சூராதி சூரர்கள் வலம் வரப் போகிறார்கள்..! - sonakar.com

Post Top Ad

Friday 12 June 2020

சூராதி சூரர்கள் வலம் வரப் போகிறார்கள்..!


கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இறுதி நபரும் குணமடைந்த பின்னரே நியுசிலாந்து தமது நாடு கொரோனா பாதிப்பிலிருந்து விடுதலை பெற்றுள்ளதாக அறிவித்திருந்தது. ஆனால், இலங்கையில் ஏப்ரலிலிருந்தே அவசரம் காட்டப்பட்டு வந்து, நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் நாடு வழமைக்குத் திரும்பியே ஆக வேண்டும் என்ற அரசியல் முடிவு செயற்படுத்தப்பட்டு வருகிறது. காரணம, தேர்தல்!

சிங்கள தேசத்தின் கட்டாய எழுச்சியெனும் உணர்வு இன்னும் மங்கிப் போக முன்னர் எப்படியாவது தேர்தலை நடாத்தியாக வேண்டும் என ஆட்சியாளர்கள் அடம் பிடித்துக் கொண்டிருப்பதால், விரும்பியோ விரும்பாமலோ இம்முறை நாடு அதற்குத் தயாராகியே ஆக வேண்டும் என்ற இணக்கப்பாடு மேலோங்கியிருக்கிறது. ஆதலால், ஓகஸ்ட் 5ம் திகதிக்கான ஆயத்தங்களும் களைகட்ட ஆரம்பித்துள்ளன.

யார் ஆட்சிக்கு வந்தாலும், 2010ம் ஆண்டு முதல் கச்சிதமாகத் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைக்கு முழுமையான தீர்வு கண்ணுக்கெட்டிய தூரத்தில் தென்படவில்லையென்பதை காலப்பதிவாக இங்கு சொல்லியே ஆக வேண்டும். ஆட்சியாளர்களோ, எதிரக்; கட்சியோ, யாருக்காக இருந்தாலும், சிங்கள தேசியவாத எழுச்சியைக் கையாள்வதற்கு முஸ்லிம் சமூகமே பகடைக்காயாக இருக்கப் போகிறது.

21ம் நூற்றாண்டின் முஸ்லிம் சமூகமும் உணர்ச்சி பொங்கக் குமுறி அடங்குவதில் கை தேர்ந்து விட்டதனால், எந்தப் பிரச்சினையை நிரந்தரமாக நினைவில் வைத்திருப்பது? என்பதில் சமூகத்துக்குள் பொது உடன்பாடில்லை. வழக்கம் போல, அது மாறிக் கொண்டிருக்கிறது. ஆகக்குறைந்தது தற்சமயம் இருக்கும் பொதுவான கவலை, கட்டாய ஜனாஸா எரிப்பென்றால் அதற்கு மாற்றுக் கருத்து இருக்காது.

மார்ச் மாதம் 31ம் திகதி இரவு, நீர்கொழும்பு ஜமால் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில் அவசர அவசரமாக, அதுவரை இருந்த விதி மீறப்பட்டு, ஜனாஸா எரிக்கப்பட்டது. அதற்குப் பின்னரே விதியும் மாற்றப்பட்டு 'எரியூட்டல்' மாத்திரமே தீர்வு என சொல்லப்பட்டு வாதிக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக இறந்தவரின் இறுதிக் கிரியைகளுக்கான உரிமை முஸ்லிம்களுக்கு மறுதலிக்கப்பட்டு அதற்கு சொல்லப்பட்ட விளக்கங்கள் எல்லாம் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரியையோடு 'அரசியல்' என தெளிவாகி விட்டது.

நீதியில் நம்பிக்கை கொண்ட முஸ்லிம் தன்னார்வ குழுக்கள் தனித்தனியாக அடிப்படை உரிமை வழக்குகளைத் தாக்கல் செய்ய முயற்சி செய்து வந்த நிலையில், மே மாதம் 7ம் திகதி இரு வழக்குகள் பதிவாகின. அதே கால கட்டத்தில் எம்.ஏ சுமந்திரன் இலவசமாக ஆஜராவதற்கு இணக்கம் தெரிவித்த இன்னொரு முயற்சி பற்றிய தகவல் வெளியானதும் இந்த வழக்கு விவகாரம் கூட முஸ்லிம்களுக்குள்ளான (intercommunity) அரசியல் போட்டியாக மாறி, கருப்பு அங்கியை மாட்டிக் கொண்டு 'பார்வையாளர்களாக' சென்று வருவதும் அதைக் கொண்டாடுவதும் கூட நவீன கொந்தளிப்பாக உருவாகியுள்ளது.

நிற்க, இந்த வழக்கில் நமது சமூகம் தேடும் உரிமையும் அது தொடர்பான நீதியும் இனி எப்போது கிடைக்கும்? என்ற கேள்வி தற்போது கேள்வியாக எழுந்துள்ளது. இதற்கு முன்னைய பதிவொன்றிலேயே இவ்விவகாரம் அரசியல் போராட்டமாக மாறியுள்ளமையை சுட்டிக்காட்டியிருந்ததோடு எல்லா அரசியல்வாதிகளின் தலையீடும் ஒரே நோக்கத்தின் அடிப்படையிலானது இல்லையென்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கும் காரணம் உண்டு.

வழக்குகள் தாக்கல் செய்ய முயன்ற போது, ஏன் எல்லோரும் ஒற்றுமையாக, ஒன்றாகக் செல்லக் கூடாது என்ற கேள்வியெழுந்தது. அதற்கான முயற்சியையும் எடுத்து வழக்குப் பதிய முன் வந்தவர்களையம் ஒன்று சேர்த்து கருத்தாடினோம். பல வழக்குகள் இருந்தால் நல்லது என்ற கருத்தை மேவ முடியாத சூழ்நிலையில் அடுத்து என்ன என எதிர்பார்த்திருக்க நேர்ந்தது. முதலில் பதிவு செய்யப்பட்ட ஏழு மனுதாரர்கள் ஆகக்குறைந்தது ஒரு விடயத்தில் உடன்பாட்டுக்கு வந்தார்கள். அது தான் மே மாதம் 18, 19 அல்லது 20ம் திகதி விசாரணையைக் கோருவது என்பது.

துரதிஷ்டவசமாக பொதுத் தேர்தலுக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்பட்டதால் அதற்கடுத்த வாரமும் இன்றி ஜுன் 8 தேதியே தரப்பட்டது. எனினும், ஒன்பதாவதாக அரசியல்வாதியொருவரினால் இறுதி நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கு ஏலவே ஜுலை 22ம் திகதி பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஜுன் 8ம் திகதி சென்றவர்களுக்கு ஜுலை 13ம் திகதி வழங்கப்பட்டுள்ளது. இப்போது, ஜுலை 13 மீள இவ்வழக்குகள் பரிசீலிக்கப்படும் போது, இன்னொரு வழக்கு நிலுவையில் உள்ளதால் அதையும் இணைத்துக் கொள்ளும் வகையில், தேர்தலுக்குப் பின் ஒரு தேதி வழங்கப்பட்டு, ஜுலை 22ம் திகதி விசாரணையின் போது ஒன்பதாவது மனு தாரருக்கும் அவ்வாறே பின்னொரு தேதி வழங்கப்படுமானால் இந்த உரிமைப் போராட்டம் இன்னும் இரண்டு மாதம் தள்ளிப் போகும் என்பது, சாத்தியக்கூறுகளின் அடிப்படையிலான எனது கணிப்பு.

சரி, அது போக, ஜுன் 8 விசாரணை முடிந்த பின் என்னைத் தொடர்பு கொண்டிருந்த மனுதாரர் ஒருவரின் கொந்தளிப்பையும் ஒரு காரணத்திற்காக இங்கு பகிர விரும்புகிறேன். அன்றைய விசாரணையின் போது கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்களை எரித்தேயாக வேண்டும் என்ற அரசின் முடிவை நியாயப்படுத்தும் வகையில் பேராசிரியர் மெத்திகா விதானகேயின் அறிக்கையை சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன நீதிமன்றில் ஒப்படைத்திருந்தார். அதனைச் சுருங்கக் கூறின், கொரோனா தொற்றில் இறந்த உடலங்களை புதைத்தால் நிலத்தடி நீர் ஊடாகவும் மண் ஊடாகவும் கூட வைரஸ் பரவும் ஆபத்திருக்கிறது என்பதே அவரின் விளக்கம்.

இதற்கு முன்னர் சன்ன பெரேரா எனும் மருத்துவர், இவ்வாறு புதைக்கப்படும் உடலங்கள் உயிரியல் ஆயுதங்களாக உபயோகிக்கப்படக் கூடும் என சொன்ன கருத்தை விட இது சற்று மென்மையானது என்றாலும் இவ்வாறு நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கை வழக்கின் போது முக்கிய ஆவணமாக இருக்கும். இதைப் பற்றிப் பேசவே அன்றைய அழைப்பிருந்தது. அழைப்பில் வந்த அந்த பிரமுகர் தனது ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்து விட்டு உலக சுகாதார அமைப்புக்கு உடனடியாக கடிதம் ஒன்றை அனுப்பி இதற்கெதிரான விளக்கம் ஒன்றைப் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.

உலக சுகாதார அமைப்பு ஒரு வழிகாட்டல் அமைப்பே தவிர, பிறிதொரு இறையான்மையுள்ள நாட்டோடு போட்டி போடக்கூடிய அமைப்பன்று. அத்துடன், அவ்வமைப்பின் செயற்பாட்டுக்கு இது அவசியமற்றதொன்று. இந்நிலையில், உலக பொது வழிகாட்டலுக்குப் புறம்பாக இலங்கை 'மண்ணின்' தன்மையைப் பற்றி ஆராய்வது அவர்களின் கடமையாக இருக்காது. ஆதலால், அந்த கொந்தளிப்பு அவசியமற்றது என விளக்க முனைந்தாலும் கடினமாகவே இருந்தது.

பேராசிரியர் மெத்திகா ஒரு புவியியல் பேராசிரியர். குறிப்பாக நிலத்தடியில் இருக்கும் நீர் நிலைகள் (hydrogeology) பற்றிய அறிவியல் நிபுணராக அறியப்படுகிறார். ஸ்ரீஜயவர்தனபுர பல்கலையைச் சேர்ந்த அவரது உள்நாட்டு நிபுணத்துவத்தை W.H.O  போன்றதொரு அமைப்பு சவாலுக்குட்படுத்தும் தேவை அவர்களுக்கு இல்லை. ஆனால் நமக்குத் தான் இருக்கிறது. அப்படியானால், அதற்கான வழியைத் தான் நாம் தேட வேண்டும் ஒரு மாற்று அறிவியல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று பக்குவமாக விளக்கப்படுத்திய போது சற்றே அமைதி கண்டார்.

ஆயினும், அப்படியானவர்கள் எங்கிருக்கிறார்கள், தேடிப் பிடியுங்கள் என்று அவசரம் காட்டினார். பொதுவாக நிலத்தடி நீர் மற்றும் அது தொடர்பான புவியியல் நிபுணத்துவம் கொண்டவர்கள் நீர் வழங்கல் அமைச்சில் பணியாற்றுவதற்கான வாய்ப்பே அதிகம், மற்றும்படி நமது சமூகத்தில் கூட இப்படியொருவர் இருந்தால், அதுவும் பேராசிரியர் மெத்திகாவின் தர நிலையில் இருந்தால் கூட, இவ்வாறான சூழ்நிலையில் தமது வட்டத்துக்கு வெளியே பொது நலத்தோடு செயற்படுவார்களா? என்பது சந்தேகமே என்றும் சொன்னேன். அதன் பின் உரிய அமைச்சூடாகத் தேடிப் பார்ப்போம் என்ற இணக்கப்பாட்டுடன் தற்போதைக்கு அந்த உரையாடல் முடிவுற்றுள்ளது.

இங்கு இதை நான் குறிப்பிடுவதற்கான அடிப்படைக் காரணம், தேவைப்படும் போது மாத்திரம் சூரர்களைத் தேடும் எமது பலவீனத்தையும் சுட்டிக்காட்டுவதற்காகவாகும். உலகில் அறிவியல் பல்வேறு முனைகளில் முன்னேறியுள்ளது. டொக்டர், இன்ஜினியர், டென்டிஸ்ட், லோயர் போன்ற பெருவாரியாக அறியப்படும் தொழிற்துறைகள் தவிர எத்தனையோ பல துறைகள் இருந்தும் அவை அறியப்படுவதில்லை. கொரோனா ஜனாஸா எரிப்பு விவகாரம் உணர்வு ரீதியாக அணுகப்பட்ட போதே GMOA வில் எங்காளுங்க இல்லையா? நம்மவங்க யாரும் JMOவாக இல்லையா? என்றெல்லாம் கூட தேடல் நடந்தது. அதைக் கூட இப்போது மறந்திருப்போம்.

இதில் எது முக்கியம் என்றால், அவ்வாறானவர்கள் உருவாக இந்த சமூகம் என்ன செய்கிறது? எவ்வாறு வழியமைத்துக் கொடுக்கிறது அல்லது தடையாக இருக்கிறது என்ற கேள்வியாகும். இது பிறிதாக கட்டாயம் ஆராயப்பட வேண்டிய தலைப்பென்பதால் முஸ்லிம் சமூகத்தின் கல்வியியல் எதிர்பார்ப்புகள் மற்றும் அடைவுகள் குறித்து ஆழமாக அலசப்பட வேண்டும். 

கட்டம் கட்டமாக, சமூகத்தின் கட்டமைப்பில் உள்ள ஓட்டைகளும் பலவீனங்களும் அவ்வப்போது வெளிவந்தாலும் அந்தந்த சந்தர்ப்பங்களைத் தாண்டியதும் சமூகம் அதனை மறந்து போய் விடும். ஆதலால் இச்சமூகத்தின் மேம்பாட்டுக்காகவும், உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் அரசியல் ரீதியாக ஒட்டி உறவாடிப் போராடிக் கொண்டிருப்பதாகக் கூறிக் கொண்டு 2015ம் ஆண்டோடு பல ஊர்களின் பெயர்களையும் மறந்து போன சூராதி சூரர்கள் இப்போது வெளிவரப் போகிறார்கள்.

இரண்டு தடவைகள் தேதி குறித்தும் நடக்காவிட்டாலும் ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி பொதுத் தேர்தல் நடந்தேயாகும் என்ற நம்பிக்கை அரசியல் மட்டத்தில் வேரூன்றியுள்ளது. ஆக, கொரோனா ஜனாஸா விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாமலும் ஒளிந்திருந்த அந்த சமூகப் போராளிகள் எல்லாம் இனி வாக்கு வேட்டைக்காக களமிறங்கப் போகிறார்கள்.

யாருடைய பொய் அதிகமாக நம்பப்படப் போகிறது? என்பதை தேர்தல் முடிவு ஊடாக அறிந்து கொள்ளலாம். அதுவரை, கடந்த கால பொய்களை மறந்து வாழ நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டுள்ள நிர்ப்பந்தம் சரிதானா? என்பதை மீளவும் மீட்டிக் கொள்ள மக்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு மலர்ந்துள்ளது.

தற்போதைய பொதுத் தேர்தல் களம், முஸ்லிம் சமூகத்தில் மிகவும் தெளிவான இரு முனைகளைக் கொண்டுள்ளது. சிங்கள தேசியவாத காப்பாளர்கள் என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் தலைவர்களும் அவர்களைப் போற்றிப் புகழ்ந்து தமது பிழைப்பைப் பார்த்துக் கொள்ளத் தெரிந்த அணி. சாதாரண மக்களின் கோபம் மற்றும் ஏமாற்றத்தின் அங்கீகாரத்தின் பலனால் மீண்டும் நன்மையடையக் காத்திருக்கும் இரண்டாகப் பிளந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி அணிகள்.

இரண்டு பக்கமும் சொல்லப் போகும் பொதுவான ஒரே விடயம் உரிமைகளை வெல்லப் போகிறோம் என்பதே. இதுவரை வென்றது எது? அல்லது செய்தது எது? ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் கண்டன அறிக்கைகள் விட்டதும் விடாமல் ஒளிந்திருந்ததும் மற்றும் பிண அரசியலை புதிதாக முஸ்லிம் சமூகத்துக்குள் புகுத்திக் கொண்டதும் தவிர வேறு என்ன? என்று மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். கேட்டால், தமது சுயநலத்துக்காகத் தேவைப்படும் அரசியல் ஆதரவு இல்லாமல் போய் விடும் என்ற அச்சம் உயர் வருமானமுள்ள தொழில்களில் இருப்பவர்களிடமும் உண்டு.

ஐ.எல்.எம் அப்துல் அசீஸ், சித்திலெப்பை போன்ற 19ம் நூற்றாண்டு சமூகப் பெருந்தகைகளை மாத்திரமன்றி சுதந்திரத்துக்குப் பின் முஸ்லிம் சமூக முன்னேற்றத்துக்காக தேசிய அரசியலைப் பயன்படுத்திய வித்தகர்களையும் சமூகம் மறந்து விட்டது. இந்நிலையில், என் தந்தையின் நிழற்படம் தேர்தல் காலத்துக்கு மாத்திரமே முஸ்லிம் அரசியலுக்குத் தேவைப்படுகிறது என மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் புதல்வன் அமான் கூட இந்த வாரம் தன் கவலையை வெளியிட்டிருந்தார். 

1400 வருடங்களுக்கு முற்பட்ட ஆரம்ப தலைமுறை முஸ்லிம்களுக்கு ஒரு தெரிவும் - தெளிவான ஒரே பாதையுமே இருந்தது. ஆதலால் முதற்கட்டங்களில் பிரச்சினையிருக்கவில்லை, ஆனால் சில வருடங்களுக்குள் கருத்து வேற்றுமை ஆரம்பித்து இன்று ஒவ்வொரு தனி முஸ்லிமும் தான் நினைப்பது மாத்திரமே சரியெனும் கருத்துப் பிடிவாதம் (opinionated) கொண்ட நபர்களாக உலக அரங்கில் தம்மை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள்.

இலங்கை முஸ்லிம்களிடம் இது மிக வேகமாகப் பரவித் தலைவிரித்தாடுவதை சமூக வலைத்தளங்களில் இளைஞர்களின் பதிவுகளை நிதானமாக அவதானித்து – அலசும் போது அறிந்து கொள்ளலாம். உலகில் மனிதர்கள் அனைவருக்கும் புரிதல் ஒற்றுமை இருந்திருந்தால் இதுவரையான அழிவுகளும் இனி வரும் கால அழிவுகளும் கூட இடம்பெறாது. ஆக, புரிதல் வேற்றுமை என்பது அடிப்படையில் மனித குணாம்சமாகிறது. ஆயினும், தம்மை ஒற்றைச் சமூகமாகவே கருதிக் கொள்ளும் முஸ்லிம் சமூகத்திடம் இதையும் தாண்டிய சமூக ஒற்றுமையே எதிர்பார்க்கப்படுகிறது, வலியுறுத்தப்படுகிறது.

ஆனால், யாரைக் கேட்டாலும்... எங்கள் சமூகமா? கஷ்டம்! என்ற பதிலே சொல்லப்படுகிறது எனும் போது ஒவ்வொருவருக்கும் சிந்திக்க ஏதோ இருக்கிறது. சரி, ஆழமான விடயங்களை இப்போதைக்குத் தள்ளி வைத்தாலும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் அடைவு எதுவாக இருக்க வேண்டும் அல்லது தேர்வு எதுவாக இருக்க வேண்டும் என்பதில் உடன்பாடு காண முடியுமா? அல்லது அதற்கு வழிதான் இருக்கிறதா?

முதலில் தமது பிரதிநிதிகளின் செயற்பாட்டு லட்சணத்தை எடை போடவாவது இந்த சமூகம் தயாரா?

jTScYcS
-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment