத்துறை இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.8 வீத பங்கினை வகிப்பதோடு 30 வீத தொழில்வாய்ப்பினை நிறைவு செய்வது அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகும். ஆயினும், இலங்கையின் விவசாயத்துறை வெறுமனே நெற் பயிர்ச்செய்கையோடு வரையறுக்கபடக்கூடிய விடயமன்று.


மத்திய வங்கி, 16 வகையான விடயங்களை 'விவசாயத்துக்குள்' அடக்குகிறது. அதில் தேயிலை, அரிசி, இறப்பர், கரும்பு, மரக்கறி, கால்நடை வளர்ப்பு, மீன்பிடி மற்றும் பழங்களும் உள்ளடக்கம். இவ்வாறு பரந்த விவசாயத்துறை பற்றி கவனமெடுப்பதும் விவசாயத்துறையை நம்பி வாழும் மக்களுக்கு கை கொடுப்பதும் வழி காட்டுவதும் அரசின் மீதிருக்கும் கட்டாயக் கடமையாகும். எனவே, ஒவ்வொரு அரசும் இவ்விடயத்தில் அக்கறை செலுத்தி வருகிறது.


விவசாயத்துறை மீது ஆர்வமுள்ளவர்கள் விவசாயத்துறை அமைச்சு அதன் கீழான திணைக்களங்கள், தென்னை, இறப்பர், தேயிலை ஆராய்ச்சி மையங்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு அபிவிருத்திக்கான பிரத்யேக திணைக்களத்தையும் தொடர்பு கொண்டு மேலதிக தகவல் மற்றும் உதவிகள், கடன் வசதிகள், ஊக்குவிப்பு நடவடிக்கைகள் போன்ற விடயங்களையும் அறிந்து கொள்ளலாம்.


இருந்தாலும் இப்போதைய கேள்வி மாடறுப்புத் தடையினால் விவசாயத்துறை முழுமையாக முன்னேறி விடுமா? என்பதே. இரு வாரங்களுக்கு முன்பு வரை பேச்சளவில் இருந்த விடயத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சரவையில் சமர்ப்பித்து ஒப்புதலையும் பெற்றுள்ளார் என்ற அடிப்படையில் இவ்விடயத்தின் அவசர விளைவுகள் பற்றி மக்கள் ஆராயத் தொடங்கியுள்ளார்கள்.


பிரதமரின் விளக்கத்தின் படி, மாடறுப்புத் தடை என்ற பொதுச் சொல்லுக்குள் பசுவும் உள்ளடக்கப்படுகிறது. பசுக்களைக் கொண்டு உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதே நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னணியில், வெளிநாடுகளிலிருந்து பால் மா இறக்குமதி செய்வதைக் குறைக்கலாம் என்பதும் விவசாய அமைச்சரின் கணக்காக இருக்கிறது. 


இந்த வாரம் அவரது கூற்றின் அடிப்படையில் நாளொன்றுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பால் மா இறக்குமதி செய்யப்படுகிறது. அதனை முற்றாக நிறுத்த வேண்டுமாயின் உள்நாட்டு பால் உற்பத்தி அதிகரிப்பு அவசியப்படுகிறது. ஒரு வகையில் இது ஏற்றுக் கொள்ள வேண்டிய விடயமே. இறக்குமதி செய்யப்படும் பால் மா உடல் ஆரோக்கியத்துக்கு கேடானது என்று கடந்த ஆட்சியிலும் பரபரப்பாக பேசப்பட்டது.


முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் அவ்வாறே தெரிவித்தது மாத்திரமன்றி, இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களில் பன்றிக் கொழுப்பு கலந்திருப்பதாக பிரதியமைச்சராக இருந்த புத்திக பத்திரண ஆவேசமாக கருத்துரைத்துப் பரபரப்பும் உருவாகியிருந்தது. எனினும், நீண்ட காலமாக பால்மாவுக்கு பழகிப் போயுள்ள நாட்டின் சமூகத்தை எத்தனை வேகமாக தூய பாலின் பக்கம் திருப்பலாம் என்பது நடைமுறைச் சிக்கலான கேள்வியாகும். ஆயினும், மாறுவது நன்று.


எனினும், பசுவொன்று பொதுவாக ஒரு வருடத்தில் 10 மாதங்களுக்கே பால் தரும் என்பது நடைமுறை அளவீடு. அத்துடன் மூன்று முதல் பத்து வருடங்களுக்கு இச்செயற்பாட்டினை எதிர்பார்க்கலாம் என்பது அபிவிருத்தியடைந்த நாடுகள் உட்பட்ட சர்வதேச ரீதியிலான புள்ளிவிபரம். இலங்கையிலும் இதுவே நிலையென எதிர்பார்க்கலாம். அந்த வகையில் குறித்த கால எல்லைக்குப் பின் அவற்றின் தேவையும், மதிப்பும் கேள்விக்குள்ளாகும்.


மறுபுறத்தில், மாடுகளையும் விவசாயத்துறையில் பயன்படுத்தப்படக்கூடிய கால எல்லை இருக்கிறது. அந்தக் கால எல்லை தாண்டியவுடன் அதாவது கால்நடைகளுக்கு வயதானதும் அவற்றின் எதிர்காலம் என்ன என்ற கேள்விக்கும் விடை காணப்பட வேண்டும். எனவே தான் அமைச்சரவைப் பத்திரத்தில் இதற்குமான வழிமுறையைக் கண்டறிந்த பின்னரே மாடறுப்புத் தடையை அமுலுக்குக் கொண்டு வருவது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


அந்த வகையில் அமைச்சரவைப் பத்திரம் மாடறுப்புத் தடையை நியாயப்படுத்துவதற்கான முக்கிய அம்சத்தை இன்னும் பூர்த்தி செய்யவில்லை. இருப்பினும் கூட, பிரதமர் அதற்கு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன் மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்படுமிடத்து பௌத்த மக்களிடையே மீண்டும் விகாரை வலையமைப்புகள் அரசுக்கு ஆதரவான பிரச்சாரத்தை மேற்கொள்ள இது கட்டாயம் உதவப்போகிறது.


கால்நடை வளர்ப்பில் பெருமளவு பௌத்த மக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதையும் தாண்டி பௌத்த தேசத்தின் மீள் நிறுவல் என்ற உணர்ச்சியூட்டலுக்கு இவ்வாறான விடயங்கள் அவசியப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் முஸ்லிம்களின் உணர்வுகளைச் சீண்டுவது தொடர்ச்சியாக பேரினவாத அரசியலுக்குஇலாபத்தைப் பெற்றுத்தந்து வருகிறது எனும் அடிப்படையில் விளைவுகள் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாகும். இது எது வரை நீடிக்கும் என்ற கேள்வியும் இல்லாமலில்லை.


இலங்கையில் நியதிகளின் சராசரி ஆயட்காலம் ஐந்து வருடங்களாக இருந்து வரும் நிலையில் இது போன்ற தற்காலிக உணர்வுத்தூண்டல்களுக்கு எதிர்வினையாற்றாமல் இருப்பதும் காலத்தின் தேவையாக இருக்கிறது. சமூகத்தின் எந்த மட்டத்தில் பேசப்பட்டாலும் மாடறுப்பு தடை வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் திட்டம் என்ற சந்தேக உணர்வு நிலை கொண்டிருப்பதைக் காணலாம். ஆயினும், எதிர் வினையாற்றப்பட வேண்டியதொன்றா என்பது குறித்த விழிப்புணர்வு அவசியப்படுகிறது.


மாட்டிறைச்சி இலங்கையில் பெருமளவில் விரும்பி உண்ணப்படும் மாமிசம். முஸ்லிம்களின் வாழ்வியலில் உணவுக்காக மாத்திரமன்றி உழ்ஹியா, குர்பானி போன்ற மார்க்க சம்பந்தப்பட்ட விடயங்களிலும் மாடறுப்பு பிணைந்திருப்பதனால் இந்த உணர்வுத்தூண்டல் இயற்கையானது. எனினும், ஐக்கிய இராச்சியம் உட்பட பல நாடுகளில் மாட்டிறைச்சி என்பது அரிதாகவே உணவில் சேர்க்கப்படுகிறது. ஆட்டிறைச்சியே அந்த இடத்தை நிரப்பிக் கொள்கிறது.


ஒரு நகைச்சுவைக்காக, பச்சைப் புல்லையும் தெரிவு செய்யப்பட்ட தீனிகளையும் மாத்திரம் உண்டு வளரும் ஐரோப்பிய மாடுகள், போஸ்டர், பசை, பேப்பர் என்று கண்டதையும் தின்று வளரும் இலங்கை மாடுகள் போன்று ருசியில்லையென்றும் யு.கேயில் பேசிக் கொள்வதுண்டு. 


எது எவ்வாறாயினும், மாட்டிறைச்சி வியாபாரம் உலக பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. மத்திய கிழக்கு மற்றும் பல ஆசிய நாடுகளுக்கான மாட்டிறைச்சி வர்த்தகத்தில் அவுஸ்திரேலியா முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஏலவே அவுஸ்திரேலியாவில் இருந்து தரமான பசு மாடுகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் எதிர்பார்த்த விளைவு இல்லாததால் திட்டம் சரிவைக் கண்டுள்ளது. ஆயினும், அவுஸ்திரேலியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாட்டிறைச்சிக்கான கேள்வி அரபு நாடுகளிலும் நல்ல நிலையிலேயே இருக்கிறது. ஹலால் மாட்டிறைச்சி பிரத்யேகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


பிரதமரின் அமைச்சரவைப் பத்திரம் இன்னுமொரு விடயத்தைக் குறிப்பிடுகிறது. அதாவது, மாட்டிறைச்சி உண்பவர்களுக்காக இறக்குமதி செய்யப்பட்ட மாட்டிறைச்சியை சலுகை விலையில் கொடுக்கும் திட்டமே அது. அதாவது, இல்ஙகையில் மாட்டிறைச்சியை உண்போரை 'மறக்காமல்' செய்யும் பணியாக அந்த சரத்து வெளிக்காட்டப்படுகிறது.


எனினும் இங்குள்ள சிக்கல் என்னவெனில், இறக்குமதி செய்யப்படும் இறைச்சி பெரும்பாலும் உறை நிலையிலேயே (frozen) விற்பனை செய்யப்படும். அவ்வாறு உறை நிலை மாமிசத்தினை இலங்கையில் உள்ள அனைத்து கிராமப் பகுதிகளிலும் விற்பனை செய்ய முடியுமா? அதற்கான வசதிகள் இருக்கிறதா? என்ற கேள்வியும் உண்டு. அதற்கடுத்த கேள்வி தான் எங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் என்பதாகும்.

இறக்குமதி செய்யவும் வேண்டும், அதனை சலுகை விலையில் தரவும் வேண்டும் என்றால் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியை மேற்கொள்வது கட்டுப்படியாகக் கூடிய வியாபாரமன்று. அப்படியானால், மாற்றீடாக இந்தியாவையே சிந்திக்க முடிகிறது. ஏனெனில் நரேந்திர மோடியின் அரசு இந்தியாவிலும் இது போன்ற நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதால் பல பின்தங்கிய இடங்களின் மாடுகளின் தொகை அதிகரித்துள்ளதுடன் அதனால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களும் அதிகரித்துள்ளதாக ஊடகக் குறிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.


குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் திடீரென வரும் அரச வாகனங்களில் வயதான கால்நடைகள் அள்ளிச் செல்லப்படுவதாகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. அவ்வாறாயின் அது போன்ற தர நிலையில் உள்ள மாமிசத்தை இலங்கை போன்ற நாடுகளுக்கு மிகக் குறைந்த விலையில் வழங்கக் கூடிய வாய்ப்பு இந்தியாவுக்கு நிறையவே இருக்கப் போகிறது. அதே போன்று, மாற்றீடாக இலங்கையில் வயதாகிப் போகும் கால்நடைகள் எங்கே அனுப்பப்படும்? என்ற கேள்விக்கு இது வரையில் தெளிவான விடையில்லை.


இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் இறைச்சியின் தரம், அதன் நம்பகத்தன்மை போன்ற பல கேள்விகள் ஊடாக முஸ்லிம் சமூகத்தில் மாட்டிறைச்சிக்கான கேள்வி (demand) குறையும் என கணிப்பிடலாம். அதற்கான மாற்றீடு என அரபு நாட்டிலிருந்து ஒட்டகத்தைக் கொண்டு வருவோம், மலேசியாவிலிருந்து மாட்டைக் கொண்டு வருவோம் என எமது அரசியல்வாதிகள் தேர்தலுக்காக கொக்கரிக்க முன்பதாக நம் சிந்தனைப் போக்கில் மாற்றங்களை உருவாக்கிக் கொள்வது நல்லது.


இந்துக்கள் ஆட்டைப் பலி கொடுப்பதற்கு எதிராகவும் மேர்வின் சில்வா போன்றோர் பரபரப்பை உருவாக்கியிருந்தார்கள். கோழியொன்று தான் இதுவரை தப்பியிருக்கிறது. அதற்காகவும் ஒரு அமைப்பு உருவாகிப் போராடும் காலம் வர முன்பதாக முஸ்லிம்கள் தம் உணவுப் பழக்கவழக்கங்களில் தேவையான மாற்றங்களைத் திட்டமிடல் வயிற்றுக்கு மாத்திரமன்றி மனதுக்கும் செய்யும் நன்மையாக இருக்கும்.


ரணில் - மைத்ரி கூட்டாட்சிக் காலத்தில் பவித்ரா வன்னியாராச்சி லண்டனில் ஒரு சந்திப்பை நடாத்தினார். லண்டனில் 40 வருடங்களுக்க மேலாக குடியிருக்கும் பௌத்த துறவியொருவர், பெரமுன ஆட்சியமைத்தால் என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்குகையில், இலங்கையில் பௌத்த குடும்பங்களின் பிறப்பு விகிதம் 1.5 எனவும் முஸ்லிம் குடும்பங்களில் அது 6 எனவும் இதனைக் கட்டுப்படுத்த பெரமுன அரசு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கூறினார். பதில் கருத்துரைக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தில், ஒரு சமூகத்தின் பிறப்பு விகிதாசாரம் குறைந்திருப்பதற்கு இன்னுமொரு சமூகம் ஏன் பொறுப்பேற்க வேண்டும்? உங்கள் சமூகத்தில் குறைபாட்டை நீக்க மாற்று நடவடிக்கையல்லவா அவசியப்படுகிறது? என்று நான் ஒரு கேள்வியை முன் வைத்தேன். 


கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பாதிப்பேர் ஆமோதித்தார்கள், மீதிப்பேர் மௌனித்திருந்தார்கள். இது போன்றே உள்நாட்டில் உள்ள விடயங்களின் தெளிவும் - வியாக்கியானங்களும் அவ்வப்போது நிலையறுந்து காணப்படுகிறது. அது தான் அரசியல் தளத்திலும் அவசியப்படுகிறது. இன்றைய இலங்கை அரசியலில் முற்போக்கு சிந்தனாவாதம் பின்னடைவைக் கண்டுள்ளது. அது மீள எழுமா? இல்லையா? என்பது சந்தேகத்துக்குரியது என்றாலும் இயல்பறிவு (common sense) இன்னும் முற்றாக அழிந்து விடவில்லை.


ஆதலால், மாட்டிறைச்சியைக் கொண்டு திட்டமிடப்படும் அரசியல் - வர்த்தகத்தைப் பற்றி பௌத்த சமூகத்தவரும் பல்வேறு வகையான கேள்விகளையும் சந்தேகங்களையும் முன் வைத்து வருகிறார்கள். 


அவர்கள் வந்த போது பெற்றோலுக்கு சூத்திரம் கொண்டு வந்தார்கள், இவர்கள் வந்து தேங்காய்க்கு சூத்திரம் கண்டுபிடித்துள்ளார்கள். இதுவெல்லாம் சிரிப்பாக இல்லையா? என்று கேள்வி கேட்டால் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல மிக அவதானமாக, ஏற்றுக்கொள்ள முடியாத சிக்கல்களாகத் தீர்மானங்கள் உருவாக்கப்பட்டதைக் காணக் கிடைக்கிறது என்கிறார். நேரடியாக 'ஆம்' என்று சொல்வது அவர் பதவிக்கு ஆபத்து. 


விரல் நீட்டும் வாய்ப்பு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையே கிடைக்கும் மக்களும் என்ன தான் செய்வார்கள்?



-Irfan Iqbal

Chief editor, Sonakar.com






 


No comments:

Post a Comment