ராஜபக்சக்களை குற்றஞ்சாட்ட ஹக்கீமுக்கு அருகதையில்லை: ஹசன் அலி - sonakar.com

Post Top Ad

Thursday 7 November 2019

ராஜபக்சக்களை குற்றஞ்சாட்ட ஹக்கீமுக்கு அருகதையில்லை: ஹசன் அலி



ராஜபக்ஸ அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ராஜபக்ஸக்கள் மீது கை நீட்டி குற்றம் சாட்டுவதற்கு எந்த அருகதையும் கிடையாது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சுகாதார மற்றும் போசாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.



இவரின் நிந்தவூர் இல்லத்தில் சமாதான கூட்டமைப்பின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரை நேற்று வியாழக்கிழமை சந்தித்து பேசியபோது ஹசன் அலி தெரிவித்தவை வருமாறு:

ராஜபக்ஸக்கள் அவர்களுடைய கடந்த கால ஆட்சியில் நாட்டை காப்பாற்றவே இல்லை, மாறாக அவர்களின் குடும்பத்தையும், அவர்களின் அரசாங்கத்தையுமே காப்பாற்றினார்கள் என்று பத்திரிகையில் வெளியான செய்தியை பார்த்தேன். அன்று அந்த ராஜபக்ஸ ஆட்சியில் அமைச்சர்களாக இருந்து விட்டு இன்று இப்படி பேச இவர்களுக்கு எந்த யோக்கியதையும் கிடையாது. வேண்டுமென்றால் இவர்கள் அன்று அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்து விட்டு மக்கள் முன்னிலைக்கு வந்திருந்தால் இவர்களின் கதைகளை இன்று கொஞ்சமாவது ஜீரணித்து கொள்ள முடியும். ரணிலை பிரதமராக கொண்ட அரசாங்கத்தை காப்பாற்ற இவர்கள் நடத்திய தொடர்ந்தேச்சையான குறுகிய சுய இலாப செயற்பாடுகள் அனைத்தையும் எமது மக்கள் மிக நன்றாகவே அறிவார்கள். 

பிரதமர் ரணிலுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரப்பட இருந்த தருணத்தில் அவருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று காட்டுவதற்காக மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்த சட்டத்தை ரணில் கையில் எடுத்தார். ரணிலின் ஆட்சியை காப்பாற்றுவதற்காக மாத்திரம் எமது மக்களை மறந்தவர்களாக இவர்கள் பாராளுமன்றத்தில் கைகளை உயர்த்தினார்கள், அந்த தேர்தல் திருத்த சட்டம் இவர்களின் ஒத்தாசையுடன் நிறைவேற்றப்பட்டதால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் இருந்து 727 சதுர கிலோ மீற்றர் பெருநிலம் பெரும்பான்மை சமூகத்தினருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டு விட்டது. உதாரணமாக நாவிதன்வெளி பிரதேசம் முழுமையாக உகனவுடன் சேர்க்கப்பட்டு விட்டது. அதே போல தகனவில் இருந்து வந்த பெரும்நில பிரதேசம் ஒன்று அம்பாறையுடன் சேர்க்கப்பட்டது. பின்னர் இதே அரசாங்கம்தான் எல்லை நிர்ணயம் நடத்த வேண்டி உள்ளது என்று குறுகிய அரசியல் சுய இலாபத்துக்காக பிறிதாக  தீர்மானம் நிறைவேற்றியது.

இதற்கு ஆதரவாகவும் இவர்கள் கைகளை உயர்த்தினார்கள். அது  நிறைவேற்றப்பட்டதால்தான் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றது. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகத்தான வெற்றி ஈட்டியது. மாகாண சபை தேர்தலை நடத்தினாலும் தோல்விதான் அடைய நேரும் என்கிற உண்மையை உணர்ந்தவர்களாகவே வேண்டும் என்று அதை நடத்தாமல் தந்திரம் செய்து உள்ளார்கள். மேலும்  ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரேயொரு காரணத்துக்காக மாத்திரமே கோர்ட் அணிந்து கொண்டு நீதிமன்றம் சென்றார்கள். ஆனால் முஸ்லிம் மக்களுக்கு எத்தனையோ சட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை முஸ்லிம்களின் நிலம், இருப்பு, பாதுகாப்பு, உரிமை ஆகியன சம்பந்தப்பட்டவை. எமது முஸ்லிம் மக்களுக்காக இவர்கள் ஒருபோதும் நீதிமன்றங்களில் ஆஜராகவில்லை. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்த இவர்கள் மக்களை பாதுகாக்க எதையும் செய்யவே இல்லை என்பதே உண்மை ஆகும்.

-எம்.ஜே.எம்.சஜீத்

No comments:

Post a Comment