Case No: 415ம் அழகிய அப்துல்லாஹ்வும்! - sonakar.com

Post Top Ad

Monday 27 April 2020

Case No: 415ம் அழகிய அப்துல்லாஹ்வும்!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 415வது நபர் ஒரு கர்ப்பிணித் தாய்...வெளிப்படையாகச் சொல்வதானால் ஒரு முஸ்லிம் பெண்.



அவரது குழந்தை இறந்தே பிறந்தது. நீண்ட இழுபறியின் பின் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்தக் குழந்தைக்கு குடும்பத்தினர் வேண்டுகோளுக்கிணங்க 'அப்துல்லாஹ்' என்ற அழகிய பெயர் சூட்டப்பட்டே மாளிகாவத்தையில் அடக்கப்பட்டுள்ளது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியின் முழு முயற்சியில் இறைவன் உதவியோடு, மாளிகாவத்தையில் மையத்து விடயங்களில் ஓயாது உழைக்கும் சகோதரர் ஹுசைன் போல்ட்டின் விலை மதிக்க முடியாத சேவை மற்றும் பங்களிப்போடு விடயம் கை கூடியது. அல்ஹம்துலில்லாஹ்!

பிறக்க முதலே இறந்து விட்ட அக்குழந்தைக்கு கோரோனா தொற்றிருந்திருக்குமா? என்பதற்கான விஞ்ஞான விளக்கங்கள் இல்லாத புதிய அனுபவத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால், அதற்கான பரிசோதனைகள் நடந்ததில் தவறே இல்லை.

ஆனால், அதற்குப் பின்னும் இரண்டு மருத்துவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடு காரணமாக ஜனாஸாவை ஒப்படைப்பதில் தாமதம், ஏதோ பொறுமையுடன் போராடி இன்று அந்த சிசுவின் ஜனாஸாவைப் பெற்று அடக்கம் செய்தாகியாச்சு. இதற்கிடையில் குடும்பத்தார் பட்ட துன்பம் தனிக் கதை.

அதுவும் புதைக்கும் இடம் ஆறு அடிக்கு மேல் தோண்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடே ஜனாஸா வழங்கப்பட்டது. இல்லாவிட்டால் எரிக்கப்படும் என்ற மிரட்டல் பற்றி அறிந்த போது விந்தையாக இருந்தது.

கொரோனா தொற்றே இல்லாத, அதுவும் பிறக்காத ஒரு சிசுவின் உடலைப் பெற இத்தனை போராட்டம் ... என்கிற ஆதங்கம் ஒரு பக்கம், ... எங்களுக்குத்தான் இதெல்லாம் என்கிற உளைச்சல் ஒரு பக்கம்.... சரி, ஒரு குழந்தையில் இருந்து புதிய ஆரம்பமாகவும் இது இருக்கலாம் என்ற நம்பிக்கை இன்னொரு பக்கம்.

ஊரடங்கு நீங்கியதும் நீதியின் காவலர்கள் 'வாக்குத்' தேடி வருவார்கள்... அதுவரை இப்போது தம்மை வெளிக்காட்டாது திரைமறைவில் பாடுபடுபவர்களுக்காக துஆச் செய்வோம்!

jTScYcS

-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com
https://www.facebook.com/irfaninweb

No comments:

Post a Comment