A.R.M. ஜிப்ரி மறைவு: முஸ்லிம் மீடியா போரம் அனுதாப செய்தி - sonakar.com

Post Top Ad

Tuesday 21 January 2020

A.R.M. ஜிப்ரி மறைவு: முஸ்லிம் மீடியா போரம் அனுதாப செய்தி


இளம் ஊடகவியலாளர்கள் பலரை உருவாக்கிய சிரேஷ்ட அறிவிப்பாளரும்> ஊடகவியலாளருமான ஏ. ஆர். எம். ஜிப்ரியின் மறைவு சமூகத்திற்கும் ஊடகத்துறைக்கும் பேரிழப்பாகும். இவரது மறைவையிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன்  அன்னார் தனது மறுமை வாழ்வில் ஈடேற்றம் பெற்று உயர்ந்த சுவனத்தை அடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்  ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம். அமீன். 


இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :- மர்ஹ_ம் ஏ ஆர் எம் ஜிப்ரி அவர்கள் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பயின்று, குண்டசாலை விவசாயக் கல்லூரியில் டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்த புகழ்பெற்ற விஞ்ஞானப் பாட ஆசிரியராவார்.


களுத்துறை ஜீலான் மத்திய கல்லூரி, தொடவத்தை அல் பஹ்ரியா பாடசாலை ஆகியவற்றின் முன்னாள் அதிபராக கல்வி பணியாற்றிய மர்ஹ_ம் ஜிப்ரி அவர்கள் நாடுதழுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பத்து அதிபர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் கல்வி அமைச்சின் குரு பிரதீபா பிரபா விருதையும் பெற்றுள்ளார். 

இலங்கை வானொலியில் அல்லியின் ஹலோ உங்கள் விருப்பம், பாஹிமின் பரவசப் பயணம்> அறிவுக் கலஞ்சியம் போன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக நேயர்களின் விருப்பத்துக்குரிய அறிவிப்பாளராக திகழ்ந்த ஏ.ஆர்.எம். ஜிப்ரி, நாடுதழுவிய ரீதியில் பொது அறிவு, விஞ்ஞானம் சார்ந்த விடயங்களை போதிப்பவராகவும் ஊடகத்துறை வளவாளராகவும் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வந்தார்.

வானொலியின் சிறந்த செய்தி வாசிப்பாளராக மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனத்திலும் நீண்டகாலம் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி முன்வைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளராகவும் செயற்பட்டதுடன் பத்திரிகைத் துறையிலும் தனது பங்களிப்பை வழங்கி வந்த இவர் அறிவுக் களஞ்சியம் புகழ் ஏ ஆர் எம் ஜிப்ரி என்றே  நேயர்களால் அழைக்கப்பட்டார்.

கல்வித்துறை, ஊடகத்துறை, சமூக மற்றும் அரசியல் என பல்துறை ஆளுமைகளைக் கொண்ட இவர் இன, மத பேதமின்றி அனைவருடன் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் முன்னுதாராணமாக செயற்பட்டதுடன் பல்வேறு உயர் விருதுகளையும் பெற்றுள்ளார்.


சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட உறுப்பினராகவும் செயற்குழு அங்கத்தவர், ஆலோசகராக செயற்பட்டு வந்த அதேசமயம் மீடியா போரத்தின் உப தலைவர் (2008/2009), பொருளாளர் (2009/2010) பதவிகளையும் வகித்து போரத்தின் வளர்சிக்காகவும் ஊடகத்துறை வளர்ச்சிக்காகவும் அயராது பாடுபட்டார்.

கல்வித்துறை> ஊடகத்துறை மற்றும் சமூகத்திற்காக அவர் ஆற்றிய சேவைகளை இறைவன் ஏற்றுக் கொண்டு அன்னாருக்கு உயர் தர சுவன வாழ்வினை வழங்க பிரார்த்திப்பதாகவும் என் எம். அமீன் மேலும் தெரிவித்துள்ளார்.

-ஸாதிக் ஷிஹான்
பொதுச் செயலாளர்

No comments:

Post a Comment