பண்ணையாரும் பலியாடுகளும்! - sonakar.com

Post Top Ad

Friday 3 January 2020

பண்ணையாரும் பலியாடுகளும்!



இறைவன் நமக்குத் தந்திருக்கும் உலகம் விந்தையானது, அகல விரிந்திருக்கும் பிரபஞ்சத்தில் நாம் தேடியறிந்து அறிவை வளர்த்துக்கொள்வதற்காகவே படைப்புகள் மலிந்து கிடக்கின்றன. வானம் - பூமி, விண் வெளி, ஆழ்கடல் என இன்னும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு மனிதனின் தேடல் விரிந்து சென்று கொண்டிருக்கும்.


இறைவன் வகுத்திருக்கும் இயற்கையின் நியதி மனித குலம் மனிதத்துடன் எதுவரை தூரம் செல்ல வேண்டும், அதன் பின் நேற்றைய - இன்றைய கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கும் நாளைய தலைமுறை அதனை எதுவரை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதெல்லாம் ஏலவே நியமிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் என நாம் நம்புகிறோம்.

ஆனாலும், இந்த இயற்கைக்குள்ளும் செயற்கையான இருண்ட வட்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ள எமது சமூகம் அண்டசராசரத்தை விட்டு அயல் நாடு, நம் நாட்டின் கரை தாண்டிய கடல் பற்றிக் கூட சிந்திப்பதற்குத் தயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னிருந்த நிலையோடு ஒப்பிடுகையில் முன்னேற்றம் இருந்தாலும் கூட இன்றளவும் எமது சமூகத்தின் இளசுகள், பெருசுகள் என எல்லோருமே தமக்கென ஒரு வட்டத்திற்குள் வாழ்வதையே சௌகரியமாகக் கருதுகிறார்கள்.

ஒரு சிலரைப் பொறுத்தவரை அதிகம் தெரிந்து கொள்ள வேண்டாம், தெரிந்தால் நாளை மறுமையில் பதில் சொல்ல நேரிடும் என நினைக்கிறார்கள். இன்னும் சிலர் அறிய மறுப்பதை மறைவானவை என போர்வை போர்த்தி ஒளிந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர், ஒரு பாடத்திட்டத்திற்கமைய மார்க்க அறிஞர்களாக வந்தவர்கள் பேசாத விடயங்களை செவிமடுக்கவும் தயங்குகிறார்கள். சாதகமான பக்கத்தில், ஒரு காலத்தில் அல்-குர்ஆனை மனனம் செய்யப் பயிற்சியளிப்பதோடு நிறுத்திக் கொண்ட அரபுக் கல்லூரிகளில் இப்போது தகவல் தொழிநுட்பம் மற்றும் ஏனைய பாடத்திட்டங்களும் கற்பிக்கப்படுகின்றன. ஆதலால், ஏதோ ஒரு காலத்தில் மாற்றம் வரும் எனவும் நம்பலாம்.

இருந்தாலும் தனி மனித சிந்தனையூட்டல் மற்றும் அபிவிருத்திக்கான சூழ்நிலையை உருவாக்குவதில் ஏனைய சமூகங்களை விட நமது சமூகம் பாரிய அளவில் பின் தங்கியே இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். அத்தி பூத்தாற்போல ஆங்காங்கு நடக்கும் விடயங்களை வியந்து, புகழ்ந்து போட்டோ எடுத்துத் தள்ளும் நாம் அதனை ஓரிரு தினங்களுக்குள் மறந்து விடுகிறோம்.

ஆறு வருடங்களுக்கு முன், மூதூர் ஷாபி நகரிலிருந்து வாழ்க்கைச் சூழ்நிலை காரணமாக சவுதி அரேபியாவுக்கு சென்ற ரிசானா நபீக் எனும் யுவதி இன்னுயிரை இழந்தார். அவர் தந்தை சுல்தான் நபீக்கை முஸ்லிம் குரல் வானொலியில் எனது நிகழ்ச்சிக்காக இணைத்து பல கேள்விகளைக் கேட்டிருந்தேன். அதில் ஒன்று, இளம் பிள்ளைகளைத் தொடர்ந்து படிக்க வைப்பதைத் தடுப்பதெது? எனும் கேள்வியாகும்.

அதற்குப் பதிலளித்த அவர், பெரிய பிள்ளையான ஒரு பெண் குழந்தையை பஸ்ஸில் அனுப்புவதைத் தவிர்த்து ஆட்டோவில் பாடசாலைக்கு அனுப்ப மாதம் ஆயிரம் ரூபாவும் ரியுசனுக்கு அனுப்ப மாதம் இரண்டாயிரம் ரூபாவும் தேவைப்படுகிறது. அதற்கான வசதி வாய்ப்புகள் தற்போது எங்களிடம் இல்லை. கடற்படை முழுமையாக முடக்கி வைத்திருப்பதால் எங்களுக்கு கடற்றொழிலுக்கு செல்லவும் முடியவில்லையென தமது ஆதங்கங்களை அடுக்கியிருந்தார்.

அது ஒரு வகையென்றால் அதே ஊரில் செங்கல் வார்த்தாவது தன் பிள்ளையை படிக்க வைத்து உயர்தர பரீ;ட்சையில் சமூகம் பாராட்டும் அளவுக்கு பெறுபேற்றைப் பெற வைத்த மீராசா என்பவர் இன்னொரு வகை. இவ்வாறு தனிமையில் அல்லலுறும் முசாதிக்காக்களின் வரலாறு 2019ம் வருடத்தோடு திசை திரும்பி விடப் போவதில்லை. ஏனெனில், ஆளுக்கொரு தடவை போய் சிறிய-பெரிய நிதியுதவிகளை வெற்றி பெற்ற ஒரு முசாதிக்காவுக்கு செய்து விட்டு படம் எடுத்து அதனை பத்திரிகைகள் - பேஸ்புக்குகளில் போடுவதோடு சமூகம் திருப்தியடைந்து அதனை மறந்து விடும்.

வறுமையோடு போட்டி போட்டுக் கரைசேரும் தைரியம் எல்லோருக்கும் வரப் போவதில்லை, அப்படி வருவதற்கு இந்த சமூகம் தன்னைத் தயார் படுத்தத் துணியவும் இல்லை. இன்று ஒரு முசாதிக்கா உயர்தர பரீட்சையில் நல்ல பெறுபேற்றைப் பெற்று பட்டப்படிப்பை நோக்கி நகர்கிறார், அதேவேளை இன்னும் பல முசாதிக்காக்கள் தம் கல்வியை முடித்துவிட்டு வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாமலும், காலம் தாண்டித் திருமணம் செய்த பல முசாதிக்காக்கள் இடையிலறுந்த வாழ்க்கையைத் தொடர முடியாமலும், குழந்தைகளுடன் மறுமணத்துக்கான விளம்பரம் போடும் நிலையிலும் காலம் இருக்கிறது.

இப்போது கிரிக்கட் மெட்சுகளில் பரிசு கொடுப்பதைப் போன்று பெரிய காசோலையை பிரின்ட் எடுத்து அதில் 10,000 ரூபா என எழுதி; இந்த முசாத்திக்காவுக்கு கொடுத்து போட்டோ எடுக்கும் இன்றைய முஸ்லிம் சமூகம், அந்த நிலையைத் தாண்டி முன் - பின் யோசிக்கத் தயாராக இல்லை. எப்படியோ நாளை இதையெல்லாம் மறந்து விடவும் போகிறது. எனவே, நல்லது-கெட்டது மற்றும் நியாய தர்மங்கள் இன்று ஏதோ பேசப்பட்ட விடயமாகவே இருக்கும்.

இப்பேற்பட்ட சிந்தனையோட்டம் உள்ள சமூகம் பொது விவகாரங்களிலும் இதே மனப்பாங்குடனேயே இருந்தது, இருந்து கொண்டிருக்கிறது, இருக்கப் போகிறது என்பதும் திண்ணம். இந்த நிலை தான் பண்ணையார்களின் பசி போக்கும் காரணியாகிறது.

1989 அல்லது 90ம் வருடம் நெலுந்தெனியவுக்குச் சென்றிருந்தோம். அங்கு ஒரு பள்ளிவாசல் இருப்பது எத்தனை மகிழ்ச்சி தந்ததோ அது போன்றே அங்கு சிறிய அளவில் வாழ்ந்த எம் சமூகத்தவரைக் கண்டு அளவளாவியதிலும் மகிழ்வாக இருந்தது. சற்றே மன நலம் பாதிக்கப்பட்டிருந்த பாரூக் நானாவை இன்றுவரை மறக்க முடியாது. மற்றவர்களோடு எப்படியோ, அருகிலிருந்து சிறு ஓடைக்கு எங்களை குளிக்க அழைத்துச் சென்ற போதிலும் உபசரித்ததிலும் அவர் மிகவும் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்.

அப்போதே, ஊரில் உள்ள முஸ்லிம் சமூகம் எப்படி? என்ற ஒரு கேள்வி கேட்டபோது, என்றைக்காவது இங்கயும் பலாய் முசீபத்துக்கள் வரும் என்று அவர் ஒரு கணிப்பை சொல்லியிருந்தார். புதிய அரசாங்கம் பதவியேற்ற பின் மீண்டும் நெலுந்தெனிய பள்ளிவாசல் செய்திகளில் இடம் பிடித்த போது பாரூக் நானா தான் ஞாபகத்தில் வந்தார். வடக்கிலும் பல இடங்களில் திடீர் திடீர் என புத்தர் சிலைகள் முளைக்கின்றன. ஆங்காங்கு அதற்கெதிரான சமூகப் போராட்டங்கள் நடக்கிறது. எல்லாவற்றையும் இழந்து மீள உயிர் வாழ ஆரம்பித்திருக்கும் வடபுல சமூகம் தம் மீதான ஆக்கிரமிப்புகள் தொடர்பில் இன்னும் விழிப்புடனேயே இருக்கிறது, களமிறங்கிப் போராடவும் செய்கிறது.

எமது சமூகம் இவ்வாறு ஒரு சந்தர்ப்பம் வந்தால் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது? என்பது வேடிக்கையான விடயம். சில தினங்களுக்கு முன்னர், நெலுந்தெனிய பள்ளிவாசல் அருகே திடீரென முளைத்த புத்தர் சிலை விவகாரத்தை நடக்காத ஒரு விடயம் போன்று மறந்து வாழவே சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் விரும்புகிறார்கள். தாண்டியும் சிந்திப்பவர்கள் என்னவென்றால், அதாவுல்லாஹ் என்ன செய்யப் போகிறார்? அலிசப்ரி என்ன செய்யப் போகிறார்? முசம்மில் என்ன செய்யப் போகிறார்? என்ற கேள்வியை மாத்திரம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இது மேற்கொள் காட்டச் சிறந்த சந்தர்ப்பம் என்பதால் காலத்தால் சற்றே பின் நோக்கிப் பயணித்து அலசினால், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இடம்பெற்ற இனவாத சம்பவங்களின் போதும் இவ்வாறே மறு தரப்பில் இருந்தவர்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர் என்பதை மீட்டிக் கொள்ளலாம். இவ்வாறு எமக்குள்ளேயே கேள்வி கேட்கவும் தமது பண்ணையார்களை சதா காலம் நியாயப்படுத்தவும் தாராளமாக ஆளிருப்பதால் தேசிய பண்ணையார்களுக்கு எந்தக் குறைபாடும் இல்லை.

ஆகவே, மாயக்கல்லியில் புத்தர் சிலை தோன்றினாலும் அதுவே நெலுந்தெனியவில் நிலை கொண்டாலும் இன்னும் எத்தனையானாலும் நமது சமூகத்தின் பொது நோக்கம் பொதுத்தன்மையற்றதாகவே தொடர்கிறது. இதெற்கெல்லாம் யாரை விரல் நீட்டலாம்? யாரைக் குறை கூறலாம்? என்ற கேள்விக்கப்பால் முதலில் தெருவும், ஊரும், பிரதேசமும் ஒரு நிலைப் படும் அடிப்படைத் தேவையின் இடைவெளி அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

கொண்டாடாத சர்வதேச தினம் இல்லை, பங்களிக்காத பொதுப் பணி இல்லை, ஆனாலம் சமூகப் பணியென்கின்ற போது மாத்திரம் அதில் உடன்பாடு காண முடியாத நிலை தொடர்கிறது. அடிக்கடி வலியுறுத்தியது போன்று அதற்கான அடிப்படை இரண்டே விடயங்களிலேயே தங்கியிருக்கிறது. ஒன்று மார்க்கம் அடுத்தது அரசியல்.

நமக்குத் தரப்பட்ட மார்க்கம் ஒன்று தான், ஆனால் அந்த மார்க்கத்தை எவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்; நமக்குள் ஆயிரமாயிரம் முரண்பாடு. ஒரு சமூகத்தை தேசமாகக் கட்டியெழுப்பும் பாரிய அரசியல் பணியோடு ஆரம்பிக்கப்பட்ட மார்க்கத்தின் கட்டுமானத்தை அவரவர்க்குத் தேவையான வகையில் மொழிபெயர்த்து, தெரு மூலைகளில் ஒலி பெருக்கியில் சண்டை பிடித்துக் கொண்டிருக்கும் இச்சூழ்நிலையை நாமே ரசிக்கும் போது மற்றவர் அதனை ரசிக்காமல் விடுவதற்கான நியாயப்பாடு எதுவுமில்லை.

அரசியல் நிலைப்பாடு என்பது அவரவர் சுதந்திரமாகும். எந்தக் காலத்தில் எந்தக் கட்சியை ஆதரிக்க வேண்டும், யாரை ஆட்சியதிகாரத்தில் அமர வைக்க வேண்டும் என்ற சுயாதீனமான முடிவையெடுக்கக் கூடிய முழு சுதந்திரமும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் உண்டு. கடந்த பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை சிங்கள சமூகத்துக்குள் ஓசையின்றி எழுந்த 'சிங்ஹலகம' என்ற இன உணர்வு ஒரு அரசியல் எழுச்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும், ஆட்சியாளர் அனைவருக்கும் பொதுவானவர் என்ற வகையில் நாட்டு மக்களின் நலனை முன்நிறுத்தி இயங்க வேண்டியது அவருக்குக் கடமை.

அது போலவே, தான் தலைமை தாங்கும் நிர்வாகத்தை இயக்குவதும் அவர் மீதான பாரிய கடமை. ஆனால், ஒரு சனக்கூட்டத்தை பிறிதொரு தீர்மானத்தை நோக்கி நகர்த்தும் பரீட்சார்த்த முயற்சியில் வெற்றி கண்டுள்ளதால் பிரிவினையின் அளவைக் கச்சிதமாக அளவிட்டுப் பணியாற்றுகிறார்கள் அண்மைய வெற்றியாளர்கள். இதன் விளைவால், ஜனாதிபதி தேர்தலில் அவர் பக்கம் சாயாத தொகுதிகளில் கழிவகற்றும் பணிகள் கூட அரசியல் பழிவாங்கலாக முடக்கப்படுகிறது. எனினும், அதனை ஒரு சமூகப் பிரச்சினையாகப் பேசுவதற்கும் போராடுவதற்கும் சமூகம் ஒரு நிலையில் இல்லையென்பதால் தாங்கிக் கொள்ளவும் அடங்கிக் கொள்ளவும் பிரதேசம் பழகிக் கொள்கிறது.

இன்று ஒரு பிரதம மந்திரியின் அளவுக்குத் தனக்குத் தானே அதிகாரத்தை உருவாக்கிக் கொண்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் தளபதி கருணா அம்மான் என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன், தினசரி அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், காரியாலயங்களுக்குச் சென்று பார்வையிடுவதும், அங்கு இடம்பெறும் செயற்பாடுகளை கணிப்பதும், குறைகளைக் கேட்பதுமாக தன் அந்தஸ்த்தை உயர்த்திக் கொண்டு நடமாடி வருகிறார்.

கோட்டாபே ராஜபக்சவின் வெற்றிக்காக உழைத்த நன்றிக் கடனுக்காக தொடர்ச்சியாக மஹிந்த அணியில் இருந்த சில முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஹஜ் குழு முதல் கிடைக்க வேண்டிய பல்வேறு பதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவர்களும் சத்தமில்லாமல் தமக்குத் தேவையான 'சேவையை' செய்து கொண்டிருக்கிறார்கள். பதவி பறிபோனவர்களோ, தற்போதைய சூழ்நிலையில் எதையும் செய்யவோ, வாய் திறக்கவோ முடியாத நிலையில் அடங்கிப் போய் இருக்கிறார்கள்.
ஜனவரி வந்து விட்டது, இ;ம்மாத இறுதியில் கொஞ்சம் தலைதூக்கிப் பேசலாம், பெப்ரவரியில் இன்னும் கொஞ்சம் தைரியம் கிடைக்கும், மார்ச் மாதம் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும் உச்ச கட்ட பேச்சின் வீச்சைக் காணலாம், அத்துடன் அடங்கியாக வேண்டும். அதற்கு மேலும் என்ன செய்யலாம் என்ற தெளிவு எந்த அரசியல்வாதியிடமும் இப்போதைக்கு இல்லை.

ஈஸ்டர், வில்பத்து, ஊழல் என பல்வேறு குற்றச்சாட்டுகள் - விசாரணைகள் அலைச்சல் என்று அதனை முதலீடாகப் பயன்படுத்தி அனுதாபத்தைப் பெற்றுக் கொள்ளும் வியூகமும் ஓரளவுக்குக் கை கொடுக்கும். கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெற்று வர வேண்டியது அவர்களின் பொறுப்பு, தமக்கு தேசியப் பட்டியலாவது கிடைக்கும் என்ற குறைந்த பட்ச உத்தரவாதத்துடன் மலைநாட்டில் வகுக்கப்படும் வியூகங்களுக்கும் வாய்ப்பிருக்கும். ஆனால், குழம்பிப் போயுள்ள மக்களுக்கு எங்கிருந்து வழிகாட்டலும் தெளிவும் கிடைக்கும் என்பது விடை காணப்பட வேண்டிய கேள்வியாகும்.

ஏற்கனவே தீர்மானித்திருந்தால் அந்த மக்களுக்குத் தெளிவு அவசியமில்லையெனும் அடிப்படையில் மக்கள் தீர்மானித்து விட்டார்களா? என்ற கேள்வியையும் இணைத்துக் கேட்பதில் தவறில்லை. முஸ்லிம்கள் என்னோடு இணையவில்லை, அதனால் தான் என் அமைச்சரவையில் முஸ்லிம்கள் இல்லையென ஜனாதிபதி சொல்லியிருக்கிறார், நாங்கள் சேர்ந்தாக வேண்டும் என்ற கோசத்துடன் ஊருக்கு ஊர் மாற்று அரசியல் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதனை மக்கள் ஏற்றார்களா? இல்லையா? என்பதற்கும் முஸ்லிம்கள் இதனை ஏற்க வேண்டுமா? இல்லையா? என்பதற்கும் இடையில் பல்வேறு பட்ட விடைகள் உண்டு.

ஒரு வகையில் ஜனாதிபதி தேர்தல் முடிவு தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிப்போர் இவை பற்றி தேர்தல் வரை சிந்திக்கவும் தயாராக இல்லையெனலாம். நடைமுறை அரசின் செயற்பாடுகள் மீதான நம்பிக்கையை விட எச்சரிக்கை மனப்பாங்கே அதிகமாக இருப்பதுவும் கூட காலம் கற்றுத் தந்த பாடமே. 2005 மற்றும் 2010 மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக உழைத்ததில் முஸ்லிம்களுக்குப் பெரும் பங்கு இருந்த போதிலும் சங்க சபாவின் பௌத்த எழுச்சித் திட்டத்துக்கு எம்மைப் பலிகொடுக்க ஆட்சியாளர்கள் தயங்கவில்லையென்பதால் இந்த எச்சரிக்கை உணர்வு மேலோங்கியே நிற்கிறது.

இப்பின்னணியில், ஏலவே குழம்பிப் போயுள்ள சமூகத்திடம் இயற்கையான எழுச்சியோ வியூகமோ உருவாகப் போவதில்லையென்பதும் எதிர்பார்க்கப்பட வேண்டியது. இதேவேளை, சூழ்நிலைகளும் புறக்காரணிகளும் வழமைக்கு மாறாக முஸ்லிம் வாக்காளர்களை மிதக்கும் நிலைக்குத் தள்ளிச் சென்று கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவும் இருக்கிறது. இச்சூழ்நிலையில் பயன்பெறுவதே பண்ணையார்களின் நோக்கமாக இருக்கும் என்பதால் பலியாடுகளாகாமல் சுதாரித்து, தம்மைச் சுற்றிய அரசியலையும், தம்மை நோக்கிப் பாயும் அரசியலையும் உன்னிப்பாக அவதானித்து நிலையடைதல் காலக் கடமையாகிறது.

jTScYcS
-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment