திகன: பேரெகெட்டிய விகாராதிபதியின் மரணம்: கண்டி முஸ்லிம்கள் கவலை! - sonakar.com

Post Top Ad

Friday 1 May 2020

திகன: பேரெகெட்டிய விகாராதிபதியின் மரணம்: கண்டி முஸ்லிம்கள் கவலை!

https://www.photojoiner.net/image/CezvX3bj

திகன வன்முறையின் ஆரம்பமாக அமைந்த உயிரிழப்பு அப்பகுதியின் அம்பலே கிராமத்தைச் சேர்ந்த சாரதியொருவருடையதாகும். எனினும், இதனை அரசியல்மயப்படுத்தி இனவாத தாக்குதல்கள் வேறு இடங்களில் இடம்பெற்ற போதிலும் குறித்த கிராமப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பேரெகெட்டிய விகாரையைச் சேர்ந்த விகாராதிபதி மற்றும் பிக்குகள் அக்காலப் பகுதியில் பாரிய பங்களிப்பை செய்திருந்தனர்.



இந்நிலையில் அண்மைக்காலமாக அங்கு விகாராதிபதியாகப் பணியாற்றிய கீனபெலஸ்ஸே உபாலிஞானிஸார (48) என அறியப்படும் பௌத்த துறவி ஏப்ரல் 29ம் திகதி உயிரிழந்திருந்தார். அவரது இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில் இந்நிகழ்வில் கண்டி மாவட்ட முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி எச். உமர்தீன், உப தலைவரும் வக்பு சபை உறுப்பினருமான மௌலவி பஸ்லுர் ரஹ்மான், கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர்  கே. ஆர். ஏ. சித்தீக் மற்றும் அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சமூகங்களுக்கிடையில் நல்லுறவையும், ஐக்கியத்தையும் வலியுறுத்தி வாழ்ந்த குறித்த துறவியின் இழப்பு, ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என முஸ்லிம் சமூகத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முஸ்லிம் சமய கலாசார தபால் துறை அமைச்சினால் சிறந்த பள்ளிவாசல்களுக்கான விருது வழங்கும் விழாவொன்றில் சமய சகவாழ்வுக்காக உழைத்தமைக்காக ஞானிஸ்ஸர தேரருக்கு விசேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமையும் திகன வன்முறைக் காலத்தின் போது அவர் வாழ்ந்த  பிரதேசத்தின் பள்ளிவாசல் பகுதிக்குள் வன்முறையாளர்கள் வர விடாமல் குறித்த தேரர் முன் நின்று தடுத்திருந்தமையும் நினைவுகூறத்தக்கது.

- இக்பால் அலி

No comments:

Post a Comment