சாய்ந்தமருதும் வெளுத்துப் போன சாயமும்! - sonakar.com

Post Top Ad

Friday 21 February 2020

சாய்ந்தமருதும் வெளுத்துப் போன சாயமும்!



பசி இருப்பவனுக்கு பலகாரம் சுட்டுத்தருவதாக சொல்லிக் கொண்டேயிருப்பதால் அவன் பசி ஆறாது. வெற்று வாக்குறுதிகள் ஏதோ ஒரு கட்டத்தில் வெளுத்துப் போகும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது வரலாறு.



யுத்த சூழ்நிலையில், கிழக்கில் மேலோங்கிய முஸ்லிம் தனித்துவ அரசியல் வேட்கை மர்ஹும் அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர் சரிவைச் சந்தித்தது. அடுத்த தசாப்த காலத்துககுள் யுத்தமும் முடிவுற்றதால் தொடர்ச்சியாக முஸ்லிம் உணர்வூட்டல் மூலம் காலந்தள்ளிக்கொண்டிருந்த காலாவதியாகிப் போன அரசியல் வியூகம் மேலும் சரிந்து கொண்டு சென்றது. அதைக் கட்டிக் காப்பாற்றப் போவதாகக் கிளம்பிய மாற்றுக் கட்சியும் முன்னவருக்குக் குறைவில்லாமல் முஸ்லிம்வாத வரையறைக்குள் தம்மையும் தம் மக்களையும் முடக்கிக் கொண்டதால் எந்தப் பக்கமும் விடிவின்றி முடங்கிப் போனது.

ஒருவேளை, தனியாகத் தமிழ் ஈழம் என ஒரு நிலப்பகுதி உருவாகிவிட்டால், இலங்கையில் முஸ்லிம்கள் அதிகளவு செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக கல்முனை முதல் காத்தான்குடி வரையான பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் எதிர்கால நலன், ஆயுததாரிகளின் கையில் சிக்கித் தவிக்கக்கூடிய அடிப்படை உரிமைகள் மற்றும் வாழ்வியலைக் காப்பாற்ற தேசிய ரீதியான அரசியல் பரிணாமம் அன்று கட்டாயம் தேவைப்பட்டது.

அதனை மக்களும் மிகவும் உணர்வுபூர்வமாக உள்வாங்கியிருந்ததால் அன்றைய வியூகம் 2015 பொதுத் தேர்தல் வரை ஏதோ ஒரு அளவில் தாக்குப் பிடித்தது. 2020 பொதுத் தேர்தலில் அதன் நிலை என்னவாகும்? என்பது அறுதியிட்டுக் கூற முடியாத சூழ்நிலையாகி விட்டது. ஆனாலும், நாடாளுமன்றிலிருந்து இவர்கள் விரட்டப்படப் போவதில்லை. ஆகக்குறைந்தது தேசியப் பட்டியலிலாவது ரவுப் ஹக்கீம் உள்ளிருப்பார் என்ற குறைந்தபட்ச உத்தரவாதமும் இருப்பதால் அந்த உணர்வு முழுமையாகக் கழுவிக் கைவிடப்படப்போவதில்லை.

அடைவுகளின் அடிப்படையிலேயே முஸ்லிம்வாத அரசியலுக்கு மக்கள் இதுவரை ஆதரவு வழங்கி வந்திருக்கிறார்கள். ஆதலால் தான் துரிதமாக ஏமாற்றமும் சலிப்பும் அடைகிறார்கள். அபிவிருத்தியடைந்த நாடுகள் போன்றல்லாது இலங்கை அரசியலின் கள யதார்த்தமும் மக்களை இவ்வாறான இடத்துக்கே இன்னும் இன்னும் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் மக்கள் மீது ஒட்டுமொத்தமாக பழி போடவும் முடியாது.

சாதாரணமாக அரசாங்கத் திணைக்களம் ஒன்றில் ஒரு வேலையை செய்து முடிப்பது கூட போராட்டமாகவே பெரும்பாலான மக்களுக்கு இருக்கிறது. அரசியல் பலம் மற்றும் ஆளுமையுள்ளவர்களே மேலோட்டமான பார்வையில் அடைவுகளுடன் வாழ்கின்ற தோரணை இருப்பதால் அபிவிருந்தியடைந்து வரும் நகரங்கள், கிராமங்களில் மக்களிடம் ஒரு வகையான தவிப்பு இருந்து கொண்டேயிருக்கிறது.

சிறு அபராதங்களைச் செலுத்த முடியாதவர்கள் வாழ்வின் பல நாட்களை சிறையில் கழித்து ஏதோ ஒரு நல்ல நாள் - பெருநாள் - புதுவருடம் வந்தாலே விடுதலைக்குக் காத்திருக்க, பெருந்திருடர்கள் சிறைக்குச் சென்றதும் வைத்தியசாலையில் படுத்துக் காலந்தள்ளுகிறார்கள் என்ற போதே சமூக சமநிலையின் அளவினைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இவ்வாறான சூழ்நிலையில், நியாயங்கள் தர்மங்களுக்கு அப்பால் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய அரசியல் ஆளுமை மக்களுக்கு அவசியப்படுகிறது. சில நேரங்களில் மாகாணச் சத்தம் மேலெழும், பின் அது மாவட்டச் சத்தமாக தேய்ந்து, பொதுத் தேர்தல் காலத்தில் தெருச் சத்தமாக மாறிவிடும்.

அந்த அளவுக்கு சூழ்நிலை அரசியலில் மக்கள் தம் தேவைகளை எடைபோட்டு அதற்கேற்ற தீர்வுகளைத் தேடிக் கொண்டிருப்பார்கள். நாட்டின் நிர்வாகமும் பொதுச் சூழ்நிலைக்குள் தேச அபிவிருத்தியைக் கட்டியெழுப்பாத வரை இந்த நிலை மாறாமல் பிராந்திய பிரதேச தேவைகள் தொடர்ச்சியான போராட்டத்தை சந்தித்துக் கொண்டேயிருக்கும்.

ஓரிரவில் அல்ல, யுத்தம் முடிந்து ஒரு தசாப்தமாகியும் நிலைமை மாறவில்லையென்பதால் மலையகமாகட்டும், மன்னாராகட்டும், மருதமுனையாகட்டும் மக்களுக்கு எஞ்சியிருப்பதெல்லாம் ஏக்கமும் தவிப்பும் தான்.

பிரதான நகரங்களின் மத்திய பகுதிகள் தவிர புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் தெரு விளக்கொன்றை பொருத்திக் கொள்வதற்கே மக்கள் இன்னும் படாதபாடு படுகிறார்கள். ஆனாலும் இன்னொரு புறத்தில் அடிப்படைவசதி எனும் பெயரில் கோடிக்கணக்கை விழுங்கும் திட்டங்கள் அதுவும் வெளிநாட்டு நிதியில் நாளாந்தம் அமுலுக்கு வந்து கொண்டிருக்கின்றன.

யார் குத்தினாலும் அரிசியானால் சரியெனப் பார்த்திருக்கும் மக்கள், எவன் பணத்திலாவது தமது ஊருக்கு, தெருவுக்கு ஏதாவது நடக்கட்டும் என திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள். நாளடைவில் அந்தக் கடன் சுமை தம் மீதே ஏறுகிறது, அதனாலேயே பல தசாப்தங்களாக அபிவிருத்தியைக் காணமுடியாமல் இருக்கிறது என்ற பொதுச் சிந்தனையெல்லாம் இரண்டாம் பட்சமே.

தேசிய அளவில் முன்னேறத் துடிக்கும் பல பிரதேசங்களுக்கு நகரசபைகள் அவசிய்பபடுகிறது. அவற்றினூடான அடைவுகளுக்கான வெற்றிடம் காத்திருக்கிறது. இந்த வாரம் போகஹகொடவுக்கும் நகரசபை வேண்டும் என இமதுவ பிரதேச சபையில் குழப்ப நிலை உருவாகியிருந்தது. வேடிக்கை என்னவென்றால், இப்போது கேள்வி கேட்பவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர், மறுதலிப்பவர்கள் பெரமுனவினர்.

இந்த கால மாற்றம் அரசியலின் எல்லா முனைகளிலும் தாக்கம் செலுத்தும் என்பதற்கு கல்முனை – சாய்ந்தமருது உதாரணமாக உருவாகியிருக்கிறது.
தேய்ந்து போய் தொங்கிக் கொண்டிருக்கும் பங்காளிகளுக்கு உயிர் கொடுப்பதற்கும் பிரதேசத்தின் வாக்கு வங்கியில் பெரிய ஓட்டையைப் போடுவதற்கும் மிகச் சிறப்பான வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆட்சியாளர்கள் ரவுப் ஹக்கீமையும் ரிசாத் பதியுதீனையும் மாபெரும் கையாலாகாதவர்கள் என காட்சிப்படுத்த சாய்ந்தமருது மக்களின் தேவையை நிறைவேற்றிக் கொடுப்பதாக வர்த்தமானியொன்றை வெளியிட்டார்கள். பின்னர் எழுந்த இனவாத கோசங்களைக் கண்டு அஞ்சி அதனை தொழநுட்ப ரீதியாக இரத்துச் செய்தும் விட்டார்கள்.

சாய்ந்தமருது மக்களுக்கு நகர சபைக்கான தேவையொன்று இருக்கிறது. ஆதலால் தான் அவர்கள் கடந்த காலங்களில் தீவிரமான போராட்டங்களை மேற்கொண்டார்கள், வீதி மறியலில் ஈடுபட்டார்கள், தேர்தல் காலங்களில் அரசியல் தலைமைகளுடன் ஒப்பந்தங்களை செய்தார்கள், எதிர்த்து நின்றார்கள். ஈற்றில் ராஜபக்ச குடும்பத்திடமும் அதற்காகப் போய் பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்கள்.

ஆதலால், சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகள் மதிக்கப்பட்டேயாக வேண்டும். ஆனாலும், ஆட்சியாளர்களுக்கு வேறு தேவைகளும் இருக்கிறது. அப்படியில்லையென்றால், பெரமுன ஆளுமையில் உள்ள போகஹகொடவுக்கும் உடனடியாக ஒரு நகரசபையை வழங்கலாம். அதற்காகவும் ஒரு விசேட வர்த்தமானியை வெளியிடலாம். ஆனாலும், அவ்வாறு எதுவும் நடக்கப் போவதில்லையென்கிற உண்மை யாவரும் அறிந்தது.

ஆக, காரணமின்றி எதுவும் நடக்கவில்லை. ஆனாலும், யாராலோ வர்த்தமானியொன்றை வெளியிடும் அளவுக்கு முடிகிறது என்ற போது இதற்கு முன்னர் போலிக் கோசம் போட்டுக்கொண்டிருந்தவர்களின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளதுடன் அவர்களின் சாயமும் வெளுத்துள்ளது என்பதே அரசியல் பாடம்.

சாய்ந்தமருதுக்குத் தனியான நகரசபையைத் தருவோம் என ரவுப் ஹக்கீம் எழுதிக் கொடுத்ததை வாசித்து விட்டுச் சென்ற ரணில் அதனை மறந்து விட்டார்;. மாகாணசபைகள் அமைச்சராக, முஸ்லிமாக, தமிழ் பேசத் தெரிந்தவராக அங்கு சென்று வாக்குறுதி வழங்கிய பைசர் முஸ்தபாவும் மறந்து விட்டார். ஆனால், ராஜபக்ச குடும்பம் மறக்கவில்லை. இதுதான் வெளித்தோற்றத்தில் காணப்பட்ட உண்மை.

இதனைத் தீவிரமாக ஆராய வேண்டும், சுழியோடி அதன் நன்மை தீமைகளை அலச வேண்டும் என்ற தேவை நீண்ட நாள் காத்திருந்த சாய்ந்தமருது மக்களுக்கு இல்லை. அதேவேளை ஹக்கீமும் - ரிசாதும் 'சக்திவாய்ந்த' அமைச்சர்களாக பவனி வந்தும் கூட செய்ய முடியாது போனதை அதாவுல்லாஹ் செய்தார் என அவரது ஆதரவர்கள் வியாழக்கிழமை வரை கொண்டாடிக் கொண்டிருந்ததிலும் தவறு காண முடியாது.

ஏனெனில், அடைவின் அடிப்படையிலேயே மக்களால் ஆதரிக்கப்படும் அரசியலில் ஒவ்வொரு அடைவும் அரசியல்வாதிகளுக்கு மகுடமே. அது போன்று வெளுத்துப் போகும் தருணங்கள் எல்லாம் பின்னடைவே. அந்த வகையில் ராஜபக்ச குடும்பத்தை தற்காலிகமாக சம்மதிக்க வைத்த பயனை அதாவுல்லாஹ் தட்டிச் செல்வதற்கு உரிமையிருக்கிறது.

எனினும், இதனைக் கொண்டு இனிவரப் போகும் பிரச்சினைகளில் ராஜபக்சக்களின் கொள்கைகளை நியாயப்படுத்தும் போராட்டத்தை இவர்கள் எவ்வாறு மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதே சவால்.

தம்புல்ல பள்ளிவாசல் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட போது அது அப்பட்டமான 'பொய்' என அறிக்கை விட நிர்ப்பந்திக்கப்பட்டார் ஹிஸ்புல்லாஹ். இன்று முஸ்லிம்கள் கேட்ட துஆ பலித்தே கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதியானார் என அலி சப்ரியும் அவருக்குப் போட்டியாக ரிஸ்வி முப்தியும் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தனது பதவியேற்பின் போது ஜனாதிபதி கோட்டாபே இதற்கு முரணாக, தமக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்கவில்லையென்றே கூறியிருந்தார். இருந்தாலும் 'துஆ' மூலம் உரிமை கொண்டாடும் எமது வித்தையும் ரனி ரகம் தான்.

முன்னைய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் யுத்த நிறைவின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்த இலங்கைக்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு முன் சென்று கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்ய முன்பதாக முப்தி வகையறாக்கள் தம்புல்ல பள்ளிவாசலிலேயே விசேட துஆ நிகழ்வை நடாத்தியிருந்தது.

மனித உரிமைகள் பேரவை கூட்டம் முடிந்ததும் அந்த பள்ளிவாசல் புண்ணிய பூமிக்குள் இருப்பதாகக் கூறி வெளியேறச் சொன்னார்கள். சமூகம் திகைத்தது, ஆனால் அபயத்துக்கு வந்த ஹிஸ்புல்லாஹ் அப்படியொன்றும் நடக்கவில்லையென்றார், பள்ளி நிர்வாகத்துக்கே தெரியாமல் கலீல் மௌலவி அவர்கள் சார்பில் பேச்சுவார்த்தை நடாத்தினார். இன்னோரென்ன போராட்டம் நடந்தும் ஆட்சி மாறும் வரை சூடு தணிந்திருக்கவில்லை. இது கடந்த கால அனுபவம்.

இனி வரும் காலத்தில் சவால்கள் எதுவுமிருக்காது என்ற உத்தரவாதத்தைத் தர எந்த அளவில் ஒட்டிக்கொண்டிருந்தாலும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு உத்தரவாதம் தர முடியாது. இப்போதைய சூழ்நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல், ஜனாதிபதி தேர்தலுக்கு முன் கூறப்பட்டது போன்று கோட்டாபே ஜனாதிபதியான பின்னர் முஸ்லிம்கள் தாக்கப்படவில்லை, முஸ்லிம் வர்த்தகங்கள் இக்கட்டுக்குள் தள்ளப்படவில்லை, குடி மக்கள் துன்புறுத்தப்படவில்லை.

நிச்சயமாக 2015க்கு முற்பட்ட காலத்தில் எதோச்சாதிகாரமாக அனுமதித்த பல விடயங்களை இனி வரும் காலங்களில் மஹிந்த குடும்பம் அனுமதிக்கப் போவதில்லை. மாறாக கச்சிதமாகத் திட்டமிட்டு முழந்தாழிட வைக்கும் என்பதே கடந்த 100 நாட்களுக்குட்பட்ட அனுபவம். இலங்கை ஒரு பல்லின மக்கள் வாழும் நாடாக இருப்பினும் கூட பெரும்பான்மையினமான பௌத்த மக்கள் ஒன்றிணைந்தால் தனித் தலைமையை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்ததன் ஊடாக ஏனைய சமூகங்களை செல்லாக்காசாக்கியுள்ளது அந்த வியூகம்.

முஸ்லிம் உணர்வைத் தூண்டித் தூண்டியே காலந்தள்ளிக் கொண்டிருக்கும் ரவுப் ஹக்கீமும் ரிசாத் பதியுதீனும் கூட மஹிந்த ராஜபக்சவின் முன்னைய ஆட்சிக்காலத்தில் அவர் வாழ்நாள் ஜனாதிபதியாக பதவியிலமர்ந்து கொள்ள வசதியாக உருவாக்கப்பட்ட 18ம் திருத்தச் சட்டத்துக்கு ஆர்வமாகக் கையைத் தூக்கி வாக்களித்தார்கள் என்பது வரலாறு. எனவே, பொதுத் தேர்தலிலும் சிங்கள இன எழுச்சியின் அடிப்படையிலேயே வெற்றிக் கொடியை நாட்டக் காத்திருக்கும் பெரமுன அரசில், நேரடியாக வென்றோ தேசியப்பட்டியல் ஊடாக இடம்பிடித்தோ நாடாளுமன்ற இருக்கைகளை நிரப்பப் போகும் ஆளுங்கட்சி முஸ்லிம் உறுப்பினர்கள் அவர்களின் முன்னோடிகள் போன்றே கையுயர்த்தி வாய் பொத்தியே இருப்பார்கள் என்பது திண்ணம்.

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு எனும் அடிப்படையில் முஸ்லிம் சமூகத்துக்கு உருவாகப் போகும் நெருக்குவாரங்களுக்கு உடனடி வடிவம் கொடுக்கும் அளவுக்கு ஆட்சியாளர்கள் இம்முறை தயாராக இல்லையென்றாலும் கூட வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போன்று பெரும்பான்மைப் பலம் உள்ள நாடாளுமன்றில் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பதை எதிர்பார்க்கலாம்.

விடிந்தெழும்பினால் யாரையாவது ஏசியாக வேண்டும் என்ற நிய்யத்தோடு கண் விழிக்கும் அளவுக்கு தர்க்கத்தில் ஊறிப்போயுள்ள முஸ்லிம் சமூகத்துக்குள் 'அல்லாஹ்'வே இறைவன் என்ற விடயத்தைத் தவிர ஏனைய அனைத்து விடயங்களிலும், வரலாறுகளிலும், செயற்பாடுகளிலும் முரண்பாடு உண்டு. அந்த முரண்பாட்டின் விளைவு பற்றி எவ்வளவு பேசினாலும் அது தீரப்போவதில்லை, மாறாக நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. 

எனவே, நிதானமாக வந்து ஆட்கொள்ளக்கூடிய சட்டங்களும் நடைமுறைகளும் சிறு அதிர்வை ஏற்படுத்தினாலும் நீண்ட நாட்கள் நிலைக்காது என்பதை ஆட்சியாளர்கள் நன்கறித்து வைத்துள்ளார்கள். ஆகவே, அவர்களுக்குத் தேவை சூழ்நிலை உணர்வுகளின் போது தோள் கொடுக்கக் கூடிய அடைவுகளுக்காக ஏங்கும் பங்காளிகளே.

பெரமுனவைப் பொறுத்தவரை அக்கட்சி தம் பங்காளிகளை ஏலவே அடையாளங் கண்டுவிட்டது. அவர்களுக்குத் தோள் கொடுக்கத் துணிந்து அடுத்தடுத்த நகர்வுகளுக்கும் தயாராகிவிட்டது. தமக்கிருந்த பதவிகள் - பட்டங்களை வைத்து, கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியலின் உச்ச கட்ட அடைவென தாமாகவே ஊதிப் பெருப்பித்த ஒரு விடயத்தை இறுதி வரை அடைய முடியாமல் வெற்று வாக்குறுதிகளுடன் வெளுத்துப் போயுள்ள சக்திகளுக்கு 'பிரிவினை' அரசியலொன்றே இனி கை கொடுக்கப் போகிறது.
மக்கள் மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் சமூகத்துக்கு நன்மை!

jTScYcS

-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com



No comments:

Post a Comment