ஜுமுஆவுடைய நேரத்தைக் கண்ணியப்படுத்தி வழிபாடுகள்: ACJU அறிவுரை - sonakar.com

Post Top Ad

Thursday 19 March 2020

ஜுமுஆவுடைய நேரத்தைக் கண்ணியப்படுத்தி வழிபாடுகள்: ACJU அறிவுரை


கொரோனா வைரஸ் (COVID19) தற்பொழுது நாட்டின் பல பகுதிகளில் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் மக்கள் ஒன்று கூடுவது இந்நோய் இன்னும் பரவுவதற்கான பிரதான காரணியாகும் என்று உலக சுகாதார மையம் பிரகடனப்படுத்தியுள்ளதால் அரசாங்கம் மக்கள் ஒன்று கூடுவதை முற்றாகத் தடை செய்துள்ளதுடன், ஒன்று கூடுவது சட்டத்திற்கு முரணானது எனவும், மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.


“தனக்கு தீங்கு விளைவித்துக்கொள்வதும் பிறருக்கு தீங்கு விளைவிப்பதும் கூடாது” என்ற ஹதீஸ், பிக்ஹ் கலையில் மிக முக்கிய அடிப்படையாகும்.

மேலும், மார்க்கத்தில் ஜுமுஆ மற்றும் ஜமாஅத் தொழுகைகளை விடுவதற்கான தகுந்த காரணங்களாக நோய், பயம், பிரயாணம், நோயாளியைப் பராமரித்தல், வேகமான காற்று, மற்றும் மழை போன்ற பல விடயங்களை நிபந்தனைகளுடன் மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறான காரணங்களுக்காக ஜமாஅத் மற்றும் ஜுமுஆத் தொழுகைகள் விடுபடும் போது, அதனை நிறைவேற்றியதற்குரிய நன்மை கிடைக்கும் என்பது ஹதீஸின் கருத்தாகும்.

மேற்கூறப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு ஜுமுஆ தொழுகைக்காகவோ ஐவேளைத் தொழுகைகளுக்காகவோ மஸ்ஜிதில் ஒன்று சேர்வதைத் தவிர்த்து, தாம் இருக்கும் இடங்களில் தொழுது கொள்ளும்படி வக்ப் சபையும், முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களமும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் அறிவித்துள்ளதை நாம் அறிவோம்.

மேலும், வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் புனித நாளாகும். இந்நாளில், ஸ_ரத்துல் கஹ்ப் ஓதுதல், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் சொல்லுதல், மற்றும் துஆ கேட்டல் போன்ற வணக்கங்களில் ஈடுபடுவது முக்கிய அமல்களாகும்.

எனவே, நாளை வெள்ளிக் கிழமை, வழமை போன்று முஸ்லிம்கள் தமது வியாபார ஸ்தலங்களை மூடி, ழுஹ்ருடைய அதான் கூறியதும் தமது வீடுகளில் அல்லது தாம் இருக்கும் இடங்களில் ழுஹ்ருடைய நான்கு ரக்அத்கள் மற்றும் அதன் முன் பின் சுன்னத் தொழுகைகளை நிறைவேற்றி, இக்கொடிய நோயின் தீங்கிலிருந்து உலக மக்கள் அனைவரையும் குறிப்பாக இந்நாட்டு மக்களையும் பாதுகாக்கும் படி அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

குறிப்பு: இந்நாளில் ஒரு நேரம் உள்ளது, அதில் கேட்கப்படும் துஆ கபூல் செய்யப்படும் என்று நபி  ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இவ்வழிகாட்டலை சகல முஸ்லிம்களும் கடைபிடிக்குமாறு அன்பாக வேண்டிக்கொள்கிறோம்.


அஷ்-ஷைக் எம். எல். எம். இல்யாஸ்
செயலாளர்
பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment