தேசப்பிரேமமும் தெளிவும்! - sonakar.com

Post Top Ad

Sunday 1 December 2019

தேசப்பிரேமமும் தெளிவும்!



2010ல் மேலெழுந்து, மறைந்து, பின் மீண்டும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது உயிர் பெற்ற சொல் தேசப் பிரேமம். மலையாளத்தில் எப்படியோ அவ்வாறே சிங்கள மொழியிலும் பிரேமம் என்றால் ஒன்றின் மீதான பற்று அல்லது காதல் என்று பொருளாகிறது. அதனடிப்படையில் தேசப்பிரேமியோ என்றால் தேசப்பற்றாளர்கள் (Patriot) என அறியப்படுகிறார்கள்.


தேசத்தின் மீது பற்றுள்ளவர்கள் கோட்டாபே ராஜபக்சவுக்கு வாக்களிப்பார்கள் என பொதுவாகவே சிங்கள தலைமைகளினால், துறவிகளால், நாட்டுப்புறங்களிலும், குக்கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களுக்குப் கை மேல் பலன் கிடைத்தது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச ஒன்றும் அந்நிய நாட்டைச் சேர்ந்தவரில்லை, ஆயினும் வாக்காளர்கள் வரையறுத்துக் கொண்ட தேசப்பிரேம வகையறாவுக்கு கோட்டாபே ராஜபக்சவே அதிகம் பொருந்தியிருந்ததனால் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களுக்கும் வாக்களித்த அனைவருமே தேசத்தி;ன் மீது கொண்டிருந்த பற்றின் அடிப்படையிலேயே நாட்டின் தலைவர் ஒருவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்களித்திருந்தார்கள். ஆக, முதலில் தம் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய வகையில் அனைவருமே தேசப்பற்றாளர்களே. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் போது பெரமுன தரப்பினால் பேசப்பட்ட தேசப்பிரேமம் பொதுத் தேர்தலில் சற்று வித்தியாசப்படவும் போகிறது.

ஆகவே, இந்தத் தேசப்பிரேமத்தின் மற்றும் மக்கள் தம் ஜனநாயகக் கடமை மீதான முன் கூட்டிய தெளிவு அவசியப்படுகிறது.

ஒரு நாட்டின் அபிவிருத்தியைப் பொறுத்தவரை அது மக்களால் உணரப்பட வேண்டும். அபிவிருத்தியின் பயனை மாத்திரமன்றி அதன் தேவையும் மக்களால் உணரப்படும் பொழுதே அதனை நிறைவேற்றித் தருவதற்கான அழுத்தத்தை அரசின் மீது பிரயோகிக்க முடியும். தேர்தல் ஊடாக பிரதிநிதிகளைத் தெரிவு செய்து நாடாளுமன்றம், மாகாண சபை, பிரதேச சபைகளுக்கு அனுப்பும் வாக்காளர்கள் தமக்கென எதிர்பார்க்கும் பலன் என்னவென்பதைப் பொருத்து மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படும்.

இலங்கையைப் பொறுத்தவரை, அபிவிருத்தி பற்றிய மக்கள் சிந்தனை இன்னமும் தாம் சார்ந்த தெரு மற்றும் ஊர் சார்ந்தே பெரும்பாலும் தரித்து நிற்கிறது. இந்நிலையைத் தாண்டி மாவட்ட அபிவிருத்தி  பற்றி சிந்திக்கக் கூடியவர்களும், மாகாணம் மற்றும் தேசிய அபிவிருத்தி குறித்து சிந்திப்பவர்களும் இல்லாமலில்லை. எனினும், பெரும்பான்மையானவர்கள் இன்னும் முதற்கட்டத்தைத் தாண்டாத நிலையில் தெருவுக்கு டுநுனு பல்புகள் பொருத்துவதற்கும் போராடிக் கொண்டிருப்பதே கள யதார்த்தம்.

இந்நிலையில் தேசிய அபிவிருத்தி பற்றிய சிந்தனை மாற்றத்தை உருவாக்கக் கோருவது அளவுக்கு மீறிய சுமையாகிவிடும். ஆயினும், நாட்டின் அபிவிருத்தி என்பது வெறுமனே பொருளாதார அபிவிருத்தி மாத்திரமன்றி சமூக அபிவிருத்தியையும் உள்ளடக்கிய விடயமாதலால் அதைப் பற்றி இக்கட்டத்தில் பேசுவது தகும்.

தேசம் சுதந்திரம் பெற்று 70 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் கூட இன்னும் அபிவிருத்தியடைந்து  வரும் நாடு எனும் வரையறையை நம் நாடு தாண்டவில்லை. 30 வருட உள்நாட்டு யுத்தமே அதன் பிரதான காரணமாக அனைத்து அரசாங்கங்களினாலும் முன் வைக்கப்பட்டு வந்துள்ளது. உண்மை தான், உள்நாட்டு யுத்தம் ஒரு தேசத்தை எப்படியெல்லாம் சிதைக்கும் என்பதற்கு ஈராக், லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகள் அண்மைக்கால முன்னுதாரணங்கள்.

ஒப்பீட்டளவில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் அந்த அளவுக்கு தேசமெங்கும் பரவவில்லையாயினும் பொருளாதார அபிவிருத்திக்குப் போதிய சேதத்தை உருவாக்கியிருந்தது. சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்திருந்தது, பண வீக்கம் மற்றும் அச்சம் காரணமாக பல்வேறு சமூகப் பிரச்சினைகள் உருவாகி ஏதோ ஒரு புறத்தில் துளையொன்று பெருகிக் கொண்டே வந்தது. இதன் பின்னணியிலேயே 2009ல் யுத்தம் நிறைவுக்கு வந்த போதிலும் இலங்கை ஒரு போதைப் பொருள் வர்த்தக மையமாக உருவெடுக்கவும் செய்தது.

தேசத்தை மீளக் கட்டியெழுப்பும் பணிக்கு உள்நாட்டில் போதிய வருவாய் இல்லாத நிலையில் வெளிநாட்டுக் கடனில் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த இலங்கைக்கு மேலை நாடுகள் கை விரித்த போதிலும் சீனா கைவிட வில்லை. இலங்கையை மாத்திரமன்றி பல பின் தங்கிய ஆபிரிக்க நாடுகளையும் சீனா கை விடாமல் பிடித்துக் கொண்டதால் இன்று உலகில் பல நாடுகள் சீனக் கடனால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை அந்த அளவு மோசமான நிலையை இன்னும் எட்டவில்லை. ஆயினும், தேச அபிவிருத்தி தொடர்ந்தும் கடனில் தான் தங்கியுள்ளது எனும் அடிப்படையில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிடைக்கும் உதவிகள் தவிர சீனா, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றன இச்சுமையை அதிகரிப்பதற்குப் பங்களிக்கும்.

வேறு என்னதான் வழியிருக்கிறது? உலக சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு தற்காலத்தில் இருக்கும் கிராக்கியோ வீழ்ந்து போயிருக்கும் தென்னை உற்பத்தியோ, வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காகச் சென்றிருக்கும் இலங்கையரோ ஒரே இரவில் வேண்டாம், ஒரே வருடத்தில் கூட நாட்டின் கடன் சுமையை அதிரடியாகக் குறைக்க முடியாது. அப்படியிருக்க, தேசத்தின் கட்டுமான அபிவிருத்திக்குத் தேவையான பணம் சீனாவின் கடன் வலையிலிருந்தே கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

மீண்டும் ஆட்சிபீடமேறியுள்ள ராஜபக்ச சகோதரர்கள் 2005 – 2015 வரையான ஆட்சிக்காலத்தில் விட்ட தவறுகளை மீண்டும் செய்துகொண்டு, தம் குடும்பத்தின் கீர்த்தியை உயர்த்த இரண்டாம் தடவை கிடைத்த வாய்ப்பைத் தவற விடமாட்டார்கள் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையாகட்டும், பொல்கஹவெல பக்கமாகட்டும், அக்கரைப் பற்று முதல் மட்டக்களப்பு வரையிலுமாகட்டும் எங்கு பார்த்தாலும் மஹிந்த ஆட்சிக்காலத்திலேயே நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் முழுமையான வீதி அபிவிருத்தி உருவானது.

நெடுஞ்சாலைகள் உருவாக்கப்பட்டு, போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டு பல்வேறு பயனை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்க, 2015ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், அத்தனையும் பாரிய கடன் சுமையில் கட்டியெழுப்பப்பட்டது என்ற உண்மையை வெளிக்கொணர்ந்தது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்சவிடம் இது ஒரு கேள்வியாக முன் வைக்கப்பட்டது. அதன் போது, தானே பதிலளித்த மஹிந்த, மீண்டும் அதிகாரத்துக்கு வந்ததும் முன்னர் போன்றே நாட்டுக்குத் தேவையான பணம் வந்து சேரும் என விளக்கமளித்திருந்தார்.

ஒரு கிலோ மீற்றர் வீதி அபிவிருத்திக்கு அதன் அசல் செலவை விட பல மடங்கு செலவு உருவாக்கப்பட்டு அரசியல்வாதிகளிடையே பங்கு போடப்பட்டது என்ற அபிப்பிராயமும் ஏலவே  வெளியிடப்பட்டிருக்கிறது. மக்களைப் பொறுத்தவரை யார் எந்தப் பங்கை எடுத்தால் என்ன? கார்பட் வீதியொன்று கிடைத்தது என்று திருப்திப் பட்டுக்கொண்டார்கள். எனினும், கோட்டாபே ராஜபக்ச போன்ற உறுதியான ஒரு நிர்வாகியின் ஆட்சியின் கீழ் மக்கள் அலட்சியமாக நடந்து கொள்ளலாமா? என்ற கேள்வியெழுப்பப்பட வேண்டும்.

அதிகாரம் குவிக்கப்பட்ட நிலையில் மாத்திரமன்றி, அதிகாரத்தில் இல்லாத போதிலும் கெட்டித்தனமாக தான் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்தவர் கோட்டாபே ராஜபக்ச. அதிகாரம் கையில் இருக்கும் போது அவரது நிர்வாகத் திறமை எவ்வாறு இருந்தது என்பதைக் கடந்த காலத்தில் அறிந்திருக்காதவர்கள் தற்போது மெல்ல மெல்ல உருவாக்கப்பட்டு வரும் செயற்திட்டங்கள் ஊடாகவும் கூட அறிந்து கொள்ளலாம்.

ஆயினும், 19ம் திருத்தச் சட்டத்துக்கமைவான நிறைவேற்று ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் நாடாளுமன்றம் முக்கிய பங்களித்தாக வேண்டும் எனும் அடிப்படையில் இலங்கையில் புதிய அரசியல் கலாச்சாரம் உருவாவதற்கான வாய்ப்பு தற்போது மலர்ந்திருக்கிறது. இப்போது இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு எந்த நடவடிக்கையை முன்னெடுக்கச் சென்றாலும் அதில் ஆயிரம் தடைகள் இருக்கும். 

இடைக்கால அமைச்சரவையின் எண்ணிக்கையை 15 ஆகக் குறைத்த போதிலம் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, விமல் வீரவன்ச போன்றோரை விலக்கி வைக்க முடியாத சூழலில் கைகள் கட்டப்பட்டவராகவே புதிய ஜனாதிபதியும் காணப்படுகிறார். அது மாத்திரமன்றி ஏனையோருக்கெல்லாம் இராஜாங்க அமைச்சர் பதவியை வழங்கி அமைச்சரவையை தற்சமயம் 54 ஆக அதிகரித்து வைத்துள்ளார். சரி, 2020 மார்ச் வரை பொறுத்துப் போகலாம் என்றால் அதற்குப் பின் என்ன செய்யப் போகிறோம் என்ற தெளிவு மக்களுக்கு அவசியப்படுகிறது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு (Brexit) மக்கள் ஆணை வழங்கப்பட்டது. எனினும், அதனை நடைமுறைப்படுத்துவதற்குள் ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் இரண்டரை வருடங்களுக்குள் மூன்றாவது பிரதமரைக் கண்டு விட்டது. காரணம், ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் கூட தமது கட்சித் தலைவரின் பிரெக்சிட் திட்டத்தில் கோளாறு இருந்தால் அதை எதிர்த்து வாக்களித்தார்கள். தமது கட்சி என்பதற்காக தேச நலனை பிற்படுத்த அவர்கள் துணியவில்லை. இத்தனை காலம் ஒன்றாக இருந்த ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் போது அண்டை நாடுகளுடனான எல்லைப் பாதுகாப்பு, வர்த்தக உடன்படிக்கை உட்பட முக்கிய விடயங்களில் நாட்டு நலன் முற்படுத்தப்பட்டு, அதற்கான தீர்வாக அமையாத எந்தத் திட்டத்தையும் நாடாளுமன்றம் அங்கீகரிக்கப் போவதில்லையென்பது பல தடவை உறுதியாக சொல்லப்பட்ட செய்தி. இப்பின்னணியில் தற்போது டிசம்பர் 12ம் திகதி இங்கு பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது.

ஆக, இலங்கையிலும் ஆட்சியாளரின் நல்ல திட்டங்களை ஆதரிக்கும் முற்போக்கான எதிர்க்கட்சி உருவாவதும், ஆட்சியாளர்கள் தாம் விரும்பியபடி சட்டங்களை மாற்றிக் கொள்ளாத வகையில் நாடாளுமன்ற அதிகார சமப்படுத்தலும் அவசியப்படுகிறது. இதற்கான தெளிவை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு அரசியல், சமூக மற்றும் சிவில் தலைமைகளிடம் இருக்கிறது. 

முன்னர் சொன்னது போன்று, தவிர்க்க முடியாத பங்காளிகளின் நிர்ப்பந்தத்தில் உருவாகும் ஆட்சியில் எதிர்காலத்திலும் பல்வேறு இடைஞ்சல்கள் உருவாகும். தவறுகளைக் கண்டு கொள்ளாத நிர்வாகம் நாட்டை மீண்டும் பின் நோக்கியே இழுத்துச் செல்லும். அப்படியான ஒரு தலைவர் போதுமாக இருந்திருந்தால் கைகள் கட்டப்பட்டு ஆட்சியதிகாரத்தில் இருந்த மைத்ரிபால சிறிசேன போன்ற ஒருவர் போதுமாக இருப்பார். ஒரு இடதுசாரிக் கொள்கைவாதியாக இருந்த போதிலும் நாடாளுமன்ற பெரும்பான்மையும் ஆதரவும் இல்லாமல் அவர் முடங்கிப் போயிருந்தார். அதேவேளை, நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையிருந்த மஹிந்த ராஜபக்ச, நடைமுறைகளை மாற்றி 18ம் திருத்தச் சட்டத்தை உருவாக்கவும் தயங்கவில்லை என்பது மீட்டப்பட வேண்டும்.

அப்போது அதற்கு ஆதரவாக கை தூக்கிய அரசியல்வாதிகளில் யாரேனும், நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு செயற்பட்டார்களா? என்ற அடிப்படைக் கேள்வியை முன் வைத்து 2015 பொதுத் தேர்தல் மக்கள் வாக்களிக்கவில்லை. மாறாக, அறிந்த – தெரிந்த முகம், கட்சி மற்றும் தலைமை என்ற நிலைப்பாட்டிலேயே வாக்குகள் தாரைவார்க்கப்பட்டது.

இப்போது, சுதாரித்துக் கொண்டாலும், நாடாளுமன்ற அதிகாரத்தை சமப்படுத்த விரும்பினாலும் யாரை நாடாளுமன்றுக்கு அனுப்புவது? என்ற கேள்வியும், ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகள் ஊடாக வெற்றி பெற்றதாகக் கூறப்படும் நிலையில் பொதுத் தேர்தலில் சிறுபான்மை சமூகப் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றில் நிறுவ வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. எனவே மீண்டும் தெரிந்த பேய்களைத் தேர்ந்தெடுப்பதே நிர்ப்பந்தமாகிறது.

ஆயினும், அதனையும் ஆக்கபூர்வமாக மாற்றி, உங்கள் பிரதிநிதிகளை உங்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ள அழைக்கலாம். பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய நலன்களையும், சமூக அபிவிருத்தியையும் அடிப்படையாகக் கொண்ட பரந்த திட்டங்களை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

இரு புதிய வேட்பாளர்களுடன் ஜனாதிபதி தேர்தல் எவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியதோ அது போன்றே மார்ச் மாதமளவில் இடம்பெறக் கூடிய நாடாளுமன்ற தேர்தலும் வரலாற்றில் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும். ஒரு கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வென்றவர், இடையில் கட்சி மாறினால் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, எந்தக் கட்சியூடாக யாரைப் பிரதிநிதியாகத் தெரிந்தெடுக்க வேண்டும் என்ற தெளிவும் எந்தக் கட்சிக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை வழங்க வேண்டும் என்ற தெளிவும் மக்களுக்கு அவசியப்படுகிறது.

துரதிஷ்டவசமாக, இருக்கும் தலைமுறையை மாற்றி, ஒட்டுமொத்தமாக புதியதொரு தலைமுறையை நாடாளுமன்றில் அமர வைக்க முடியாது. பெருந்தேசியக் கட்சிகள் அதற்கு இடமளிக்காத நிலையில், ஊருக்கு ஊர் சுயேட்சையாகப் போட்டியிட்டு புரட்சி செய்யும் அளவுக்கு கள நிலையும் இல்லை. ஆதலால், மக்கள் நிதானமாக சிந்தித்து நாடாளுமன்ற அதிகாரத்தை சமப்படுத்த வேண்டியவர்களாக உள்ளார்கள்.

தேர்தல் காலம் நெருங்கியதும், ஆழமான புள்ளிவிபரங்களை அலசலாம், ஆனால் இப்போதிருந்தே மக்களின் விழிப்புணர்வு அவசியப்படுகிறது. முஸ்லிமாகவே இருந்தாலும் கூட அவர் வெற்றுப் பேச்சுக்கப்பால் தெளிவான சிந்தனையில் இயங்கக் கூடியவராக இருக்க வேண்டும். இப்போது முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்றொரு தனியமைச்சர் இல்லை. அப்படியொருவர் கடந்த காலத்தில் இருந்த போதும் முழுமையான பிரயோசனம் கிடைக்கவில்லை. 

கல்வித்துறை முன்னேறியிருக்கிறது, அரச உத்தியோகம் என்ற முற்கால மாயை தகர்ந்து தற்போது தனியார் நிறுவனங்களில் போட்டி போட்டுக் கொண்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறார்கள். ஏப்ரல் 21 தாக்குதலின் ப்னினர் முஸ்லிம் இளைஞர்களை இணைத்துக் கொள்வதில் பல நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்ற போதிலும் கோட்டாபேயின் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு குறித்த அச்சம் நீங்கி மீண்டும் சுமுக நிலை உருவாகி விடும்.

ஆதலால், நமது தெருவுக்கொரு நாடாளுமன்ற உறுப்பினர், அவருக்கொரு அமைச்சர் பதவி, அதனூடாக ஒரு வேலைவாய்ப்பு என்ற வட்டத்திற்கு வெளியில், நம்மிடம் இல்லவே இல்லை போன்று ஏனைய மக்கள் பேசிக்கொண்டிருக்கும் தேசப்பற்றினை கிரிக்கட்டில் இலங்கை அணிக்கு ஆதரவளிப்பதைத் தாண்டி சிந்திக்க வேண்டிய கால கட்டம் உருவாகியுள்ளது.

இப்போதிருந்தே இதன் மீதான வாசிப்பும் - அலசலும் தேவைப்படுகிறது!

jTScYcS
-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment