முஸ்லிம்களை அவமானப்படுத்தி விட்டார்கள் : முஜிபுர் ரஹ்மான் - sonakar.com

Post Top Ad

Tuesday 31 March 2020

முஸ்லிம்களை அவமானப்படுத்தி விட்டார்கள் : முஜிபுர் ரஹ்மான்



கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்த நீர் கொழும்பைச் சேர்ந்த முகம்மது ஜமாலின் உடலை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யாமல் தகனம் செய்யப்பட்டமைக்கு முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


இந்த செயற்பாடானது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினதும் மனதை புண்படுத்தி உள்ளதுடன், முஸ்லிம் மக்கள் அனைவரும் இந்த சம்பவத்தால் மிகவும் மன வேதனை அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முஜிபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

Covid19 தொற்றால் உயரிழந் ஒருவரின் உடலை அடக்கம் செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய விடயங்களை உலக சுகாதார தாபனம் மிகவும் தௌிவான முறையில் குறிப்பிட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் உடலை உரிய பாதுகாப்பு முறைகளுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்றும், நெருங்கிய உறவினர்களில் சிலர் அந்த உடலை பார்வையிட முடியும் என்றும் உலக சுகாதார தாபனம் கூறியுள்ளதுடன், சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுடன் ஆழமான குழியைத் தோண்டி அந்த உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி இலங்கை அரசாங்கமும் முஸ்லிம் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தால், உயிரிழந்த நபர் சம்பந்தமான இஸ்லாமிய மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்கும், சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கும் அனுமதி வழங்கியிருந்தது.

அத்துடன் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடலை ஆழமான குழியில் புதைக்க முடியும் என்று இலங்கையின் சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவும் கூறியிருந்தார்.

ஐரோப்பிய நாடுகள் உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் இவ்வாறான இறப்புகள் ஏற்பட்டால் அந்தந்த மத சம்பிரதாயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், நமது நாட்டில் இடம்பெற்றுள்ள இந்த மனித நேயமற்ற செயல் முஸ்லிம் மக்களிடையே பெரும் சோகத்தையும், ஒருவகை அச்ச உணர்வையும் தோற்றுவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நேற்று இரவு உயிரிழந்த முஸ்லிம் சகோதரரின் உடல், உயிரிழந்து ஒரு சில மணி ​நேரத்திற்குள்ள அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டிருப்பது பாரிய சந்தேகத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த நபரின் உறவினர்களுக்கு கூட அறிவிக்கப்படாமல், சட்டத்திற்கு மாறான முறையில், இரவோடு இரவாக தகனம் செய்யப்பட்டது யாருடைய தேவையை நிறைவேற்றுவதற்கு என்ற கேள்வியும் எழுகின்றது.

உயிரிழந்த முஸ்லிம் நபர் ஒருவரின் உடல் இவ்வாறு தகனம் செய்யப்பட்ட சம்பவம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் இதற்கு முன்னர் ஒருபோதும் இடம்பெற்றதில்லை என்பதுடன், இது ஒருபோதும் முஸ்லிம்களால் ஏற்றுக் கொள்ள முடியாத மிகவும் கொடூர  சம்பவமாகவே உள்ளது.

இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாது இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்பதுடன், இந்த சம்பவத்தின் பின்னணியை ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

M. Suhail

No comments:

Post a Comment